1.
மாயாஜாலக்காரனின்
மாயம்
உதயசங்கர்
ரொம்ப நாளைக்கு முன்னால்
நடந்த கதை.
கெர்மானி என்ற
நாட்டின் அரசன் தேவன். அவன் மக்களைக் கொடுமைப்படுத்திய அரசன். எந்த அரசன் தான் கொடுமைப்படுத்தவில்லை
என்று சொல்கிறீர்களா? ஆமாம். அதுவும் சரிதான். அரசர்கள் மக்களிடம் அதிக வரிகளை வாங்கியும்,
மற்ற நாடுகளுடன் போரிட்டார்கள். அந்த நாட்டு செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள். அந்த
நாட்டு மக்களை அடிமைப்படுத்தினார்கள். அப்படித்தான் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். பெரிய
பெரிய அரண்மனைகளையும், கோவில்களையும் கட்டினார்கள்.
அப்படி வந்த
அரசர்களில் தேவனைக் கண்டு அவனுடைய நாட்டு மக்களே அஞ்சினார்கள். ஆனால் அவன் அரசனானது
பெரிய வேடிக்கை. வேடிக்கை மட்டுமல்ல சிந்திக்க வேண்டிய சம்பவம். தேவன் தெருவில் மாயாஜாலவித்தை
காட்டிக் கொண்டிருந்தான்.
அதுதான் மேஜிக்.
வெறும் பையிலிருந்து
பொரிகடலை எடுப்பான். எந்தப் பொருளும் இல்லாமல் நெருப்பை உண்டுபண்ணுவான். காற்றிலிருந்து
எலுமிச்சம்பழம் வரவழைப்பான். சிறிய பிள்ளையார் சிலையைக் கொண்டு வருவான்.
இப்படி ஊர்
ஊராக வித்தை காட்டி மக்களிடம் பிச்சை எடுப்பான். கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்து வந்தான்.
அப்போது அவனைப் பார்த்த ஒரு பணக்காரப்பிரபுவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
அவர் அவனை அழைத்து,
“ தம்பி நீ
ஏன் ஊரு ஊராகப் போய் பிச்சை எடுக்கிறே.. நான் சொல்கிற யோசனையைக் கேட்டால் நீ இருக்கும்
இடத்துக்கே வந்து உனக்கு பணத்தை அள்ளியள்ளி கொடுப்பார்கள்.. “
என்று சொன்னான்.
“ சொல்லுங்கள்
ஐயா.. அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ஊர் ஊராகப்போய் அலுத்து விட்டது..
இப்போது எல்லாம் மக்கள் அவ்வளவாக பிச்சை போடுவதில்லை.. ம்ம்ம் அவர்களிடம் பணம் இருந்தால்
தானே..”
என்றான் மாயாஜாலக்காரன்
தேவன். பணக்காரன் ஒரு சிறிய கோவிலையும் ஒரு பெரிய மண்டபத்தையும் கட்டினான். சிறிய கோவிலில்
ஸ்ரீஅண்டசராசர சாமி என்று பாதையில் கிடந்த ஒரு சிறிய பாறைக்கல்லை வைத்தான்.
அருகில் உள்ள
மண்டபத்தில் மாயாஜாலக்காரன் தேவனுக்கு பெரிய சிம்மாசனம். ஆடைகள் அலங்காரங்கள், நகைகள்,
பணியாட்கள், என்று சகல வசதிகளையும் மாயாஜாலக்காரனுக்குச் செய்து கொடுத்தான் அந்தப்
பணக்காரன்.
பணக்காரன் போட்ட
ஒரே நிபந்தனை. தினமும் வருகிற வருமானத்தில் பாதியை அவனுக்குக் கொடுத்து விட வேண்டும்.
மாயாஜாலக்காரனுக்கு மகிழ்ச்சி.
பெரிய பெரிய
விளம்பரப்பதாகைகளை ஊரெங்கும் வைத்தான். தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தான். பத்திரிகைகளுக்குப்
பணம் கொடுத்து செய்திகளை வரவழைத்தான்.
“ அதிசயச்சாமியார்…
இமயமலையிலிருந்து நேரே இறங்கிவந்து அருள் பாலிக்கிறார்.. நினைத்தது நடக்கும் கேட்டது
கிடைக்கும்.. இமயமலையின் பனிச்சாமியை காற்றிலே வரவழைத்துக் கொடுப்பார்.. வாருங்கள்!
வாருங்கள்! முந்துபவர்களுக்கே அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..”
இப்படி விதம்
விதமான விளம்பரங்கள்.
அவ்வளவு தான்.
கூட்டம் அலைமோதியது. எல்லாரும் முண்டியடித்து இமயமலைச்சாமியாரைப் பார்க்கத் துடித்தார்கள்.
யாரைப் பார்க்க? நம்முடைய தெருவித்தைக்காரனானா மாயாஜாலக்காரனைப் பார்க்க…
அவன் காற்றிலே
பனிச்சாமியை எடுத்தான். எலுமிச்சம்பழம் எடுத்தான். ஆப்பிள பழம் எடுத்தான். லட்டு எடுத்தான்.
சில நேரம் மோதிரம் எடுத்தான். சங்கிலி எடுத்தான். மக்கள் மயங்கினார்கள். அவன் கேட்ட
பணத்தைக் கொடுத்தார்கள்.
செல்வம் குவிந்தது.
பணக்காரன் இன்னும் பெரிய பணக்காரனானான். மாயாஜாலக்காரனான
தேவனுக்குத் திடீரென விபரீதமான யோசனை வந்தது.
நாம் உழைத்து
இவனுக்கு ஏன் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். உடனே அவன் காற்றில் வரவழைத்த
லட்டில் விஷம் கலந்து கொடுத்து அவனைக் கொன்று விட்டான்.
ஊர் மக்கள்
நாட்டு மக்கள் அவனை மகான் என்று நம்பி போற்றினார்கள். அவன் அரசனாக வந்தால் நாடு வளமாகும்
என்று நினைத்தார்கள்.
அடுத்த தேர்தலில்
மாயாஜாலக்காரன் தேவனையே அரசனாக்கி விட்டார்கள். அரசனான பிறகு மாயாஜாலக்காரன் கொடியவனானான்.
அவனை எதிர்த்து யாரும் எதுவும் கேள்வி கேட்கமுடியாது. அப்படி கேட்டால் அவர்களைக் காணாமல்
செய்து விடுவான்.
“ கடவுளைப்
போன்றவன் நான்.. ஏன் நானே கடவுள்.. என்னைக் கேள்வி கேட்கலாமா? அதுதான் அவனை நரகத்தில்
தள்ளிவிட்டேன்... போன பிறவியில் நான் செய்த புண்ணியம் தான் இப்போது அரசனாக இருக்கிறேன்.. போன பிறவியில் நீங்கள்
செய்த பாவம் தான் நீங்கள் அடிமைகளாக இருக்கிறீர்கள்… கேள்வி கேட்காமல் நான் சொல்வதைக்
கேட்டு நடந்தால் உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கும்.”
என்று உரத்த
குரலில் முழங்கினான்.
மக்கள் பயந்து சரி சரி என்று தலையாட்டினார்கள். கை
தட்டினார்கள். அவன் காட்டும் சிறு சிறு மாயாஜாலங்களைப் பார்த்து அவனை வழிபட்டார்கள்.
மாயாஜாலக்காரனின்
கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. மக்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.
எல்லாரும் அவனைக்
கண்டு பயந்தார்கள் என்று சொல்லி விடமுடியாது. அந்த நாட்டில் சங்கர் என்ற பார்வை மாற்றுத்திறனாளிச்
சிறுவன் இருந்தான். எதையும் ஏன் எதற்கு எப்படி
என்று கேட்கக் கூடிய சிறுவன். அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்.
அவன் இந்த மாயாஜாலக்கார
அரசனின் மேஜிக் வேலைகளைப் பற்றி மக்களிடம் பேசினான்.
அவர்களில் சிலர்
துணிந்து மாயாஜாலக்காரனை எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். அவன் அவர்களைச் சிறையில்
அடைத்தான். கடுமையான தண்டனைகள் கொடுத்தான். திடீரென ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு விளம்பரம்
வெளியானது.
“ உலகத்திலேயே
மிகப்பெரிய மாயாஜால நிகழ்ச்சி நடக்கப்போகிறது.. அனைவரும் வருக! அனுமதி இலவசம்! “
விளம்பரத்தைப்
பார்த்த அரசனுக்குப் பயம் வந்தது. தன்னை விட பெரிய மாயாஜாலக்காரனாக இருந்தால் மக்கள்
அவனை அரசனாக்கி விடுவார்கள் என்று நினைத்தான். அவன் பதில் விளம்பரம் செய்தான்,
“ என்னுடன்
போட்டியிடத் தயாரா? “ என்று கேட்டான்.
அடுத்த விளம்பரம்
வந்தது,
“ தயார்..”
ஒரு ஞாயிற்றுக்கிழமை
காலையில் பெரிய மைதானத்தில் இரண்டு பெரிய மேடைகள் இருந்தன. ஒன்றில் மாயாஜாலக்கார அரசனும்
இன்னொன்றில் பார்வை மாற்றுத்திறனாளி சங்கரும் நின்றார்கள்.
வழக்கம் போல
மயாஜாலக்கார அரசன் மோதிரம், பனிச்சாமி, சங்கிலி, எலுமிச்சம்பழம் எடுத்தான்..
சங்கரும் அதையெல்லாம்
எடுத்துக் காட்டினான்.
எப்படி என்று
யோசிக்கிறீர்களா? ஒன்றும் பெரிய ரகசியமில்லை. முழுக்கைச்சட்டை போட்டு கக்கத்தில் ஒரு
பையைக் கட்டி அதில் வரிசையாக கொண்டு வர வேண்டிய பொருளைப் போட்டு கையைக் குலுக்கி குலுக்கி
அதை உள்ளங்கைக்குக் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தொடர்ந்த பயிற்சியில் எளிதாகக்
கைவரும். அறிவியல் இயக்கத்தில் இதைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
மாயாஜால அரசனின்
வித்தைகள் தீர்ந்துவிட்டன. அப்போது சங்கர் ஒரு விசிலடித்தான். அந்த விசில் சத்தம் கேட்டதும்
எங்கிருந்தோ ஒரு பெரிய புறா பறந்து வந்தது. வண்ண வண்ண நிறங்களில் ஒளிவீசும் சிறகுகளுடன்
வந்தது. அந்த மைதானத்தையே மூடுமளவுக்கு மிகப்பெரிய தன் சிறகுகளுடன் பறந்தது.
மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார்கள்.
“ ஆகா இது தான்
மாயாஜாலம்! அற்புத மாயாஜாலம்..!” என்று கத்தினார்கள். சிலர்,
“ இனி நீ தான்
எங்கள் அரசன் ”
என்று
சொன்னார்கள்.
அதைக் கேட்ட
சங்கர் சொன்னான்,
“ மாயாஜாலம்,
மந்திரம் என்று எதுவும் கிடையாது.. தந்திரம் மட்டுமே உண்டு.. இந்த உலகத்தில் இல்லாத
பொருளை உங்களால் கொண்டு வரமுடியாது.. எல்லாமே அறிவியல் தான்.. எதையும் ஏன் எதற்கு எப்படி
என்று கேளுங்கள்.. மூடநம்பிக்கைகளை விட்டொழியுங்கள். உங்களுக்காக யார் பாடுபடுகிறார்களே
அவர்களை அரசனாகத் தேர்ந்தெடுங்கள்.”
என்றான். அதைக்
கேட்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது ஒரு விசில் சத்தம் கேட்டது.
லேசர் கதிர்
வீச்சின் மூலம் உருவான அந்தப் புறா காற்றில் மறைந்து விட்டது.
அந்த மாயாஜாலக்கார அரசனும் மறைந்து போனான்.
மக்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை அரசனாகத் தேர்ந்தெடுத்தார்கள்.
நன்றி - அதிசயத்திலும் அதிசயம்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
பார்வை மாற்றுத்திறனாளியாகிய (ஆசிரியர்) சங்கரும், அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் அறிவூட்டும் நிகழ்ச்சி... இப்படி அப்படி ஏதாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது... ஆனாலும் போதவில்லைதான் நம் மக்களுக்கு...
ReplyDelete