எம்.ஜி.ஆர் படப்பாடல்களை வாய் எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். ஒரு வார்த்தை பிசகாமல் அப்படியே ஒப்பிக்கிற ராக்கையாவுக்கு பாடங்கள் எதுவும் மண்டையில் ஏறவில்லை. அவனில்லாமல் நாங்கள் எந்த முக்கியமான காரியத்துக்கும் போனதில்லை.
சிரித்த முகமும் துறு துறுவென துடிக்கும் உடல்மொழியும் கொண்ட ராக்கையா கூட இருந்தாலே போதும் யாருக்கும் உற்சாகம் தானாகத் தொற்றிக் கொள்ளும். அதே போல எந்த வேலைக்கும் அஞ்சாதவன் ராக்கையா. எப்படியோ அவனுக்கு எங்களைப் பிடித்து விட்டது. எப்போதும் எங்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தான்.நாங்கள் எப்போதாவது போகிற திரைப்படங்களுக்கு அவனைக் கூட்டிக் கொண்டு போவோம். அவன் தான் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் கவுண்டரில் ஏறிக் குதித்து சண்டை போட்டு டிக்கெட் வாங்கி விடுவான். நான், நாதன், சாரதி, கந்தசாமி, எல்லோரும் போட்ட சட்டை கலையாமல் உள்ளே போய் திரைப்படம் பார்ப்போம்.
அப்படி ஒரு முறை வசந்தமாளிகை படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு போவதென்று முடிவு செய்து விட்டோம். டிக்கெட் எடுக்க வேண்டுமே. ராக்கையாவை விட்டால் எங்களுக்கு வேறு யாரையும் தெரியாது. ஆனால் சிவாஜி படத்திற்கு ராக்கையா வருவானா? என்று சாரதி சந்தேகப்பட்டான். நாதன் தான் அதெல்லாம் வருவாண்டே என்று சொன்னான். எனக்கு உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் அவன் வந்தால் இன்று போவோம். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் கழித்து கூட்டம் குறைந்த பிறகு போவோம் என்று கந்தசாமி சொன்னான்.
ராக்கையா வந்ததும் சாரதி தான்,“ டேய் ராக்கு.. நீ பிரண்ட்ஸுக்காக ஒரு காரியம் செய்யணும்னா செய்வியால..” என்று முக்கி முனகிக் கேட்டான். அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“ என்ன வசந்தமாளிகை டிக்கெட் எடுத்துக் கொடுக்கணுமாக்கும்..’
என்று சொன்னான். நாங்கள் அதிர்ந்து போனோம்.
அன்று சரியான கூட்டம். வழக்கம் போல கூட்டத்துக்குள் முண்டியடித்து கவுண்டருக்குள் ஏறிக் குதித்து வரிசையிலிருந்தவர்களுடன் மல்லுக் கட்டி டிக்கெட் எடுத்து விட்டான். எங்களுடைய டிக்கெட்டுகளுடன் கவுண்டருக்கு அருகில் காத்திருந்தான். நாங்கள் கூட்டம் குறைந்து வரிசையில் போனோம்.
அப்போது கந்தசாமி தான் ராக்கையாவைப் பார்த்து கேட்டான்,“ எல நீ சாரம் கட்டியிருந்தியே அதை எங்கல..” அப்போது தான் ராக்கையாவும் கவனித்தான். அவன் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைக் காண வில்லை. வெறும் டவுசர் பனியனோட நின்று கொண்டிருந்தான். கவுண்டர் வழியெல்லாம் தேடிப் பார்த்தோம். சாரம் கிடைக்கவில்லை.
நாங்கள் விரும்பிப் பார்க்கிற திரைப்படங்கள் அவனுக்குப் பிடிக்காது. படம் ஆரம்பித்தவுடனேயே தூங்கி விடுவான். சரியாக இடைவேளை சமயத்தில் எழுந்து ஐஸ், முறுக்கு என்று தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பான். அதேபோல என்ன வேலை சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருந்தான். ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்று நாங்கள் தான் பயப்படுவோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எம்.ஜி.ஆர். புன்னகை சிந்துவான். அவ்வளவு தான். உடனே சிட்டாய் பறந்துபோய் அந்த வேலையைச் செய்து விட்டுத் திரும்புவான். பெரும்பாலான நேரங்களில் எங்கள் நண்பர்கள் குழாமில் உள்ள யாருடைய வீட்டிலாவது கிடப்பான். அங்கேயே சாப்பிடவும் செய்வான். வீட்டிலுள்ள எல்லோரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுவான். பல நேரங்களில் வீட்டிலுள்ளவர்களே அவனைத் தேடுவார்கள்.
வீட்டில் மட்டும் தான் என்றில்லை யாரிடமும் மிகச் சுலபமாகப் பழகி விடுகிற இயல்பான குணம் ராக்கையாவுக்கு. பழகிய ஐந்தாவது நிமிடத்திலே பல வருடம் பழகியவன்போல அன்யோன்யமாகி விடுகிற வசீகரம் அவனிடம் இருந்தது. அதனால் யாரும் அவன் மீது கோபப் படவே மாட்டார்கள். அப்படியே கோபம் வந்தாலும் வந்த சில நிமிடங்களிலே அவனே சகஜமாக்கி விடுவான். அதனால் பள்ளிக்கூடத்தில் அவன் படிக்கவில்லையென்றால் கூட வாத்தியார்கள் அவனை அதிகம் அடித்ததையோ, திட்டியதையோ நாங்கள் பார்த்ததில்லை. எல்லா வாத்தியார்களும் அவனிடம் ஏதோ ஒரு விதத்தில் வேலை வாங்கியிருப்பார்கள். யாருக்கும் அஞ்சுவதோ, வெட்கப்படுவதோ, கிடையாது. நாங்கள் மிகுந்த யோசனைக்காரர்களாக இருந்ததால் எங்களுக்கு ராக்கையாவின் துணை பெரிய பலமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் அவன் கூட இருந்தானென்றால் எங்களைப் பிடிக்காத எதிரிகள் சற்று விலகியே போவார்கள். அப்படியே யாராவது எங்களிடம் வாலாட்டினால் ராக்கையா எம்.ஜி.ஆர். மாதிரியே சிரித்துக் கொண்டே சண்டைபோடுவான். திரைப்படத்தின் சவுண்ட் எபெக்ட்ஸை அவன் வாயினாலே கொடுத்துக் கொள்வான்.
நாங்கள் அவன் கூட துணை நடிகர்கள் மாதிரி நின்று கொண்டு அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்போம். அடி வாங்கிக் கொண்டு வந்தாலும் சரி, அடி கொடுத்து விட்டாலும் சரி, ஒரே சிரிப்புதான். தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டு ,” பயகள புரட்டி எடுத்திட்டேன்ல..” என்று சொல்லுவான். எங்களுக்குப் பெருமையாக இருக்கும்.
கோவில்பட்டியின் ஊர் விளையாட்டான ஆக்கியை ஊரிலுள்ள நண்டுநசுக்கான் தொடங்கி பெரியவர்கள் வரை தெருக்காடுகளிலும், மைதானங்களிலும், விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? எங்களுடன் ராக்கையாவும் விளையாடுவான். ஒருபோதும் அவன் கோல் போட்டதே இல்லை. அவனிடம் பந்து கிடைத்தால் அதைக் கொண்டுட்டு ஓட மாட்டான். நாலு அடி ஓடுவதற்குள் பந்தை எதிரணியிடம் விட்டு விடுவான். எல்லோரும் திட்டுவார்கள். அவன் அதைப் பற்றிக் கவலைப் படமாட்டான். ஆனால் அதற்காக அவனை விளையாட்டில் சேர்க்காமல் இருந்ததில்லை.
பின்னர் கிரிக்கெட் விளையாட்டு பேமஸ் ஆனது. ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டு ” சார் ரன் கேலியே ” என்ற மூச்சு விடாத ஹிந்தி வர்ணனை எங்களைக் கவர்ந்தது. நாங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். இரவு பகல் பாராமல் கிரிக்கெட் விளையாடினோம். காந்திமைதானமே எங்கள் கூப்பாட்டில் அரண்டு போனது. அதிலும் ராக்கையா ஒரு பந்தைக் கூட கேட்ச் பிடித்ததில்லை. ஒரு பந்துகூட பவுலிங் போட்டதில்லை. ஒரு ரன் கூட எடுத்ததில்லை. ஆனாலும் எங்களுடன் விளையாடினான். இப்படி எங்களுடன் இரண்டறக் கலந்து விட்டான் ராக்கையா. எங்கள் இளம் பருவ நினைவுகளை ராக்கையாவை விட்டு விட்டு யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாங்கள் கல்லூரி போனபோது அவன் கல்லூரி வரவில்லை. ஐ.டி.ஐ. படிக்கப்போய் விட்டான். அப்போதும் தினமும் மாலையில் நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஐ.டி.ஐ. முடித்த அவன் கோயம்புத்தூர் லட்சுமி மில்லில் வேலைக்குப் போய் விட்டான்.
நாங்கள் கல்லூரிப் படிப்பு முடித்து இந்தியாவின் வேலை இல்லாப்பட்டதாரிகளாக உலகை வலம் வந்து கொண்டிருந்தோம். இலக்கியம், அரசியல், தத்துவம், என்று புத்தகங்களை வாசித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும், அலைந்து கொண்டிருந்தோம். மனசில்லா மனசோடு வேலை தேடுவதாகப் பாவனை செய்து கொண்டு கனவுகளின் கதகதப்பில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம்.
எங்கள் செட்டில் முதலில் வேலைக்குப் போனது ராக்கையா தான். அடுத்து நாதன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். அடுத்து நான் அல்லரைசில்லரையாகச் சில வேலைகளைப் பார்ப்பதும் விடுவதுமாய் இருந்தேன். சாரதி வருவாய்த்துறையில் சேர்ந்தான். கந்தசாமி அஞ்சல் அலுவலகத்தில் சேர்ந்தான். முதலில் வேலைக்குச் சேர்ந்த ராக்கையா தான் முதலில் கலியாணமும் முடித்தான். அவன் கலியாணம் முடித்தது அவனுடைய தாய்மாமன் மகளைத் தான். கலியாணத்தில் ராக்கையா வைத்த ஒரே கோரிக்கை கலியாண வீட்டில் எம்.ஜி.ஆர். பாட்டைத் தவிர வேறு யாருடைய பாட்டையும் போடக் கூடாது. ஏனெனில் அவனுடைய மாமா சிவாஜி ரசிகர். அவனுடைய கோரிக்கையைக் கேட்டு நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.
கலியாணம் முடிந்து ராக்கையா குடும்பத்தோடு கோயம்புத்தூர் சென்று விட்டான். அதன் பிறகு ஆறு மாதங்களாக அவனைப் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப் பட்ட செய்திகளும் நல்லதாக இல்லை. அவன் விரும்பிக் கலியாணம் முடித்த அவனுடைய மாமா மகள் அவனை மதிக்கிறதில்லை. எப்போதும் அவனை வைது கொண்டே இருக்கிறாள். எங்களுக்கு கேட்கச் சங்கடமாக இருந்தது. ஆனால் பெரிதாகக் கவலைப் படவில்லை. ராக்கையா எதையும் சமாளித்து விடுவான் என்று நினைத்தோம். அவனுடைய உற்சாகத்தின் அலையில் எல்லாம் கரை சேர்ந்து விடும் என்று பேசிக்கொண்டோம். அதற்கடுத்த சில வாரங்களில் ராக்கையா ஊருக்கு வந்தான். நாங்கள் ஆவலுடன் அவனைச் சந்திக்கப் போனோம். எங்களைப் பார்த்ததும் சிரித்தான். ஆனால் அதில் பழைய உற்சாகம் இல்லை. நண்பர்கள் சந்திக்கும்போது செய்கிற வழக்கமான ஏற்பாட்டைப் போல இரவு இரண்டாம் காட்சிக்கு போவதெனத் திட்டம் போட்டோம்.
நாங்கள் எல்லோரும் சரியான நேரத்தில் கூடி விட்டோம்.ஆனால் இன்னும் ராக்கையாவைக் காணவில்லை. ராக்கையாவுக்காகவே எம்.ஜி.ஆரின் பழைய படமான பணக்காரக்குடும்பம் திரைப்படத்துக்குப் போவதென்று முடிவு செய்திருந்தோம். தியேட்டரில் படம் போடுவதற்கான முதல் மணி அடித்து விட்டது. இன்னும் ராக்கையா வரவில்லை. தூரத்தில் சோர்ந்த நடையுடன் ராக்கையா வந்து கொண்டிருந்தான். கந்தசாமி கத்தினான்.
“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி மெதுவா வாரே..”
அதற்கு இருளுக்குள்ளிருந்து பதில் வந்தது.
“ நொண்டிக்காலை இழுத்துகிட்டு வர வேண்டாமா..அவசரம்னா நீங்க போங்க..”
நாங்கள் முதல் முறையாக ராக்கையாவின் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருந்த இடது காலையும், அவன் சோர்வுடன் கெந்திக் கெந்தி நடந்து வருவதையும் பார்த்தோம். எங்கள் கண்கள் கலங்கின.
//
ReplyDelete“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி மெதுவா வாரே..”
அதற்கு இருளுக்குள்ளிருந்து பதில் வந்தது.
“ நொண்டிக்காலை இழுத்துகிட்டு வர வேண்டாமா..அவசரம்னா நீங்க போங்க..”
நாங்கள் முதல் முறையாக ராக்கையாவின் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருந்த இடது காலையும், அவன் சோர்வுடன் கெந்திக் கெந்தி நடந்து வருவதையும் பார்த்தோம். எங்கள் கண்கள் கலங்கின.
//
மொக்கையான புனைவு.
உங்கள் கருத்துரைக்கு நன்றி!
Deleteராக்கையாவுடனான அனுபவம் மிகச் சுவராஸ்யம். எம்ஜிஆர் படம்னாலே இன்னும் ஓடிப்போய் பார்க்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ராக்கையாவின் குறை தெரியாமல் இருந்தாலும் கடைசியில் அவனே சொல்லும்படி ஆனது அவனுடைய சோகமான மனநிலையை காட்டுகிறது.
ReplyDeleteதிருமணம் ஒருவனின் வாழக்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. அதனாலேயே அது வரை தன் குறை தெரியாமல் வாழ்வை உற்சாகமாக எதிர்கொண்ட ராக்கையா தாழ்வுணர்ச்சியால் மருகிப் போகிறான். நன்றி விச்சு சார்!
Delete