Saturday, 7 April 2012

கந்தசாமியின் கணக்கு

omar
                        

நாங்கள்ஒரு முடிவுடன் இருந்தோம். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே எங்களுக்குக் கிடைத்தசமூக, இலக்கிய, அரசியல், தத்துவப்பயிற்சிகள், எங்களை வேறு மனிதர்களாக மாற்றியிருந்தது.ஏற்றதாழ்வுகள் மிக்க இந்த சமூகத்தைப் பொதுவுடமைச் சமூகமாக மாற்ற பேராவல் கொண்டிருந்தோம்.இளமையின் வேகத்தில்  எப்போதும் நெஞ்சில் கனலும்கோபநெருப்போடு நாங்கள் அலைந்து கொண்டிருந்தோம். விடிய விடிய விவாதித்தோம். திட்டமிட்டோம்.கூட்டங்கள் நடத்தினோம். தட்டிபோர்டுகள் எழுதி நாங்களே தூக்கிக் கொண்டு போய் கம்பங்களில்கட்டினோம். சூரியனுக்குக் கீழே உள்ள அத்தனை விசயங்களைப் பற்றியும் பேசினோம். இரவு,பகல்,பசி, தூக்கம், மறந்து படித்தோம், படித்தோம். படித்துக் கொண்டேயிருந்தோம். எங்கள் அகராதிகளில்,முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கம், முரண்பாடுகள், புரட்சி, பூர்ஷ்வா, பெட்டிபூர்ஷ்வா,ஏகாதிபத்தியம், மாற்றுப்பண்பாடு, எதிர் பண்பாடு, பாட்டாளி வர்க்கக் கலாச்சாரம், சோசலிசயதார்த்தவாதம், போன்ற புதிய சொற்கள் வந்து சேர்ந்தன. அவை எல்லாம் எங்களுக்கு ஒரு புதியஉலகை கனவாய் விரித்தன. அந்த உலகில் வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகுகளை விரித்து பறந்துதிரிந்தோம்.
              
இவ்வளவு சீக்கிரத்தில் மாறப் போகிறது உலகம். எதற்காகநாம் வேலைக்குப் போக வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் வீட்டில் கடும் நெருக்கடி. எப்படியாவதுதாக்காட்டி புரட்சி நடக்கும்வரை நெருக்கடியைத் தள்ளிக் கொண்டே போய்விட வேண்டும். அப்புறம்பிரளயமே நிகழும் போது எல்லாமே மாறி விடுமே. சுதந்திரப்போராட்டத்தின் போது கல்வி, வேலை,குடும்பம், எல்லாவற்றையும் உதறி போர்க்களத்தில் இறங்கியவர்களால் தானே சுதந்திரம் கிடைத்தது!நாங்களும் அப்படி இறங்கிவிட நினைத்ததென்னவோ உண்மைதான். அதனால் வங்கி, எல்.ஐ.சி., தமிழ்நாடுஅரசுத் தேர்வாணையம், என்று எல்லாப் போட்டிப் பரிட்சைகளுக்கும் விண்ணப்பம் வாங்கி பூர்த்திசெய்து அனுப்பி வைப்போம். பரிட்சைக்கான தேர்வு மையங்களை இதுவரை போகாத ஊர்களாகப் பார்த்துதேர்வு செய்வோம். பரிட்சைக்கான ஹால் டிக்கெட் வந்ததும் பரிட்சை எழுதுவதற்கான ஆயத்தங்களைச்செய்வதைப் போல பாவனை செய்வோம். ஆயத்தங்கள் என்ன? ஆயத்தங்கள்? போட்டித் தேர்வுக்கானபுத்தகமும் கையுமாகவே அப்பா அம்மா முன்னால் அலைந்து கொண்டிருப்பது தான். அவர்களும்பிள்ளை நல்லாத்தான் படிக்கிறான்.. என்ன செய்ய அவன் கிரகசாரம்..அவனுக்கு காலாகாலத்திலஒரு வேலை கிடைக்கமாட்டேங்கு..என்று மற்றவர்களிடம் சொல்கிற மாதிரி நடந்து கொள்வோம்.
                   
பரிட்சைஎழுதுகிற நாளும் வரும். எல்லோரும் ரெம்பப் பதவிசாக பேனா, பென்சில், ரப்பர், ஒண்ணுக்குரெண்டாக எடுத்துக் கொண்டு ஒண்ணுபோல கிளம்பி விடுவோம். எங்கே தேர்வுமையம் போட்டோமோ அந்தஊருக்கு பரிட்சை நேரத்துக்கு முன்னாலேயே போய்ச் சேர்கிற மாதிரி பேருந்து பிடித்து போய்ச்சேருவோம். தேர்வு நடக்கிற மையத்தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்று எங்களுக்குகொடுக்கப் பட்ட ஹால் டிக்கெட் எண்ணுக்கு ஒதுக்கப் பட்ட அறையைச் சென்று பார்ப்போம்.ஒவ்வொருவரும் மற்றவர் அறையைப் பார்த்து விட்டு வருவோம். அந்த அறையில் சென்று எங்கள்எண் குறிக்கப்பட்டிருந்தால் அந்த பெஞ்சில் உட்கார்ந்திருப்போம். எண் குறிக்கப் படவில்லையென்றால்சும்மா கிடக்கிற பெஞ்சில் உட்காருவோம். சரியாக தேர்வு மையக் கண்காணிப்பாளர் அறைக்குள்நுழைந்தவுடன் நாங்கள் அந்த அறையை விட்டு வெளியேறுவோம். எல்லோரும் சொல்லி வைத்த மாதிரிவாசலில் சந்திப்போம். நான், சாரதி, மணி, ராஜு, கந்தசாமி மௌனமாக ஒருவரையொருவர் பார்த்துபுன்சிரிப்போம். பின்னர் மிக அண்மையிலுள்ள ஒரு டீக் கடையில் ஒரு டீ, ஒரு சிகரெட்டுடன்எங்களுடைய ஊருலா ஆரம்பிக்கும். எப்படி இது ஒவ்வொரு முறையும் சரியாக நிகழ்கிறது என்றுயாருக்கும் தெரியாது. ஆனால் நிகழுமே. எனக்கு முதலில் புரியவில்லை. மண்டையைப் போட்டுஉடைத்துக் கொண்டிருந்தேன். கிளம்புற வரைக்கும் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. அப்புறம்எங்கே வண்டி தடம் புரள்கிறது? கடைசியில் கண்டு பிடித்து விட்டேன்.
                   
எங்கள் பிரயாணம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு முறையும் மணி ஏதோ ஒரு வகையில் சோவியத்புரட்சியைப் பற்றிப் பேசியிருக்கிறான். ஒரு முறை ஜான் ரீடு எழுதிய உலகைக் குலுக்கியபத்து நாட்களைப் பற்றி பேசுவான். இன்னொரு முறை ஒஸ்திராவ்ஸ்கி எழுதிய வீரம் விளைந்ததைப்பற்றிப் பேசுவான். மிகயீல் ஷொலக்கோவின் அவன் விதி இன்னொரு தடவை. அதிகாலையின் அமைதியில்,உண்மை மனிதனின் கதை, குல்சாரி, அன்னைவயல், அரசும் புரட்சியும், என்று ஏதோ ஒரு வகையில்புரட்சியோடு சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் பற்றியோ, எதிர்கால கம்யூனிசக்கனவுகள் பற்றியோபேசிக்கொண்டும், காரசாரமாக விவாதித்துக் கொண்டும் வருவான். அந்த நேரம் முழுவதும் புரட்சிகரஉணர்வுகள் குருதியில் துடிதுடித்தபடி ஓடிக் கொண்டே இருக்கும். கண்களில் லட்சியத்தின்ரேகைகள்ஒளிர மிதந்தபடியே சென்று பரிட்சை எழுதும் ஊர் போய் சேர்வோம். அப்புறம் எப்படி பரிட்சைஎழுதிக் கிழிக்க முடியும்?
                
அப்படித்தான்ஒரு தடவை வங்கித் தேர்வுக்காக திருவனந்தபுரம் சென்றிருந்தோம். நான் வெளியூர் போனால்யோசிச்சு, யோசிச்சு செலவு செய்வேன். மணி அப்படியில்லை. தாராளமாகச் செலவு செய்வான்.எதைப் பற்றியும் கவலைப் படமாட்டான். கையில் இல்லையென்றால் கூட இருக்கிற யாரிடமும் கடன்கேட்பான். கந்தசாமியோ கஞ்சன். ஒவ்வொரு காசாக எண்ணியெண்ணிச் செலவு செய்வான். பள்ளிக்கூடத்தில்படிக்கும் போது டவுசரின் பட்டியில் ஒரு சிறு ஓட்டை போட்டு அதன் வழியாக காசுகளைத் திணித்துசேமித்து வைப்பான். ஒரு நாளாவது கந்தசாமி விளையாடும் போது அந்த ஓட்டை வழியாக காசு விழுந்துவிடாதா என்று சாரதி ஏங்கிக் கொண்டிருப்பான். எல்லோரும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கித்திங்கும் போது கந்தசாமி வாங்கித் திங்கமாட்டான். யாராவது கொடுத்தால் கூட வாங்க மாட்டான்.வற்புறுத்திக் கொடுத்தால், வாங்கிக் கொண்டு விடுவான். ஆனால் அதே மாதிரி இன்னொரு நாள்யார் என்ன வாங்கி கொடுத்தார்களோ அதே தின்பண்டம் எவ்வளவு கொடுத்தார்களோ அதே அளவு திருப்பிக்கொடுப்பான் கந்தசாமி. கொடுப்பதோடு விட்டால் கூட பரவாயில்லை. அன்னிக்கி நீ வாங்கிக்கொடுத்தில்ல அதுக்கு பதில் தான் இது.. இனி நானோ நீயோ ஒண்ணும் கொடுக்கவேண்டியதில்லை..வாங்க வேண்டியதில்லை. என்று சொல்வான். எல்லாரிடமும், எல்லாவிசயங்களிலும் ரெம்பக் கறாராகஇருப்பான் கந்தசாமி. ராஜூ ஊமைக்குசும்பன். அங்கும் இங்கும் பேசி தூண்டி விட்டு வேடிக்கைபார்ப்பான்.
                
வழக்கம்போல திருவனந்தபுரத்தில் பரிட்சை எழுதி (!) விட்டு கிளம்பினோம். திருவனந்தபுரத்தில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டுபுறப்படும்போது ஊர் திரும்புவதற்கான டிக்கெட் காசு மட்டும் தான் இருந்தது. கையையும்வாயையும் கட்டிக் கொண்டு பேருந்தில் ஏறினோம். நாகர்கோவிலுக்குள் நுழையும்போது எப்படியோமணி கண்ணில் அந்தத் திரைப்படப்போஸ்டர் பட்டு விட்டது. பாசிசஇத்தாலிக்கு எதிராகப் போராடியலிபியாவின் விடுதலைப்போராளி ”ஒமர்முக்தார்” என்ற திரைப்படம் தான் அது. அப்போது கோவில்பட்டியில்ஆங்கிலப்படங்கள் அவ்வளவாக வருவதில்லை. எப்போதாவது வருகிற படங்களும் 007 படங்களாக இருக்கும்.எனவே இந்தப் படம் எப்படியும் அங்கே வரப்போவதில்லை. இங்கே கிடைக்கிற இந்த வாய்ப்பைத்தவற விடக் கூடாது என்று எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் காசு இல்லையே. ஒமர்முக்தாரின்புரட்சிகரப் போராட்டத்தைப் பற்றி பாலு சொன்னதாக மணி வேறு உசுப்பேத்திவிட்டான். என்னசெய்யலாம் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தோம். காலையில் பில்டர்சிகரெட்டுடன்ஆரம்பித்த பவுசு இப்போது பீடியாக மெலிந்துபோயிருந்தது. பீடியிலிருந்து வராத புகையைதம் கட்டி இழுத்து ஊதிக் கொண்டே ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்தோம்.
       
அப்போது ராஜூதான் கந்தசாமி கவனிக்காத சமயத்தில் மணியிடம் கண்ணைக் காட்டினான். உடனே ரெண்டு பேரும்ஒண்ணுக்குப் போகிற மாதிரி பேருந்து நிலையத்தின் கழிப்பிடம் நோக்கி போனார்கள். எனக்குஒரு சந்தேகம் இருந்தது. இவங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு செட்டப் செய்ஞ்சு தனியா சினிமாவுக்குப்போயிருவாங்களோ என்று நினைத்தேன். ஆனால் போன வேகத்திலேயே ரெண்டுபேரும் திரும்பி வந்தார்கள்.மணி நமட்டு சிரிப்புடன் கந்தசாமியிடம், “ டேய் கந்தா சினிமாவுக்குப்  வோமாடா?” என்று கேட்டான். 


உடனே கந்தசாமி, “ காசு?” என்றான். உடனே மணி, “ அதான் நீ வைச்சிருக்கில்ல…” என்று சொன்னதும் கந்தசாமியின்முகம் மாறி விட்டது. இறுகிய முகத்துடன் , “ எங்கிட்டே ஒரு பைசா கிடையாது..” என்று சொன்னான்.நல்லதொரு நாடகம் நடக்கப்போகிறதென நான் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் எல்லோரையும்விட மணியின் மீது அவனுக்குஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதனால் எங்களிடம் நிர்த்தாட்சண்யமாகமறுக்கிற கந்தசாமி மணிக்குச் செய்வான். என்ன காரணம் என்று இன்று வரை தெரியவில்லை. மனிதமனங்களின் விசித்திரங்களை யாரே அறிவார். அதை மணியும் உணர்ந்திருந்தான். எனவே பலசமயங்களில்கந்தசாமியிடம் எங்கள் காரியம் செல்லுபடியாகாதபோது நாங்கள் மணியையேத் துணைக்கழைப்போம்.காரியம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு டீயோ ஒரு சிகரெட்டோ, சிலசமயம் செய்யது பீடியோ,வாங்குவது தான். அப்படித்தான் மணியிடம் ராஜூ சொல்லியிருக்கிறான். கந்தசாமியிடம் நிறையப்பணம் இருப்பதாகவும் மணி நினைத்தால் வாங்கி சினிமாவுக்குப் போய் விடலாம் என்றும் கிசுகிசுத்துவிட்டு வந்திருக்கிறான்.
           
” சரி பஸ் டிக்கெட்டுக்குப் போக மேக்கொண்டு உங்கிட்டகாசு இருந்தா எடுத்துக்கலாமா..” என்று கேட்டான் மணி. உடனே பயந்து போனான் கந்தசாமி.


“ அதெப்படி..நான் எம்புட்டும் வைச்சிருப்பேன் அத நீங்க சினிமாபாக்க கொடுக்கணுமா?" என்று கந்தசாமி சொன்னது தான். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவனைதயநாத்து பண்ணினோம். கொஞ்ச நேரக் கெஞ்சலுக்குப் பிறகு ஒரு உடன்படிக்கைக்கு வந்தான்கந்தசாமி. அவன் எல்லோருக்கும் டிக்கெட் எடுத்து விடுவான். ஊருக்குப் போனவுடனே அவன்டிக்கெட் காசையும் சேர்த்து மொத்தமாக கொடுத்து விட வேண்டும். அவனுடைய டிக்கெட், அவன்இப்போது பணம் கொடுப்பதற்கான வட்டி. நாங்கள் அப்போது என்ன சொன்னாலும் கேடபதற்குத் தயாராகஇருந்தோம். எப்படியாவது ஒமர்முக்தார் பார்த்து விட வேண்டும் என்ற சிந்தனையைத் தவிரவேறு ஒன்றும் எங்கள் தலையில் இல்லை. 


மணிதான் ரூபாய்க்குப் பொறுப்பு. அவன் தான் ஊருக்குப் போனதும் எப்படியாவது கொடுத்து விடவேண்டும். இந்த நிபந்தனைகளோடு பணத்தைப் பேண்டின் இடுப்புப் பட்டியிலிருந்து எடுத்துஎண்ணிக் கொடுத்தான் கந்தசாமி. ரூபாயை எடுக்கும்போதும் எண்ணிக் கொடுக்கும் போதும் மூச்சுக்குஒரு தடவை ஊருக்கு வந்ததும் கொடுத்திருவீல்ல…. ஊருக்கு வந்ததும் கொடுத்திருவீல்ல…. என்றுகேட்டான். எல்லாவற்றுக்கும் நாங்கள் தலையாட்டினோம்.
           
அற்புதமானஅந்தத் திரைப்படத்தைப் பார்த்தபிறகு நாங்கள் வெகுநேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.அந்தப் படம் தந்த புரட்சிகர உணர்வுகளோடே பஸ்சில் பிரயாணம் செய்தோம். திருநெல்வேலி வந்தபிறகுதான் மணி பேசினான். கடைசிக் காட்சியில் தூக்கிலிடப்பட்ட ஒமர்முக்தாரின் கைகளில்இருந்து விழும் மூக்குக் கண்ணாடியை ஒரு சிறுவன் கையில் எடுத்துக் கொண்டு போவதைப் பற்றிக்குறிப்பிட்டு மக்கள் போராட்டம் என்றும் மறையாது. அதை எப்படிச் சொல்லியிருக்கிறான் பாருடைரக்டர்! என்று சிலாகித்தபடியே வந்தான். அப்படியே ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தகாட்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தோம். ஆனால் கந்தசாமி மட்டும் எதுவும் பேசவில்லை.பேசாமல் உம்மென்று வந்தான். ஊர் நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் உற்சாகம் மேலும்பொங்கி வழிந்தது. காச்சுமூச்சுன்னு சத்தம் போட்டுக் கொண்டே வந்தோம். ஆனால் கந்தசாமிஅப்போதும் பேசவில்லை.
            
கோவில்பட்டிபேருந்து நிலையத்தில் பஸ் நின்றது. பஸ்ஸை விட்டு கீழே இறங்கினோம். எல்லோருக்கும் முன்னால்கந்தசாமி இறங்கினான். எங்களையெல்லாம் வழி மறித்துக் கொண்டு நின்றான். மணியைப் பார்த்து, “ மணி காசக் கொண்டா?” என்றான். மணிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.


“ காசா?..” என்றான் மணி.


கொஞ்சமும் தயங்காமல் கந்தசாமி, “ அதான் ஊரு வந்திருச்சில்ல…..”என்றான். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

4 comments:

  1. நினைவுகளின் நூற்புகள் என்றும் இனிமையானவையாகவே/
    ஆனால் கந்தசாமிகளையும்,மணிகளையும் இப்போது பார்க்க முடிவதில்லை.காலம் தந்து விட்டு சென்றிருக்கிற மிகப்பெரிய கொடைகளில் இதுவும் ஒன்றாக/

    ReplyDelete
  2. மனிதர்களில் பலவகையுண்டு என்பதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete