ரயிலின் வேகம் குறையத் தொடங்கியது.
கரி எஞ்சினின் நீண்ட கூவல் ஒலி, ஸ்டேஷன் நெருங்கிவிட்டதை உணர்த்தியது. நான், பெஞ்சிலிருந்து
எழுந்து வாசலுக்குப் போனேன். இரண்டு பக்க வாசல்களிலும் நின்று, நான் முதன் முதலாக ஸ்டேஷன்
மாஸ்டராகப் பணிபுரியப்போகும் ஸ்டேஷன் தெரிகிறதா என்று பார்த்தேன். கண்களுக்கெட்டியவரை
மரஞ்செடி கொடிகளைத் தவிர, வேறு ஒன்றும் தெரியவில்லை.
சற்று எட்டிப் பார்த்தபோது,
ரயில் ஒரு வளைவான மேட்டில் ஏறிக்கொண்டிருந்தது. கண்ணில் கரித்தூசி விழுந்தது. விழுப்புரம்
விட்டதிலிருந்து நாலைந்து முறை இப்படியாகிவிட்டது. கண்களைக் கசக்கிக்கொண்டே உள்ளே வந்து
என் பைகளை எடுத்துக் கொண்டேன். வாசல் பக்கம் வந்து தயாராக நின்று கொண்டேன். நெஞ்சில்
ஒரு இனம்புரியாத உணர்வு. இன்றிலிருந்து புதிய வாழ்க்கை, புதிய நாட்கள், புதிய மனிதர்கள்.
எப்படி எதிர்கொள்ளப் போகிறேனோ என்ற அச்சம், அவ்வப்போது தலைதூக்கி வயிற்றைப் புரட்டிக்
கொண்டிருந்தது. இயல்பிலேயே கூச்ச சுபாவமும் தயக்கமும் கொண்ட என்னால், புதியவர்களோடு
அவ்வளவு சகஜமாகப் பழக முடிவதில்லை.
டிரெயினிங்கில் நண்பர்களான
ஓ.வி.ரமேஷ், செல்வராஜ், ஜோசப்ராஜ், விவேகானந்தன் என எல்லோருமே அவர்களாகவே வந்து என்னிடம்
ஒட்டிக்கொண்டு, என்னை இயல்பாக்கிய நல்லவர்கள். கோவில்பட்டியிலிருந்து வேரோடு பிடுங்கியெறிந்த
மாதிரியான ஒரு அநாதரவான உணர்வு இருந்தது. கண்ட கனவுகளுக்கும், படித்த புத்தகங்களுக்கும்,
எப்போதும் வாசிப்பு, சர்ச்சை என்று வாழ்ந்த வாழ்க்கைக்கும் சற்றும் சம்பந்தமில்லாத
இன்னொரு அந்நியமான பிரதேசம்.
கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன்
பெஞ்சுகளில், நண்பர்கள் புடைசூழ உட்கார்ந்திருந்து பேசியதைத் தவிர, ரயிலில் ஏறிப் பயணித்ததில்லை.
ரயில், டால்ஸ்டாயின் அன்னாகரினினாவில் ஓடிக்கொண்டிருந்தது. கு.அழகிரிசாமியின் கதைகளுக்குள்
பாய்ந்து சென்றது. எல்லா ரயில்களுக்குள்ளும், மானசீகமாக ஏறி இறங்கிப் பார்த்திருக்கிறேன்.
ரயிலுக்கு கிடைத்திருந்த இலக்கிய அந்தஸ்து காரணமாகவே, கோவில்பட்டி இலக்கிய நண்பர்கள்
மத்தியில் ரயில் ஒரு கனவுக் கன்னியாகவே திகழ்ந்தது.
நான், ரயில்வேயில் உதவி நிலைய
அதிகாரி பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவுடன், என்னைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாகவே
இருந்தனர். இதோ, ஆறு மாதகால டிரெயினிங் முடித்து, என்னுடைய முதல் வேலை ஸ்தலமான விழுப்புரம்
& திருவண்ணாமலை செக்ஷனில் இருக்கும் ‘வேளானந்தல்’ ரயில்வே ஸ்டேஷனில் இறங்கப்போகிறேன்.
என்ன நடக்கப்போகிறதோ?
ஈளை நோயாளியைப் போல கீசுகீசென்று
இளைத்துக்கொண்டே போய் நின்றது ரயில். நான், அவசர அவசரமாக இறங்கினேன். என்னுடைய லக்கேஜுகளை
இறக்கி வைத்துவிட்டு, திரும்பிப் பார்த்தேன். ரயில், என்னைத் தனியாக விட்டுவிட்டுப்
போய்க்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் ஆளரவமே இல்லை. நாலைந்து பெரிய ஆலமரங்கள் அடர்ந்த விழுதுகளோடு
நின்று கொண்டிருந்தது. பிளாட்பாரத்தில் ஒருவர்கூட இல்லை. அன்று இறங்கிய ஒரே பயணி நான்தான்போல.
ஏதோ, ஜெய்சங்கரின் துப்பறியும் படத்தில் வருகிற மர்மமான ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டேனோ
என்றுகூடத் தோன்றியது. என்னுடைய பைகளைத் தூக்கிக்கொண்டு அந்த ஆலமரங்களுக்குப் பின்னாலிருந்த
ஸ்டேஷனை நோக்கி நடந்தேன்.
ஸ்டேஷன் வாசலில், வயதான ஒரு
பாயிண்ட்ஸ்மேன் நின்று கொண்டிருந்தார். நான், அவரைப் பார்த்துச் சிரிக்க முயற்சி செய்தேன்.
ஆனால், அவர் சிரிக்கவில்லை. முகம் இறுகியிருந்தது. அவருடைய தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது,
அவர் ரிட்டையராகி பல ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். ஆனால், இன்னமும் சர்வீஸில் இருந்தார்.
ஸ்டேஷன் வாசலில், என்னுடைய பைகளை வைத்துவிட்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன். உள்ளே, ஒரு
சேரில் ஸ்டேஷன் மாஸ்டர் மத்திய வயதில் உட்கார்ந்திருந்தார். நான், அவரிடம் புதிதாக
வந்திருக்கும் உதவி நிலைய அதிகாரி என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னுடைய
அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரைக் கொடுத்தேன். முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாமல் என்னைப்
பார்த்தார்.
‘‘ஏன்.. வேற ஸ்டேஷன் கிடைக்கலியா?’’
அவருடைய முதல் வரவேற்பு வாசகங்கள்,
என்னைத் தாக்கி நிலைகுலையச் செய்தன. தொண்டையில் வார்த்தைகளே இல்லாத மாதிரி நான்.
‘‘ஏன் சார்?’’
அவர் அதே உணர்ச்சியற்ற குரலில், ‘‘இது பனிஷ்மெண்ட் ஸ்டேஷன் தம்பி. இங்கே எந்த வசதியும் கிடையாது. சாப்பாடும் கிடையாது. கண்டெம்டு குவார்ட்டர்ஸ்லதான் தங்கணும். பாம்புகளோடு குடித்தனம் பண்ணனும். சிங்கம், புலி மாதிரி மிருகங்கள் மட்டும்தான் இங்கே கிடையாது. மற்றபடி எல்லாம் இருக்கு...’’
அவர் அதே உணர்ச்சியற்ற குரலில், ‘‘இது பனிஷ்மெண்ட் ஸ்டேஷன் தம்பி. இங்கே எந்த வசதியும் கிடையாது. சாப்பாடும் கிடையாது. கண்டெம்டு குவார்ட்டர்ஸ்லதான் தங்கணும். பாம்புகளோடு குடித்தனம் பண்ணனும். சிங்கம், புலி மாதிரி மிருகங்கள் மட்டும்தான் இங்கே கிடையாது. மற்றபடி எல்லாம் இருக்கு...’’
எனக்கு அழுகையே வந்துவிட்டது.
என் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ, ‘‘ஆபீஸ்ஸ்ல தெரிஞ்ச ஆளுக
யாராச்சும் இருக்காங்களா? இருந்தா, இப்படியே போய் ஆர்டரை கேன்சல் பண்ணி வேற ஊர் வாங்கிட்டுப்
போயிருங்க..’’ என்று ஆலோசனை கொடுத்தார். எனக்கு யாரைத் தெரியும்? அப்படியெல்லாம் இருந்திருந்தால்,
கோவில்பட்டிக்காரன் திருச்சிக்குப் பக்கத்திலேயே வாங்கியிருப்பேனே.
‘‘இல்ல சார்.. பரவாயில்ல..’’
அவர் நிமிர்ந்து, ‘சரி, உன்
தலைவிதி’ என்று சொல்லாமல் பார்வையிலேயே அதை கம்யூனிகேட் பண்ணினார். வெளியே வந்து பார்த்தேன்.
பெருங்காடு கடலென விரிந்து கிடந்தது. இருள் கவிய கவிய, பூச்சிகளின் ரீங்காரம் ‘‘ங்கொய்ய்’’
என்று காதைத் துளைத்தது. எதிரே தெரிந்த இருள் என்னைப் பயமுறுத்தியது. என் முதுகுத்தண்டில்
ஒரு சிலிர்ப்பு. என்ன காத்திருக்கிறதோ எனக்கு?
சின்னப்பிள்ளைகள் எல்லோருக்கும்
முதலில் இருட்டைக் கண்டால் பயமாகத்தானிருக்கும். ஆனால், வயதாக ஆக, அந்த பயம் தெளிந்துவிடும்.
அப்படிப் பயம் தெளியாமலே சிலர் வளர்ந்துவிடுவார்கள். நான் அப்படியே வளர்ந்தவன். பிறந்து
வளர்ந்த தெருவில், தெருவிளக்கு எரியவில்லையென்றால்கூட பாட்டுப் பாடிக்கொண்டே போவேன்.
வீட்டில் யாரும் இல்லையென்றால், சுற்றியிருக்கும் வீடுகளில் இருப்பவர்களுக்கு இலவசமாக
எம்.ஜி.ஆர்., சிவாஜி, காதல், தத்துவப் பாடல்களை வழங்கிக் கொண்டிருப்பேன்.
எல்லாம் ஒரு தற்காப்புக்காகத்தான்.
என் சத்தத்தைக் கேட்டுப் பொறுக்க முடியாமல், அருகில் எங்காவது அன்றைய சூடான செய்திகளைப்
பரிமாறிக்கொள்ளப் போயிருக்கும் என் அம்மாவைப் பார்த்து, சொல்லி அனுப்பி வைப்பார்கள்.
அம்மா வீட்டுக்குள் வரும்போதே,
‘‘ஏன் இந்த காட்டுக்கூப்பாடு
போடுதே.. கொஞ்ச நேரம் வெளிய போக வலிக்குதா...’’என்று வைதுகொண்டே வருவாள்.
அப்படிப்பட்ட சூரப்புலிக்கு,
இப்படி ஒரு ஸ்டேஷன். இப்படி ஒரு வேலை. டூட்டி எடுத்து ஒரு வாரம் ஆகிட்டது. ஒரு வாரமும்
நான் பட்டபாடு கொஞ்சநஞ்சமில்லை. காலையிலேயே பாயிண்ட்ஸ்மேன் சைக்கிளை எடுத்துக்கொண்டு,
ஸ்டேஷனிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளியிருந்த வேளானந்தல் கிராமத்துக்குப் போய்,
இருந்த ஒரே ஒரு கடையில் காலைக்கும், மதியத்துக்கும் இட்லிகளை வாங்கிக்கொண்டு, வேகுவேகென்று
சைக்கிளை மிதித்து வந்து டூட்டி எடுப்பேன். இரவுக்கு அடுத்த ஸ்டேஷனான திருவண்ணாமலையிலிருந்து
டிபன். இப்படி, டிபனாகச் சாப்பிட்டு, கடும் டீயாகக் குடித்து, சிகரெட்டுகளாகப் புகைத்து
உயிர் வாழ்ந்தேன்.
அன்றாடம் ஸ்டேஷனுக்குள்ளும்,
பாதைகளிலும், ஆலமரப் பொந்துகளிலும், குவார்ட்டர்ஸிலும், பாம்புகள் படையெடுத்து வந்துகொண்டே
இருந்தன. கண்காட்சிகளில் கண்ணாடிப் பெட்டிகளுக்குள் மட்டுமே பார்த்திருந்த பாம்புகளை
நேரில் பார்த்தால், அதுவும் அருகிலேயே என்னை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் அதன்
கண்களைப் பார்த்தால், எப்படி இருக்கும்? ஒரு வாரத்துக்குள் எனக்கு வெறுத்துவிட்டது.
கொண்டு வந்த புத்தகங்களைப் பலமுறை படித்துவிட்டேன். எல்லா நண்பர்களுக்கும் என் தனிமையின்
துயர் பற்றி கடிதங்களை எழுதித் தள்ளினேன்.
ஒன்று, இந்த ஸ்டேஷனை விட்டு
வேறு ஸ்டேஷனுக்கு மாறவேண்டும். இல்லையென்றால் வேலையை விடவேண்டும். இரண்டாவது யோசனையை
நினைக்கும்போதே இனித்தது. மீண்டும் கோவில்பட்டி. மீண்டும் நண்பர்கள். மீண்டும் விவாதங்கள்.
எல்லாவற்றையும்விட, என்னை
மிகவும் பயமுறுத்தியது வேளானந்தலின் இரவுதான். நரிகளின் ஊளையும், பூச்சிகளின் ரீங்காரமும்,
இரவுப் பறவைகளின் கூவலும் சேர்ந்து, ஒரு பயங்கர உணர்வைத் தோற்றுவித்தன. எனவே, என்னுடன்
வேலை பார்க்கும் பாயிண்ட்ஸ்மேன் கூடவே எப்போதும் இருந்தேன். இரவில், ஸ்டேஷனுக்கு வெளியே
நாற்காலியைப் போட்டுக்கொண்டு, பாயிண்ட்ஸ்மேனையும் உட்கார வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பேன்.
அவருக்குத் தூக்கம் வந்தாலும் விடுவதில்லை. அடிக்கடி கடுங்காப்பியோ, டீயோ போட்டுக்
குடித்துக்கொண்டே இரவுப் பொழுதை, இஞ்ச் இஞ்ச்சாக நகர்த்துவேன்.
அப்படி ஒரு அமாவாசை நாள்.
தூரத்தில் திருவண்ணாமலை நகரத்தின் வெளிச்சப்புள்ளிகளைத் தவிர, வேறு எதுவும் இல்லை.
பிசைந்து அப்பிய இருள், என் எதிரே. அது எத்தனையோ மர்மங்களை மூடியிருந்தது. புதிரான
அதன் பாஷை எனக்குப் புரியவில்லை. நான், அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய
பாயிண்ட்ஸ்மேன் ராமசாமி, காப்பி போட்டுக் கொண்டிருந்தார். என் மனதில், தனிமையின் பயங்கரம்
என்னைத் தின்று கொண்டிருந்தது.
ராமசாமி, காபியை டம்ளரில்
கொண்டு வந்து கொடுத்தார். இதமான அந்த குளிரில், ஆவி பறக்கும் கடுங்காப்பி என்னை ஆற்றுப்படுத்தியது.
தண்டவாளங்களுக்கு அப்பால், இருளுக்குள் தொலைத்திருந்த கண்களை மீட்டு, காபியைக் குடிக்கத்
தொடங்கினேன். ஏதோ, என் கண்முன்னே அசைவதைப்போல ஒரு உள்ளுணர்வு. நிமிர்ந்து பார்த்தேன்.
இருளே உருவாக ஒரு ஆள், எதிரே நின்று கொண்டிருந்தான். பயத்தில் நாக்குழறியது.
‘‘ராமசாமி.. ராமசாமி..’’
உள்ளேயிருந்து ராமசாமி என்னவோ
ஏதோ என்று கையில் ஒரு கம்புடன் ஓடிவந்தார். பாம்போ, பூச்சியோ இருக்கலாம் என்று அவர்
நினைத்திருந்தார். ஆனால், நிலைமை வேறு மாதிரி இருக்கவே, ‘‘யாருய்யா... நீ...’’ என்று
அதட்டலாகக் கேட்டார்.
அவன் பதில் சொல்லவில்லை.
நான் குடித்துக் கொண்டிருந்த காப்பி டம்ளரை நோக்கி கையை நீட்டினான். நெஞ்சுவரை வளர்ந்த
தாடி, சடை பிடித்த தலைமுடி. கையில் ஒரு சிரட்டை வைத்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.
ராமசாமி உள்ளே போய், கொஞ்சம் டீயைக் கொண்டு வந்து அந்தச் சிரட்டையில் ஊற்றினான்.
‘‘எங்கே போறே?’’ என்று ராமசாமி
கேட்டார். பதில் எதுவுமில்லை. நான் அந்த ஆளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படி இந்த
இருளுக்குள் தனியாக முளைத்து வந்தான்? எனக்கு ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருந்தது.
ராமசாமி, ‘‘ஒண்ணுமில்ல..
பைத்தியங்க இப்படி அப்பப்ப வந்து போகும் சார். பயப்படாதீங்க..’’
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
எப்படி மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு எதைப்பற்றியும் பயமில்லாமல் இருக்க முடிகிறது? நிதானம்தான்
பயமா? நிதானம்தான் கற்பனையான பயங்களின் உற்பத்தி மூலமா? என் எண்ணங்கள் ஓடத்தொடங்கியபோது,
உள்ளேயிருந்து அடுத்த ரயிலுக்கான ‘அனுமதிக்காக அழைப்பு மணி’ கேட்டது. அனுமதியைக் கொடுத்துவிட்டு
வெளியே வந்தேன். அந்த ஆளைக் காணவில்லை. தண்டவாளத்தில் நின்று இருபுறமும் பார்த்தேன்.
இல்லை. அந்த ஆள் வந்த சுவடும் போன சுவடும் தெரியவில்லை. எதிரே காட்டுக்குள் உற்றுப்பார்த்தேன்.
இந்த இருளுக்குள் இருளாக மறைந்துவிட்டானோ?
எனக்கு மனசு லேசான மாதிரி
இருந்தது. மனதில் அடைத்துக் கிடந்த ஏதோ ஒன்று திறந்து பாரம் குறைந்த மாதிரி. புதிய
உணர்வு ஒன்று முளைவிட்டு வளரத் தொடங்கியது. என் கண்களின் பார்வையில் கூர்மை கூடிக்கொண்டிருந்தது.
பயம் என்ற பாறாங்கல் லேசாக அசைந்து கொண்டிருந்தது. எதிரே, இருண்ட காட்டையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தேன். காட்சிகள் கட்புலனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. எதிரே இருந்த
காட்டுமரங்கள், செடிகொடிகள். அதில் உட்கார்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த பறவைகள். வானத்தில்
விடிவெள்ளி தெரிந்தது. இன்னுமொரு புதிய நாளின் புதிய விடியலை அறிவிக்க, காட்டிலிருந்து
முதல் குரல் வந்தது. என் மனதில் புதுவெள்ளமெனப் பெருகிய உணர்ச்சிப் பெருக்கில், மகாகவி
பாரதியின் கவிதை வரிகளை என் வாய் முணுமுணுத்தது.
‘‘இருள் என்பது குறைந்த ஒளி!’’
வேளானந்தல் இருளில் உங்களுக்குப் பின்னாலே தொடர்ந்தேன் பயமின்றி..உங்கள் எழுத்து தந்த ஊக்கத்தில்....!! அருமையான பதிவு....!! நிறைய எழுதுங்க தம்பி....-------------ஆர்.எஸ்.மணி,திண்டுக்கல்
ReplyDeleteநன்றி!
Deleteஎன்ன ஒரு அழகான பதிவு.புதிய மனிதர்கள்,புதிய வாழ்வு, வரிகளை படிக்கையில் அந்த புதிய சூழல் பற்றிக் கொண்டது.
ReplyDeleteநன்றி தோழர்!
Deleteவேளானந்தல் நினைவுகளை கிளறிவிட்டது.அந்த நாட்கள் மீண்டும் வருமா சங்கர்...
ReplyDeleteஇன்னொரு நினைவுக்குறிப்புகளும் விரைவில் வரும். கோவில்பட்டிக்கு அடுத்து என்னை நிலைப்படுத்திய நிலப்பரப்பு வேளானந்தல், திருவண்ணாமலை, நீங்கள், பவா. நன்றி கருணா!
Delete