தூரம் அதிகமில்லை
கருணை என்ற கருணையானந்தம் பார்க்கிற நண்பர்கள், உறவினர்கள், உற்றார்கள், முன்பின் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், எல்லோரிடமும் மனப்பாடமாய் சொல்லிக் கொண்டிருந்தான். முதலில் கவனமாகக் கேட்டார்கள்.பின் பரிதாபத்துடன் கேட்டார்கள். அதன் பிறகு எரிச்சலுடன் கேட்டார்கள். இப்போது கருணையைக் கண்டாலே காததூரம் ஓடுகிறார்கள். அப்படி கருணை என்னதான் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆர்வமாக இருப்பதை மின்னும் உங்கள் கண்களிலிருந்து நான் தெரிந்து கொண்டேன் நண்பரே! சரி. கவனமாகக் கேளுங்கள். நீங்கள் என் பின்னாலேயே வரவேண்டும். நீங்கள் இருப்பது கருணைக்குத் தெரியக்கூடாது. அப்படித் தெரிந்து கொண்டு விட்டால் உங்கள் ஜாமீனுக்கு நான் ஜவாப்தாரியில்லை. இதைக் கேட்டவுடன் இரண்டடி பின் வாங்குவது தெரிகிறது.கவலைப்படாதீர்கள். அப்படியெல்லாம் உங்களைக் கை விட்டு விடமாட்டேன்.நீங்கள் விடும் பெருமூச்சு இனி நீங்கள் கதையைத் தொடங்கலாம் என்று சொல்கிறது.
வேறொன்றுமில்லை. கருணையானந்தம் நன்றாகத் தான் இருந்தான். தான் உண்டு தன்னுடைய வேலையுண்டு என்று பெரும்பாலான மத்தியதரவர்க்கக் குணாளர்களைப் போலவே தன் இல்லாள் மக்கள் இருவருடன் ராஜ்ஜியப்பரிபாலனம் செய்து கொண்டு வரும் வேளையிலே, அவனுடைய துணைவியார் சாந்தலட்சுமி திடீரென வீரலட்சுமியாகி விட சும்மா ஒரு பில்டப்பிலேயே வீட்டில் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த கருணைக்கு வீரலட்சுமியை.. சாரி.. சாந்தலட்சுமியை சாந்தப் படுத்தவேண்டியதாயிற்று. சுருக்கமாகச் சொல்லப் போனால் சாந்தலட்சுமி கருணைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்தாள். இது அதை விடக் குழப்பமாக இருக்கிறதா? இந்த எழுத்தாளர்களே இப்படித்தான் எதையும் பட்டென்று சொல்லத் தெரியாது. ஒரு கருணை மாதிரி தான். அதான் கருணையின் நண்பர் என்று சொல்லும்போதே தெரிகிறதே என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. சரி பரவாயில்லை.
வருடத்துக்கு ஒருமுறை வீடு மாற்றிக்கொண்டேயிருந்த கருணைக்கு இடம் வாங்கி வீடு கட்டும் ஆசை வந்து விட்டது. தானாக வந்தது என்று சொன்னால் அது வரலாற்றுப் பிழையாகி விடும். ஏனெனில் கருணை அப்படி ஆசையின் திசைப்பக்கம் தலைவைத்துக் கூடப் படுத்ததில்லை. அது மட்டுமில்லை. அது தன்னால் முடிகிற காரியம் இல்லை என்று நன்கு அறிந்தவனாதலால் ஒரு தத்துவஞானி போலவோ, ஒரு அறிவுஜீவி போலவோ,வியாக்கியானங்கள் செய்வான். அவன் சொல்கிற எந்தஒரு பாயிண்டயும் யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.அப்படி என்ன மறுக்கமுடியாதபடி சொல்லுவான் என்று கேட்க நினைக்கிறீர்கள் தானே!
“வீடு கட்டுவதைப் போல ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட் வேறு எதுவும் கிடையாது. மனை நீங்க எவ்வளவு குறைச்சு வாங்கினாலும் ஒரு மூணு லட்சம்..வீடு கட்ட வங்கிக் கடன் சொந்தக் காசு என்று ஒரு பத்து லட்சம்.. வங்கிக்கடனுக்குக் வட்டி ஒரு ரெண்டு லட்சம்.. எல்லாம் சேர்த்து ஒரு பதினைந்து லட்சம் முதலீடு செய்றீங்க. ஆனா அதில என்ன லாபம்? மாசாமாசம் தேய்மானச் செலவு தான் மிச்சம். அது மட்டுமா..சொந்தவீடாச்சேன்னு மேலும் மெலும் அழகு படுத்துவீங்க..ஒரு சிறு கீறல் விழுந்தாலும் கொத்தனாரைக் கூட்டிட்டு வந்து ஏதோ அஸ்திவாரமே ஆடிப் போன மாதிரி பூசச் சொல்வீங்க.. ஒரு ஸீரோ வாட்ஸ் பல்ப் எரியலன்னாலும் தாங்க முடியாது துடிச்சிப் போயிருவீங்க.. அப்புறம் வீட்டுக்கு முன்னாலே மரஞ்செடி,கொடி அதுக்குத் தண்ணீர் உரம், போக்குவரத்துன்னு இது வரை இல்லாத செலவு செய்வீங்க..யோசிச்சிப் பார்த்தா பத்து லட்சருபாய் முதலீடு, மாசாமாசாம் நிரந்தரமான செலவினங்களைக் கொண்டுட்டு வந்துகிட்டே இருக்கும்..பல நேரம்வாடகையை விட அதிக செலவாயிரும்..என்ன இது என் வீடுன்னு பெருமையாச் சொல்லிக்கலாம்..அப்பப்போ தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்தும் உத்துப்பார்த்தும் திருப்திப் பட்டுக்கலாம்..நல்லவேளை ரெக்கை இல்லை..இல்லைன்னா பறந்து கூடப் பார்ப்பாங்க..இந்தப் பெருமைக்காக பத்து வருசமோ, பதினைஞ்சி வருசமோ பேங்க் கடனை அடைக்கணும்..அது அடைஞ்சி முடியிற வரைக்கும் உண்மையில வீடு உங்களுதான்னா அதுவும் இல்லை..பத்திரம் பத்திரமா பேங்க்கில இருக்கும்.. நியாயமாச் சொல்லப் போனா பேங்க்காரங்க தான் பெருமைப் படணும் யோசிச்சுப் பாருங்க.. இந்தத் துன்பம் போதாதுன்னு..கஷ்டப் பட்டு வீடு கட்டி முடிச்சி அக்கடான்னு உக்கார முடியுமா? வீடு யாருக்குன்னு பேச்சு கிளம்பிரும்..பொண்டாட்டி சொல்வா எம்பேர்ல வீட்டை எழுதியிருக்கலாம்ல..பிள்ளைகளும் கணக்குப் போட ஆரம்பிச்சிருவாங்க.. எல்லோருக்கும் அது ஒரு பால்கோவா துண்டைப் போல பாக்கிறபோதெல்லாம் வாயில எச்சிய ஊற வைக்கும்..அது கூடப் பரவாயில்லை.. அத விட ஆபத்து.. நம்ம காலம் எப்ப முடியும்னு கணக்கு பண்றநிலைமையும் வந்துரும்.. கேட்கும்போது கொஞ்சம் அதிகமா தெரியும்.. ஆனா யதார்த்தத்தில நடக்கிறதத்தான் சொல்றேன்.. இதுக்குப் பேசாம வருசத்துக்கு ஒரு வீடு மாறினாலும் வாடகை வீடு எவ்வளவோ பரவாயில்லை..பிடிச்சா இந்த மடம் இல்லேன்னா வேற மடம்னு மாத்திகிட்டு போயிக்கிட்டேயிருக்கலாம்.. இது நம்ம வீடுன்னு பாசம் பொங்கி வழுக்கி விழ வேண்டியதில்லை..ஒருவேளை உங்க கையில பத்து லட்சரூபாய் மொத்தமா இருந்தா நிரந்தர வைப்புத்தொகையில போடுங்க..வாற வட்டியில வீட்டு வாடகையும் கொடுத்து நீங்களும் செழிப்பா செலவும் பண்ணலாம்..நம்ம முதலும் கரயாது….”.
என்று தன் தர்க்க அறிவின் பெருமிதம் முகத்தில் வழிய பேசிமுடிக்கிற கருணையின் முன் நிற்பவரின் முகம் கறுக்கத் தொடங்கி விடும். அவர் வீடு ஏற்கனவே கட்டியிருந்தாரென்றால் அதற்காக குறைந்தது ஒரு வாரம் வருத்தப் படுவார். இனிமேல் தான் வீடு கட்டப் போகிறாரென்றால் குறைந்தது ஒரு மாசமாவது தள்ளிப் போடுவார். அவ்வளவு தான் வேறொன்றும் நிகழ்ந்து விடாது. அவனுடைய சக ஊழியர்களே
“சார் நீங்க வீடு கட்டப் போறதா இருந்தா நம்ப கருணைகிட்ட மட்டும் பேசிராதீங்க..”
என்று சொல்கிற அளவுக்குப் புகழ் பெற்ற கருணையானந்தம் மனை வாங்கி வீடு கட்ட ஆசைப்பட்டான். என்ன ஆச்சரியம் வரவில்லையா? கதையில் ஒரு ட்விஸ்ட் வேண்டாமா! நாங்கள்லாம் எம்புட்டு ட்விஸ்ட்டுகளைப் பார்த்திருப்போம் என்று சொல்கிறீர்களா? உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். கொஞ்சம் ஆச்சரியத்தோடு புருவங்களையும் உதட்டையும் “அட” என்று சுளிக்கிற என் அருமை வாசகர்களுக்காக, அவர்கள் மிகச் சிலரேயாயினும் அவர்களுக்காக கதையைத் தொடர்கிறேன். நான் முதலில் சொன்னதை மறந்து விடாதீர்கள். என் பின்னாலேயே வாருங்கள்.
எப்படி இருந்த கருணை இப்படி மாறியதற்குக் காரணம் அவனுடைய இல்லாள் சாந்தலட்சுமி தான் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள் தானே. உங்கள் அமைதி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் வீட்டிலும் இது தான் நிலைமை என்று புரிந்து கொண்டால் தவறில்லை என்று நினைக்கிறேன். உலகம் பூரா சாந்தலட்சுமிகள் தான் எறும்புகளாக ஊர ஊர கல்லான கருணைகளைத் தேய்த்து இளக்கி களிமண்ணாக்கி விடுகிறார்கள்.பின்னர் அவர்களிஷ்டம் போல் அதில் பிள்ளையாரோ,குரங்கோ அவர்களுக்குப் பிடித்த மாதிரி செய்து கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல வருவது தெரிகிறது. ஆனால் நான் இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இருபத்திநாலுமணி நேரமும் வீட்டு நிர்வாகம் செய்து பார்த்தால் தெரியும்! சரி.சரி. கதைக்கு வாருங்கள்! என்று நீங்கள் எரிச்சல் படுவது தெரிகிறது. நியாயம் தான்.
கருணை அலுவலகம் சென்று மீண்டு வருவதற்கிடையில் வீரலட்சுமி வீட்டுக்காரம்மாவோடு சிறு சிறு சலுகைகளுக்காகவும், சிறு சிறு மீறல்களுக்காக இச்சகம் பேசுவதும், கூடமாட உதவிகள் செய்கிற மாதிரி பாவலா காட்டுவதும், ஊர்க்கதை, உலகக்கதை பேசி குஷிப் படுத்துவதும், தொலைக்காட்சி மெகா சீரியல்களில் வருகிற பெண்கதாபாத்திரங்களின் நேற்றைய, இன்றைய, நாளைய, வாழ்க்கையைப் பற்றி அந்த சீரியலின் இயக்குநரை விடக் கவலைப் பட்டு, சீரியஸாகப் பேசி மனதைக் கரைப்பது என்று எண்ணற்ற தந்திரோபயங்களைக் கைக்கொண்டாலும், ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் வீட்டுக்காரம்மாவுக்கு தான் தான் வீட்டுக்குச் சொந்தக்காரி என்ற ஞானம் வந்துவிடும். அவ்வளவு தான். எல்லா சலுகைகளும் மீறல்களும் கட்டாகி விடும். இப்படி வீடு வீடாக மாறி போவதில் அந்தந்த வீட்டுக்காரம்மாவின் குணாதிசயங்களைக் கண்டு பிடித்து அவற்றோடு அனுசரித்து அனுசரித்து சாந்தலட்சுமிக்கு தன் சொந்த குணாதிசயமே மறந்து போய் விட்டது. பல நேரங்களில் அந்நியள் மாதிரி பலப் பலக் குணாதிசயங்களுக்கு மாறிக் கொண்டிருந்தாள். இது அவளுக்கே பிடிக்கவில்லை. இதை விட ரகசியமாய் அவள் மனதில் ஒரு விதை விழுந்து முளைக்கத் துடித்துக் கொண்டிருந்தது. அவள் அதற்கு கனவுகளால் உரமிட்டு, கற்பனையால் தண்ணீர் விட்டு, விருட்சமென வளர்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்று தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே. அவளும் ஒரு வீட்டுக்காரம்மாவாகி வாடகைக்குக் குடியிருப்பவர்களைக் கருணையோடும், கடுமையாகவும் பார்க்க வேண்டும். அவர்கள் அவளை ஈஷிக் கொண்டேயிருப்பதை உள்ளூர ரசிக்க வேண்டும். இந்த விநோதவிபரீத ஆசை தந்த உத்வேகத்தில் கருணையானந்தத்தைக் கரைத்து விட்டாள். கருணையும் கருணயோடு தன்னுடைய லாஜிக்குகளின் கலகத்தைச் சாந்தலட்சுமியின் அதிரடிவார்த்தைப் படையின் துணையோடு அடக்கி ஒடுக்கி தடுப்புக் காவலில் வைத்து விட்டு மனை பார்க்கத் தொடங்கினான்.
முதலில் எல்லோரும் கேலி செய்தார்கள். பின்பு தங்களுடைய கூட்டத்தில் தானே முன் வந்து சேர்கிற அபாக்கியவானை அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். தினசரி ஆயிரக்கணக்கான மனைகளின் செய்திகள் அவன் மீது ஏறி ஊர்ந்தன. தட்டி விட்டு முடியவில்லை. தினமும் மனைகளைப் பார்க்க அலைந்தான். நகரம் என்பது அவன் நினைத்த மாதிரி இல்லை. அவன் அறிந்த ஊரே அவனுக்குத் தெரியாத ஊராக இருந்தது. ஊருக்குள் மனைகளே இல்லை. அப்படியே இருந்த ஒன்றிரண்டு மனைகளும் லட்சங்களின் பெருக்கல் தொகையில், அவன் இம்மையிலும் மறுமையிலும், கட்டித் தீரமுடியாத தொகையில் மர்மப் புன்னகை புரிந்தது. நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ளவே கருணைக்கு ஆறு மாதங்களாகி விட்டது. இந்த அலைச்சலில் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டான் கருணை. மெல்ல தடுப்புக்காவலில் இருந்து தப்பித்த லாஜிக்குகள் அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன. அவனும் ஒரு நாள் தொந்தரவு தாங்காமல் சாந்தலட்சுமியிடம் லாஜிக்குகளின் விரக்தியைச் சொல்ல, அன்று தான் உண்மையான வீரலட்சுமியின் விசுவரூபத்தைத் தரிசித்தான். அந்தத் தரிசனத்தின் வெம்மை தாள மாட்டாமல் லாஜிக்குகள் எரிந்து சாம்பலாக, கருணையோ சாந்தலட்சுமி மறுபடியும் விசுவரூபம் எடுக்காமலிருக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்தான். அதோடு சாந்தலட்சுமியின் வீரவசனங்களும் அவனை உசுப்பேத்தி விட்டன.
“ எங்க இருந்தாலும் சரி.. காடோ மலையோ இனிமே நானும் எம்பிள்ளைகளும் வாடகை வீட்டில இருக்க மாட்டோம்.. உங்களால முடியாட்டிச் சொல்லுங்க.. நாம் பாத்துக்கிறேன்..”
திடும் திடும்னு விழுந்த வார்த்தைகளில் ஊமைக்காயம் அடைந்த கருணை மறுநாள் காலை ஒரு வெறியோடு, தமிழ்க்கதாநாயகனின் கிளைமேக்ஸ் எழுச்சியோடு எழுந்து முதலில் பல் துலக்கினான்.
அன்று நண்பரா எதிரியா என்று கணிக்க முடியாத சக ஊழியர் ஒருவர் ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்தார். கனவு லேண்ட் புரோமோட்டர்ஸின் விளம்பரம். அதைப் படித்தவுடன் ஆச்சரியமாய் இருந்தது கருணைக்கு. அந்தப் பிரசுரத்தில் கண்டபடி தூரம் அதிகமில்லை..நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர், ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர், தேசிய நாற்கரச் சாலையிலிருந்து நூறு மீட்டர், என்று போடப்பட்டிருந்தது. விலை அவனுக்குப் பொருத்தமாக மட்டுமில்லை.. அடக்கமாகவும் இருந்தது. அவன் சந்தோசத்தில் அந்த சக ஊழியருக்கு டீ வாங்கிக் கொடுத்தான். அன்று மாலை வீட்டில் சாந்தலட்சுமியிடம் அதன் சாதகபாதகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது கனவு லேண்ட் புரொமோட்டர்ஸின் விளம்பரநிகழ்ச்சியும் வந்தது. காமிராவின் கோணங்களில் எதுவுமே தூரமாக இல்லை. விளம்பரம் முடிந்த போது இருவருக்கும் திருப்தி. அவர்கள் இருந்த இடத்திலிருந்து அடுத்த அடி எடுத்து வைத்தால் போதும். மனை வந்து விடும். தூரம் அதிகமில்லை, என்று தோன்றியது.
இரண்டே நாட்களில் குடும்பத்தோடு கனவு லேண்ட் புரோமோட்டர்ஸ் அலுவலகம் சென்று அவர்கள் ஏற்பாடு செய்த ஆம்னி பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்த விற்பனைப் பிரதிநிதியின் வாயையேப் பார்த்துக் கொண்டு வந்ததில் கண் மூடி முழிக்கும் நேரத்தில் மனைக்கு வந்து சேர்ந்த மாதிரி இருந்தது. அழகழகான வண்ணக் கொடிகள், தெருக்களின் பெயர்கள் தாங்கிய பலகைகள், தண்ணீர்குழாய்கள், என்று அமர்க்களப் பட்டது. இப்போதே குடி வந்து விடலாம் என்று கருணை நினைத்தான். ஆனால் சாந்தலட்சுமிக்குத் தான் அவ்வப்போது சில சந்தேகங்கள் முளைத்தன. ஆனால் அதைத்தன் வாதத் திறமையாலும், பொருளாதார நிபுணத்துவத்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்தான் கருணை.
அப்புறம் என்ன? ஒரு மாதத்தில் மனைக்குப் பத்திரம் பதிவு செய்தாகி விட்டது. வீட்டில் ஒரே கொண்டாட்டம். வீட்டுக்காரம்மா கூட கொஞ்சம் மரியாதை காட்டினாள். அடுத்து வீடு கட்டும் திட்டங்களும், பொருளாதார வழிமுறைகளும் ஒன்றையொன்று கடித்துக் குதறிச் சண்டை போட்டு கொண்டிருந்தன. கருணையும் சாந்தலட்சுமியும் பல இரவுகள் விழித்திருந்து கதைகள் பேசிக் கொண்டிருந்தனர். எல்லாமே கனவு மாதிரி இருந்தது. சாந்தலட்சுமி தான் ஒரு நாள் காரியாமாய்,
“போதும் பேசிக்கிட்டேருந்தா வீடு தானா முளைச்சி வந்திருமா.. உங்க பிரெண்ட் எஞ்சினியர் தானே … அவரைப் பாத்து அழகா ஒரு பிளானைப் போடச் சொல்லுங்க..மாடுலர் கிச்சன், குட்டியா ஒரு பூஜை ரூம்…”
என்று அவள் சொல்லி முடிக்குமுன்னர் பிள்ளைகள்,
“எங்களுக்குத் தனி ரூம்… எங்களுக்குத் தனி ரூம்…”
என்று கோஷம் போட்டன.
மறுநாள் அவனுடைய பள்ளி நண்பரான எஞ்சினியரைப் பார்த்தான்.விசயத்தைக் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த எஞ்சினியர் உடனே மனையைப் பார்க்க கருணையின் டி.வி.எஸ். எக்ஸ்.எல். வண்டியில் புறப்பட்டுவிட்டார். நகரத்தின் எல்லை வரை இரண்டு பேரும் சிரித்துப் பேசிக் கொண்டு போனார்கள். எல்லை தாண்டியதிலிருந்தே கருணை, எஞ்சினியரிடம்,
“ இந்தா இடம் வந்திருச்சி.. இந்தா இடம் வந்திருச்சி..”
என்று சொல்லிக் கொண்டே வந்தான். இடம் வருவதற்கான எந்த சமிக்ஞைகளும் இல்லை. அவனுக்கே பயமாகி விட்டது. ஒரு வேளை இடமே இல்லாமல் ஏமாற்றி விட்டார்களோ ..கண்ணைக் கட்டி விட்டது மாதிரி இருந்தது. சம்பந்தமில்லாமல் சாந்தலட்சுமியின் விசுவரூபமே கண்ணில் தெரிந்தது. போய்க் கொண்டேயிருந்தார்கள். எஞ்சினியருக்கு எரிச்சல் ஒவ்வொரு கொப்புளமாக வெடிக்க ஆரம்பித்தது.
“எங்க தாண்டா இருக்கு..”
“இங்க தான் பக்கத்துல தான்.. வந்திருச்சின்னு நினைக்கேன்..”
என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டே வந்தான் கருணை. ஆனால் அவனுக்கே நம்பிக்கை போய் விட்டது. புறப்பட்டபோது இருந்த உற்சாகம் வடிந்து சோர்வு வரவேற்காமலேயே வந்து விட்டது. முதலில் வந்த போது கண்மூடித்திறப்பதற்குள் வந்த மாதிரி இருந்ததே.என்று நினைத்தான். அதெல்லாம் குறளிவித்தை சார் என்று நீங்கள் காதில் முணுமுணுக்கிறீர்கள். இந்த விஞ்ஞானயுகத்தில் குறளிவித்தையாவது மண்ணாவது? ஆனால் எனக்கும் கவலையாகத் தான் இருக்கிறது. இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டுமோ தெரியவில்லையே. நான் வேறு உங்களையும் என் கூட அழைத்து வந்திருக்கிறேன். நீங்களும் உங்கள் வேலைகளையெல்லாம் விட்டு விட்டு கதைநாயகன் கருணையானந்தம் கதை முடிவில் என்ன சொல்லப் போகிறானோ என்று தெரிந்து கொள்வதற்காக என் பின்னாலேயே வந்திருக்கிறீர்கள். உங்களை ஏமாற்றிவிடக் கூடாது என்று என் கதைநாயகனிடம் ஒரு வார்த்தை எச்சரித்து விடுகிறேன். என் எச்சரிக்கையைக் கேட்டதும் அப்படியே நின்று விட்டான் கருணை. பார்த்தால் சாலையின் வலது புறத்தில் சாயம் மங்கிய கனவு லேண்ட் புரோமோட்டர்ஸின் விளம்பரப் பலகை. ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டான் கருணை.
மனையைப் பார்த்த எஞ்சினியர் எதுவும் பேசவில்லை. அமைதியின் பிடியில் கமுக்கமாக இருந்தார். அந்தக் கமுக்கத்தைப் பார்த்து கருணைக்குப் பயம் வந்தது.
“என்னடா எப்படி இருக்கு?”
”இது கரிசக் காடாச்சே..” என்று இழுத்தார் எஞ்சினியர்.
“அதனாலென்ன அதான் பெல்ட் போட்டு கட்டலாம்னு சொல்றாங்களே..”
“சரி பாப்போம்”
என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். திரும்பி வரும்போது இரண்டு பேரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
வீட்டிற்குப் போன கருணைக்கு மனசே சரியில்லை. சாந்தலட்சுமி கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களை சொல்லவில்லை. மறுநாள் அலுவலகம் முடிந்து எஞ்சினியரைப் பார்க்கப் போயிருந்தான்.
“ஏய் வாப்பா..” என்று சுரத்தில்லாமல் வரவேற்ற எஞ்சினியர் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். பின்னர் திடீரென,
“கருணை அந்த இடத்திலே வீடு கட்டமுடியாது.. கரிசக்காடுங்கிறது மட்டுமில்ல.. பாறை நூறு அடிக்கு கீழே இருக்கு.. பில்லர் போட்டு பெல்ட்டு போட்டு, அஸ்திவாரத்துக்கே உன் ஆஸ்தி அத்தனையும் போயிரும்.. அவ்வளவு தூரத்தில இப்ப கட்டுறது நாலு மடங்கு செலவு வேற.. பேசாம அதை வித்துட்டு வேற இடம் பாரு..”
என்று மளமளவென்று ஒப்பித்துவிட்டு நிறுத்திக் கொண்டார். கருணைக்கு முதலில் அவர் என்ன சொன்னாரென்றே புரியவில்லை. ஆனாலும் அனிச்சையாக
“அப்ப என்ன செய்ய?”
என்று கேட்டான். அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை அந்த எஞ்சினியர். வீட்டில் சாந்தலட்சுமியிடம் அந்த விசயத்தைச் சொல்லவே ஒரு வாரம் ஆனது. கருணையின் குடும்பமே ஒரு மாதகாலம் துக்கம் அனுஷ்டித்தது. இதற்குள் அக்கம்பக்கம் இந்த விசயம் பரவி தங்களுடைய தன்மானத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாதென்று சாந்தலட்சுமி தான் டிப்ளமேட்டிக்காக வேறு ஏரியாவுக்கு வீடு மாற்றிப் போகச் சொன்னாள். இரண்டு மாதகாலத் தடுப்புக் காவலில் கருணையின் லாஜிக்குகள் தங்களுடைய சுதந்திரச் சிறகுகளை விரிக்க முயற்சித்தன. ஆனால் கருணை அவற்றை இன்னும் கொஞ்சகாலத்துக்கு அடங்குமாறு மிரட்டிக் கொண்டிருந்தான். ஏன் தெரியுமா?
“தூரம் அதிகமில்லை ..நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் பஸ் ஸ்டாண்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர்.. ரயில்நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர்.. தேசிய நாற்கரச்சாலையிலிருந்து நூறு மீட்டர்…”
என்று கருணையானந்தம் பார்க்கிற நண்பர்கள், உற்றார், உறவினர்கள் முன்பின் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், என்று எல்லோரிடமும் மனப்பாடமாய் சொல்லிக் கொண்டிருந்தான். நான் ஏன் உங்களை என் பின்னாலேயே வரச் சொன்னேன் என்று இப்போது புரிகிறதா! என்ன இருந்தாலும் நீங்கள் என் அருமை வாசகரல்லவா?
No comments:
Post a Comment