Showing posts with label சண்டே இண்டியன். Show all posts
Showing posts with label சண்டே இண்டியன். Show all posts

Sunday, 4 November 2012

வரலாற்றை ஊடறுத்துச் செல்லும் வாழ்வின் பக்கங்கள் –அஞ்ஞாடி நாவலை முன் வைத்துச் சில குறிப்புகள்

Poomani3  

உதயசங்கர்

 

வரலாற்றாசிரியர்கள் கடந்த காலச் சம்பவங்களையே கோர்க்கிறார்கள். அந்தக் கோர்வையின் வழியே தங்களுக்குச் சாதகமான தரவுகளை மட்டும் முன் வைத்து தர்க்கரீதியான முடிவுகளை நோக்கிப் போகிறார்கள். பின்னர் அந்த முடிவுகளின் வழியே வரலாற்றை வியாக்கியானம் செய்கிறார்கள். தகவல்களும், ஆண்டுகளும், நாட்களும், நிகழ்ச்சிகளும், சம்பவங்களும், அரசாணைகளும், போர்களும், கலகமும், ஆட்சி மாற்றங்களும் மட்டும் வரலாறல்லவே. வரலாறு என்பது கடந்த காலத்தில் மானுடம் ரத்தமும், சதையுமாக வாழ்ந்து முடிந்த கதை. வாழ்வின் தகிக்கும் வெக்கையை மனிதர்கள் எதிர்கொண்ட விதம், ஒவ்வொரு அங்குலமாக மானுடம் முன்னேறிய பாதை, அந்த முன்னேற்றத்தின் போது அவர்கள் இழந்த உயிர்கள், உடமைகள், நிலம், ஏதிலிகளாக அலைந்து திரிந்து பற்றுக்கோடாக கிடைத்த ஒரு சிறு நூலைப்பற்றி வாழ்வின் துடிதுடிப்போடு அவர்கள் உயிர்த்தண்ணீரைப் பருகி உயிரை வளர்த்த விதம், இத்தனைக்கும் நடுவிலான அவர்களுடைய சந்தோஷம், துக்கம், மகிழ்ச்சி, கேலி, கிண்டல், நையாண்டி, குடும்பம், குழந்தைகள், என்று எல்லாம் நிறைந்து ததும்பி நிற்கிற முழுமையான சித்திரமல்லவா வரலாறு. பகுதியில் முழுமையையும், முழுமையில் பகுதியையும் தரிசிக்க வல்லவன் கலைஞன் மட்டும் தானே.

70 – களில் தமிழிலக்கியத்தில் ஒருபுதிய மறுமலர்ச்சி தோன்றியது. கரிசல் காட்டு இலக்கியத்தை முன்னெடுத்த கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏராகக் கொண்டு கரிசல் குக்கிராமங்களின் வெக்கையை அதன் சூடு ஆறாமல் வாசகர்களின் கையில் கொடுத்து அவர்களை அதிர வைத்தவர் எழுத்தாளர் பூமணி. அவருடைய சிறுகதைகள் யாரையும் முன்மாதிரியாகக் கொண்டவையல்ல. வயிறுகள், ரீதி, அநேகமாக பலருடைய மனதில் பாடமாகவே ஆகியிருந்தது. பின்னர் வெளிவந்த பிறகு நாவல் தமிழிக்கியத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. தொடர்ந்து அவர் எழுதி வெளிவந்த வெக்கை, நைவேத்தியம், நாவல்கள் எழுத்தாளர் பூமணியின் கலை உச்சத்தை பறைசாற்றுபவை. இப்போது அவருடைய இருபத்தைந்து ஆண்டு கால ஆராய்ச்சி, உழைப்பினால் வெளிவந்துள்ள அஞ்ஞாடி என்ற பிரம்மாண்டமான நாவல் வாழ்வையும் வரலாற்றையும் ஊடறுத்துச் சென்று துடிதுடிக்கும் மானுடவாழ்வின் அவலங்களையும், உன்னதங்களையும், காட்சிப்படிமங்களாக முன் வைக்கிறது.

கலிங்கல் கிராமத்தின் ஆண்டி என்கிற ஒரு மானுடப்புள்ளியிலிருந்து துவங்குகிறது நாவல். ஆண்டிக்கும் மாரிக்குமான நட்பில் ஒரு காவியநேசம் வெளிப்படுகிறது. அவர்கள் இருவரின் பார்வை வழியே கிராமம் நம் கண்கொள்ளாக்காட்சிகளாக விரிந்து மலர்கிறது. இளம்பருவத்தின் துள்ளல், விளையாட்டு, கேலி, கிண்டல், ஏகடியம், என்று படிக்கப் படிக்கத் தெவிட்டாத பக்கங்களாக நம்மை ஈர்க்கிறது. தமிழிலக்கியத்தில் இத்தகைய ஒரு காவிய நட்பு இதற்கு முன் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போல ஆண்டி என்ற கதாபாத்திரம் நாவலின் 1066 பக்கங்களிலும் ஊடும் பாவுமாக விசுவரூபமாக நிறைந்து நிற்கிறார். ஆதரவற்றவர்களை ஆதரிப்பதிலாகட்டும், மாரியின் குடும்பத்தின் மீதான கவனிப்பாகட்டும், அனாதைகளுக்கு உதவி செய்வதிலாகட்டும், அகதிகளுக்கு வாழ்வளிப்பதிலாகட்டும், ஆண்டி, கருப்பி, என்ற அபூர்வமனிதர்கள் இந்த வாழ்வை அர்த்தப்படுத்துகிறார்கள். வாழ்வை நிறைவாக வாழ்வதற்கு அவர்களுக்கு அரசியல், தத்துவ கோட்பாடுகள் தேவையாக இல்லை. எளிமையான அன்பு, சகமனிதர்களின் மீதானநேசம் போதும்.

இந்த வாழ்வினூடாகத் தான் பூமணி என்ற மகத்தான கலைஞன் வரலாற்றின் பேராற்றில் மூழ்கி எழுகிறான். எட்டையபுரம் சமஸ்தான வரலாறும், மதுரையை ஆண்ட நாயக்கர்களின் வரலாறும் இதுவரை சொல்லப்படாத கோணங்களில் சொல்லப்படுகிறது. பஞ்சகாலத்தைப் பற்றி ஒரு உணர்ச்சிகரமான சித்திரம் நம் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு இனம் வணிகத்தைக் கைப்பற்றி வாழ்வில் முன்னேறுகிறது. முன்னேற்றத்துக்கு சாதி ஒரு தடைக்கல்லாய் இருக்கும்போது மதம் மாறுகிறார்கள். வணிகத்தின் மூலம் தங்கள் நிலையை மாற்றப் போராடிக் கொண்டிருக்கும் அந்த இனத்தின் மீது ஆதிக்கசாதியினரின் பொறாமைத்தீ பற்றியெறிகிறது. கழுகுமலையில் கலவரம். சிவகாசிக் கொள்ளை, என்று அர்த்தமற்ற வன்முறை அர்த்தமுள்ள வாழ்வினை அழிக்கிறது. இந்த வன்முறைக்காட்சிகள் அப்படியே கண்முன்னே நடப்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பூமணி என்ற எழுத்துக்கலைஞனை இந்தப்பக்கங்களில் நாம் தரிசிக்க முடிகிறது. இதற்கெல்லாம் ஆதாரமான ஆவணங்களும், வழக்கு விபரங்களும், விசாரணைக் குறிப்புகளும், தீர்ப்புகளும் நாவலிலே சொல்லப்பட்டு நாவலின் நம்பகத்தன்மையைஉறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்து முஸ்லீம் கலவரங்களும், சுதந்திரப்போரின் இறுதி நாட்களும் காட்சிகளாய் விரிகிறது. ஒரு நூற்றாண்டு கால வரலாறு மிகத் துல்லியமாக புனைவின் விசித்திரமான பெருவெளியில் நம்மை நிறுத்தி சுற்றிலும் நடந்து கொண்டேயிருக்கிறது. காலத்தின் ஊடாக பயணம் செய்து அன்றைய மக்களின் பண்பாடு, கலாச்சாரம், உணவுப்பழக்கவழக்கங்கள், மரபுகளை, மொழியை, சொல்கதைகளை, நாட்டார் வழக்காற்றை கரிசல் பூமியின் வெப்பமிக்க வாழ்வை, உறவுகளை எல்லாம் நாவலின் வழியே வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை பூமணி வழங்கியுள்ளார்.

இருபத்தைந்து ஆண்டுகால உழைப்பில் அஞ்ஞாடி புனைவு வரலாறாகவும், வரலாற்றுப்புனைவாகவும், தமிழின் மிக முக்கியமான நாவலாக பரிணமித்துள்ளது. ஒரு நூற்றாண்டு கால மானுட வாழ்வில் மானுட உறவுகளில் நிகழும் அனைத்து மாற்றங்களையும் பதிவு செய்துள்ள நாவல் அஞ்ஞாடி. நம் காலத்தின் பெருமைமிக்க கரிசல்காட்டு கலைஞன் பூமணி. அஞ்ஞாடி அந்த மகத்தான கலைஞனின் மகத்தான படைப்பு அஞ்ஞாடி.

அஞ்ஞாடி- பூமணி

விலை- ரூ.925

வெளியீடு- க்ரியாபதிப்பகம், சென்னை Anjaadi-Thinner

நன்றி- சண்டே இண்டியன்