Showing posts with label கிராம்ஷி. Show all posts
Showing posts with label கிராம்ஷி. Show all posts

Friday, 21 September 2012

தீண்டாமையின் உயிர்

 

உதயசங்கர்

 

தீண்டாமை என்ற நடைமுறை இருபக்கம் கூரான கத்தியைப் போன்றது. வர்ணாசிரமதர்மம் என்பதே தீண்டாமை என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. சாதியப்படிநிலையில் உயர்ந்தவராகச் சொல்லப்படும் பிராமணரை சத்திரியர், வைசியர், சூத்திரர், யாரும் தீண்டக் கூடாது. எனவே அவர் மற்றவர்களால் தீண்டத்தகாதவராகவும் மற்றவர்களை அவர் தீண்ட முடியாதவராகவும் இருக்கிறார். பிராமணருக்குக் கீழே உள்ள சத்திரியர், வைசியர், ஆகியோரை சூத்திரர் எல்லா நேரங்களிலும் தீண்ட முடியாது. எனவே அவர்களும் சூத்திரர்களால் தீண்டத்தகாதவர்களாகவும் அவர்கள் பிராமணரையும் சூத்திரரையும் தீண்ட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். சூத்திரர்கள் அவர்களுக்கு மேலே உள்ள வர்ணங்களை தீண்டமுடியாதவராகவும், அவர்களால் தீண்டத் தகாதவராகவும் இருக்கிறார்கள். பஞ்சமர்கள் யாரையும் தீண்டக்கூடாது. பஞ்சமர்கள் அவர்களுக்கு மேலே உள்ள அனைத்து வர்ணங்களாலும் தீண்டத் தகாதவர்களாகவும், அவர்கள் யாரையும் தீண்டமுடியாதவராகவும் இருக்கிறார்கள். இதில் பிராமணரை யாரும் தீண்டக் கூடாது. அவரும் யாரையும் தீண்ட முடியாது. அதே போல பஞ்சமரையும் யாரும் தீண்டக்கூடாது அவர்களும் யாரையும் தீண்டமுடியாது.

ஒரே நேரத்தில் வர்க்கமுரண்பாடும், தீண்டாமையும் சாதியப்படிநிலையின் தத்துவார்த்தமாக செயல் படுகிறது. ஆனால் வர்க்க முரண்பாடு அதன் உடலாக இருக்கிறதென்றால் தீண்டாமை அதன் உயிராக இருக்கிறது. அதனால் தான் சமூகத்தின் படிநிலையில் ஒவ்வொரு வர்ணமும் மற்ற வர்ணங்களைத் தீண்டத் தகாதவர்களாகவே இறக்கி வைத்திருக்கிறது. ஒருவர் மற்றவரைத் தீண்டத்தகாதவராக ஒதுக்கி வைக்கும்போது அவரும் மற்றவரால் தீண்டத்தகாதவராகி விடுகிறார். பரஸ்பரம் தீண்டுதல் என்ற செயல் அவர்கள் இருவரிடமிருந்தும் விலக்கப்பட்டு விடுகிறது. தன்னை சமூகத்தில் உயர்ந்தவராகக் காண்பித்துக் கொள்ள, மற்றவர்களுக்கும் தனக்கும் இடைவெளியை ஏற்படுத்த பிராமணீயம் தீண்டாமை என்ற தத்துவத்தை உருவாக்கியது. உயர்ந்த தீண்டத்தகாதவராக பிராமணர்களும் தாழ்ந்த தீண்டத்தகாதவர்களாக சூத்திரரும் தாழ்த்தப்பட்ட மக்களும் மாற்றப்பட்டனர். பிராமணியம் மற்றவர்கள் தீண்டமுடியாத, தீண்டக்கூடாத உயரத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள தீண்டாமை எனும் தத்துவத்தைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வர்ணாசிரமத்தின் படிநிலையில் உள்ள மற்றசாதிகளிடமும் அதை நடைமுறைப்படுத்தியது. அதற்காகவே மனுதர்மம் எழுதப்பட்டது. அதில் சாதியப்படி நிலைகளையும், தீண்டாமையையும் உறுதிப்படுத்தியது. தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கட்டளையிடும் சட்டவிதிகளும் தண்டனை முறைகளும் எழுதப்பட்டன. அவற்றை அரசு அதிகாரத்தின் வழியாகவும், புராண இதிகாச, புனைகதைகள் வழியாகவும் மக்கள் மனதில் நிலைநிறுத்தி சிவில் சமூகத்தின் ஒப்புதலை பெற்றுக் கொண்டது.

.தீண்டாமையின் உச்சத்தில் பிராமணரும் அதன் பாதாளத்தில் சூத்திரரும், தாழ்த்தப்பட்டமக்களும் மடைமாற்றம் செய்யப் பட்டது உழைப்புக்கும் அறிவுக்கும் இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய பாரதூரமான ஏற்ற இறக்கங்களே. மானுடவரலாற்றில் உடல் உழைப்பிலிருந்து அறிவுழைப்பு பிரிந்த போதிலிருந்து இந்த முரண்பாடு தோன்றி விட்டது எனலாம். இது இன்னொரு வகையில் அரூபமான அறிவுக்கும், ரூபமான உடலுக்குமிடையிலான முரண்பாடு. உடல் அசுத்தமானது. தூய்மையில்லாதது. வியர்வை, மூத்திரம், மலம், சளி, வாயு, என கழிவுப்பொருட்களைச் சுமப்பது. ஆனால் அறிவு அரூபமானதால் இத்தகைய அசுத்தங்கள் இல்லை. உடல் பொருள் முதல் வாதத்தையும், அறிவு கருத்து முதல் வாதத்தையும் பிரதிபலிக்கிறது. உடல் உழைப்பு என்பது நிலத்தில்,சகதியில், மற்ற உலகளாவியப் பொருட்களின் மீது உழைப்பைச் செலுத்தி அதில் தன் ஜீவியத்தைக் கழிப்பது, எனவே அது இழிவானது. தூய்மையில்லாதது. அசுத்தமானது. அதாவது உற்பத்திசக்திகள் இழிவானது, அசுத்தமானது, தூய்மையில்லாதது. நேரடியாக உற்பத்தியில் சம்பந்தப்படாத, உடலைப் போல பருண்மையில்லாத அறிவு சுத்தமானது என்ற கருதுகோளை நிலைநிறுத்துகிறது தீண்டாமை. அதனால் வயல்வெளிகளில் வேலை செய்த உடல் உழைப்பின் வழியாக தன் வாழ்க்கையை நடத்துகிற உழைப்பாளிகள் தீண்டத்தகாதவர்களாகவும் மாற்றப் பட்டனர். இதற்கு உடல் உழைப்பின் மீது பிராமணியத்துக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வே முக்கிய காரணம்.

இயற்கையில் அடிப்படையான ஐந்து மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இயற்கையின் படைப்புகளில் சம அளவில் கலந்தேயிருக்கின்றன. இந்த பஞ்சபூதங்களில்லாமல் எந்த உடலும் உயிரும் இயங்க முடியாது. இவையே உடலின் இயற்கையான இருத்தலுக்கு அவசியமானவை. இவை இல்லாமல் எந்த உடலும் அது பிராமண உடலாக இருந்தாலும் சரி, பஞ்சமர் உடலாக இருந்தாலும் சரி இயங்க முடியாது. சமத்துவமான உடல்களுக்கிடையில் தூய்மையின்மை என்ற வாதத்தை முன் வைத்து அசமத்துவத்துவத்தை பிராமணியம் உருவாக்குகிறது. இதனால் தான் சிறிது காலத்துக்கு முன்பு கூட காஞ்சி மடாதிபதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் தினமும் குளிக்க வேண்டும் என்று சொல்ல முடிந்தது. ஆக உழைப்பாளி மக்கள் அசுத்தமானவர்கள் என்ற கருதுகோளை நிலை நிறுத்துகிறது. சமூகத்தின் மேல் வர்ணத்தவர்கள் தங்கள் கைகளை மண்ணிலோ, சகதியிலோ, அசுத்தப்படுத்திக்கொள்ளக் கூடாது அது தீட்டு என்கிறது மனுதர்மம். அது மட்டுமில்லை எந்த பஞ்சபூதங்களின்றி இந்த உலகு இல்லையோ அந்த பஞ்ச பூதங்களையே தீட்டாகவும், அந்தத் தீட்டைக் கழிக்கிற அல்லது தூய்மைப்படுத்துகிற சாதனங்களாகவும் பயன்படுத்துகிறது. நிலத்தைப் போலவே, நீரும், நெருப்பும், காற்றும், தீண்டாமையெனும் கொடுமைக்குப் பயன்படும் சாதனங்களாக உருவகிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் பொதுவான நீரை எல்லோரும் பொதுவாகப் பயன்படுத்த முடியாது. நீர் என்ற மூலகம் ஒரே நேரத்தில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க உதவும் கருவியாகவும், தூய்மைப்படுத்தும் சடங்குக்கான சாதனமாகவும் பயன்படுகிறது. அதே போல நெருப்பும் தூய்மையின் சின்னமாக தலித்துகளின் குடிசைகளை எரித்து அவர்களை அகற்றுவதற்கும், (வெண்மணி, நந்தன் ) பயன்படுகிறது. காற்றும் இந்தத் தீண்டாமை நோயிலிருந்து விடுபடவில்லை. காற்று வீசும் திசையிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் விலக்கி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பட்ட தீட்டான காற்று தங்கள் மீது பட்டு தாங்கள் தீட்டாகி விடக்கூடாது என்று கருதி அவர்கள் வாழ்விடங்களையே மாற்றியமைக்கிற கொடுமையும் மனுதர்மத்தில் இருக்கிறது.

இவ்வாறு பிராமணியம் சமூகத்தில் தன்னுடைய உயர்நிலையைத் தக்கவைத்துக் கொள்ள செய்த சதியே வர்ணாசிரமக் கோட்பாடு. அதை சுத்தம், அசுத்தம்; தூய்மை, தூய்மையின்மை; புனிதம், இழிவு; என்ற எதிர்வுகளை முன் வைத்து மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டது. அதனால் தங்களை எதேனும் ஒரு வகையிலாவது தீண்டாமைக்குட்படுத்தும் பிராமணியத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக அடித்தட்டு உழைப்பாளி மக்கள் அப்படியே பின்பற்றுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பிராமணியத்தை பிராமணர்களை விடக் கடுமையாக நடைமுறைப்படுத்த விழைகிறார்கள். இந்தக் கேடு கெட்ட வர்ணாசிரமக்கோட்பாடு உயிர் வாழ இவர்களே காரணமாகவும் இருக்கிறார்கள். இது ஒரு விசித்திரமான மனநிலை தான். மேல்நிலையாக்கத்தின் மீதான கவர்ச்சியும் சாதிய சமூகத்தில் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் சுயபாதுகாப்புஅரசியலும் தான் காரணம். அது மட்டுமல்ல தங்களுக்கு மேல் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை ஆனால் தங்களுக்குக் கீழ் ஒருவராவது இருக்கவேண்டுமென்கிற ஆதிக்கமனநிலையும் தான் பிராமணியத்தை அப்பழுக்கற்று பின்பற்றச் செய்யும் கருவிகள். இதனால் சடங்கு, சம்பிரதாயம், சாஸ்திரம், என்ற பிராமணியத் தந்திரங்களை பண்பாடு என்று புரிந்து கொண்டு பண்பாட்டைக் காக்கிறோம் என்ற பெயரில் மீண்டும் பிராமணியத்தை அரியணையில் ஏற்றுகிற, தீண்டாமையைக் காப்பாற்றுகிற காரியத்தை உழைப்பாளி மக்களும் சேர்ந்து செய்கிற அவலம் கண்கூடாகத் தெரிகிறது.

கிராம்ஷியின் கலாச்சார மேலாண்மை குறித்த கருத்துகள் இந்த விடயத்தில் மிகவும் பொருத்தப்பாடுடையது என்று தோன்றுகிறது. உழைப்பாளி மக்களே அவர்கள் வர்க்கத்தைச் சேர்ந்த உழைப்பாளி மக்களோடு சாதியின் பெயரால், தீண்டாமையின் பெயரால் பொருதுகிற நிலைமையை பிராமணியம் ஏற்படுத்தியுள்ளது. பிராமணியம் உயிரோடு இருக்கும்வரை வர்ணாசிரமக்கோட்பாடு உயிரோடு இருக்கும். வர்ணாசிரமக்கோட்பாடு உயிரோடு இருக்கும்வரை மனுதர்மசாஸ்திரம் உயிரோடு இருக்கும். மனுதர்மம் உயிரோடு இருக்கும்வரை தீட்டு, தீண்டாமை, உயிரோடு இருக்கும். தீண்டாமை இருக்கும்வரை முழுமையான மனிதவிடுதலை சாத்தியமில்லை. பிராமணியஒழிப்பும், சாதிஒழிப்பும் நீண்ட காலத் திட்டமாக இருந்தாலும் உடனடியாகத் துவங்க வேண்டியது அவசியம்.

dalits