Tuesday, 1 April 2025
Monday, 31 March 2025
எலியும் கல்யாணிப்பசுவும்
எலியும் கல்யாணிப்பசுவும்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு நாள் நடுப்பகலில் கல்யாணிப்பசு ஆலமரத்தடியில் அமர்ந்து ஓய்வாக அசைபோட்டுக் கொண்டிருந்தது தூரத்தில் ஒரு எலிக்குட்டி கல்யாணிப்பசுவைப் பார்த்துக் கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எலிக்குட்டிக்குப் பயங்கரப்பொறாமை வந்தது.
கல்யாணிப்பசு என்ன ஒரு அழகு!
நீண்ட அழகியக் கண்கள்! வெள்ளை நிறம்,
நெற்றியில் ஒரு சுழி, நீண்ட வால், என்ன ஒளி, அப்படிப் பார்த்து பார்த்து பொறாமை
அதிகமாகிக் கொண்டே போனது. எலிக்குட்டி ஓடி வந்து கல்யாணிப்பசுவின் மூக்கை ஒரு கடி
கடித்தது.
கல்யாணிப்பசுவுக்கு அதிர்ச்சி. உடனே
அடக்கமுடியாத கோபம் வந்தது. ஆகா! இந்த எலிக்குட்டிக்கு இவ்வளவு திமிரா? இதுக்கு
ஒரு பாடம் கற்பித்துவிட்டு தான் வேறு வேலை என்று நினைத்தது. தட்டுத்தடுமாறி
எழுந்து எலியின் பின்னால் ஓடியது.
எலிக்குட்டி சுவரிலுள்ள ஒரு பொந்தில்
போய் ஒளிந்து கொண்டது. கல்யாணிப்பசு சுவரை முட்டி மோதிக் கீழே தள்ளிவிடப்
பார்த்தது.
இந்த சத்தம் கேட்டு சின்னுவும்
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஓடிவந்தார்கள். நாய்க்குட்டி குரைத்தது.
பூனைக்குட்டி எலிக்குச் சவால் விடுத்தது. இந்தக் களேபரத்துக்கிடையில் எலி வேகமாக
ஓடி வந்து இன்னொரு தடவை கடித்து விட்டு ஓடி ஒளிந்து விட்டது.
பசு மறுபடியும் சுவரில் முட்டியது. பூனைக்குட்டி அந்தப் பொந்துக்குள் கையை விட்டுத் துழாவியது. பூனைக்கும் ஒரு கடி கிடைத்தது. வேதனையில் கையைப் பின்னுக்கிழுத்துக் கொண்டு அழுதது. நாய்க்குட்டி பயங்கரமாகக் குரைத்தது.
இந்த கலவரத்துக்கு மத்தியில் எலி அவர்களுக்கு இடையில் புகுந்து ஓடித் தப்பித்து
விட்டது.
நன்றி - புக் டே
Sunday, 30 March 2025
குழந்தைகளின் வெளி
குழந்தைகளின் வெளி
உதயசங்கர்
குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்
வழியே இந்த பூமிக்கு வந்த இயற்கையின் படைப்புகள். அவர்கள் பெற்றோரின் தனிப்பட்ட சொத்தல்ல
என்று புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையும்
தனித்துவத்துடன் திகழ்கிறார்கள். இயற்கை தன்னுடைய படைப்புகளனைத்துக்கு அத்தகைய தனித்துவமான
குணத்தைக் கொடையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரே மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒன்று
போல இருப்பதில்லையெனும்போது குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்று போல இருப்பார்கள்? அவர்களுடைய
தனித்துவமான ஆளுமையை வளர்ப்பதில் சமூகத்தின் மூன்றுவெளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதலாவது குடும்பவெளி. அப்பா அம்மா
அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா அத்தை சித்தி சித்தப்பா என்று நெருங்கிய உறவு முறைகளைக்
கொண்டது. இந்த உறவுமுறைகள் எல்லாவித உரிமைகளையும் எடுத்துக் கொள்கிற உறவுமுறைகள். குடும்பவெளியென்பது
குழந்தையின் அடிப்படையான உணர்வுநிலைகளைக் கட்டமைக்கக்கூடியது. எப்போதும் மிரட்டப்பட்டும்,
அதட்டப்பட்டும், அடிக்கப்பட்டும் வளர்க்கிற குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையையும் தன்னம்பிக்கையில்லாமலும்
வளர்வார்கள். எதைச் செய்தாலும் ஒரு தயக்கமும் பயமும் வந்து கொண்டேயிருக்கும். எங்கே
குழந்தைகள் எந்தவித அச்சுறுத்தலுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே தான்
அவர்களுடைய படைப்பூக்கம் ( CREATIVITY ) சுதந்திரமாக மலரும். எனவே குடும்பத்தில் அவர்கள்
மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களுடைய ஆளுமையும் மகிழ்ச்சியாக வளரும்.
ஏனெனில் ஒவ்வொரு வினையும் அதற்குச்
சமமான எதிர்வினையை உருவாக்கும். அப்படியென்றால் நாம் குழந்தைகளின் மீது செலுத்துகிற
வன்முறையை குழந்தையும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது இந்தச் சமூகத்திடம்
திருப்பிக் கொடுப்பான். அல்லது சமூகத்தில் பயந்து நடுங்கி வாழ்வான். இது மொத்த சமூகத்துக்கே
பொருந்துமென்றாலும் குடும்பம் தான் குழந்தைகளின் முதல்வெளியாக இருப்பதால் குழந்தைகள்
அங்கிருந்தே அடிப்படையான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள்., அந்த அனுபவங்களே அவர்களுடைய
உணர்வுவெளியைத் தீர்மானிக்கின்றவையாக இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தைகள்
குடும்பத்தைச் சார்ந்தே வாழவேண்டும். குடும்பச்சூழ்நிலைகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்
கொள்ள வேண்டும். தன்னுடைய உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிக்கட்டவோ வேண்டும்.
குடும்பம் என்பது குழந்தைகளின் ஆளுமைக்கான அடிக்கட்டுமானமாக இருக்கிறதென்பதைப் பெற்றோர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகப் பள்ளிக்கூடவெளி.
நம்முடைய கல்விமுறைகளில் எத்தனையோ
மாற்றங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகள் முழுமையான மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வதில்லை.
ஏன் என்பதை யோசிக்க வேண்டும்? கற்றல் என்பது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கணமும்
செய்து கொண்டேயிருக்கிற செயல்முறை தான். அது உயிரின் இயல்பு. தன்னைத் தகவமைத்துக் கொள்ள
இயற்கை உயிர்களுக்குக் கொடுத்திருக்கிற கொடையென்று கூடச் சொல்லலாம்.
ஆனால் கற்றல் முறை தன்னார்வத்துடனும்,
மகிழ்ச்சியாகவும் நிகழும் போது கற்றலின் வழியே குழந்தைகள் புதிதாக இந்த உலகத்தைப் பார்ப்பார்கள்.
புதிய சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழும். ஆனால் அப்படியான சூழல் இந்தியக் கல்விக்கூடங்களில்
இல்லை. அதிகாரமும் அடக்குமுறைகளும் நிறைந்ததாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இன்னமும்
கூட பள்ளிகளில் பிரம்புகள் குழந்தைகளை அடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நேரடியாகவும்
மறைமுகமாகவும் அடித்தால் தான் ஒழுங்காகப் படிப்பார்களென்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
எனவே தான் குடும்பத்துக்கடுத்தபடியாக அதிகாரமிக்கதாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.
இந்த அதிகாரமும் அடக்குமுறையும் குழந்தைகளின் ஆன்மாவை ஒடுக்கி அவர்களை சுயமரியாதை இல்லாதவர்களாக்குகிறது.
நம்முடைய கல்விமுறையில் பெரும்
மாற்றம் நிகழவேண்டும். குழந்தைகளின் கற்றல்வெளியென்பது பல்வகைப்பூக்கள் பூக்கும் பூந்தோட்டமாக
இருக்கவேண்டும். எல்லாக்குழந்தைகளையும் ஒரே மாதிரி ஜெராக்ஸ் பிரதிகளைப் போல உருவாக்காமல்
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமையுள்ளவர்களென்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற
கல்விமுறைகளைக் கொண்டு வரவேண்டும். ஏனெனில் நம்முடைய கல்விமுறை ஆரோக்கியமானவர்களைச்
சேர்த்துக் கொண்டு நோயுற்றவர்களை விரட்டிவிடும் மருத்துவமனை போல விசித்திரமானதாக இருக்கிறது.
எந்தக் குழந்தைக்குக் கற்றல்குறைபாடு இருக்கிறதோ அந்தக் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை
தரவேண்டுமென்ற அடிப்படைகளை மறுக்கின்ற கல்விமுறையாக இருப்பதனால் தான் இடைநிற்கும் குழந்தைகள்
அதிகமாகிறார்கள். அவர்கள் சமூகத்தின் உதிரித்தொழிலாளிகளாகவோ, கலகக்காரர்களாகவோ, சமூகவிரோதிகளாகவோ
மாறுகிறார்கள்.
எனவே நம்முடைய கற்றல்முறை மாறும்போது
குழந்தைகளின் ஆளுமை இன்னும் பிரகாசிக்கும். ஒரு குழந்தையின் ஆளுமையென்பது ஆன்மாவின்
வெளிச்சம். கலவிமுறை அந்த வெளிச்சத்தை அணைத்து விடக்கூடாது.
மூன்றாவது சமூகவெளி
நம்முடைய சமூகத்தில் குரலற்றவர்களாகப்
பெண்களும் குழந்தைகளுமே இருக்கிறார்கள். அவர்களைக்குறித்து கிஞ்சித்தும் அக்கறையின்றியே
தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அடியாத மாடு பணியாது, கறிவேப்பிலையை ஒடித்து
வளர்க்கணும் பிள்ளையை அடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்று
குழந்தைகளுக்கு எதிரான பொதுப்புத்தியுடன் தான் இன்னமும் இருக்கிறது. பொதுவெளியில் குழந்தைகளைச்
சமூகம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. தங்களை விட சிறியவர்களை அரவணைப்பதில்லை.
மதிப்பதில்லை. பள்ளிக்குழந்தைகள் சாலைகளைக் கடக்கக் காத்திருப்பதைப் பார்க்கும் போதும்
அவர்களைப் பற்றிக் கவலையே படாமல் அவசர அவசரமாகச் செல்கிற இந்த சமூகம் குறித்து குழந்தைக்கு
என்ன விதமான பார்வை வருமென்று யோசிப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ
கடந்து செல்கிறது. போட்டிகளை உருவாக்கி தோல்வியாளர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது. போட்டிகள் தனித்துவத்தை மறுப்பவை. வெற்றியாளர்களை
மட்டுமே கொண்டாடுபவை. எதற்கும் லாயக்கற்றவன் என்று குழந்தைகள் தங்களைத் தாங்களே அவமானப்படுத்த
உருவாக்கப்பட்ட சதியென்று கூடச் சொல்லலாம்.
சமவாய்ப்புகளையும் சமத்துவத்தையும்
குழந்தைகளுக்குத் தருகிற சமூகத்தில் மட்டுமே குழந்தைகளின் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும்.
இந்த வாழ்க்கை ஒரு பயணம். போட்டியல்ல. இந்தப்பயணத்தில் மனிதர்கள் வாழும்காலம் வரை ஒருவருக்கொருவர்
அன்பு செய்தும் உதவி செய்தும் சமூக மனிதர்களாக வாழவேண்டுமென்றால் குழந்தைகளின் மூன்று
வெளிகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.
எந்தச் சமூகத்தில் குழந்தைகள்
மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த சமூகமே மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அப்படிப்பட்ட
சமூகமாக நம்முடைய சமூகமும் மாற குழந்தைகளைக் குறித்தும் அவர்களது உரிமைகள் குறித்தும் ஆழமான விவாதங்களும் உரையாடல்களும்
நடக்கவேண்டும்.
.
Friday, 28 March 2025
கசுமலா காக்காவுக்கும் , பூனைக்குட்டிக்கும் சண்டை
கசுமலா காக்காவுக்கும், பூனைக்குட்டிக்கும் சண்டை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
நடுப்பகலில், சின்னுவும்,
நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் கசுமலா காக்காவும் வட்டமாய் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தனர். அப்போது பூனைக்குட்டி கசுமலா காக்காவிடம்,
“ நீ ஏன் இப்படிக் கருப்பாய்
இருக்கிறாய்? “
என்று கேட்டது. கசுமலா காக்காவுக்கு
சங்கடமாக இருந்தது. முன்பு ஒரு நாளைக்கு நான்கு வேளையும் தேய்த்துக் குளித்தும்
பார்த்து விட்டது. காக்கா குளித்தாலும் கொக்காக முடியாது என்று புரிந்து கொண்டது.
கசுமலா காக்கா தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் இருந்தது.
பூனைக்குட்டி வெயிலில் உடம்பை நீட்டி
படுத்துக் கிடந்தது. தன்னைத் தானே நக்கிக் கொடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டே,
“ நான் எவ்வளவு வெள்ளையாயிருக்கிறேன்னு
பார்த்தியா? என்ன காரணம் தெரியுமா? முந்திய பிறவியில் நான் ஒரு இங்கிலீஷ்க்காரியாக
இருந்தேன்.. இங்கிலீசில் பேசுவேன்.. இங்கிலீஷிலே கனவு காண்பேன்.. இங்கிலீஷிலே
உறங்குவேன்..” என்று சொன்னது.
சின்னுவும், நாய்க்குட்டியும்,
கசுமலாக்காக்காவும் வாயைத் திறந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ இங்கிலீஷ் என்றால் என்ன மொழி? “ என்று
காக்கா கேட்டது. நாய்க்குட்டி,
“ கம் ஹியர், ஸிட், கோ ஔவுட், இதுதான்
இங்கிலீஷ்..” என்று சொன்னது.
” ஏ பி சி டி ஒரு பீடி அது தான்
இங்கிலீஷ் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன்..” என்று சின்னு சொன்னாள்.
இதையெல்லாம் கேட்ட பூனைக்குட்டி விழுந்து
விழுந்து சிரித்தது,
“ இதுவா இங்கிலீஷ்? நான்
இங்கிலீஷ்காரியாக இருந்தபோது இங்கிலீஷ் வெள்ளம் மாதிரி கொட்டும்.. அதைக் கேட்டு
ராஜாவே என் நாக்கை அறுத்து விட்டார் தெரியுமா? “
“ அப்புறம்..” எல்லாரும் ஒன்றுபோலக்
கேட்டனர்.
“ பிறகு நான் கடவுளிடம் வேண்டி
வெள்ளைப்பூனையாகப் பிறந்து வந்தேன்..”
என்றது பூனைக்குட்டி. அப்போது
கசுமலாக்காக்கா,
“ கா காக்கா கக்கா கா கா “ என்று
சிரித்தது.
“
என்ன சிரிக்கிறாய்? “ என்று பூனை சந்தேகத்துடன் கேட்டது.
“ உன்னுடைய நாக்கை வெட்டி எறிந்த பிறகும்
நீ இவ்வளவு பொய் சொல்கிறாயே.. நாக்கை அறுக்காமல் இருந்திருந்தால் என்னெல்லாம் பொய்
சொல்லியிருப்பாய்..”
என்று கசுமலா காக்கா பதில் சொன்னது.
அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.
பூனைக்கு அவமானமாகி விட்டது.
நன்றி - புக் டே
Thursday, 27 March 2025
சூசனா செய்த கலாட்டா
சூசனா செய்த கலாட்டா
உதயசங்கர்
ஒரு தடவை சூசனா ஆட்டுக்குட்டி சின்னு,
நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஆகியோருடன் கள்ளன்போலீஸ் விளையாட்டு விளையாடிக்
கொண்டிருந்தது. பூனை தான் போலீஸ். பூனை போலீஸ் பிடிக்காதிருக்கவேண்டும் என்று
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசைக்கு ஓடினார்கள்.
சூசனா புதர்ச்செடிகளுக்குப் பின்னால்
போய் ஒளிந்து கொண்டாள். நாய்க்குட்டி பாய்ந்து சென்று கதைப்பாட்டியின் பின்னால்
போய் படுத்து உறங்கி விட்டது. அது கதைப்பாட்டிக்குத் தெரியாது. சூசனா பதட்டமாய்
ஓடி ஓடி ஆற்றங்கரைக்கே சென்று விட்டது.
அப்போது தான் நீலகண்டன் குள்ளநரியும்,
ஒரு செந்நாயும், பல்லைக்காட்டிக் கொண்டு சூசனாவை நோக்கி வருவதைப் பார்த்தது. சூசனா
ஒரே ஓட்டம். செந்நாயும் குள்ளநரியும் பின்னால் பாய்ந்து சூசனாவைப் பிடித்துக்
கொண்டன.
“ சூசன்னா... எங்கள் அருமை பூங்குயிலே!
உன்னுடைய நண்பன் தான் நான், நீலகண்டன் குள்ளநரி, என்னுடன் கூட இருப்பது பெரிய
அறிவாளி் செந்நாய்ஜி. ஜங்கில் புக் ஜங்கில் புக் என்ற சினிமாவைக்
கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்தச் சினிமாவின் கதை, கதாநாயகன் வேடம் எல்லாம்
செந்நாய்ஜி தான் செய்தது கண்ணு, சூசன்னா..”
சூசனா திரும்பிப் பார்த்தாள். செந்நாயின்
கண்களில் தெரிந்த ஆசையைப் பார்த்ததும் அவளுடைய அனைத்துச் சந்தேகங்களும் தீர்ந்து
விட்டன..அது ஒரு குதி குதித்து ஓடியது. முதலில் தெரிந்த தேவாலயத்துக்குள் நுழைந்து
விட்டது. அங்கே திருப்பலிபூசை நடந்து கொண்டிருந்தது. பாதிரியார் ஓடிவந்த சூசனாவை
நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டார்.
தேவலாயத்தின் முற்றத்தில் நின்று
நீலகண்டன் குள்ளநரி சத்தமாய் கத்தியது.
“ இறங்கி வந்துரு சூசனா.. தேவாலயத்தில் உன்னைப்
பலி கொடுத்து விடுவார்கள்.. நான் சொல்லலைன்னு நெனைக்காதே..”
“ செந்நாய் கொல்வதைக் காட்டிலும் பலியாடாவது பரவாயில்லை..” என்று
சூசனா சொன்னது.
செந்நாய்க்குக் கோபம் வந்தது. ஒரு
ஆட்டுக்குட்டியைக் கூட கைவசப்படுத்த முடியாத முட்டாள்... குள்ளநரியால் என்ன பயன்? கோபத்தைத் தீர்க்க நீலகண்டன் குள்ளநரியின்
காதில் ஒரு கடி கடித்தது.
நீலகண்டன் குள்ளநரி கூப்பாடு போட்டுக்
கொண்டு ஓடியது.
நன்றி - புக் டே
Monday, 24 March 2025
கோழியும் குள்ளநரியும்
கோழியும் குள்ளநரியும்
உதயசங்கர்
ஒருநாள் காலையில் நீலகண்டன் குள்ளநரி
பதுங்கிப் பதுங்கி மெகர்பாவின் கூட்டுக்குப் பக்கத்தில் சென்றது. பிறகு
சாதாரணமாகச் சொல்லியது,
“ மெகர்பா.. உன்னுடன் சேர்ந்து விளையாட
வேண்டுமென்று எனக்கு தீராத ஆசை உணடு.. ஆனால் அந்த பாழாய்ப்போன நாய்க்குட்டியும்
பூனைக்குட்டியும் ஒத்துக்கொள்ளவில்லை. கதைப்பாட்டி என்ற அந்த வயதான கிழவியும்
ஒத்துக் கொள்ளவில்லை. எல்லாருக்கும் பொறாமை. நீ கூட்டைத் திறந்து வெளியில் வா..”
மெகர்பா கோழி பயந்து போய்,
“ க்கொ க்கொ க்கோ க்கொ..” என்று
அழத்தொடங்கியது. அப்போது குள்ளநரி, கூட்டின் கதவைத் தட்டியபடியே,
“ஆகா! எத்தனை இனிமையான குரல் உனக்கு
மெகர்பா..நீ வெளியில் வா.. நான் உன்னுடைய நண்பன் தானே.. உன்னை காட்டைச் சுற்றிப்
பார்க்க அழைத்துச் செல்கிறேன்.. இந்த உலகத்தையும் மேல் உலகத்தையும்
காட்டுகிறேன்..”
மெகர்பா சத்தமாக, “ க்கொ க்கொ க்கொ க்கொ
க்கொ “ என்று அழத் தொடங்கியது.
அழுகையைக் கேட்டு ஓடிப்போன சின்னு
குள்ளநரியின் வாலைப் பிடித்து இழுத்தாள். நாய்க்குட்டி பாய்ந்து ஒரு கடி கடித்தது.
பூனைக்குட்டி வாலைக்கடித்தபடி தொங்கியது.
நீலகண்டன் குள்ளநரி வேதனை தாங்காமல் சத்தமாய் ஊளையிட்டபடி ஓடிவிட்டது. கிராமத்துமக்கள் எல்லாரும் கற்களை எறிந்துக் கொண்டும், கம்புகளை வீசிக்கொண்டும் பின்னாலேயே ஓடினார்கள். ஓடிய நீலகண்டன் குள்ளநரி ஆற்றின் கரைக்குச் சென்று சேர்ந்தது.
வேறுவழியில்லாமல் ஆற்றில் குதித்து
நீந்தி மறுகரையில் கரையேறியது.
நன்றி - புக் டே
Wednesday, 19 March 2025
நீலகண்டன் குள்ளநரியின் கதை
நீலகண்டன் குள்ளநரியின் கதை
உதயசங்கர்
ஒரு நாள் நீலகண்டன் குள்ளநரி நொண்டி நொண்டிக்
கதைப்பாட்டியும், நண்பர்களும் கூடியிருக்கிற ஆலமரத்தடிக்கு பணிவுடன் தலையைக்
குனிந்தபடி வந்தது. அதைப் பார்த்தால் சாதாரணக் குள்ளநரியைப் போல தெரியவில்லை. உடல்
முழுவதும் நீலநிறத்தில் இருந்தது. குள்ளநரியைப் பார்த்தது மெகர்பா கோழி
கதைப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். குள்ளநரி மெகர்பா கோழியின் மீதே கண்
வைத்திருந்தது.
கோழி என்ன ஒரு அழகு!அதைப் பொரித்துச்
சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்!
எப்படியாவது கதைப்பாட்டியையும்
நண்பர்களையும் ஏமாற்றி இன்று மெகர்பா கோழியைக் கொண்டு போய் விடணும். குள்ளநரியின்
மனதில் அதுதான் திட்டம்.
குள்ளநரியைப் பார்த்ததும் நாய்க்குட்டி
கேட்டது,
“ குள்ளநரியே குள்ளநரியே.. இங்கே என்ன
வேலை உனக்கு? “
“ கறுமுறுன்னுச் சாப்பிட்டேன்.. குர்ர்ர்
குர்ர்ர்னு தூங்கணும்..” என்று குள்ளநரி சொன்னது.
பூனைக்குட்டி கேட்டது,
“ என்ன குள்ளநரியண்ணே.. ஒரே நீலநிறத்தில்
இருக்கிறே? “
குள்ளநரி,
“ நேற்று இரவு காட்டில் வனதேவன் என்னை
நீலநிற ஒளியில் முக்கியெடுத்தார். தெய்வத்துக்கு மிகவும் பிடித்த நிறம் நீலநிறம்
தான் என்று சொன்னார்..”
அதைக் கேட்டுக் கொண்டே வாயைத்
திறந்தபடியே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது கல்யாணிப்பசு.
“ அதனால் நான் இன்று முதல் துறவறம்
பூண்டு விட்டேன்..மாமிசத்தைத் தொடக்கூட மாட்டேன்.. ஒரு உயிரையும் மனதாலோ,
வார்த்தையாலோ கூட துன்புறுத்த மாட்டேன்..”
என்றது குள்ளநரி.
“ உண்மையாகவா குள்ளநரியே!” என்று
நாய்க்குட்டி கேட்டது.
“ மெகர்பா கோழி மீது சத்தியம்.. வருகிற
வழியில் என்னுடைய காலில் ஒரு முள்ளு குத்திவிட்டது.. என்னை யாராவது காட்டுக்குக்
கூட்டிக் கொண்டு போகவேண்டும்..”
என்று குள்ளநரி பரிதாபமாய்க் கேட்டது.
“ நான் வர்ரேன்..” என்று கல்யாணிப்பசு
எழுந்தது.
“ ஐய்யய்யோ, பால் கறப்பதற்கு ஆல்பெர்ட்
சார் வரும்போது நீ இல்லையென்றால் பெரிய குழப்பமாகிவிடும்..குழந்தைகள் பால்
குடிக்கவேண்டாமா?”
என்று குள்ளநரி கேட்டது.
“ நான் வர்ரேன் “ என்று பூனைக்குட்டி
சொன்னது.
“ ஐய்யய்யோ.. ஆற்றில் நீந்தணுமே.. உன்னால
முடியாது பூனைச்செல்லம்..”
என்று குள்ளநரி சொன்னது.
“ அப்படியென்றால் நான் வருகிறேன்..”
என்று நாய்க்குட்டி சொன்னது.
“ ஐய்யய்யோ.. உன்னைப் பார்த்தால்
செந்நாய்க்கூட்டம் பாய்ந்து வந்துவிடும்.. வேண்டாம் கண்ணா..”
என்று சொல்லிய குள்ளநரி ஆசையோடு
மெகர்பாவைப் பார்த்தது. மெகர்பா மெல்ல எழுந்து நின்று,
“ அப்படி என்றால் நான் வர்ரேன்..”
என்றது.
குள்ளநரி மகிழ்ச்சியுடன்,
“ அது போதும்.. உன்னை ஆற்றின் அக்கரைக்கு
என் முதுகில் வைத்து நீந்துகிறேன்.. கொஞ்சநாள் அங்கே தங்கியிருந்த பிறகு நானே
உன்னைக் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்..”
என்று சொன்னது.
இவ்வளவும் நடக்கும்போது கதைப்பாட்டி
சொன்னார்,
“ கொஞ்சம் பொறுங்கள்.. செல்லங்களா..
கசுமலா காக்கா வருகிறது. அதுகிட்டேயும் கேட்கலாம்..”
கசுமலா காக்கா மூச்சிரைத்தபடியே,
“ சின்னுவின் அம்மா நீலம் முக்குவதற்காக
கலக்கி வைத்திருந்த தொட்டியில் குளிச்சிட்டு வந்திருக்கு இந்தக் குள்ளநரி..” என்று
சொன்னது.
கதைப்பாட்டி கையிலிருந்த கம்பினால்
குள்ளநரிக்கு ஒரு அடி கொடுத்தாள். குள்ளநரியின் காலில் அடி பட்டது. தாங்கமுடியாத
வலியினால் ஊளையிட்டுக் கொண்டே குள்ளநரி ஒரே ஓட்டம்.
அப்ப்டி ஓடும்போதே மெகர்பா கோழியைக்
கவ்விக் கொண்டு போய் விடலாம் என்று ஒரு பாய்ச்சல் பாய்ந்தது குள்ளநரி.
அப்போதும் கிடைத்தது ஒரு அடி, கதைப்பாட்டியிடமிருந்து..
நன்றி - புக் டே
Tuesday, 18 March 2025
கசுமலா காக்காவின் குஞ்சுகள்
கசுமலா காக்காவின் குஞ்சுகள்
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
கசுமலா காக்காவின் முட்டைகள் பொரிந்து
விட்டன என்று பூனைக்குட்டி வந்து சொன்னது. சின்னுவும், நாய்க்குட்டியும் மெகர்பா
கோழியும், பூனைக்குட்டியும், கல்யாணிப்பசுவும் கசுமலா காக்காவின் குஞ்சுகளைப்
பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள். கசுமலா காக்கா மூன்று குஞ்சுகளையும் அறிமுகம்
செய்தது.
மூத்தது ஷாரூக், இரண்டாவது சல்மான்,
மூன்றாவது பெண்குஞ்சு கஜோல் என்று பெயரிட்டன. அவை எல்லாம் குஞ்சுகளைப்
பார்த்துவிட்டு திரும்பி வரும்போது கசுமலா காக்காவும் கூடவே வந்தது. அப்போது
பதுங்கியிருந்த ஒரு நரி குஞ்சுகளைக் கூப்பிட்டது.
“ ஷாருக் கண்ணு நான் நரி மாமா
வந்திருக்கேன்.. கதவைத் திற..” என்றது. எந்த சத்தமும் இல்லை. யார் வந்தாலும்
கதவைத் திறக்கக்கூடாது என்று கசுமலா காக்கா கட்டளையிட்டு விட்டுப் போயிருந்தது.
நரி மீண்டும்,
“ சல்மான் கண்ணு கதவைத் திற..” என்றது. அப்போதும்
எந்தச் சத்தமும் இல்லை.
“ கஜோல் கண்ணு நீயாவது கதவைத்திற... மாமா
இப்போது அழுதுருவேன்... அழுது அழுது செத்திருவேன்..” என்றது.
“ நரி மாமா, கதவு சும்மா
சாத்தியிருக்கிறது... மாமா தள்ளினால் திறந்து விடும்..” என்று கஜோல் இனிமையாகச்
சொன்னபோதே நரி உள்ளே நுழைந்து விட்டது. மூன்று குஞ்சுகளையும் விழுங்கி விட்டது.
உண்ட மயக்கத்தில் அங்கேயே படுத்து உறங்கி விட்டது.
கசுமலா காக்கா திரும்பி வந்து
பார்த்தவுடனேயே என்ன நடந்ததென்று புரிந்து கொண்டது. உடனே அடுப்பில் ஒரு பெரிய
பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தது. பிறகு நரியை எழுப்பி,
“ நரி மாமாவுக்கு இராத்திரிக்குச் சோறு
வேண்டுமா? கோதுமை வேண்டுமா? “ என்று கேட்டது.
கண்களைத் திறக்காமலேயே நரி அடுப்புக்கு
அருகிலேயே படுத்திருந்தது.
“ எதுவானாலும் சரி.. கசுமலா காக்கா..
நான் கொஞ்சம் உறங்குகிறேன்..” என்று முணுமுணுத்தது.
கசுமலா கொதிக்கும் வெந்நீரை நரியின்
உடலில் ஊற்றியது. நரி வெந்து செத்து விட்டது. நரியின் வயிற்றைக் கீறி மூன்று
குஞ்சுகளையும் வெளியில் எடுத்தது
கசுமலா காக்கா குஞ்சுகளுடன் சுகமாக
வாழ்ந்தது.
நன்றி - புக் டே
Sunday, 16 March 2025
மெகர்பா கோழியின் கதை
மெகர்பா கோழியின் கதை
மலையாளத்தில் - அஷீதா
தமிழில் - உதயசங்கர்
ஒரு முறை மெகர்பா கோழி கதைப்பாட்டியிடம் பிடிவாதம் பிடித்தது. ஊர் சுற்றிப் பார்க்கப் போக வேண்டும் என்று சொல்லியது.
“ மற்ற பறவைகளைப் போல என்னால்
பறக்கமுடியாது.. அதனால் சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும்
கல்யாணிப்பசுவும் கதைப்பாட்டியும் கூட வரவேண்டும்.. நான் எப்போதும் முட்டைகள்
கொடுக்கிறேன்..இல்லையா? எனக்காக இதைச் செய்யக்கூடாதா? “
சின்னு சொன்னாள்,
“
ஐய்யோ நான் ஸ்கூலுக்குப் போகணும்..”
பூனைக்குட்டி சொன்னது,
” நான் வந்தால் ஆல்பெர்ட்டினுடைய சட்டையை
எலி கரும்பித் தின்று விடுமே..” என்று பூனைக்குட்டி சொன்னது.
“ அப்படியென்றால் ஆல்பெர்ட்டும் கூட
வரட்டும்..” என்றது கோழி.
“ ஐய்யோ ஆடுகளைக் நீலகண்டன் குள்ளநரி
கொன்று விடுமே? “ என்றான் ஆல்பெர்ட்.
கல்யாணிப்பசு சொன்னது,
“ நான் வந்தால் இந்தக் கிராமத்தில் உள்ள
குழந்தைகளுக்கு யார் பால் கொடுப்பார்கள்? தண்ணீர் சேர்த்தாலும் கூட யாரும்
வேண்டாம் என்று சொல்வதில்லை..”
அதைக் கேட்ட கோழி, தரையில் விழுந்து
புரண்டது.
“ க்கொக்கோ கொக்க்கோ “ என்று கூப்பாடு
போட்டது.
கடைசியாக கதைப்பாட்டி,
“ நாய்க்குட்டியை அழைத்துக் கொண்டு போ “ என்று சொன்னார்.
அப்படி மெகர்பா கோழியும்
நாய்க்குட்டியும் பயணம் புறப்பட்டார்கள்.
பல ஊர்களைச் சுற்றிப் பார்த்தார்கள். சில
ஊர்களில் மக்கள் சும்மா சுற்றித் திரிகிற கோழியைச் சூப்பு வைத்துக் குடிக்கலாம்
என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
நாய்க்குட்டி அவர்களை விரட்டியடித்தது.
இரவானதும் மெகர்பா உயரமான மரக்கொம்பில் உட்கார்ந்து கொள்ளும்.. நாய்க்குட்டி
மரத்தினடியில் உள்ள பொந்தில் படுத்திருக்கும்.
ஒரு நாள் கோழியைப் பார்த்த ஒரு குள்ளநரி, இரவில்
வந்து சொன்னது,
“ ஏ. அழகியே உன்னுடன் பேச
வேண்டும்..என்று ஆசைப்படுகிறேன்.. கீழே வாயேன்..”
அப்போது மெகர்பா சொன்னது,
“ குள்ளநரி அண்ணே.. நீ மேலே ஏறி வா..கீழே
என்னுடைய பாதுகாவலன் இருக்கிறான்.. தட்டி எழுப்பினால் மேலே வருவதற்கு வழி
சொல்லித்தருவான்..”
குள்ளநரியின் வாயில் எச்சில் ஊறியது.
ஆகா! எப்பேர்ப்பட்ட பேச்சு! என்ன ஒரு அழகு! அதன் இறைச்சி எவ்வளவு ருசியாக
இருக்கும். ஆவல் அதிகமாகி கீழே படுத்துக்
கிடந்த நாய்க்குட்டியை எழுப்பியது.
“ ஏய்.. காவல்காரா! மேலே போவதற்கு வழியைக்
காட்டு..”
நாய்க்குட்டி ஒரே பாய்ச்சலில்
குள்ளநரியின் வாலைக் கடித்துத் துண்டாக்கியது.
அவ்வளவு தான். குள்ளநரி ஓடியே போய்
விட்டது.
அதோடு மெகர்பா கோழியின் ஊர் சுற்றும்
ஆசையும் முடிந்தது. காலை விடிந்ததும் நாய்க்குட்டியுடன் கதைப்பாட்டியிடம் வந்து
சேர்ந்தது.
நன்றி - புக் டே
Saturday, 15 March 2025
விசித்திரனின் கதைகள்
1. விசித்திரனின் கதைகள்
அவனுக்குப் பெயரில்லை. விசித்திரன் என்று எல்லாரும் அழைத்தார்கள். விசித்திரன் ஒரு நாள் கடற்கரைக்குப் போனான். எங்கும் வெள்ளை மணல்வெளி. கைகளில் மணலை அள்ளினான்.
எண்ணத்தொடங்கினான்.
எண்ணி முடித்தானா என்று தெரியவில்லை.
விசித்திரன் ஒரு நாள் ஆற்றுக்குப் போனான். எங்கும் நீர்மை ததும்பிக் கொண்டிருந்தது. அவனும் நீராகி விட வேண்டும் என்று நீருக்குள் மூழ்கினான்.
நீராகி விட்டானா என்று தெரியவில்லை.
விசித்திரன் ஒரு நாள் மலைக்குப் போனான். மலையுச்சியில் பயங்கரக் காற்று. காற்றைக் கையில் பிடித்தான். பறப்பதற்காக மலையுச்சியிலிருந்து குதித்தான்.
பறந்தானா என்று தெரியவில்லை.
விசித்திரன் ஒரு நாள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கூட்டம் கூட்டமாய் மிதந்து கொண்டிருந்த மேகங்கள். மேகங்களாகி விட வேண்டுமென்று நினைத்தான்.
கையை நீட்டி மேகங்களை அழைத்தான்.
மேகமாகி மிதந்தலைந்தான் விசித்திரன்.
2.
வீட்டில் யாருமில்லை. இரவு விளக்கையணைத்துவிட்டுப் படுத்தான். திரைச்சீலைக்குப் பின்னால் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பதறியெழுந்து விளக்கைப் போட்டான்.
யாருமில்லை.
விளக்கையணைத்தான். யாரோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். விளக்கைப் போட்டான்.
யாருமில்லை.
விடிய விடிய அந்த யாரோ ஒருவனைக் கண்டுபிடிக்க விளக்கைப் போட்டு அணைத்துக் கொண்டிருந்தான்.
அவன் வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்தது.
3.
அந்த எறும்பு புற்றிலிருந்து வெளியே வந்தது. அங்குமிங்கும் அலைந்தது. அப்படியும் இப்படியும் சென்றது. சுவரில் ஏறியது. கீழே இறங்கியது.
சும்மா ஒரு இடத்தில் நின்றது. ஏன் அங்கே நின்றது? தெரியாது.
திடீரென ஒரு கால்பெருவிரல் அந்த எறும்பை நசுக்கியது.
என்ன நடந்ததென்று எறும்புக்குத் தெரியாது.
யார்? ஏன்? எதற்கு?
எறும்பு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறது.
4.
எதையாவது தேடிக் கொண்டிருப்பது அவனுடைய வழக்கம். இன்றும் அப்படித்தான். அடையாள அட்டையைத் தேடினான்.
பர்சைத் தேடினான். பையைத் தேடினான். சாவியைத் தேடினான். வண்டியைத் தேடினான்.
மனைவியிடம் கேட்கலாமென்று தேடினான். குழந்தைகளைத் தேடினான். வீட்டைத் தேடினான். தெருவைத் தேடினான். ஊரைத் தேடினான். நாட்டைத் தேடினான். உலகத்தைத் தேடத் தொடங்குமுன்பாக அவன் தொலைந்தே போனான்.
நன்றி - புக் டே
Friday, 14 March 2025
Role of Children’s Literature in Asserting Identity
Role of Children’s Literature in Asserting Identity: A Study
of Dravidian Culture and Identity in Udhayashankar’s Aadhanin Bommai
Nissi Karunya E. R.
Assistant Professor
Department of English
Lady Doak College
Madurai,
This chapter aims to interpret the
representation of Dravidian history in contemporary literature from the
standpoints of culture and identity. Udhayashankar’s Aadhanin Bommai is the text chosen for analysis and this book,
which can be categorised under Children’s literature will be focal point to
speculate how the history of the Dravidian race has been presented and
perceived, especially by children. This paper speculates how archeological
heritage sites like Keeladi and Adichanallur not only establish the
significance of the Dravidian race to the world, but also assert the continuum
of tradition, language, cultural practices and identity down through centuries.
This paper also critically explores the need to meaningfully sensitise
children, youngsters and adults about the cultural heritage and identity that
often goes slips through the cracks of an Aryanised Eurocentric presentation of
history. Aadhanin Bommai will be
scrutinised as a text that delves deep into Dravidian history and culture as a
prototype of social equality, and its need to be reinterpreted and integrated
to the value system of the contemporary era.
Full Paper:
The Indian subcontinent is known for
its rich history and heritage that has set the tone for archeological
expeditions and reinterpretation of history. This statement holds true in the
contemporary era as India, especially South India’s dynamic culture and
language poses challenging questions on the textuality of history and the
historicity of texts – true to the dictum proposed by Louis Montrose
“Professing the Renaissance: The Poetics and Politics of Culture”. Cultures
around the world experienced Renaissance at different points in history that
resulted in a flowering of literature, art, architecture and a reformation in
religious ideals, ethics, belief-systems, culture and tradition.
The Renaissance in England had a
great impact on English literature and the impact of this great cultural
movement still continues to reverberate through the timeless plays of
Shakespeare, witty poetry of Chaucer, the pious creativity of John Milton to
the works of the present era namely Hilary Mantel’s Wolf Hall (2009), Sarah Dunant’s The Birth of Venus Umberto and Eco’s The Name of the Rose (1980) and (2003). This case testifies the
impact of culture and language in asserting the identity of a nation that went
on to colonise most nations of the world and tried to redefine the identity of
the colonised nations from a Eurocentric perspective.
During the postcolonial era, the former colonies of Britian have taken considerable steps to redefine their cultural identity and India witnessed a renewed interest in Indian philosophy, history, knowledge systems and cultural traditions that garnered the attention of the rest of the world. This renaissance of Indian culture sparked undue controversy as it promoted an imperialistic regime of ideas and policies fueled by Aryan supremacy.
The conflict between the Aryan and the Dravidian races
forms the core of political and social upheavals that impact the socio-cultural,
economic and ecological reality. Notable research on Dravidian identity,
especially Tamil as one of the earliest thriving languages and culture include
Robert Caldwell’s A Comparative Grammar
of Dravidian or South – Indian family of Languages, Badriraju
Krishnamurti’s The Dravidian Languages and the works of EVR Periar and M.
Karunanidhi. Much of this literature has been addressed to adults and advanced
learners. Realising this gap in presenting cultural facts through literature to
children, writers like Ushayashankar and Perumal Murugan and Kannikoil Raja
have written poignant novellas, short stories and poems to instill in young
minds a balanced perception about their identity.
Assertion of Dravidian or Tamil
identity in South Indian children and youngsters by these writers are presented
as stories that evoke fantasy and reflective thinking, subverting an attitude
of ethnolinguistic superiority and fundamentalism. It can be speculated that
Udhayashankar’s Aadhanin Bommai caters
to the questions about one’s identity and roots. This novella, written in Tamil
was published in 2021 and won the Bal Sahitya Puraskar award for the year 2023.
Apart from tracing evolution of culture, tradition and language, Udhayashankar
is adept in expreesing his keen observations on nature, writing stories that
embody ecological ethics and offer a deep sense of love, respect and concern to
the culture and nature one is situated in. His works can be brought to the
attention of a wider audience through translation in various languages and
transmedia storytelling.
Retelling Stories, Framing Culture: Traditional Stories and
Metanarratives in Children’s Literature by John Stephens and Robyn McCallum
is a seminal text that does substantial comparative study of Children’s
literature across different historical periods, languages, cultures and mass
media. Aadhanin Bommai will be
speculated through the analytical framework of Retelling Stories, Framing Culture that delves on the concepts of
metanarrative, metaethic, retellings and register.
Aadhanin Bommai is a captivating tale of Captain Balu, his
cousin Madhumitha, the historic Aadhan, his doll and the timeframe of this
novella that spans up to 3000 years. This book is dedicated to Amarnath
Ramakrishnan, the archeologist who brought to light the glory of Keeladi to the
world. Captain Balu, the teen hero of Udhayashankar’s popular novels hails from
Kovilpatti. He is sent to his Uncle Kandasamy’s home at Keeladi for summer
vacation.
Missing his own city, his friends
and his prospective summer cricket matches, Balu finds no way to enjoy this
quaint old city and he quite surprised how his cousin Madhu spends her time
reading books, watching educational channels on TV and writing poems under the
pen name Kakkaipadiniyaar. Listless Balu decides to leave Keeladi soon but his
stay surprisingly gets prolonged by an adventurous, mysterious encounter with
Aadhan, a dark, handsome, illustrious young boy from pre-historic Keeladi.
This time travel through 3000 years
arouses curiosity in Balu about the Indus valley civilization across River
Vaigai, the flourishing of Dravidians during the yester years and the great
tragedy that befell this advanced civilization that paved way for social evils
like caste discrimination, gender inequality and social oppression in many
forms. This story takes a brisk walk down the ages, answering many pivotal
questions with a historical background fueled by Romila Thapar’s theory of
Aryan Race, R. Balakrishnan’s musings on Dravidian foundations in Indus Valley
Civilization, Nivedhitha Louis’ historical notes on Adhichanallur and Keeladi
and the published findings of the Department of Archeology, Government of Tamil
Nadu.
This book beautifully brings to fore
the cultural heritage of Tamil Nadu. Lakshmi Athai, the wife of Kandasamy mama
serves him Adai, Kozhukkattai, Modhagam, Pooranakozhukkattai, Sundal and Veda Kozhi Kulambu. The biodiversity of prehistoric Keeladi finds
expression here – Poonal Kuruvi, Mynah
, Crows, Kona Maram. Most importantly
this book brings out the historical truth of how the Keeladi Civilization gave
the autonomy of choosing one’s profession, gave space for men and women to be
educated and contribute to the growth of the family and society and was
oblivious to Caste system. Kurinji,
Mullai, Marudham, Neidhal and Palai
– a classification based on the landscape was the only stratification that
existed and people enjoyed a plethora of occupations.
This book subverts the
metanarratives of Manusmriti and Manudharma that introduces India as a
society that has its foundations on Caste discrimination. Reaffirmation of a
child’s identity by exposure to literature like Aadhanin Bommai can impact self-perception and aid in the
development of creativity sans fear. The book lives out the ethic of gender
equality its presentation of characters like Madhumitha, Vennilai, Adhan’s
mother Pallipaadathu Kodhai, and
Lakshmi Athai. This book is a fresh waft of air – divergent from a replication
of the metanarratival structure. The values are ethics presented here challenge
canonical metaethics that are Aryan elitist, misogynistic and imperialistic.
Young minds should be nurtured with narratives like Aadhanin Bommai to build a nation that marches with stride on the
upward trajectory of progress and prosperity, with posterity.
Works Cited:
Works Cited
Ilamurugu, Durai. Archeological Sites in Tamilnadu: Keeladi
and Others. 2019.
Keeladi: An Urban Settlement of Sangam Age on
the Banks of River Vaigai. 2019.
Malhotra, Rajiv, and
Aravintan̲ Nīlakantan̲. Breaking
India: Western Interventions in Dravidian and Dalit Faultlines. Bright
Sparks, 2011.
Stephens, John and Robyn
McCallum. Retelling Stories, Framing Culture:
Traditional Stories and Metanarratives in Children’s Literature. Garland Publishing, 1998.
Udhayashankar. Aadhanin
Bommai. Vaanam, 2021.
Storytrails. The Temple of Treasures and Other Incredible
Tales of Indian Monuments. Hachette UK, 2022.