வானவில் தேவதைகளின் பாடம்
உதயசங்கர்
பூவனூர்
முழுவதும் பூந்தோட்டங்கள் இருந்தன. அந்தப்
பூந்தோட்டங்களில் உலகில் உள்ள எல்லா மலர்களும் பூத்துக்குலுங்கின. முல்லை, மல்லிகை, பிச்சிப்பூ, அடுக்குமல்லி, குண்டுமல்லி, ரோஜா, மஞ்சள்
ரோஜா, சிவப்பு
ரோஜா, வெள்ளை
ரோஜா, காந்தள், செங்காந்தள், அல்லி, தாமரை, ஆம்பல், லில்லி, டூலிப், கோழிக்கொண்டை, நந்தியாவட்டை, அரளி, செவ்வரளி, தங்க அரளி, அலமெண்டா, சாமந்தி, வெண்சாமந்தி, மரிக்கொழுந்து, சம்பங்கி, கனகாம்பரம், டிசம்பர் பூ, என்று
உலகின் பூக்கள் எல்லாம் அங்கே இருந்தன.
அங்கே
எப்போதும் வண்டுகளின் பாடல்களும், வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகடிப்பும், தேனீக்களின் ரீங்காரமும், பூச்சிகளின் சலம்பலும், தேன்சிட்டுகளின்
ட்வீட்டொலியும், தையல்சிட்டின் கீச்சொலியும் கேட்டுக் கொண்டேயிருந்தது. பகலில் எல்லாப்பூந்தோட்டத்துக்கும் வானவில்லின்
வண்ணங்களில் தேவதைகள் வருவார்கள். ஊதா
நிறத்தேவதை, கருநீல
நிறத்தேவதை, நீலநிறத்தேவதை, பச்சை நிறத்தேவதை, மஞ்சள்
நிறத்தேவதை, செம்மஞ்சள்
நிறத்தேவதை, சிவப்பு
நிறத்தேவதை, எல்லோரும்
பகல் முழுவதும் பூக்களோடு, தேனீக்களோடு, தேன்சிட்டுகளோடு, வண்ணத்துப்பூச்சிகளோடு, வண்டுகளோடு, விளையாடுவார்கள். இரவானதும் தங்களுடைய வீடான அடர்ந்த வனத்துக்குப் போய் விடுவார்கள். அங்கே இயற்கையன்னை அவர்களுக்காகக் காத்திருப்பாள்.
ஒருநாள்
மதியம் ஒரு பூந்தோட்டத்தில் எல்லாத்தேவதைகளும் மகிழ்ச்சியாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த போது தோட்டத்தின் ஒரு மூலையிலிருந்து லேசான அழுகைச் சத்தம் கேட்டது. உடனே
தேவதைகள் அந்த இடத்தை நோக்கி தங்களுடைய வண்ணச்சிறகுகளை விரித்து பறந்து சென்றனர்.
மல்லிகைப்பந்தலுக்குக்
கீழே ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் புத்தகப்பை இருந்தது. அவள்
யூனிபார்ம் போட்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எல்லோரும் அவளைச் சுற்றிப் பறந்து கொண்டே ‘ என்ன? என்ன? யாரும்மா நீ ‘என்னாச்சும்மா?’ என்று
கேட்டார்கள். அந்தச்சிறுமி,
’ ம்ம்ம் எம்பேரு மலர்விழி.. கணக்குப்பாடம் எழுதல.. டீச்சர் அடிப்பாங்க.பள்ளிக்கூடம்
போகப்பயமாருக்கு .’ என்று தேம்பினாள். ஊதா
நிறத்தேவதை அவளுடைய கண்ணீரைத் துடைத்தாள். கருநீலநிறத்தேவதை
கலைந்திருந்த அவளுடைய தலைமுடியைக் கோதி விட்டாள். நீலநிறத்தேவதை
கீழே கிடந்த அவளுடைய பையை எடுத்து தூசி தட்டினாள். பச்சை
நிறத்தேவதை அவளுக்குக் குடிக்கத்தண்ணீர் கொடுத்தாள். மஞ்சள்
நிறத்தேவதை அவளுடைய கணக்கு நோட்டை எடுத்து கணக்குகளைப் பார்த்தாள். செம்மஞ்சள்
நிறத்தேவதை அவளுடைய தலையில் ஒரு ரோஜாவைச் சூடினாள். சிவப்பு
நிறத்தேவதை காற்றில் கை வீசி
மலர்விழி சாப்பிடுவதற்காகத் தின்பண்டங்களைக் கொண்டு வந்தாள்.
தின்பண்டங்களைப்
பார்த்ததும் மலர்விழி தேம்புவதை நிறுத்தினாள். அவளுக்கு முன்னே அதிரசம், முறுக்கு, பொரி உருண்டை, பொரிவிளங்காய், முந்திரிக்கொத்து, சேவு, கருப்பட்டி
மிட்டாய், தேன்
மிட்டாய், எல்லாம்
இருந்தன. மலர்விழி
கருப்பட்டி மிட்டாயை எடுத்துச் சுவைத்தாள். முறுக்கை
ஒரு கடி கடித்தாள். திடீரென
பள்ளிக்கூட ஞாபகம் வந்து முகத்தைச் சுளித்துத் தேம்பினாள்.
மஞ்சள்
நிறத்தேவதை மலர்விழியின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே,
’ மலர்விழி ஏம்மா கணக்கு போடலை..’ என்று கேட்டாள். அதைக்
கேட்டதும் அழுகை அதிகமானது. அழுது
கொண்டே,
‘ எனக்கு கணக்கு வரமாட்டேங்கு… “
‘ டீச்சர்ட்ட கேட்டியா..’
‘ கேட்டா அடிக்கிறாங்க..’
‘ நான் சொல்லித்தரட்டா..’
‘ ம்ம்ம் பள்ளிக்கூடம் போகாட்டி நாளைக்கு அம்மாவுக்கு மெசேஜ் போயிரும்…’ என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.
‘ அவ்வளவுதானே நீ போகும்வரை
பள்ளிக்கூடம் நடக்காது.. ‘ என்று சொல்லி ஒரு சொடக்கு போட்டாள். பள்ளிக்கூடத்தில்
மத்தியானவகுப்புக்கு மணியடிக்கவில்லை. கணக்கு டீச்சர் மணியடிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் நகரவே இல்லை. பிள்ளைகள்
மணியடிக்காததால் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மலர்விழி
கணக்குப்பாடத்தை மஞ்சள் நிறத்தேவதையிடம் கேட்டுக் கேட்டுப் போட்டாள். மஞ்சள்
நிறத்தேவதை அவளிடம்,
‘ வீட்டில சொல்லிக் கொடுக்க யாரும் இல்லையா “ என்று கேட்டாள். மலர்விழி,
‘ அப்பா கொத்தனார் வேலைக்குப் போயிருவாங்க.. அம்மா நூறு நாள் வேலைக்குப் போயிருவாங்க… வீட்டுக்கு வந்து சமைச்சு சாப்பிட்டு தூங்கிருவாங்க… யார் இருக்கா எனக்குச் சொல்லித்தர…”
என்று
சிணுங்கினாள். மஞ்சள் நிறத்தேவதை அவளுடைய முகத்தைக் கையில் ஏந்தி ’ இனிமேல் உனக்கு நாங்க சொல்லித்தாரோம்…’ என்றாள். உடனே
மற்ற தேவதைகளும் “ ஆமாம் மலர்விழி ஆமாம்..’ என்று சேர்ந்து சொன்னார்கள்.
‘ அப்ப பள்ளிக்கூடத்துக்கு? ‘ என்றாள் மலர்விழி. உடனே
மஞ்சள் நிறத்தேவதை திரும்பிப்பார்த்தாள். பச்சை நிறத்தேவதை பறந்து போனாள்.
பள்ளிக்கூடத்தில்
மணியடித்தது. பச்சை நிறத்தேவதை அங்கே பள்ளிக்கூடத்தில் மலர்விழியாக உட்கார்ந்திருந்தாள். கணக்கு டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பில் நுழையும்போது மலர்விழி இருக்கையில் இல்லை. இப்போது
பார்த்தால் உட்கார்ந்திருக்கிறாள். ஒருவேளை நாம் தான் சரியாகக் கவனிக்கவில்லையோ. என்று நினைத்தாள்.
டீச்சர்
கரும்பலகையில் எழுதும் கணக்குகளை நொடிக்குள் எழுதி விடை சொன்னாள் மலர்விழி. டீச்சருக்கு
ஆச்சரியமாக இருந்தது. அங்கே
பூந்தோட்டத்தில் எல்லாத்தேவதைகளும் மலர்விழிக்குத் தெரியாததை எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கணக்குப்பாடத்தை
மஞ்சள் நிறத்தேவதை சொல்லிக் கொடுத்தாள்.
அறிவியல்
பாடத்தை சிவப்பு நிறத்தேவதை சொல்லிக்கொடுத்தாள்.
தமிழ்ப்பாடத்தை
கருநீலத் தேவதை சொல்லிக்கொடுத்தாள்.
ஆங்கிலத்தை
ஊதா நிறத்தேவதை சொல்லிக்கொடுத்தாள்.
புவியியலை
செம்மஞ்சள் நிறத்தேவதை சொல்லிக்கொடுத்தாள்
வரலாறுப்பாடத்தை
நீல நிறத்தேவதை சொல்லிக் கொடுத்தாள்
எல்லோரும்
பொறுமையாக மலர்விழி எத்தனை தடவை கேட்டாலும் அன்பாகச் சொல்லிக் கொடுத்தனர். கதைகள் மூலம் சொல்லிக்கொடுத்தனர். விளையாட்டுகள்
மூலம் சொல்லிக்கொடுத்தனர். பாடல்கள் மூலம் சொல்லிக்கொடுத்தனர்.
மலர்விழிக்கு பளிச்சென்று எல்லாம் புரிந்தது. எல்லாப்பாடங்களையும்
சந்தேகம் இல்லாமல் கேட்டுத் தெரிந்து கொண்டாள். நேரம்
இருட்டிக் கொண்டு வந்தது. மலர்விழிக்கு
தேவதைகளைப் பிரிய மனமில்லை. வானவில்
தேவதைகள் தங்களுடைய ஆடையிலிருந்து ஒரு நூலை எடுத்து மலர்விழியின் புத்தகப்பைக்குள் வைத்தனர்.
‘ எப்போ உனக்கு எந்தப்பாடத்தில சந்தேகம் வந்தாலும் நூலை எடுத்து கையில்
வைத்துக் கொண்டு எங்களை
நினைச்சா நாங்க வந்து சொல்லித்தாரோம்….’ என்று சொல்லி பறந்து போனார்கள். நேரம்
இருட்டிக் கொண்டு வந்தது.
அம்மா
தேடிக் கொண்டு எதிரே வந்தாள்.
‘ எங்கடி போயிருந்தே இவ்வள நேரம்? நான்
எங்கேல்லாம் தேடிட்டுருக்கேன்..”
‘ நான் தேவதைங்ககிட்ட
பாடம் படிச்சிட்டு வாரேன்..’ என்று சொன்னாள்.
‘ என்னது தேவதையா? ‘
‘ இல்லை இல்லை… ஏழு டீச்சர்கிட்ட..’ என்று சொல்லிச்சிரித்தாள் மலர்விழி. அவள் சிரிப்பில் வானவில் ஒளிர்ந்தது.
நன்றி - வண்ணக்கதிர்
நல்ல கதை. படித்து ரசித்தேன்.
ReplyDeleteஅருமை தோழர்..அருமை
ReplyDeleteஆஹா....
ReplyDelete