காட்டுப்பள்ளிக்கூடம்
உதயசங்கர்
விந்திய மலையில் ஒரு பெரிய விந்தியவனம்
இருந்தது. அந்த விந்தியவனத்தில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மிருகம் அல்லது பறவை ராஜாவாக
இருக்கும். சிங்கம் ஒரு வருடம் இருந்தது. சோம்பேறியான அது தன் குகைக்குத் தினமும் ஒரு
மிருகம் உணவாக வரவேண்டும் என்று ஆணையிட்டது. அதைப் புத்திசாலியான முயல்தம்பி அழைத்துப்போய்
பாழுங்கிணற்றைக் காண்பித்தது. கிணற்றில் தெரிந்த அதனுடைய பிம்பத்தைப் பார்த்து எதிரி
என்று ஏமாந்து விழுந்து இறந்தது சிங்கம். உங்கள் எல்லோருக்கும் இந்தக்கதை தெரிந்திருக்கும்
ஒரு முறை வரிப்புலி ராஜாவாக இருந்தது. கண்ணில் பட்ட
மிருகங்களையெல்லாம் அடித்துக் கொன்றது. பலம் பொருந்திய யானைமாமா அதைத் தும்பிக்கையால்
தூக்கி வீசியதில் கால் ஒடிந்து நொண்டிக்கொண்டே நடக்கிறது. வல்லூறு கூட ஒரு தடவை ராஜாவாக
இருந்தது. அது சாப்பிடுவதற்கு முன்னால் யாரும் சாப்பிடக்கூடாது என்று ஆணையிட்டது. எல்லாம்
அழுகி யாரும் சாப்பிடமுடியாமல் போனபிறகு தானே அவ்வளவு உணவையும் சாப்பிட்டது. அது மரத்தின்
மீது தூங்கிக் கொண்டிருக்கும்போது மலைப்பாம்பண்ணன் அப்படியே நொறுக்கி விழுங்கி விட்டது.
ஆக யாரும் யாரையும் அங்கே அதிகாரம் செய்ய முடியாது. எல்லோரும் ராஜாவுக்கு எதிராகக்
கலகம் செய்து விடுவார்கள்.
ஏன் தெரியுமா
அந்த விந்தியக்காட்டில் ஒரு பள்ளிக்கூடம்
இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தில் வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், அவரவர் தாய்மொழி,
என்று எல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆண்டுக்கொருமுறை பரீட்சை அவரவர் தாய்மொழியில்
நடந்தது. மண்புழுவுக்கு மண்ணுக்குக்கீழே அதனுடைய தாய்மொழியில் பரீட்சை நடந்தது. முயலுக்கு
அதனுடைய வளைக்குள்ளே பரீட்சை நடந்தது. பாம்புக்கு புற்றுக்குள்ளே பரீட்சை நடந்தது.
சிலசமயம் யாருக்குப் புற்று சொந்தம். என்று கரையான்களுக்கும் பாம்புகளுக்கும் சண்டை
நடந்தது. அதனால் ஒரு நாள் பாம்புகளுக்கும், ஒரு நாள் கரையான்களுக்கும் பரீட்சை நடந்தது.
கரடிகளுக்கு ஆற்றிலும் தேன்கூடு இருக்கும் மரங்களிலும் பரீட்சை நடந்தது. மான்களுக்கு
புல்வெளிகளில் பரீட்சை நடந்தது. யானைகளுக்கு
வலசை போகும் காடுகளில் பரீட்சை நடந்தது. காட்டுப்புறாக்களுக்கு வானத்தில் பரீட்சை நடந்தது.
எறும்புகளுக்கு அவற்றின் புற்றில் பரீட்சை நடந்தது. இப்படி எல்லோருக்கும் அவரவர் இடத்தில் அவரவர் மொழியில்
பரீட்சை நடந்தது. இதனால் மிருகங்கள், பறவைகள், எல்லாம் அறிவாளிகளாக இருந்தன. காட்டில்
இயற்கை விதிகளுக்கு மாறாக என்ன நடந்தாலும் அனைத்து மிருகங்களும் சேர்ந்து குரல் கொடுத்தன.
இது ஒரு ஆளுக்குப் பிடிக்கவில்லை. யார் அது தெரியுமா.
நரியாருக்குப் பிடிக்கவில்லை.
ஏன் பிடிக்கவில்லை தெரியுமா?.
கொஞ்சகாலத்துக்கு முன்பு வரை யார் ராஜாவாக இருந்தாலும் நரியார் தான் மந்திரி. அவர்
சொல்கிறபடி தான் எல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட ராஜா தஞ்சாவூர் தலையாட்டிப்பொம்மை மாதிரி
தான் இருப்பார். ஏனென்றால் அப்போது பள்ளிக்கூடம் கிடையாது. ராஜா உட்பட யாருமே படித்தவர்கள்
கிடையாது. நரியாரின் முன்னோர்கள் மட்டுமே படித்தவர்கள். அவர்கள் அந்தக் கல்வியை அவர்களுடைய
குடும்பத்தினருக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்தனர். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
பள்ளிக்கூடம் வந்து விட்டது. எல்லோரும் படிக்கத் தொடங்கிவிட்டனர். இப்போது யாரும் நரியைச்
சீந்துவதில்லை. யாரும் அதனிடம் எந்த ஆலோசனையும் கேட்பதில்லை. இருந்த இடத்திலேயே உணவு,
உடை, மரியாதை, கௌரவம், கிடைத்துக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. இப்போது காட்டில்
அலைந்து திரிந்து தான் உணவு தேட வேண்டியதிருந்தது. நரியால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நரி யோசித்தது. யோசித்தது. யோசித்தது.
பள்ளிக்கூடத்தில் படித்த மிருகங்கள்,
பறவைகள், எல்லோரிடமும் சென்று தனித்தனியாகப் பேசியது. எல்லோரிடமும்,
‘ நீ தான் திறமையானவன், நீ ஏன்
உன்னை விடத் திறமை குறைந்தவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். ’ என்று கேட்டது. முதலில்
எல்லோரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக எல்லாமிருகங்களிடமும் தலைக்கனம்
வந்தது. அப்போது நரி,
’ நீங்கள் என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தால்
நான் இந்தக் காட்டை சொர்க்கமாக மாற்றுவேன்.. எல்லோரையும் தகுதியானவர்களாகவும், திறமையானவர்களாகவும்
மாற்றுவேன்… உலகத்திலேயே நமது காட்டை மிகச்சிறந்த காடாக மாற்றுவேன்…’ என்று வாக்குறுதிகளை வீசியது.
இதை புலியிடம் சொன்னது.
எலியிடம் சொன்னது.
யானையிடம் சொன்னது.
பூனையிடம் சொன்னது.
மண்புழுவிடம் சொன்னது
மரவட்டையிடம் சொன்னது
முயலிடம் சொன்னது
கயலிடம் சொன்னது
குயிலிடம் சொன்னது
மயிலிடம் சொன்னது
மானிடம் சொன்னது
மந்தியிடம் சொன்னது
யாரும் கேட்டாலும் சொன்னது. கேட்கவில்லை
என்றாலும் சொன்னது. நாளாக நாளாக இதை வண்டுகள் கேட்டன. பூச்சிகள் கேட்டன. குருவிகள்
கேட்டன. குரங்குகள் கேட்டன. பாம்புகள் கேட்டன. பறவைகள் கேட்டன. கேட்டுக்கேட்டு எல்லாம்
மயங்கி விட்டன. அப்புறம் என்ன?
நரியார் ராஜாவானார். ராஜாவான உடனே
தன்னை வித விதமாக புகைப்படம் எடுத்து காடு முழுவதும் இருந்த மரங்களில் ஒட்டச் சொன்னார்.
அவர் நின்றால் ஒரு சாதனை நடந்தால் ஒரு சாதனை. பேசினால் ஒரு சாதனை. வெளிகாடு போனால்
ஒரு சாதனை. என்று விளம்பரம் செய்தார். விளம்பரத்திலும் சாதனை செய்தது.
காட்டில் இருந்த மிருகங்களில்
சிலர் நரியின் தந்திரங்களைப் பற்றிப் பேசினார்கள். மற்ற மிருகங்கள் பறவைகளிடம் தங்களுடைய
அதிருப்தியைச் சொன்னார்கள்.
“ நரி உங்களை எல்லாம் ஏமாற்றத்திட்டமிட்டிருக்கிறான்…
எச்சரிக்கையாக இருங்கள்.. ‘ என்று சொன்னார்கள். ஆனால் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
அவர்கள் நரியின் புகைப்படங்களிலும், வீராவேசமான பேச்சுகளிலும் மயங்கியிருந்தனர்.
ஒரு நாள் நரிராஜா எல்லோரையும்
அழைத்தது.
‘ இனிமேல் காட்டுப்பள்ளிக்கூடத்தின்
பாடத்திட்டம் மாற்றப்படுகிறது.. நாம் அனைவரும் தகுதியானவர்களாகவும், திறமையானவர்களாகவும்
மாறவேண்டுமானால் இந்தப் பாடத்திட்டத்தைத் தான் செயல்படுத்த வேண்டும்…”
என்று ஆணையிட்டது. வழக்கம்போல
எல்லோரும் கைதட்டினார்கள். ஆனால் யாருக்கும் புரியவில்லை.
காட்டில் புதிய கல்விக்கொள்கை
அமுலுக்கு வந்தது.
மண்புழுவை நல்ல வெயிலில் நூறுமீட்டர்
ஓட்டப்பந்தயம் சிறுத்தையுடன் ஓடச் சொல்லி ஒரு பாடம்.
முயலுக்கு மானை விரட்டிச் சென்று
வேட்டையாடும் ஒரு பாடம்
எறும்புகளுக்கு யானைகளின் பாதையைத்
தடை செய்யும் ஒரு பாடம்
காட்டுப்பூனைகளுக்கு கரடிகளோடு
சண்டை போட்டு தேன் எடுக்கும் பாடம்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு வல்லூறு
தின்னும் அழுகிய உணவைத்தின்னும் பாடம்
யானைகள் புற்று கட்டவேண்டும்.
பாம்புகள் குயிலைப் போலக் கூவவேண்டும்
ஆண்டுக்கு ஒரு தடவை எலி, புலி,
யானை, பூனை, சிட்டுக்குருவி, மைனா, கழுகு, பருந்து, நல்லபாம்பு, மலைப்பாம்பு, முயல்,
மான், நத்தை, புழு, பூச்சி, என்று எல்லோருக்கும் ஒன்றுபோல ஓட்டப்பந்தயம். அதில் வெற்றி
பெற்றவர்களே அடுத்த வகுப்புக்குப் போகமுடியும். எல்லாவகுப்புகளிலும் தேர்ச்சி பெற்றவர்களே
ராஜாவாக முடியும்.
என்று ஏராளமான குண்டக்கமண்டக்க
சட்டங்களும் பாடங்களும் இருந்தன. எப்படி இருக்கும்?
யாராலும் படிக்க முடியவில்லை.
பள்ளிக்கூடத்திலேயே நிறையப் பேர் இறந்து போனார்கள். எல்லோரும் பள்ளிக்கூடத்தைப் பார்த்துப்
பயந்தார்கள். யாரும் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.
பள்ளிக்கூடத்தில் நரியின் குடும்பத்தாரும்,
சிங்கம், புலி, சிறுத்தை, குடும்பத்தாரும் மட்டுமே படித்தார்கள். இப்போது அந்தக்காட்டில்
கல்வி அறிவு இல்லை. ஏற்றதாழ்வு அதிகரித்தது. அறியாமை இருள் பரவியது.
நரியின் ஆட்டம் துவங்கியது.
ஆனால் நரியைப் பற்றித் தெரிந்தவர்கள்
தொடர்ந்து மிருகங்களிடமும், பறவைகளிடமும் பூச்சிகளிடமும், பாம்புகளிடமும், பல்லிகளிடமும்,
யானைகளிடமும், மான்களிடமும் பேசினார்கள். காடு தொடங்கிய நாள் முதல் நரியின் தந்திரங்களைப்
பற்றிச் சொன்னார்கள். எல்லோரையும் அடிமைப்படுத்தும் அதன் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள்.
காட்டில் இரவில் ஒரு ரகசியப்பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.
அந்தப் பள்ளிக்கூடத்தில் நரியின்
பள்ளிக்கூடத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் எல்லோரும் படித்தார்கள். மின்மினிப்பூச்சிகள்
விளக்குகள் ஏந்தி வெளிச்சம் காட்டின. ஆந்தை மரத்தில் காவலுக்கு இருந்தது. கரடி நிலத்தில்
காவலாளியாகக் கையில் கம்புடன் நின்றது. எல்லாவற்றையும் காட்டின் தேவதைகளும் மலரும்
பூக்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரே ஒரு பாடம் தான் திரும்பத்
திரும்பச் சொல்லிக் கொடுக்கப் பட்டது.
இயற்கையில் எல்லோரும் சமம். யாரும்
யாருக்கும் அடிமையில்லை.
வருட முடிவில் நடக்கும் போட்டிநாள்
வந்தது. நரியின் பள்ளிக்கூடத்தில் படித்த சிங்கம், புலி, சிறுத்தை, நரி, கழுகு, எல்லாம்
வந்திருந்தன. அதே போல இரவுப்பள்ளிக்கூடத்தில் படித்த மண்புழு, எறும்பு, வண்ணத்துபூச்சி,
முயல், மான், எல்லாம் கலந்து கொண்டன.
நூறுமீட்டர் போட்டியில் மண்புழு
மண்ணைக் குடைந்து சென்றது. சிறுத்தை ஓடத் தொடங்கும்போதே மண்புழு வெற்றிக்கோட்டில் நின்றது.
சிங்கம் வேட்டையாட வாயைத் திறக்கும்போதே
எறும்பு மானை வீழ்த்தியிருந்தது.
கழுகு சிறகை விரித்து மேலே பறக்கும்போதே
வண்ணத்துப்பூச்சி மலை உச்சியில் ஒரு பூவின் மீது இருந்தது.
நரியார் பாட்டுப்பாட ராக ஆலாபனையைத்
தொடங்கினார். முயலின் இசையில் மரங்கள் தலையாட்டிக் கொண்டிருந்தன.
புலி எண்ணூறு மீட்டரில் ஓடியது.
அது ஓடி முடிப்பதற்குள் மான் இரண்டுமுறை ஓடி முடித்து வெற்றி பெற்றது.
எல்லாப்போட்டிகளிகளிலும் இரவுப்பள்ளிக்கூட்த்தில்
படித்தவர்களே வெற்றி பெற்றதினால் நரியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
விந்தியக்காட்டின் ராஜாவாக மண்புழு
பதவி ஏற்றது. உடனே நரியின் பள்ளிக்கூடம் மூடப்பட்டு பழைய மாதிரி எல்லோரும் படிக்கிற
மாதிரியான பள்ளிக்கூடமும் பாடங்களும் உருவாக்கப்பட்டன.
விந்தியக் காட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எப்படி மண்புழுவும், வண்ணத்துப்பூச்சியும்,
முயலும் மானும், எறும்பும் வெற்றி பெற்றன என்ற சந்தேகம் வருகிறதா குழந்தைகளே.
அநீதியை வெல்ல நாமும் கொஞ்சம்
தந்திரங்கள் செய்ய வேண்டும். அந்தத் தந்திரங்களை யார் சொல்லிக் கொடுத்தார்கள். தெரியுமா?
இரவுப்பள்ளிக்கூடத்தில் பூக்களின்
மீது உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யார் என்று யோசியுங்கள். உங்களுக்கே
தெரியும்.
நன்றி - வண்ணக்கதிர்
No comments:
Post a Comment