Thursday, 19 September 2019

அப்பாவின் தந்திரம்


அப்பாவின் தந்திரம்

உதயசங்கர்

சூரியனும் சந்திரனும் இரட்டைக்குழந்தைகள். இரண்டு பேரும் இப்போது இரண்டாவது வகுப்பு படித்து வருகிறார்கள். இரண்டு பேரும் இரட்டை வாலுகள். சேட்டைகளுக்கும் குறும்புகளுக்கும் புகழ் பெற்றவர்கள்.
அப்படி என்ன குறும்பு செய்வார்கள்? என்று நினைக்கிறீர்கள். இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒருவருக்கொருவர் போட்டி. காரணம் எதுவும் பெரிதாக வேண்டாம். யார் முதலில் குளிப்பது யார் முதலில் அம்மாவைத் தொடுவது யார் எவ்வளவு தூரத்துக்கு புத்தகத்தைத் தூக்கி எறிவது ஒருத்தரின் பென்சிலை ஒளித்து வைப்பது அப்பாவின் பைக்கில் ஏறிக்குதித்து விளையாடுவது அம்மா வளர்க்கும் செடிகளைக் கிள்ளுவது, சாப்பிடாமல் அம்மாவை அலைக்கழிப்பது என்று எண்ணற்ற சேட்டைகள் செய்வார்கள். உறங்கும்போது மட்டும் தான் கொஞ்சம் அமைதியாக இருப்பார்கள். அப்போதும் ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டோ, காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டோ இருப்பார்கள்.
இரண்டு. பேரும் அச்சு அசல் ஒண்ணுபோல இருப்பார்கள். யாராலும் தனித்தனியாக அடையாளம் காணமுடியாது. ஒருவருக்கொருவர் குற்றம் சொல்வார்கள். வீட்டிலும் சரி வெளியிலும் சரி ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஓடுகிற வழியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் டணால் பணால் தான். பள்ளிக்கூட்த்தில் மட்டும் அமைதியாகக் குறும்பு செய்வார்கள். சக மாணவர்களின் பைகளை மாற்றி வைத்து விடுவார்கள். நோட்டுகளை மாற்றி வைத்து விடுவார்கள். கரும்பலகை அழிப்பானை ஒளித்து வைத்து விடுவார்கள்.
தினமும் அம்மா அப்பாவிடம் புகார் வந்து கொண்டே இருக்கும். அப்பாவுக்கு இந்த வயதில் குழந்தைகள் குறும்புகள் செய்வது இயற்கை தான் என்று தெரியும். ஆனால் சூரியனும் சந்திரனும் செய்கிற சேட்டைகள் கொஞ்சம் அளவுக்கு அதிகம் என்று தோன்றியது. எப்படி இதைக் குறைப்பது என்று யோசித்தார்.
ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது இரண்டு உண்டியல்களை வாங்கிக் கொண்டு வந்தார். சூரியனிடம் ஒரு உண்டியல் சந்திரனிடம் ஒரு உண்டியலைக் கொடுத்தார். கொடுத்த உடன் இரண்டு பேரும் அதைத் தரையில் போட்டு உடைக்கப் போனார்கள். யார் முதலில் உடைப்பது என்று போட்டி வேறு. தலைக்கு மேல் தூக்கியபோது அப்பா சொன்னார்,
‘ யாருக்கு சைக்கிள் வேண்டாமோ அவர்கள் உடைக்கலாம்..’
அவ்வளவு தான். சைக்கிள் என்ற மந்திரச்சொல் அவர்களை அப்படியே நிறுத்தியது. சைக்கிள் அவர்களுடைய பெரிய கனவு. உடனே,
‘ நான் தான் முதல்ல பணம் சேர்த்து சைக்கிள் வாங்குவேன்.. சைக்கிள் வாங்குவேன்.. சைக்கிள் வாங்குவேன்..
என்று கத்தினார்கள். அப்பா அமைதிப்படுத்தினார்.
‘ இல்லை.. நல்லாப்பாருங்க.. சூரியாகிட்ட இருக்கிறது சந்திரனோட உண்டியல்.. சந்திரன்கிட்ட இருப்பது சூரியாவோட உண்டியல்.. ‘ அப்பா சொன்னதைக் கேட்டதும் தான் இரண்டு பேரும் உண்டியலைப் பார்த்தார்கள். சூரியனிடம் சந்திரனின் உண்டியல் இருந்தது. சந்திரனிடம் சூரியனின் உண்டியல் இருந்தது. அப்பா ஏன் இப்படி மாற்றிக் கொடுத்தார்.
‘ உங்க இரண்டு பேரில் யார் சேட்டை செய்ஞ்சாலும் இந்த உண்டியல்ல ஒரு ரூபா போட்டிரணும்… யார் உண்டியல்ல நிறையப் பணம் சேருதோ அவங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துருவேன்…’
அப்பா சொன்னதைக் கேட்ட இரண்டு பேரும் ஙே என்று விழித்தார்கள். அப்பா மறுபடியும் சொன்னார்.
‘ சூரியா நிறைய்யா சேட்டை செய்ஞ்சா சந்திரன் உண்டியல்ல நிறைய்ய காசு சேரும் அவன் சைக்கிள் வாங்கிருவான்… சந்திரன் நிறைய்யா சேட்டை செய்ஞ்சா சூரியன் உண்டியல்ல நிறைய்யா காசு சேரும்… அவன் முதல்ல சைக்கிள் வாங்கிருவான்… என்ன புரியுதா? ‘
அப்பா சொன்னதைக் கேட்டு இரண்டு பேரும் தலையாட்டினார்கள்.
‘ நீ எப்படி சைக்கிள் வாங்கறேன்னு பாக்கறேன்..’ என்று சூரியனும்,
‘ உன்னய சைக்கிள் வாங்க விட்டாத்தானே..’ என்று சந்திரனும் மாறி மாறிச் சொன்னார்கள்.
அன்றிலிருந்து வீட்டில் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர்களுடைய சேட்டைகள் குறைந்தன. முதலில் இரண்டு உண்டியல்களிலும் வேகமாகச் சேர்ந்த காசு அப்புறம் மெல்ல மெல்லக் குறைந்து காசு போடுவதே நின்று போனது.
இப்போது சூரியனும் சந்திரனும் நல்ல நண்பர்கள். அப்பா ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது சூரியன் அழுது கொண்டிருந்தான். அப்பாவைப் பார்த்ததும்,
‘ அப்பா நான் நடந்து வரும்போது தம்ளர் தண்ணிய தெரியாமத் தட்டி விட்டுட்டேன்.. அதுக்கு உண்டியல்ல காசு போடுன்னு சொல்றான்…’
என்று சொன்னான். அப்பா இரண்டு பேரையும் இரண்டு கைகளில் தூக்கிக் கொண்டார்.
‘ செல்லங்களே.. குழந்தைகள்னா குறும்பு செய்யணும்.. ஆனால் அது மத்தவங்கள புண்படுத்தாம இருக்கணும்… என்ன சரியா.. போய் வெளியே பாருங்க… ‘
அப்பாவிடமிருந்து இறங்கி வெளியே போய்ப் பார்த்தனர். வாசலில் இரண்டு புத்தம் புதிய சைக்கிள்கள் சூரியனையும் சந்திரனையும் பார்த்துச் சிரித்தன.
நன்றி மாயாபஜார்


5 comments:

  1. விஷமம் செய்யும் சிறுவர்களைத் திருத்த நல்ல யுக்தி. நல்ல கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

    ReplyDelete
  2. எங்க பையரிடமும், பெண்ணிடமும் ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடாமல் இருக்க இந்த யுக்தியைக் கடைப்பிடித்துள்ளோம். அதில் சேர்ந்த உண்டியல் தொகையில் இருவருக்கும் மழைக்கோட்டு வாங்கிக் கொடுத்தோம்.

    ReplyDelete