Tuesday 23 January 2018

குளத்தில் சத்தம்

குளத்தில் சத்தம்

உதயசங்கர்

நல்ல மழை. அல்லிக்குளம் நிரம்பி வழிந்தது. அல்லிக்குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூத்திருந்தன. அல்லி மலர்கள் அல்லிக்குளத்தின் கரையோரம் கொக்கு, நாரை, உள்ளான், பறவைகள் தண்ணீரில் அசையாமல் நின்று கொண்டிருந்தன. சிறுமீன்களோ, தலைப்பிரட்டான்களோ, புழு, பூச்சிகளோ, அந்தப்பக்கம் வந்தால் லபக் என்று வயிற்றுக்குள்ளே தள்ளிவிடத் தயாராக நின்று கொண்டிருந்தன. கவனமாய் தண்ணீருக்குள்ளேயே பார்த்துக்கொண்டு நின்றன.
சிலசமயம் அல்லிமலர்கள் மீதோ, அல்லி இலைகள் மீதோ உள்ளானும், நாரையும், கொக்கும், நடந்து சென்று இரை தேடின. நீர்க்காகம், குளத்தில் நீந்தியது. அவ்வப்போது தலையைக் குனிந்து தண்ணீருக்குள் குட்டிக்கரணம் போட்டு இரை தேடியது.
குளத்தில் அயிரை, கெண்டை, கெளுத்தி, உளுவை, மீன்களும் ஏராளமான தவளைகளும், தலைப்பிரட்டான்களும், நீந்திக்கொண்டிருந்தன. பகல் முழுவதும் தவளைகளின் சத்தம் காதைப்பிளந்தது. குளத்தின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஒவ்வொரு விதமான சத்தம் வந்து கொண்டிருந்தது.
குளத்தின் கரையில் கூட்டம் கூட்டமாக தவளைகள் கூடிப் பேசிக்கொண்டிருந்தன. ஒரு குட்டித்தவளை மட்டும் அங்கும் இங்கும் தாவிக்குதித்துக் கொண்டே இருந்தது. அங்கே இருந்த வயதான தவளைகள், பெரிய தவளைகள், இளம் தவளைகள், குட்டித்தவளைகள், என்று எல்லோரிடமும் போய் மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! என்று கத்தியது. அந்தக்குட்டித்தவளையின் உற்சாகத்தைப் பார்த்து மற்ற தவளைகளும் ஒன்று போல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின.
அந்த சத்தத்தைக் கேட்டு கொக்குகளும், நாரைகளும், உள்ளான்களும், நீர்க்காகங்களும் ஒரு நொடி திகைத்து நின்றன. பின்னர் அவைகளும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தின. அந்த சத்தத்தைக் கேட்டு அல்லி மலர்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. அல்லி மலர்கள் தலையாட்டுவதைப் பார்த்து குளத்தைச் சுற்றி நின்ற தென்னை மரம், மாமரம், வாகை மரம், புங்கை மரம், வேப்பமரம், எல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று தலையாட்டின. மரங்கள் தலையாட்டியதும் உண்டான காற்றும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று பாடியது. காற்றின் பாடலைக் கேட்டு மேகங்களும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று சிரித்தன. எங்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி!
அப்போது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்டது. ஒரு சாரைப்பாம்பு கரையோரம் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது. சாரைப்பாம்பின் சத்தம் கேட்டு மீன்கள் தண்ணீரின் ஆழத்துக்குப் போய் விட்டன. தவளைகள், சகதிக்குள் புதைந்து கொண்டன. குட்டித்தவளை மட்டும் இன்னமும் மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று குதித்துக்கொண்டிருந்தது.
அப்படி ஒரு குதி!
நேரே சாரைப்பாம்பின் முன்னால் போய் குதித்தது.. சாரைப்பாம்பு குட்டித்தவளையை உற்றுப் பார்த்தது. குட்டித்தவளை ஒரு கணம் கண்களை மூடித் திறந்தது. பிறகு சாரைப்பாம்பை தைரியமாகப் பார்த்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது.
சாரைப்பாம்பு ஒரு நொடி நின்றது. தன்னுடைய பெரிய வாயைத்திறந்தது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று கத்தியது. அது திரும்பிப் பார்ப்பதற்குள் குட்டித்தவளை குபீர் என்று குளத்துக்குள் பாய்ந்தது.
அவ்வளவு தான்!

No comments:

Post a Comment