Monday 15 January 2018

கோழியின் எச்சரிக்கை

கோழியின் எச்சரிக்கை

உதயசங்கர்

செவலைக்கோழி பத்து முட்டைகளை இட்டது. அந்த பத்து முட்டைகளையும் இருபத்தியொரு நாட்கள் அடைகாத்தது. இருபத்தியொராம் நாள் முட்டைகளின் ஓட்டை உடைத்துக் கொண்டு ஏழு குஞ்சுகள் வெளியே வந்தன. மூன்று முட்டைகள் அப்படியே இருந்தன. செவலைக்கோழி அந்த முட்டைகளை உருட்டிப்பார்த்தது. ஒன்றும் அசையவில்லை. அந்த முட்டைகளை அடைகாத்த கூட்டிலிருந்து தள்ளி விட்டது. அந்த மூன்று முட்டைகளும் கூமுட்டைகள்.
செவலைக்கோழி உண்ணாமல் உறங்காமல் அடைகாத்து பொரித்த அந்த ஏழு குஞ்சுகளையும் பெருமையுடன் பார்த்தது.
ஒரு குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு செவலை நிறத்தில் இருந்தது.
ஒரு குஞ்சு கருப்பு நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு கருப்பில் வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு வெள்ளையில் கருப்புப்புள்ளிகளுடன் இருந்தது
ஒரு குஞ்சு சாம்பல் நிறத்தில் இருந்தது
ஒரு குஞ்சு செவலையும் கருப்பும் கலந்து இருந்தது.
எல்லாக்குஞ்சுகளும் கிய்யா..கிய்யா…கிய்யா…கிய்யா.. என்று போல குரல் எழுப்பிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன.
தாய்க்கோழி ” கெக்கெக்கெக் எல்லோரும் வாங்க “ என்று கேறியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் தாய்க்கோழியின் அருகில் வந்து நின்றன. ஆனால் சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் வரவில்லை. அந்தக்குஞ்சு அப்படியே உலாத்திக் கொண்டிருந்தது. தாய்க்கோழிக்குக் கோபம். உடனே கொஞ்சம் சத்தமாய், ” க்ர்ர்ர்ர்ர் எனக்குக் கோபம் வந்துருச்சி.. உடனே வா..” என்று கத்தியது.
தாய்க்கோழியிடம் இருந்து விலகியிருந்த சாம்பல் நிறக்குஞ்சு மெல்ல அலட்சியமாய் நடந்து வந்து அருகில் நின்றது. தாய்க்கோழி சாம்பல் நிறக்குஞ்சை முறைத்துப் பார்த்தது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை சாம்பல் நிறக்குஞ்சு.
செவலைக்கோழி குஞ்சுகளிடம்,
“ குழந்தைகளே நான் சொல்றதைக் கவனமாகக் கேட்டுக்குங்க..
நான்  ‘ கெக் ‘ ன்னு சொன்னா கவனம்னு அர்த்தம்
’ கேகெக்கேகேகே ‘ ன்னு கூப்பாடு போட்டா ஆபத்து ஆபத்து ஓடி வாங்க!ன்னு அர்த்தம்.
கெ கெ கெ ன்னு மெல்லக்கூப்பிட்டா இரை இருக்கு வாங்கன்னு அர்த்தம்..
இன்னிக்கு இது தான் உங்களுக்கு பாலபாடம். எல்லோரும் கேட்டுக்கிட்டீங்களா? “
என்று பேசியது. அம்மா சொல்வதை எல்லாக்குஞ்சுகளும் ஆர்வத்துடன் கேட்டன. சாம்பல் நிறக்குஞ்சு மட்டும் காதில் வாங்காமல் வாய்க்குள்ளேயே கிய்கிய்யா கிய்யா கிய்கிய்யா கிய்யா என்று பாட்டுப்பாடிக் கொண்டிருந்தது. செவலைக்கோழிக்குக் கவலையாக இருந்தது. இப்படி அலட்சியமாக இருக்கே இந்தச் சாம்பல் நிறக்குஞ்சு!
செவலைக்கோழி குஞ்சுகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
கருப்பு நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளை நிறக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
கருப்பு வெள்ளைக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
வெள்ளைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
செவலைக்கருப்புக்குஞ்சு அம்மா சொன்னதைக் கேட்டது
சாம்பல் குஞ்சு மட்டும் அம்மா சொன்னதைக் கேட்கவில்லை
சாம்பல் குஞ்சு கண்டபடி அலைந்து திரிந்தது. இரை தேடியது.
அன்று காலை செவலைக்கோழியும் குஞ்சுகளும் இரை தேடி குப்பைமேட்டை கிண்டிக் கொண்டிருந்தன. மேலே வானத்தில் பருந்து தன் நீண்ட சிறகுகளை விரித்து பறந்து கொண்டிருந்தது. அந்தப்பருந்தின் நிழல் கீழே பூமியில் விழுந்ததைப் பார்த்தது செவலைக்கோழி. உடனே செவலைக்கோழி, கேக்கேக்கேக்கே என்று அபாய எச்சரிக்கையைக் கத்தியது. உடனே எல்லாக்குஞ்சுகளும் அங்கங்கே கிடைத்த புதர்களுக்குள் பதுங்கிக் கொண்டன. செவலைக்கோழி சாம்பல் குஞ்சைத் தேடியது. காணவில்லை.
சிலநொடிகளுக்கு அப்புறம் சாம்பல் குஞ்சு ஒரு செடியின் மறைவிலிருந்து ஹாயாக கிய்கிய்யா கிய்கிய்யா கிய்கிய்யா என்று பாடிக்கொண்டே வெளியில் வந்தது. அது என்ன என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள் சாம்பல் குஞ்சின் மீது பருந்தின் நிழல் விழுந்தது.
ஆ…ஐயோ… ஆபத்து வந்து விட்டதே… பருந்தின் இறகுச்சத்தம் சாம்பல் குஞ்சின் காதில் கேட்டது. அவ்வளவு தான் உயிர் போகப்போகிறது. இதோ பருந்தின் கால்களில் உள்ள கூர் நகங்கள் உடலைக் கிழிக்கப்போகிறது. என்ன செய்வது என்று சாம்பல் குஞ்சுக்குத் தெரியவில்லை. அப்படியே கண்களை மூடி உட்கார்ந்து விட்டது. கிய்யா கிய்யா கிய்யா
அப்போது ஆவேசமாய் செவலைக்கோழி பறந்து வந்து பருந்தின் மீது மோதியது. பருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து புரண்டது. என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே மேலே எழுந்து பறந்து போனது பருந்து.
சாம்பல் குஞ்சின் அருகில் செவலைக்கோழி நின்றது. கண்களை மூடி உட்கார்ந்திருந்த சாம்பல் குஞ்சின் தலையில் தன் அலகுகளால் மெல்லத் தடவியது. சாம்பல் குஞ்சுக்கு அப்போது தான் உயிர் வந்தது.
இப்போது செவலைக்கோழியின் சத்தத்துக்கு முதலில் வந்து நிற்பது யார் தெரியுமா?

நீங்களே சொல்லுங்கள். 
5+

No comments:

Post a Comment