Monday 25 December 2017

காகம் கொண்ட தாகம்

காகம் கொண்ட தாகம்

உதயசங்கர்
ஒரு ஊரில் ஒரு ஆலமரம் இருந்தது. அந்த ஆலமரத்தில் இரண்டு காகங்கள் இருந்தன. ஒரு காகத்தின் பெயர் ஒல்லிக்குச்சி. இன்னொரு காகத்தின் பெயர் குண்டுப்பாச்சா. அப்போது கோடைகாலம். அதனால் வெயில் அதிகமாக இருந்தது. காகங்களுக்குத் தாகம் எடுத்தது. எங்கும் தண்ணீர் இல்லை. காகங்களுக்குத் தொண்டை வறண்டு போய் விட்டது. மூன்று நாட்களாக ஒரு சொட்டுத்தண்ணீர் குடிக்கவில்லை. காகங்களால் பேசக்கூட முடியவில்லை.
ஒல்லிக்குச்சி காகம் தன்னுடைய நண்பனைச் சைகையால் அழைத்தது. அருகில் மெல்ல தத்தித் தத்தி நடந்து வந்தது குண்டுப்பாச்சா காகம். அதன் காதில்
“ கா..கா..கா..நாம் இங்கிருந்து போய்விடுவோம். இங்கே தண்ணீர் கிடைக்காது. வேறு இடத்தில் தண்ணீர் கிடைக்கலாம்.. வா.பறந்து போகலாம் கா கா கா.”
என்று சொல்லியது. குண்டுப்பாச்சா காகம் ஒரு சோம்பேறி. அது உடனே,
“ காகாகா காகாகா… கடவுள் கைவிட மாட்டார்…எப்படியும் மழை பெய்யும்… தண்ணீர் கிடைக்கும்.. ஏன் வீணாக அலைய வேண்டும்? பேசாமல் இங்கேயே இருப்போம்…கா  கா ”
என்று ஒல்லிக்குச்சிக்காகத்திடம் கத்தியது. ஒல்லிக்குச்சிக்காகம் மறுபடியும் குண்டுப்பாச்சா காகத்தை அழைத்தது. குண்டுப்பாச்சா காகம் அசையவில்லை. கண்ணை மூடி உறங்கியது.
ஒல்லிக்குச்சி காகம் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தை விட்டுப் பறந்தது. வெகுதூரம் பறந்தது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பரிதவித்தது. செடி கொடிகள் காய்ந்து கருகிப் போய் இருந்தன. தண்ணீர் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.
ஒல்லிக்குச்சி காகத்துக்குச் சிறகுகள் வலித்தன. பறக்க முடியாமல் கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்தது. அப்போது தூரத்தில் ஒரு குடிசை வீடு தெரிந்தது. அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு சிறுமி ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அந்தத் தண்ணீரை எடுத்து வர அவள் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து போய் வந்தாள். அவள் தட்டில் தண்ணீரை ஊற்றியதும் அவளைச் சுற்றி சிட்டுக்குருவிகள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், காகங்கள், புறாக்கள், சின்னஞ்சிறு வட்டம் போட்டு பறந்து கொண்டிருந்தன.
அவள் தண்ணீரை ஊற்றியதும் எல்லோரும் அந்தத் தட்டைச் சுற்றி நின்று தண்ணீர் குடித்தன. ஒல்லிக்குச்சி காகம் அந்த முற்றத்தில் இறங்கியது. மெல்ல நடந்து தண்ணீர் இருந்த தட்டிலிருந்து தண்ணீரை சளப் சளப் என்று குடித்தது. தண்ணீரைக் குடித்தபிறகு தான் அதற்கு உயிர் வந்தமாதிரி இருந்தது. அந்தச் சிறுமியைப் பார்த்து
“ கா…கா…க்கா.. மிக்க நன்றி.. மிக்க நன்றி..”
என்று கத்தியது. அந்தச்சிறுமி ஒல்லிக்குச்சி காகத்தைப் பார்த்துச் சிரித்தாள்.
ஒல்லிக்குச்சி காகம் மீண்டும் தட்டில் இருந்து தண்ணீரை உறிஞ்சி வாயில் வைத்துக் கொண்டது. தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய நண்பன் குண்டுப்பாச்சா இருக்கும் ஆலமரத்தை நோக்கிப் பறந்தது. அப்போது ஒல்லிக்குச்சி காகம் நினைத்தது.
“ முயற்சி தான் கடவுள் “
நன்றி - வண்ணக்கதிர்



1 comment:

  1. நன்று சார்! மறைபொருளாய் சொல்லப்பட்ட அன்பின் ஆழமும்,முயற்சியின் வலிமையும் அழகு!

    ReplyDelete