Sunday 22 February 2015

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்!

 

உதயசங்கர்

gandhi

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகாத்மா காந்தி மீது மதன்லால் பாவா என்ற மதவெறியன் குண்டு வீசிக் கொல்ல முயன்றான். அதிலிருந்து மயிரிழையில் தப்பிய காந்தி கொஞ்சமும் பதட்டமடையாமல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் அது தான் அவருடைய கடைசி பிரார்த்தனை கூட்டம் என்று அவருக்குத் தெரியாது. அதைப்பற்றி காந்தியுடன் இருந்த ஒரு அரசியல் தலைவர், “ பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் “ என்று கூறினார். அதைக் கேட்டு சிரித்த காந்தி, “ முட்டாள்.. இதற்குப் பின்னால் விரிந்து பரந்த சதி இருப்பது உனக்குத் தெரியவில்லையா? “ என்று கூறினார். அவர் கூறிய படியே அதற்கடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சே என்ற இந்து மதவெறியன் அண்ணலை சுட்டுக் கொன்றான். ஒன்றிரண்டு தடவையல்ல. மகாத்மாவைக் கொல்ல கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டிலிருந்தே கொலை முயற்சிகள் தொடங்கி விட்டன. காந்தியும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “ இதுவரை கொலை முயற்சியிலிருந்து ஏழுமுறை எனது உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடப்போவதில்லை. நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிரோடு வாழ்வேன்..” என்று கூறினார். கோட்சே இதற்கு, ” ”அதுவரை உங்களை யார் உயிருடன் விட்டு வைக்கப்போகிறார்கள். என்று பார்த்து விடுவோம்.” என்று தான் நடத்தி வந்த அக்ரானி பத்திரிகையில் பதிலளித்திருந்தான்.

அது உண்மையில் நடந்தேவிட்டது. ஜனவரி 30 ஆம் தேதி மாலை அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படேலிடம் காந்தி பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு புறப்பட்டார். பேத்தி ஆவாகாந்தியும், மருமகள் மனுகாந்தியும் இரண்டு பக்கங்களிலும் தோள் கொடுக்க தேசத்திற்காக தன்னையே உடல் பொருள் ஆவி அனைத்தையுமே ஈந்து தன்னையே சத்திய சோதனைக்களமாக மாற்றிய நைந்து போன உடலுடன் கூடிய அந்த வயதான முதியவர் பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. நேரம் மாலை 5.10 மணி. அப்போது காந்திக்கு முன்னால் முப்பத்தைந்து வயது இளைஞன் நின்று தன் உடலை வளைத்து வணங்குகிறான். மகாத்மாவும் பதில் வணக்கம் சொல்கிறார். அந்த இளைஞன், “ இன்று பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதல்லவா? “ என்று கேட்கிறான். காந்தி பதில் சொல்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளங்கைகளில் முளைத்த துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக பாய்கின்றன. காந்தியின் இதயத்துக்குக் கீழேயும் வயிற்றுக்குக் கீழேயும் குண்டுகள் பாய்ந்தன. ஹே ராம்.. என்ற சப்தத்துடன் காந்தி விழுந்தார். அந்தக் கணமே அவருடைய உயிர் பிரிந்தது.

காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?

தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை. ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார். இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 67 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.

புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்.

இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.

ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே

எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

அவரால்

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்?

நன்றி – வண்ணக்கதிர் 22-02-15

2 comments:

  1. வணக்கம்

    சிறப்பான ஆய்வு இறுதியில் பாடலுக்கு கொடுத்த விளக்கம் நன்று..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

    ReplyDelete