Saturday 20 July 2024

முதல் காதலே வாழ்க!

 

முதல் காதலே வாழ்க

உதயசங்கர்

 


" முதல் காதலின் - இளங்காதலின் - இனிய தூய்மையான உணர்ச்சிகள், மிருதுவான கானம், அமைதி, இருதலை நெகிழ்ச்சி இவையெல்லாம் இப்பொழுது எங்கே ஓடி ஒளிந்து கொண்டன? எங்கே? "

 

பாலிய காலத்தில் பள்ளிவிடுமுறை நாட்களில் மத்தியானம் யாருமற்ற பொழுதுகளில் எங்கள் வீட்டுக்குத் தென்புறமிருந்த குப்பை மேட்டில் எதையோ தேடிக் கொண்டிருப்பேன். எதைத் தேடினேனென்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் பழைய சட்டைப் பித்தான், சிகரெட் அட்டைகள், உடைந்த பேனா நிப்புகள், தீப்பெட்டிப் படங்கள், கலர் பாட்டிலின் சிப்பி மூடிகள், எப்போதாவது கிடைக்கும் செல்லாத ஒரு பைசா நாணயம் என்று கிடைப்பதை எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருப்பேன். கொஞ்ச நாட்களில் ஒளித்து வைத்த இடத்தை நானே மறந்து விடுவேன்

அப்படித்தான் எப்போதோ கிடைத்த இந்தப் புத்தகம் என் புத்தக அலமாரியின் இடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அநேகமாக 1983-84 வாக்கில் கோணங்கி சென்னையிலுள்ள பழைய புத்தகக்கடையில் வாங்கியதாக இருக்கலாம். பழைய மொழிபெயர்ப்பு நூல்களைத் தேடித் தேடி வாங்கி கோவில்பட்டிக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தான் கோணங்கி. நாங்கள் எந்தக் கஷ்டமும் படாமல்  வாசித்தோம்அப்படி வந்த புத்தகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது

 

இவான் துர்கனேவின் மூன்று காதல் கதைகள் என்று ஒரு கிரவுன் சைஸ் புத்தகம் ராதுகா பதிப்பகத்தால் வெளிவந்திருந்தது. அதில் முதல் காதல், ஆஸ்யா, வசந்தகால வெள்ளம் என்ற மூன்று குறுநாவல்கள் இருந்தன. மூன்றில் இப்போதும் முதல்காதலும், ஆஸ்யாவும் ஞாபகத்திலிருக்கின்றன. ஆனால் வசந்த கால வெள்ளம் நினைவிலில்லை. அந்தப் புத்தகத்தை வாசித்து உருகி உருகிப் பேசிக் கொண்டிருந்தோம்

 

ஆங்கிலத்தில் துர்கனேவை வாசிக்கிறவர்கள் ஐவான் டர்ஜனீவ் என்று தான் அழைத்தார்கள். தூத்துக்குடியில் காலம் சென்ற நாகராஜ் என்ற தோழர் எப்போதும் ஐவான் டர்ஜனீவ் என்று தான் அழைத்தார். அப்போது அதைக் கேட்டு சிரித்து உருள்வோம்

 

இந்த நூலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். மொழிபெயர்த்தவர் இலங்கையர் கோன்இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்த நூல் கலைமகள் காரியாலத்தினால் 1942 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ராதுகா பதிப்பகம் வெளியிடுவதற்கு வெகு காலத்துக்கு முன்பாகவே துர்கனேவ் தமிழுக்கு வந்திருக்கிறார். அற்புதமான மொழிபெயர்ப்பு. அந்தக் காலச் சொற்கள் சில சற்று தட்டுகிறது. சரளமான நடையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார், இலங்கையர்கோன். அவருக்கு வணக்கங்கள்.

 

 அந்த வயதில் எங்கள் மனதுக்கு நெருக்கமாக துர்கனேவின் மூன்று காதல் கதைகளே இருந்தன. இளமையின் வாசலில் முதல் காதலை வரவேற்கக் காத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை.

 

அநேகமாக ஆண் எழுத்தாளர்கள் தங்களுடைய முதல் காதலை எப்படியோ எழுதி விடுகிறார்கள். யாராவது பெண் எழுத்தாளர்கள் அப்படி எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. பெண்கவிஞர்கள் கவிதைகளில் காதலை, வெளிப்படுத்திய அளவுக்கு புனைவுகளிலில்லையோ அல்லது எனக்குத் தெரியவில்லையோ

 

ஆணோ பெண்ணோ எல்லாரும் முதல் காதலை எதிர்கொண்டு தான் கடந்து வருகிறோம். குழந்தைப்பருவக்காதலை இங்கு குறிப்பிடவில்லை. அதில் ஓரு பிரமிப்பும், முட்டாள்த்தனமும் இருக்கும். அதை முதல் காதலென்று சொல்ல முடியாது

ஒவ்வொரு குழந்தையும் எந்த நாளில் தன்னை மனிதனாக மனுஷியாக உணர்கிறதோ அந்த நாளுக்குப் பின்பாக வருகிற காதல்.

 

புத்தம் புதிய பசும்புல் மண்ணிலிருந்து  வெளியே தன் இளம் தளிரை வெளியே நீட்டி இந்த உலகைத் தரிசிக்கும்போது ஏற்படும் புளகாங்கித உணர்வோ, திடீரென்று ஒரு பாறை உருண்டு அதற்குக் கீழே பொங்கி வரும் பரிசுத்தமான நீரின் சுவையோ, கள்ளகபடில்லாத, பாலுணர்வின் சுவடுகளின் நிழல் கூடத் தெரியாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒளிவிடும் அன்பின் சுடரோ , ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் அதை அனுபவிக்காமல் இருக்க முடியாது. . 

 

 ஒரு பதினாறு வயதுப்பையன் எதிர்கொள்ளும் முதல் காதலையே துர்கனேவ் எழுதுகிறார். விளாட்மீர் அவனை விட வயதில் மூத்த ஜீனாவைக் காதலிக்கிறான். அவனுடைய காதலின் தூய்மையை ஜீனா உணர்ந்தாலும் அவளுக்கு அவன்மீது காதல் வரவில்லை. நேசமும்  நட்புணர்வும் தான் இருக்கிறது. இளம்பெண்களுக்கேயுரிய பசப்பல் விளையாட்டை அவளைச் சுற்றியுள்ள அத்தனை ஆண்களிடமும் விளையாடுகிறாள்.

 

 ஆனால் காதல் விசித்திரமானது . எப்போது யார் மீது என்ன காரணத்தினால் வருகிறதென்று யாரால் சொல்ல முடியும்? அப்படித்தான்  ஜீனாவுக்கு விளாட்மீரின் அப்பா பெட்ரோவிச்சின் மீது வருகிறது

 

வாழ்க்கைக்கும் காதலுக்கும் நேற்று நாளையென்று கிடையாது. இன்று மட்டும் தான் நித்தியமானது. அந்த இன்றின் இன்ப உண்ர்வையே நினைத்துக் கொண்டு நேற்றையும் நாளையையும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

 

விளாட்மீரும்  தன்னுடைய முதல் காதலை இதயத்தின் ரகசிய அறையில் பூட்டிப் பொக்கிஷம்போல பாதுகாக்கிறான். அவ்வப்போது அந்தப் புதையலைக் கையிலெடுத்து களங்கமில்லாத அதன் தூயநறுமணத்தை முகர்கிறான். அவனை வாழ்வின் அத்தனை துயரங்களிலிருந்தும் அது பாதுகாக்கிறது. எல்லாத்துன்பங்களையும் எதிர்கொள்ளும் மனவலிமையைக் கொடுக்கிறது

 

அதன்பிறகு எத்தனை காதல் வந்தாலும் எங்கிருந்தென்று சொல்லமுடியாமல் புல்லின் நுனியில் சேர்ந்து ததும்பி நிற்கும் குளிர்காலப்பனித்துளி போன்ற  முதல் காதலின் பேரன்பு மரணம் வரை மறையாது

 

முதல் காதலே வாழ்க

 

துர்கனேவ்! எங்கள் இனியவரே! எங்கள் வாழ்வின் மிகச்சிறந்த பக்கத்தை ஞாபகப்படுத்தியதற்கு வணக்கங்கள்...!

 

No comments:

Post a Comment