Friday 12 July 2024

வாருங்கள் யெரோஷ்கா மாமா நாம் ஒயின் அருந்தலாம்!

 

வாருங்கள் யெரோஷ்கா மாமா நாம் ஒயின் அருந்தலாம்!

உதயசங்கர்



வாருங்கள் யெரோஷ்கா மாமா நாம் ஒயின் அருந்தலாம். சற்று நேரம் கஸாக்குகள் நாவலிலிருந்து வெளியே வாருங்கள். பயப்படாதீர்கள். டால்ஸ்டாய் எதுவும் சொல்லமாட்டார். நானும் ஒரு குட்டி எழுத்தாளர் தானே. எனக்கும் அவரிடம் பயம் தான். ஆனாலும் ஏதோ அசட்டுத் தைரியத்தில் ருஷ்ய எழுத்தாளர்களனைவரையும் நான் விருந்துக்கழைத்து அவர்கள் புகழ்ச்சியில் மயங்கியிருக்கும் போது அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை கோவில்பட்டிக்குக் கடத்திக் கொண்டு வந்திருக்கிறேன். இதற்கு முன்பும் இது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதன் பிறகு இப்போது மீண்டும் வயதாகி, கிழடு தட்டிப்போன இந்தப்பருவத்திலும் அதைச் செய்ய முற்படுகிறேன். எனவே அவர்களுக்குத் தெரியும். கதாபாத்திரங்களை எங்கே அழைத்துப் போவேன்? எங்கே அவர்களுடன் அமர்ந்து உரையாடுவேன்? எப்படியெல்லாம் மூக்கு முட்ட வோத்காவை குடித்து மூளைதடுமாறியவனைப் போல உளறிக் கொட்டுவேன். எல்லாம் அவர்களுக்குத் தெரியும்.

பயப்படாதீர்கள் யெரோஷ்கா மாமா. உங்கள் எழுத்தாளரிடம் நான் அனுமதி வாங்கி விட்டேன். அவர் கடுமையானவராக இருந்தாலும் என்னுடைய சின்னஞ்சிறிய உருவத்தைப் பார்த்து குழந்தைகளே கருணையுடன் தாத்தா தாத்தா என்று அன்பு காட்டும்போது அவர் சிறிதளவாவது இரக்கம் காட்ட மாட்டாரா?

என்ன! ஒலேனினுடன் மட்டும் தான் நீங்கள் அருந்துவீர்களா? நான் உலீத்காவிடமிருந்து இரண்டு வாளி நிறைய ஒயின் வாங்கி வைத்திருக்கிறேன். வாருங்கள் யெரோஷ்கா மாமா! நீங்கள் வேட்டையாடிய காட்டுக்கோழிகளிருந்தால் ரெம்ப நல்லது. கிரில் சிக்கன் செய்து ஒயினுக்குத் தொட்டுக் கொள்வோம். ஆகா ஒயினும் கிரில் சிக்கனும் என்ன ஒரு காம்பினேஷன்! என்ன புரியவில்லையா? மசாலா தடவிச் சுட்ட கோழி யெரோஷ்கா மாமா! சரி இன்று வேட்டைக்குப் போகவில்லையா? கவலைப்படாதீர்கள். வாருங்கள்.

இதோ! எதிரே உயர்ந்து நிற்கும் காகசிய மலைத்தொடரைப் பார்த்துக் கொண்டே, இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கையைக் குறித்துப் பேசுவோம். மர்மமான இதயத்தை மறைத்து வைத்திருக்கிற பெண்களைக் குறித்துப் பேசுவோம். நீங்கள் உங்களுடைய வீரதீரச் சாகசங்களைப் பற்றிச் சொல்லுங்கள். நான் என்னுடைய நத்தைக்கூட்டு வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன். நத்தை தன் முதுகில் தன் வீட்டைச் சுமப்பதைப் போல நான் என் மனதைச் சுமக்கிறேன். மனதில் தறிகெட்டோடும் எண்ணங்களின் சுழலில் சிக்கி அதன் போக்கில் என்னை அலைக்கழியவிட்டு மிதக்கிறேன். எப்படியாவது எங்காவது கரை ஒதுங்கித் தானே தீர வேண்டும்; உயிருடனோ, பிணமாகவோ.

உங்கள் கதை தான் எனக்கு மிக முக்கியம். அதற்கு இந்த இரண்டு வாளி ஒயின் போதாதென்று எனக்குத் தெரியும். பரவாயில்லை. உலீத்காவிடம் பேசி இந்த ஆண்டு அவள் ஊறவைக்கும் ஒயின் அத்தனையையும் உங்களுக்காக விலை பேசி விடுகிறேன். அவள் கொஞ்சம் பேராசைக்காரி. இந்த ஒயினை விற்றுத்தான் மார்யானாவின் திருமணத்தை முடிக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறாள். மார்யானா என்ன பெண் அவள்! கஸாக் இனப்பெண்களில் லட்சியமாகத் திகழ்கிறாளே. அவளுடைய ஒயில் என்ன! ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அன்றாட வேலைகளைச் செய்யும் பாங்கென்ன! ஒலேனினிடமும், லுக்காஷ்காவிடமும் பசப்பும் பசப்பென்னெ! எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. ஆனால் ஒன்று யெரோஷ்கா மாமா ஒலேனிடம் எப்படியாவது மார்யானாவை ஏற்பாடு செய்து தருகிறேனென்று சொன்னீர்களே அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. பொய் தானே சொன்னீர்கள். இல்லை உண்மையாகத்தானென்று சொன்னீர்களென்றால் உங்களுக்கு ஒரு சொட்டு ஒயின் கூடத் தராமல் இந்தக் கரிசக்காட்டில் தாகத்தால் தவிக்க விட்டு விடுவேன். எனக்குத் தெரியும்.. அவனுடைய பணத்துக்காகவும் ஒயினுக்காகவும் தானே அப்படிச் சொல்லி அவனை ஏமாற்றினீர்களில்லையா? பார்த்தீர்களா மாமா எனக்கும் தெரியும். இந்தாருங்கள் இன்னொரு கிளாஸ் ஒயின் அருந்துங்கள்.

பாருங்கள் இப்போது எனக்கும் போதை ஏறிவிட்டது. நான் இப்படியெல்லாம் நாவல் முழுவதும் குடித்ததில்லை. உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லப்போகிறேன். அட, ரகசியமென்ன ரகசியம். ஊருக்குத் தெரிந்தது தான். ஏன் உங்களுக்கும் தெரிந்திருக்கும். உங்கள் கதாபாத்திரத்தை உருவாக்கினாரே டால்ஸ்டாய் அவரைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். எத்தனைமுறை உங்களை எழுதியெழுதித் திருத்தியிருப்பார். பாவம் அன்னா! என்ன விழிக்கிறீர்கள். அவருடைய மனைவி தான். அவர் எழுதிக்கொடுத்ததையெல்லாம் நகலெடுத்து உடல்நிலையைப் பாழாக்கிக் கொண்டாள்.

என்னுடைய இளமைப்பருவத்திலும் சரி, இப்போதும் சரி, லியோ டால்ஸ்டாயின் புகைப்படத்தைப் பார்க்கும் போது கண்டிப்பும் முரட்டுத்தனமும் இந்த உலகத்தின் மீது தீராப்பகையும் கொண்ட பிடிவாதத்துடன் எல்லாரையும் வம்புக்கு இழுப்பவராகவே தெரிவார். அவருடைய மூக்கின் நிமிரவு எனக்கு நிகர் யார் இங்கேயிருக்கிறார்கள் என்று சவால் விடும். ஏற்கனவே பிரபுக்குலமாயிற்றா கேட்கவே வேண்டாம். கம்பீரமான யாரிடமும் நட்பு பாராட்டாத வெளிப்பாடும், புன்னகையின் ரேகை கூடத் தெரியாத அளவுக்கு இறுக்கமாக மூடிப்பூட்டிய பருத்த உதடுகளும் உண்மையில் யாரும் நெருங்க முடியாதவராகவே காட்டியது. சற்று பயத்துடனும் அளவு கடந்த மரியாதையுடனும் தான் டால்ஸ்டாயிடமிருந்து விலகி நிற்போம். எப்போதும் வாழ்க்கையை தீவிரமான விசாரணை செய்து கொண்டேயிருக்கும் நீதிபதி போலவே காட்சியளித்தார். அவருடைய மாபெரும் படைப்புகளிலெல்லாம் இரண்டோ அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தரப்புகள் வாழ்க்கை குறித்த தத்துவ விசாரணை செய்து கொண்டேயிருப்பார்கள். அவர் பாவமன்னிப்பு வழங்கக் காத்திருக்கும் மூத்த பாதிரியர் போலவோ, அல்லது பாவங்களை முறையிட்டு மன்னிப்பு கேட்கும் பாவியைப் போலவோ இருப்பார். ஆனால் அவர் நம்புகிற படைப்புக்கடவுள் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பார்.

அன்னா கரேனினாவின் லட்சியக்கதாபாத்திரங்கள் திருமணத்தில் மனமொத்து லட்சியத் தம்பதிகளாக வாழ்கிற கிட்டியும் லெவினென்றாலும் எப்படி அன்னா கரேனினா உலக இலக்கியத்தின் சிகரமானாளென்பது அவருக்கே தெரியாத புதிர். அதே போலத் தான் பாவமன்னிப்பு என்பதே கிறித்தவமதத்தின் உன்னதக்கருத்தியல் அதைப் பிடித்துக் கொண்டு ஆண்டவரின் சொர்க்க ராஜ்யத்தை அடைந்து விடலாமென்ற கருத்தை வலியுறுத்துவதற்காக எழுதிய புத்துயிர்ப்பு நாவல் ருஷ்ய நாடெங்கும் வாழும் ஏழை விவசாயி வர்க்கத்தின் நிலைமையைக் கண்ணாடியைப் போலப் படம் பிடித்துக் காட்டுகிறதென்று மாமேதை லெனின் சொன்னார். அத்துடன் கிறித்துவச்சர்ச்சுகளின் போலித்தனங்களையும்விமரிசனம் செய்தார். பிரபுக்குலத்தின் பகட்டான வஞ்சகத்தையும் தோலுரித்தார்.

கதையின் நாயகன் நெஹ்லூதவ் கத்யூஷாவுக்கு இழைத்த பாலியல் துன்பத்துக்குப் பரிகாரம் தேடியே அவளைத் தேடிப் பயணம் போகிறான். அப்போது இதைப் படித்துவிட்டு பல நாட்கள் பேசித் திரிந்தது ஞாபகத்துக்கு வருகிறது. அதே போல எங்கிருந்தோ கோணங்கி கொண்டு வந்து சேர்த்த, ஐயாயிரம் கதாபாத்திரங்களக் கொண்ட  போரும் அமைதியும் நாவலைப் படிக்க முடியாமல் படித்து விட்டு அதிசயத்தால் திகைத்து வாயைப் பிளந்து நின்றதுமுண்டு. அதில் வரும் நடாஷா என்ற எழிலார்ந்த பெண்ணின் அழகை மறக்கமுடியவில்லை. ஒரு கட்டத்தில் நடாஷா, மாஷா, நாஸ்தென்கா, ஜமீலா, காத்யா, என்ற பெயர்களே அழகாகத் தெரிந்தன. அழகான பெயர்களைச் சுமந்தவர்கள் அழகாகத்தானே இருக்கமுடியுமென்றெல்லாம் வெகுளித்தனமாகப் பேசித்திரிந்த காலங்களுண்டு.

வாழ்க்கையை டால்ஸ்டாய் ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொண்டாரென்று உங்களுக்குத் தெரியுமா யெரோஷ்காமாமா. எதையெடுத்தாலும் கோட்பாட்டுரீதியாக இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எதிர்வுகள் தான் வாழ்க்கையென்று தீர்மானித்தவர் போல எல்லாவற்றையும் எதிர் எதிராக நிறுத்துகிறார். அவருடைய கிரெய்சர் சோனட்டா ( பீத்தோவனின் சிம்பொனி ) கதையில் காதலுக்கும் சலிப்பூட்டும் திருமணவாழ்க்கை, குழந்தைப் பேறு, பெண்களின் நிலைமை, அவர்களுடைய சுய அடையாளம் எப்படி திருமணத்தாலும் குழந்தைப் பேற்றாலும் அழிந்து இத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கிய கணவனின் மீது வன்மம் காக்கிறார்கள். எந்த எல்லைவரை கொண்டு செல்கிறெதெனால் கதலித்து மணந்த மனைவியை, ஐந்து குழந்தைகள் பெற்ற பின்பு பொறாமையினாலும் சந்தேகத்தாலும் கணவனே கொல்கிற எல்லைவரைக் கொண்டு செல்கிறதே. உணர்ச்சி பொங்கும் அந்த விவரிப்பும், அறிவார்ந்த ஆர்க்யூமெண்ட்ஸும் அந்தக் கதை வாசிப்பவரை அதிர்ச்சிக்குள்ளாகி விடும். இதையெல்லாம் 1899- ஆம் ஆண்டு எழுதியிருக்கிறாரென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் யெரோஷ்கா மாமா.

 என்ன! வாய் பிளந்து ஆச்சரியமாய் பார்க்கிறீர்கள். உங்கள் எழுத்தாளர் அப்படிப்பட்டவராக்கும். சரி. அவருடைய நலனுக்காக நாம் இன்னொரு கிளாஸ் ஒயின் அருந்துவோம். இத்தனை நாட்களாக நீங்கள் கதாபாத்திரமாக இருக்கும் கஸாக்குகள் நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. திடீரென்று தான் ஒரு பழைய புத்தகக்கடையில் எடுத்தேன். தலைப்பு அவ்வளவு ஈர்ப்பாக இல்லாததால் அப்படியே புத்தக அலமாரிக்குள் பதுக்கி வைத்து விட்டேன். இப்போது தான் தேடியெடுத்து வாசிக்கும் போது தான் உங்களையெல்லாம் சந்திக்கும் பேறு பெற்றேன்.

காகசீயப் போர் நடக்கும் மலையிலிருக்கும் ஒரு கஸாக்கு கிராமத்தைப் பற்றிய கதையாக விரிகிறது. அட, மறந்து விட்டேனே. உங்கள் மருமகன் லூக்காஷ்கா. உண்மையான ஜிகித். அவனுடைய ஊமைச்சகோதரி, என் அருமை மார்யானா ( அதென்னவோ தெரியவில்லை எழுத்தாளர்கள் பெண் கதாபாத்திரங்களை மறக்க முடியாதபடி படைத்து விடுகிறார்கள்.) வாழ்க்கையை உல்லாசமாக வாழும் பெலேத்ஸ்கி, லுக்காஷ்காவின் நண்பன் நஸார்கா, உஸ்தென்கா, எல்லாவற்றுக்கும் மேல் மார்யானாவின் மீது உண்மையான காதல் கொள்ளும் அதற்காகத் தன் பிரபுக்குலப்பெருமையைத் தியாகம் செய்ய நினைக்கும் ஒலேனின் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அப்பழுக்கற்ற சிற்பங்களாகச் செதுக்கியிருப்பார் டால்ஸ்டாய்.

ஒரு உண்மையான கஸாக்கு கிராமமும் அதன் தெருக்களும் அதன் உழைப்பாளி மக்களும், அவர்கள் உழைப்பும், கொண்டாட்டமும், எந்தவொரு அலங்காரமுமில்லாமல், குறிப்பாக வழக்கமான கோட்பாட்டு விவாதங்களேதுமின்றி அப்படியே அச்சு அசலான வாழ்க்கையை காகசீய மலைத்தொடரின் பின்னணியில் வரைந்திருப்பார் டால்ஸ்டாய். ஒரு மனிதனின் மதிப்பென்ன? சாதாரண மக்களின் வாழ்க்கையில் காணப்படும் அழகும் தூயமையும் எவ்வளவு பரிசுத்தமானது, பிரபுக்குலத்தின் போலித்தனம் என்று எல்லாவற்றைப் பற்றியும் அனுபவங்களாக உணர்த்தியிருப்பார் டால்ஸ்டாய். யெரோஷ்கா மாமா ஏன் அவரை உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரென்று சொல்கிறார்கள் தெரியுமா?

ஏய் மருமகனே! போதும் இந்த கலைத்தத்துவ விளக்கமெல்லாம். ஊற்று ஒயினை என்று தானே சொல்லவருகிறீர்கள். மாமா உங்களுக்குப் போதை தலைக்கேறி எல்லை தாண்டி விட்டது. நீங்கள் என்னுடனிருந்து விட்டால் ஒலேனினுக்கு லூக்காஷ்காவுக்கு யார் பதில் சொல்வது? அது மட்டுமல்ல. என் மதிப்புக்குரிய டால்ஸ்டாய்க்கும் பதில் சொல்ல வேண்டுமே.

என்ன சொல்கிறீர்கள்?

எனக்கு மார்யானாவை ஏற்பாடு செய்து தருகிறீர்களா? ஒலேனினிடமும் இதைத்தான் சொன்னீர்கள். நிச்சயமாகவா, சொல்கிறீர்கள்! அவளை நாவலிலிருந்து கடத்திக் கோவில்பட்டிக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுவீர்களா?

இதோ! யெரோஷ்கா மாமா, இன்னொரு வாளி ஒயினைக் குடியுங்கள். ஆனால் மார்யானாவை மட்டும் மறந்து விடாதீர்கள்.

கஸாக்குகள்- லியோ டால்ஸ்டாய்

மொழிபெயர்ப்பு - நா. தர்மராஜன்



No comments:

Post a Comment