Monday 15 July 2024

ஏன் பொறுப்பற்று இறந்தீர்கள் லேர்மன்தவ்?

 

ஏன் பொறுப்பற்று இறந்தீர்கள் லேர்மன்தவ்?

 

உதயசங்கர்



 

சாகிற வயசா உங்களுக்கு. 27 வயதுக்குள் உலகச்செவ்வியல் நாவலான நம்காலத்து நாயகனை எழுதிய நீங்கள் எப்படி எங்கள் அனுமதியில்லாமல் துவந்த யுத்தத்தில் ஈடுபட்டீர்கள்

 

என்ன அவசரம்

 

நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்களென்று உங்களுக்குத் தெரியுமா? இளமையின் வேகத்தில் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா

 

ஐயோ.. மனம் பொறுக்க வில்லையே

 

சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த அன்புத்தம்பி நூல்வனம் மணிகண்டன் நான் பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கிறேன் என்று முகநூல் பதிவு போட்டிருந்தார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எங்களுக்கு பீட்டர்ஸ்பர்க் கோவில்பட்டி தான். இங்கே ஊருக்கு வெளியே ஸ்தெப்பி புல்வெளி இருந்தது. குருமலை கணவாயிலிருந்து வீசிய காற்று ஸ்தெப்பியின் மீது இறங்கும் போது சலசலக்கும் ஓசையிலிருந்து நாங்கள் கவிதைகளையும் கதைகளையும் எடுத்துக் கொண்டோம்

 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்தெப்பி புல்வெளியினூடே ஜமீலாவையும் தூரத்தில் பாடிக் கொண்டே போய்க்கொண்டிருந்த ஒருநாளும் கண்ணில் படாத தானியாரைத் தேடினோம். எங்கள் கனவுகளில் நாஸ்தென்கா, நடாலியா, நடாஷா, மாஷா, எல்லாரும் வந்தார்கள்.

 

 மாலை நேரங்களில் அந்த இளம் சீமாட்டிகள் எந்த லட்சியமுமில்லாமல் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்காக நமதருமை இளைஞர்கள் சைக்கிளில் அங்குமிங்கும் பரபரப்பாய் அலைந்தார்கள்.

 

 ஒரு ரோஜாவைக் கொடுப்பதற்காக, ஒரு கடிதத்தைக் கொடுப்பதற்காக, ஒரு கவிதையைக் கொடுப்பதற்காகதூதுவர்களிடம் ஏன் இன்று வரவில்லையென்று கேட்பதற்காக, எப்போதும் கண்களில் பொங்கும் காதலுணர்வுடன் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள்

 

சீமாட்டிகள் தங்கள் தோழிகளுடன் கிளுக் என்று சிரிப்புகளைச் சிந்தியபடி இவர்களைக் கவனிக்காமல் போனாலும் இளைஞர்கள் அந்தச் சிரிப்பு, அந்தப் பார்வைதலையாட்டல் எல்லாம் அவர்களுக்காகத்தான் என்று சத்தியம் செய்தார்கள்.

 

தேவதச்சன் பால்சாக்கின் மாயமான் நாவலை அறிமுகப்படுத்தி எங்களை பாரீஸ் நகரத்து பிரெஞ்சு சீமாட்டிகளை அறிமுகப்படுத்தினார். ஆனால் எங்களுக்கென்னவோ படோடோபமான அலங்காரமும், மேலோட்டமான, எப்போதும் கேளிக்கை பொங்கும் பெண்களிருக்கும் பாரீஸைவிட, ,  ஆழ்ந்த உணர்ச்சியும், அழகும் கொண்ட ருஷ்ய சீமாட்டிகளைக் கொண்ட ருஷ்யாவையே பிடித்திருந்தது. அத்துடன் பீட்டர்ஸ்பர்க் செங்கொடி நகரமல்லவா?

 

நாங்கள் எங்கள் தனித்துவமிக்க பீட்டர்ஸ் பர்க்கில் தோழர்கள் புடைசூழ அவர்கள் கொடுத்த ருஷ்ய சோவியத் இலக்கியங்களையும் அரசியல் தத்துவ நூல்களையும் வாசித்து வாழ்ந்தோம்

 

அப்போது தான் திடீரென்று புயலைப்போல ருஷ்ய முரட்டுத்தாத்தாரியனைப் போல அல்லது வலிமையான கசாக்கியனைப் போல திருநெல்வேலியிலிருந்து ஒருவர் வந்தார்.

 

அவர் ,. நம் காலத்து நாயகன் நாவலை ருஷ்ய பழங்குடி தாத்தாரியன் போன்ற உடல்வாகுடன், எப்போதும் தலையை பிடறிமயிர் குலுங்க முன்னும்பின்னும் ஆட்டிக் கொண்டு இரண்டு கைகளை வாள்களைப் போல வீசி வீசிப் பேசும் எங்கள் அன்புத்தோழர் ஜோதிவிநாயகம் தான் அறிமுகப்படுத்தினார்

 

அதை வாசித்தவுடன் ஐயா நீங்கள் எங்கள் மனதில் ப்சக்கென்று ஒட்டிக் கொண்டீர்கள். நாங்கள் எல்லாருமே லேர்மன் தவ் ஆகிவிட்டோம்

 

சுயவிசாரம் செய்து தன் காரியங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் தரும் , நாவலிந் நாயகன் பிச்சோரினைப் போல ஐந்தாறு தெருக்கள் மட்டுமேயிருந்த எங்கள் ஊரில் சைக்கிளில் ( பிச்சோரின் குதிரையில் வருவார் ) ஏறி கெச்சைநடையில் மிதித்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கினோம்

 

நண்பரின் காதலியைத் தட்டிப் பறிப்பது, மகளைக் காதலிக்கும்போதே அம்மாவையும் சேர்த்துக் காதலிப்பது, பார்த்தால் மட்டும் போதுமென்று தெருவிலேயே வாழ்க்கை நடத்துவது, நம்பி வந்த பெண்ணை மனம் மாற்றி குடும்பத்திருமணம் செய்து வைப்பது,, புரட்சி ஒன்று தான் வாழ்வின் குறிக்கோள் காதலுக்கு இடமில்லையென்று வீம்பு பிடிப்பது, ஒரே நேரத்தில் இரண்டு காதல்கள், இப்படியெதுவுமில்லாமல் வற்ண்ட கரிசல் விருவுகள் விடும் பெருமூச்சைப் போல வெப்பமூச்சை மற்றவர்களைச் சுட்டுப்பொசுக்குகிற அளவுக்கு விட்டுக் கொண்டு திரிவது, என்று எல்லாவகையான இளைஞர்களும் இருந்த நாட்கள்.

 

நம் காலத்து நாயகனைப் படித்தபோது எங்களையே படித்தது போல இருந்தது.

 

" என் அன்பார்ந்த கனவான்களே நம் காலத்து நாயகன் உருவச்சித்திரம் என்பது சரியே, ஆனால் ஒரு மனிதனது அல்ல; நமது தலைமுறை அனைத்தின் குறைபாடுகள் அவற்றின் முழுவளர்ச்சியில் தீட்டப்பட்டிருக்கும் உருவச்சித்திரம் இது. மனிதன் இவ்வளவு கெட்டவனாக இருக்க முடியாது என்று நீங்கள் என்னிடம் மறுபடி சொல்வீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். எல்லாத்துன்பியல் கதைகளிலும் காதல் கதைகளிலும் வரும் கேடர்கள் நிலவுவது சாத்தியம் என்று நீங்கள் நம்பினால் பிச்சோரியன் யதார்த்தமானவன் என்பதை எதனால் நம்ப மறுக்கிறீர்கள்? "

 

" ஒழுக்கம் இதனால் மேம்படாது என்கிறீர்களா? மன்னியுங்கள். மக்களுக்கு இனிப்புப் பண்டங்களை ஊட்டியது போதும், அவர்களது இரைப்பை கெட்டுவிட்டது. தேவையானவை கசப்பு மருந்துகள், காட்டமான உண்மைகள். "

 

1840 -ல் எழுதி முடிக்கப்பட்ட நாவலில் லேர்மன் தவ் எழுதிய முன்னுரையிலுள்ள வரிகள்

 

பிச்சோரின்- பேலா  காதல், மக்சீமுடனான நட்பு, அலைநங்கையின் வாழ்வில் தலயீடு, இளவரசி மேரியைத் திட்டமிட்டுக் காதலித்துக் கைவிடுவது, திருமணமான முன்னாள் காதலி வேராவுடம் மீண்டும் உறவு என்று பிச்சோரின் மொத்த முரண்பாடுகளின் உருவமாக இருக்கிறான்.

 

ஜார் முதலாம் நிக்கொலோயின் அரசில் கொடுமையான பிற்போக்குத்தனங்கள் தலைவிரித்தாடிய காலத்தில் இளைஞர்களுக்கு எந்தக் குறிக்கோளுமில்லை. அவர்கள் வாழ்க்கைமீது விரக்தியடைந்தார்கள். அவர்கள் முன்னால் எந்த லட்சியமோ, நம்பிக்கையோ இல்லை. அப்போதிருந்த இளைஞனின் உளவியலைப் பேசுகிற நாவல் நம் காலத்து நாயகன்.

 

நிலவிக்கொண்டிருந்த அமைப்பின் குறைகளை அம்பலப்படுத்தியதின் மூலம் முற்போக்கான சமூகக்கருத்துகள் வளர்ச்சியடைய உதவினார். நம் காலத்து நாயகன் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதன்மைப் பணி இதுவே என்று பின்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

நாவலின் அமைப்பு ஆச்சரியமூட்டுகிறது. நடந்த நிகழ்வுகள் முன்பின்னாகவும் டைரிக்குறிப்பாகவும் இன்று வாசிக்கும்போதும் நவீன வடிவத்துடன் திகழ்கிறது

 

பூஷ்கினுக்குப் பிறகு தோன்றிய மகாகவியென்று லேர்மன் தவ்வைச் சொல்கிறார்கள்.

 

ஆனால் நம் காலத்து நாயகனை வாசித்து முடிக்கும் போது  பிச்சோரின் மீது அளவற்ற கோபம் வரும். பேலா, வேரா, மேரி, நாஸ்த்யா, அலைநங்கை, என்று பெண்களை ஏமாற்றுகிற கயவனாக, நட்பை உதாசீனம் செய்யும் கர்வியாக, யார் மீதும் எதன் மீதும் மதிப்பு கொள்ளாத குரூரனாகவும், பிச்சோரின் தெரிவான்

 

அவன் மீது கோபம் வந்தால் நம்மை நம் காலத்தை நாம் ஒரு முறை பரிசீலனை செய்ய வேண்டும்.

 

லேர்மன் தவ் அவசர அவசரமாக நீங்கள் இறந்து போனதுக்குக் கண்டனங்கள்!

 

அழியாப்புகழ் பெற்ற உங்கள் நம் காலத்து நாயகன் நாவலுக்காக உங்களுக்கு என் அன்பு முத்தங்கள்

 

வெளியீடு - நூல்வனம்

 

தொடர்பு எண் - +91 97515 49992

 

No comments:

Post a Comment