Tuesday 15 December 2015

நம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்

நம் பைத்தியக்கார உலகத்தின் கவிஞன் மனுஷ்யபுத்திரன்

உதயசங்கர்


கவிஞன் காலத்தின் மனசாட்சியாக இருக்கிறான். நம்முடைய காலம் நம்முடைய காலமாக இல்லை. ஒட்டு மொத்த சமூகமும் ஒரு வித பைத்திய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த பைத்திய நிலைக்கு தான் செய்வது என்ன வென்று தெரியாது. உலகம் தப்பிக்க வழியின்றி மைதாசின் பேராசைக் கரங்களால் ஆவிச் சேர்த்து அணைக்கப்பட்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விநாடியும் மனிதர்கள் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இனம், மதம், மொழி, பிரதேசம், கடவுள், சாதி, என்று எல்லாவற்றிகாகவும் யுத்தம் நடக்கிறது. என்ன ஆயிற்று இந்த உலகத்திற்கு? அதன் உன்மத்தநிலை ஒரு பச்சைக்குழந்தையை வெட்டிக் கொல்கிறது. தாய்மார்களை வன்புணர்வு செய்கிறது. மனிதர்களின் நிணத்தைப் புசிக்கிறது. பூக்களில் தேன் நஞ்சாகத் துளிர்க்கிறது. பழங்களின் விஷநாற்றம் குடலைப் புரட்டுகிறது. தானியங்கள் துப்பாக்கிக்குண்டுகளாகவே விளைகிறது. மனிதர்கள் ஒருவரையொருவர் விரோதமாகவே பார்க்கிறார்கள். எப்போதும் ஆயுதங்களைச் சுமந்து திரிகிறார்கள். யார் யாரை முதலில் கொல்வது என்பதே குறிக்கோளாக இருக்கிறது. நம் குழந்தைகளின் இதயத்தில் அன்பை ஊற்றி வளர்க்க மறந்து விட்டோம். அங்கே நஞ்சின் மலர்கள் பூத்து குலுங்குகிறது. தன்னைத் தவிர யாரும் எதுவும் முக்கியமில்லை என்ற எண்ணம், சிந்தனை, நோக்கம், வளர்ந்து தன் கொடுங்கரங்களால் எதிர்காலத்தை நெரிக்கிறது. பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் அகதிகளாய் அடைக்கலம் புகுகிறார்கள். அன்பெனும் நதி நஞ்சாய் மாறி பொங்கி நுரை தள்ளுகிறது.
நாம் வாழ்கின்ற காலம் அறமற்றதாக, நீதியற்றதாக, நேர்மையற்றதாக, அன்பற்றதாக, குரூரமானதாக, மாறி விட்டது. நவீன கவிதையின் புதிய முகமாக, தனக்கென ஒரு புதிய சொல்லாடலைக் கொண்டு இந்த சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற கவிதைகளை, அதன் முகத்தின் காறித்துப்புகிற கவிதைகளை, எழுதியவர் மனுஷ்ய புத்திரன். இறுக்கமான செறிவான, கட்டமைப்புடன் எழுதுவதே அரூபமான, காட்சிப்படுத்த முடியாத, கையில் பிடிபடாத தத்துவச்சிடுக்குகளை எழுதுவதே கவிதை என்றிருந்த நிலையில் ஒரு புதிய காற்று வீசுவதைப் போல  எழுதியவர் மனுஷ்ய புத்திரன். தொடர்ந்த கவிதை வெளிப்பாட்டில் தனக்கான கவிதையியலையும் உருவாக்கிக் கொண்டவர். எளிய சொற்களைக் கொண்டு அவர் கட்டியெழுப்புகிற காட்சிப்படிமங்கள் வாசித்து முடிக்கும்போது ஒரு பேருணர்வைத் தருகிற அநுபவமாக மாறுகிறது.
தற்செயலாய்க் கிடைத்தது
ஒரு நினைவுப்பதியன்
காலை முதல் மாலைவரை
மேலும் பல நாள்களுக்குத்
தோட்டத்தில் வேலை இருக்கிறது
இடம் வேண்டும்
புதர் நிலத்தில்
ஒரு நினைவுப்பதியனுக்கு
பிரமிப்பில் நடுங்கிய கால்களை
இறுகப்பிடித்துக் கொண்டாய்
நெகிழ்ந்து வெடித்த முத்தம்
உதடுகளில் தடவிய உமிழ்நீரில்
மூழ்கிற்று என் பிரபஞ்சம்
பின் நினைவுகளற்ற
விழிப்பு குறித்துப் பேசுகிறோம்
பின்னர் பூத்துவிடும்
ஒரு நினைவுப்பதியனிலிருந்து
பெரும் மலர்க்காடு.
தமிழ்மொழியின் அர்த்தசாத்தியங்களின் எல்லையை கவிஞனே விரித்துக் கொண்டு போகிறான். புதிய சொற்களைப் புடம் போட்டு துடைத்து துடைத்து விளக்கி புத்தம் புதுசாக்கி கவிதைக்குள் புழங்குகிறான். கவிதை புதிதாக அநுபவமாகிறது.
கோடையில் ஒரு நாள்
சூரியன்
ஏதோ ஞாபகத்தில்
மறைவதற்கு மறந்து விட்டது.
அந்த நீண்ட சாலையில்
நாங்கள்
சூரியனின் பிரமாண்ட சக்கரத்தை
கஷ்டப்பட்டு உருட்டியபடி
கடலை நோக்கிச் சென்றோம்.
கவிஞனால் மட்டுமே சூரியனை உருட்டமுடியும். அவனால் மட்டுமே கடவுள்களை கொல்ல முடியும். அவனால் மட்டுமே கடவுள்களின் மீது பரிதாபம் கொள்ளவும் முடியும்.
என் தெய்வங்கள்
எவ்வளவு பழமையானவர்கள்
எனக்கு
எவ்வளவு மூத்தவர்கள்
எவ்வளவு தளர்ச்சியும்
களைப்பும் அவர்கள்
உடலிலும் மனங்களிலும்
குடியேறியிருக்கும்?
கேட்க வந்த எதையும்
எப்போதும்
கேட்க முடியாமல்
கூச்சத்துடன் வெளியேறிப் போகிறேன்.
 மனித அவலம், நிராகரிப்பின்வலி, நிராதரவின் வேதனை, பிரிவின் துயரம், அன்பின் விஷம், என்று தன் கவிதைகள் அனைத்திலும் உணர்வு மயமாக காட்சிகளை உருவாக்குகிற மனுஷ்யபுத்திரன் நவீன கவிஞர்களில் மிக முக்கியமானவராக உருவானதில் ஆச்சரியம் என்ன?   




1 comment:

  1. உதய், எனதிந்தப் பதிவைப் பார்க்க வேண்டுகிறேன் -http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_12.html

    ReplyDelete