சதுரங்கவாழ்க்கை 5
பசியின் தத்துவம்
“ ஆமாம் கதிர்.. பசி தான் அனைத்துக்கும் அடிப்படையானது..”
“ எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது சரவணா… என்னுடைய வீட்டில் எத்தனையோ நாள் பசியுடனேயே வாழ்ந்திருக்கிறோம்.. காலையில் முழித்த திலிருந்து இரவு தூங்கும்வரை பசிக்கிறது என்ற உணர்வு எப்போதும் வயிற்றுக்குள்ளிருந்து முழங்கிக் கொண்டேயிருக்கும்…. தீப்பெட்டி ஆபீசில் அடிப்பட்டி, மேல்பெட்டி ஒட்டுவதற்காக் கொடுக்கப்படும் பசை மாவிலிருக்கும் துத்தநாக த்தை எடுத்து விட்டு அம்மா கஞ்சி காய்ச்சுவாள்…. பிசுபிசுப்பாய் வாயெல்லாம் ஒட்டிக் கொள்ளும் அந்த மாவு தான் உயிரைத் தக்கவைத்திருக்க உதவியது.. சில வீடுகளில் சரியாக துத்தநாகத்தை எடுக்காமல் காய்ச்சிச் சாப்பிட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பார்கள்.. பலர் கைலாசபுரம் சுடுகாட்டுக்குப்
போய்விடுவார்கள்… எனக்கு என்னுடைய பாலிய காலத்தை நினைத்தாலே பசி தான் ஞாபகத்துக்கு வருகிறது சரவணா..”
என்று சொல்லி முடிக்கும்போதே கதிருக்கும் மூச்சு வாங்கியது. வாயில் கசப்பாய் ஊறிய எச்சிலை அருகில் அவன் துப்புவதறகாக வைத்திருந்த ஒரு டப்பாவில் துப்பினான். நான் அவன் அந்த டப்பாவை எடுக்கும்போதே தலையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன்...அவன் அதை உணர்ந்தவன் போல என்னைப்பார்த்து
மன்னிப்பு கேட்பவன் போலச் சிரித்துக் கொண்டே,
“ பேசுனா எழுந்து நடந்தா ரொம்ப மூச்சு வாங்குது.. அதான் இங்கேயே எச்சி துப்ப டப்பா வைச்சுட்டேன்..” என்றான்.
நான்,
“ பரவாயில்ல.. கதிர்.. அப்போ அநேகமாக பசி எல்லாருடைய வீட்டிலும் நிரந்தர விருந்தாளியாக இருந்தது. உனக்கு ஞாபகமிருக்கா.. கு.அழகிரிசாமி எழுதுன திரிபுரம்.. அந்தக் கதையில் பஞ்ச காலத்தில் அங்குமிங்கும் புலம்பெயர்ந்த மக்களைப் பற்றிச் சொல்லும்போது தெற்கிலிருந்து வடக்குத்திசைக்கும்
வடக்கிலிருந்து தெற்குத்திசை நோக்கியும் மக்கள் போய் வந்து கொண்டேயிருந்தார்களென்று ஒருவரி எழுதியிருப்பார்.. அந்தக் கதையே பசிக்கு எதிராக அறம்பாடிய கதை..பசி மனிதரை எந்த அளவுக்குக் கொண்டுபோய்விடுமென்பதை உரக்கச் சொல்கிற கதை.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சங்களும் இயற்கையினால் உருவான பஞ்சங்களும் மனிதர்களை அலைக்கழித்திருக்கின்றன…1870-80
களில் நிகழ்ந்த தாதுவருடப்பஞ்சத்தைக் கேள்விப்பட்டிருக்கிறாயா கதிர்.. தெருக்களிலும் பாதைகளிலும் வீடுகளிலும் பிணங்கள்.. வற்றியுலர்ந்த சதைப்பற்றில்லாத
பிணங்களின் உடல்களை நாய்கள் கிழித்துச் சாப்பிடும் காட்சிகளைக் கற்பனை செய்யவே நமக்கு முடியவில்லை.. ஆனால் அதைப் பார்த்த பசி சிகரத்திலிருந்த மனிதர்களுக்கு தனக்கும் ஒரு வாய் கிடைக்காதா என்று நினைத்திருக்கிறார்கள்..”
அதைச் சொல்லும்போதே எனக்கே குமட்டெலெடுத்தது. கதிர் கண்களை மூடியிருந்தான். மெல்ல அவன் உதடுகள் முணுமுணுத்த து.
“ பசியைச் சோற்றால் ஜெயிக்கணுமென்றால் சோற்றையும் பசியால் ஜெயிக்கணும்..”
“ அது மனிதர்களின் இயற்கைக்கெதிரான தத்துவம்.. ஆனால் உண்மையில் மனிதர்களென்றில்லை… சூரியனின் பசியினால் தான் இந்த பூமி பிறந்தது. பூமியின் பசியினால் தான் தண்ணீர் பிறந்த து..
தண்ணீரின் பசியினால் தான் உயிர்கள் பிறந்தன.. உயிர்களின் பசியினால் தான் இயற்கையும் விலங்குகளும் பறவைகளும் மனிதர்களும் பிறந்தனர். உயிர்கள் இயங்க வேண்டுமென்றாலும்
சரி, உயிர்களின் உடலில் பசி இருக்க வேண்டும்.. அந்தப் பசி உயிரியக்கத்தின் ஆதாரமில்லையா? பசி தான் உயிர். உயிர் தான் பசி..”
கதிரின் முகத்தில் ஆர்வம். நாள் முழுவதும் படுக்கையிலோ சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து யாருக்காகவோ காத்திருப்பதைப்
போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற கொடுஞ்சலிப்பைப்
போக்கிக் கொள்ள விரும்பினான். இதுவரை அவன் வாழ்க்கையில் சந்தித்திராத தனிமை அவனுக்கு எதிரே சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவனைச் சாப்பிட யத்தனித்தது. முதலில் அவனுடைய ஞாபகங்களைக் கொரிக்கத் தொடங்கியது. ஆஸ்பத்தியிலிருந்தவரை நினைவுகளின் நிலவறைக்குள் தன்னுடைய உயிரைக் கதகதப்பாய் வைத்திருந்தான். மிகுந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு வலியையும் எதிர்கொண்டான். ஒவ்வொரு வலியுடனும் போராடினான். நம்பிக்கையுடன் இருந்தான். அவனைப் பார்க்கச் சென்றபோது அவன் காட்டிய உறுதி, மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவிட வேண்டுமென்ற அவனுடைய ஆசை எல்லாவற்றையும் நான் பார்த்தேன். அப்போது அவன் கேட்ட கேள்வி கூட எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது,
“ எல்லாம் ஒருவாரம் தான் சரவணா.. அப்புறம் ஆபீசுக்குப் பொயிரலாம்னு டாக்டர் சொல்லிட்டார்.. நிறைய வேலை பெண்டிங் கெடக்கு.. ஹ்ரித்திக் கிரிக்கெட் பேட் கேட்டான்.. வாங்கிக் கொடுக்கணும்… டேட்டா எண்ட்ரி சுமதிகிட்ட ஐநூறு ரூபாய் கடன் வாங்கியிருந்தேன்.. முதல்ல அதைத் திருப்பிக் கொடுக்கணும்.. அவ நாராயணன்கிட்டே ஐநூறு ரூபாய் போச்சேன்னு பொலம்பினாளாம்.. தெருவுக்குப் பெயர்ப்பலகை வைக்க நகராட்சிக்கு மனு கொடுக்கணும்னு எங்க குடியிருப்போர் சங்கத்தில் முடிவு செய்ஞ்சோம்.. அந்த வேலை வேற கெடக்கு.. எனக்கு எப்படா இங்கேருந்து போவோம்னு இருக்கு.. “
என்று உற்சாகமாகப் பேசினான். எனக்கும் கூட அவனுடைய உற்சாகம் பற்றிப் படர,
“ வா..
வா..
நாலைஞ்சு தடவ.. டீக்கடை நாயர் கேட்டுட்டார்.. எங்க உன்னை கொஞ்சநாளாக் காணோம்னு.. நல்லா மலாய் போட்டு ஒரு டீயும் வடையும் சாப்பிடுவோம்…” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். ஆனால் ஒரு வாரத்தில் வரவில்லை. நான்கு மாதங்கள் கழித்துத் தான் வந்தான்.
நேரம் ஓட்டமெடுத்துக் கொண்டிருந்தது. எனக்கு அவனிடம் எப்படி விடைபெறுவதென்று
தெரியவில்லை. அவனுடைய வீட்டில் அவனுக்காகவே அவனுடைய மனைவி செண்பாவும் அப்பாவும் டி.வி.யைப் போட்டுச் சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கதிரைப் படுக்க வைத்தபிறகே அவர்கள் உறங்கச் செல்லவேண்டும்.
கதிருக்கு இந்த உரையாடல் பிடித்திருந்ததென்று தெரிந்து கொண்டேன். அவனுடைய முகத்தில் சோர்வின் ரேகைகூடத் தெரியவில்லை.
“ வயிற்றுப்பசியை மட்டும் தானே நீ சொல்கிறாய்.. மற்ற பசிகள்? “
இதைச் சொல்லும்போது அவனுடைய உதடுகள் கோணலாய் ஒரு சிரிப்பை வெளிப்படுத்தியது. அதில் பழைய ரசம்போன கண்ணாடியின் வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் மீந்திருக்கும் காமத்தின் சோற்றுப்பருக்கை
ஒட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த எனக்கு அனுதாபம் தோன்றியது. ஆனால் அந்த அனுதாபத்தின் தடம் தெரியக்கூடாதென்பதற்காக அசட்டுத்தனமாக நானும் சிரித்தேன். கொஞ்சம் சத்தம்போட்டுச் சிரித்துவிட்டேன் போல. ஹாலிலிருந்து செண்பா வந்து எட்டிப்பார்த்தாள். அவளுக்கும் ஏதோ வித்தியாசமாகத் தோன்றியிருக்கவேண்டும். இத்தனை நாளில் இவ்வளவு நேரம் உட்கார்ந்து இப்படி யாருடனும் பேசியதாக நினைவிலில்லை.
“ அண்ணா இன்னொரு டீ வேணா போட்டுக் கொண்டு வரவா? “
என்றாள். நான் உடனே அவசர அவசரமாக,
“ இல்லை.. வேண்டாம்மா.. கெளம்பவேண்டியதான்..” என்று சொன்னதைக் கேட்ட கதிரின் முகத்தில் சட்டென ஒரு இருள் படர்வதைக் கண்டேன். உடனே,
“ சரிம்மா.. ஒரு அரைகிளாஸ் போடேன்..” என்று சொன்னேன். அவள் உள்ளே போவதைக் கவனித்துக் கொண்டே,
“ கதிர்.. நீ தான் அதுல கில்லாடியாச்சே.. “ என்று குரலை அடக்கிச் சொன்னேன். பார்க்கவேண்டுமே. அவனுடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்த மாதிரி ஒரு வெளிச்சத்துடன். ஒரு வெட்கம் மின்னியது. நான் தொடர்ந்தேன்,
“ நிறையப் பசிகள் இருக்கு கதிர்.. அதுல அடிப்படையான உயிரியல் பசிகள் இரண்டு தான் ஒன்று வயிற்றுப்பசி.. இன்னொன்று உடல்பசி.. இரண்டின் நோக்கமும் வேறுவேறு.. வயிற்றுப்பசி தன்னுயிரை நீட்டிக்க.. உடல்பசி தன்னுடைய பரம்பரையை நீட்டிக்க.. இவை அனைத்து விலங்குகளுக்கும் பொதுவானது. ஆனால் நாகரீகமனிதன் செயற்கையாக இன்னும் பல பசிக்ளை உருவாக்கினான்.. பணப்பசி, புகழ்ப்பசி, அதிகாரப்பசி, சுரண்டல்பசி, ஏமாற்றுப்பசி, பொருட்பசி, விடுதலைப்பசி, அறிவுப்பசி, இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.. இந்தப் பசிகள் நாகரிக சமூகம் உருவாக்கிய பசிகள். மனிதகுல வரலாற்றில் அடிப்படையான பசிகளால் இறந்தவர்களைக் காட்டிலும் பொய்யான, கற்பிதமான பசிகளால் இறந்தவர்களும் கொல்லப்பட்டவர்களும்
தான் அதிகம். உண்மையில் யோசித்துப்பாரேன்..இந்த பூமி யாருக்குச் சொந்தம்? பூமிக்குத் தானே சொந்தம்.. நானூற்று எண்பத்து நான்கு கோடி ஆண்டுகளாக இந்த பூமி இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறது.. ஆனால் அந்த பூமியை கேவலம் நூறு ஆண்டுகள் வாழ்கிற மனிதன் சொந்தம் கொண்டாட நினைக்கிறானே.. விநோதமாக இல்லை.. படைத்தவனையே படைப்பு அடிமை கொள்ளும் விசித்திரம்..”
“ ஆனால் இந்தப் பசிகள் தானே உலகை முன்னேற்றியிருக்கிறது.. இந்தப் பசிகள் தானே உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உருவாக்கியிருக்கிறதில்லையா சரவணா..”
கதிர் பெருமிதத்துடன் சொல்லி முடித்தான். எனக்கு ஏனோ பழைய கதிரிடமிருந்து அறிவின் மின்மினிகளுக்கு உயிர் வந்து விட்டதாக நினைத்தேன்.
“ சரியாச்சொன்னே கதிர்..ஒவ்வொரு பசிக்கும் ஒரு இலக்கு இருக்கு.. பசி நம்மை இலக்கை நோக்கி ஓட வைக்கிறது.. ஓட்டம் நமக்கு வாழ்க்கையின் அர்த்த த்தை உணர்த்துது.. எந்த ஒரு பசியும் நிறைவடைவதில்லை.. மீண்டும் மீண்டும் இலக்குகளின் எல்லைகளை மாற்றிக் கொண்டேயிருக்கிறது.. அல்லது புதிய பசியை உருவாக்குகிறது… உனக்கு ஞாபகமிருக்கிறதா
கதிர்.. டால்ஸ்டாய் ஒருவன் எத்தனை செல்வம்? எத்தனை வெற்றியடைந்திருந்தாலும் என்ன? கடைசியில் அவனுக்குத் தேவைப்படுவது ஆறடி நிலம் தானே என்று ஒரு கதை எழுதியிருப்பார்.. அந்த நேரத்திலேயே அதற்கு ஒரு பதில் கதையாக செகாவ் எழுதியிருப்பார். இறந்த மனிதனுக்குத் தான் ஆறடி நிலம் தேவை.. உயிருள்ள மனிதனுக்கு இந்த உலகமே தேவை.. ஜாக் லண்டனின் உயிராசை படித்திருக்கிறாயா கதிர்.. குமரேசனிடம் இருக்கு.. நான் வாங்கித் தருகிறேன்… பசி என்ற உணர்வின் தத்துவம் உயிருடன் கலந்தது…”
“ நான் முன்னாடி நட் ஹாம்சனின் பசி படித்திருக்கிறேன்.. இப்போது ஞாபகத்திலில்லை..”
“ அதுவும் ஒரு மனிதனின் பசியைப் பற்றி இவ்வளவு நுட்பமாக எழுதமுடியுமா என்று வியக்கவைக்கும் நாவல்.. தான்.. ஆனால் உயிராசை வேற லெவல். இந்த பூமியும் உலகமும் பிரபஞ்சமும் கோள்களும் பசியினால் தான் இயங்குகின்றன என்பதை நுண்வடிவம் தான் அது.”
“ இப்போது யோசித்துப் பார்த்தால், பசியைச் சோற்றால் ஜெயிப்பதும் சோற்றை பசியால் ஜெயிப்பதும் தேவை தான் என்று தோன்றுகிறது சரவணா.. மறக்காமல் குமரேசனிடம் அந்தப் புத்தகத்தை வாங்கிட்டு வா..”
என்று சொல்லி நிறுத்தினான். குரல் தளர்ந்திருந்தது. உடலின் சோர்வு குரலில் தெரிந்தது. மணி பனிரெண்டாகி விட்டது. இதற்குள் வீட்டிலிருந்து நான்கு போன் கால்கள் வந்து விட்டன. இதற்கு மேல் எனக்கும் தாங்காது.
“ சரி கதிர்.. நான் கிளம்பட்டா.. “
என்று மெல்லக் கேட்டேன். கதிரின் முகம் லேசாய் வாடியது.
“ அதுக்குள்ள கெளம்பிறீயா?.. வந்து கொஞ்சநேரம் தானே ஆகுது..”
“ டேய்.. கொஞ்ச நேரமா? வந்து இரண்டுமணிநேரமாகி விட்டது. நாளைக்கி வாரேன்.. ஆபீஸ்ல இன்ஸ்பெக்ஷன்..
சீக்கிரமே போகணும்..”
என்று சமாதானமாகச் சொன்னேன். அவனும் வேறுவழியில்லாமல்
தலையாட்டினான். நான் நாற்காலியிலிருந்து எழுவதற்குள் கதிரின் அப்பாவும் இணையர் செண்பாவும் வாசலுக்கு வந்து விட்டார்கள். எதிர்பார்த்துக்
கொண்டேயிருந்திருப்பார்கள் போல.
என்
பின்னாலேயே வந்த அவனுடைய அப்பா வீட்டு வாசலுக்கு வெளியே வந்து,
“ இன்னிக்கித்தான் தம்பி இவ்வளவு பேசிருக்கான்.. யாருகிட்டயும் பேசறதில்ல.. அப்படியே வெறிச்சிப் பாத்தமானைக்கே உட்காந்திருப்பான்.. நீங்க கொஞ்சம் சிரமம் பாக்காம அடிக்கடி வந்துட்டுப் போனீங்கன்னா நல்லாருக்கும்… இன்னும் கொஞ்ச நாளைக்கி… டாக்டருங்க.. ஆறுமாசம் டைம் தான் கொடுத்திருக்காங்க.. நான் இருக்கேன் கல்லுகணக்கா… பாருங்க அவன் விதிய……”
என்று
குரல் தழுதழுக்கச் சொன்னார். அவர் குரல் திடகாத்திரமான என்னையே கொஞ்சம் அசைத்தது. நான் என்னுடைய தைரியத்தைத் திரட்டி,
” ஏன் அப்படி நினைக்கிறீங்க… டாக்டர்கள் என்ன தெய்வமா? சில சமயம் மிரக்கிள் நடக்கிறதில்லையா… அவனுக்கு முழுவதும் குணமாகலாம்… முதல்ல நம்பிக்கை வைங்க.. நீங்க இப்படி இருந்தா..அவனுக்கும் மனசு விட்டுப் போயிரும்… பாப்போம்.. கொல்லம் டாக்டரைப் பாக்கலாம்.. அதில சரியானா நல்லது தானே..”
“ அவனுக்குக் குணமானா கோடிப்புண்ணியம் தம்பி உங்களுக்கு..”
என்று
என் கையைப் பிடித்துக் கொண்டார். நான் அந்த வயதான கைகளின் துடிப்பை உணர்ந்தேன். இன்னும் சில கணங்கள் அவர் பிடித்துக் கொண்டிருந்தால் நான் கஷ்டப்பட்டு சேர்த்த தைரியமனைத்தும் என் கைவிட்டுப் போய் விடும் என்பதால் மெல்ல என் கையை விடுவித்துக் கொண்டேன். அத்துடன் பேச்சை மாற்ற விரும்பி,
“ பென்சனெல்லாம் ஒழுங்கா வருதா..?”
என்று
கேட்டேன். அவரும் அதையே விரும்பியவர் போல,
“ வருது தம்பி ஏழாயிரத்து நானூத்தி அம்பது ரூபாய் கிரெடிட் ஆகுது… இந்த ஜனவரி டி.ஏ. வைத்தான் இன்னும் போடல…”
“ அநேகமா இந்த மாசம் போட்டுருவாங்க..அப்பா.. சரி நான் வர்றேன்..”
என்று
சொல்லியபடியே என் வண்டியை ஸ்டார்ட் செய்தேன். தெருக்களில் ஆள்நடமாட்டம் இல்லை. நாய்களின் குரைப்பொலி மட்டும் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. கைக்கடிகாரம் மணி பனிரெண்டரையைக் காட்டியது. மெல்லிய குளிர் காற்று உடலை வருடியது. வானத்தில் நட்சத்திரங்கள் குமிந்திருந்தன. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கண்கள் வானத்திலிருந்து பூமியைப் பார்ப்பது போல இருந்தது. உடலெங்கும் மயிர்க்கூச்செறிந்தது. இப்போது ஒரு டீயும் ஒரு சிகரெட்டும் அடித்தால் எப்படியிருக்கும்? கண்முன்னால் என் மனைவி நந்தினியின் முகம் தோன்றி மறைந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன்.
அந்தப் பெருமூச்சைப் பிடித்துக் கொண்டு வயிறு கூப்பாடு போட்டது.
” எனக்குப் பசிக்கிறது “
வண்டியை வேகமாக முடுக்கினேன்.
( தொடரும். )
.
No comments:
Post a Comment