Sunday, 12 July 2026

பசியின் நிழல்

 

சதுரங்க வாழ்க்கை 3

பசியின் நிழல்

உதயசங்கர்




அன்று இரவு நான் தூங்கவில்லை. கதிர் என்னுடைய பாலியகால நண்பன் என்றாலும் நெருங்கிய நண்பனாக இருந்ததில்லை. ஏதோ ஒரு விலகல் எங்களிடையே இருந்தது. என்ன காரணம் என்று எங்களிருவருக்குமே தெரியாது ஆனாலும் கல்லூரியில் படிக்கும்போது சிலகாலம் நெருங்கியிருந்தோம். அதற்கான சில பல காரணங்களில் ஒன்று என்னுடைய பாலியகால நெருங்கிய நண்பனான உமாசங்கர் அவனுக்கும் நெருங்கிய நண்பனாக இருந்தான், நானும் அவனும் ஒருவருகொருவர் தெரியாமலே ஒரே பெண்ணைக் காதலிக்க முயற்சித்து அது பெரிய வேடிக்கையில் முடிந்தது. இருவருமே அந்தப் பெண்ணைக் கைவிட்டோம். அந்தக் கதையைப் பின்னால் சொல்கிறேன்.

கல்லூரியிலும் ஊரிலும் உள்ள கிரிக்கெட் டீமில் விளையாண்டது, நாடகங்களில் ஒன்றாக நடித்தது, என்ற நிறைய காரணங்களும் இருந்தன. அவன் உமாசங்கருடன் ஒட்டிக்கொண்டே எல்லா இடங்களுக்கும் வருவான். நான், உமாசங்கர், சந்திரமௌலி, எட்டாவது வகுப்பிலிருந்து ஒன்றாகவே ஒரே வகுப்பில் படித்தோம். பள்ளிக்கூடத்தில் நடக்கும் எல்லாப்போட்டிகளிலும் நான் கலந்து கொள்வது வழக்கம். எந்தப் போட்டியிலும் பரிசு வாங்காததும் வழக்கம். ஆனாலும் நான் விடுவதாயில்லை. ஓவியப்போட்டியென்றால் இரண்டு மலைகளையும் நடுவில் ஒரு சூரியனையும் வரைவேன். பாட்டுப்போட்டியென்றால் நாடோடி மன்னன் படத்தில் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதி டி.எம்.சௌந்திரராஜன் பாடி எம்.ஜி.ஆர். வாயசைத்த பாட்டான தூங்காதே தம்பி தூங்காதே தம்பி என்ற பாடலை மட்டுமே பத்து தடவைகளுக்கு மேல் பாடியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஓர் படைதனில் தூங்கியவன் தன்னை இழந்தான் ஆஆஆஆ என்று டி.எம்.எஸ். மாதிரியே இழுக்க முயற்சி செய்து தொண்டை கிழிந்து  கீச்சிட்டு நின்று விடும். அவ்வளவு தான் அதற்கு மேல் பாட முடியாது. இப்படியே நடந்து கொண்டிருந்ததால் நான் பாட்டுப்போட்டியில் பாடுவதற்கு போய் நின்றவுடனேயே நடுவராக உட்கார்ந்திருக்கிற வாத்தியார்என்ன சம்முகம் தூங்காதே தம்பி தூங்காதே தானா..? “ என்று கேலியாகக் கேட்பார். அவர் கேலி செய்கிறார் என்பது கூடத் தெரியாமல் நான் பெருமையாகச் சிரிப்பேன்.

இப்படி எல்லாப்போட்டிகளிலும் கலந்துகொண்டு ஒரு பரிசும் வாங்காவிட்டாலும் உள்ளுக்குள் நானும் ஒரு ஆள் என்ற கர்வம் இருந்தது. உமாசங்கர் அநேகமாக எல்லாப்போட்டிகளிலும் ஏதாவது ஒரு பரிசு வாங்கி விடுவான். அப்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். ஆனால் கதிர் ஏதோ அவனே பரிசு வாங்கிய மாதிரி ஓங்கி ஓங்கி கை தட்டுவான். சந்திரமௌலி பிரமிப்புடன் உமாசங்கரைச் சுற்றிச் சுற்றி வருவான். நான் அந்த மாதிரி நாட்களில் ஒன்றிரண்டு நாட்களுக்கு உமாசங்கரையோ, சந்திரமௌலியையோ பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன்.

போட்டிகளில் பரிசுகள் பெறுவது பள்ளியில் ஒரு பெரிய அங்கீகாரமாக இருந்தது. எல்லோரும் அவனுடன் நட்பு கொள்வதற்காக ஏங்கினார்கள். அப்படி வேறு செக்ஷனிலிருந்து அம்மையப்பனும் முருகனும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.  வாத்தியார்களும் உமாசங்கரிடம் கொஞ்சம் மென்மையாக நடந்து கொண்டார்கள். அவனும் நன்றாகப் படிக்கிற பையன் என்பதால் அவன் முதல் மூன்று ரேங்குகளுக்குள் இருந்தான். அவனுடைய அப்பா அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். அண்ணன் ஒருவர் தபால் தந்தி அலுவலகத்தில் இருந்தார். அதனால் அவனுக்கு வீட்டில் படிப்பதற்குத் தேவையான உதவி கிடைத்தது. அவனுடைய அப்பா ரெம்பக்கண்டிப்பானவர். அவனைத்தேடி வீட்டுக்குப் போனால் அவ்வளவு தான். தேடி வந்த பையனின் குலம், கோத்திரம், குடும்ப விபரங்கள், படிப்பு, ரேங்க், அப்புறம் பாடத்தில் ரெண்டு கேள்விகள் என்று ஒரு அரைமணி நேரம் விசாரிப்பார். எல்லாம் முடிந்தபிறகு , “ அவன் வரமாட்டான்போய் ஒழுங்கா படி..” என்று சொல்லி விரட்டியும் விடுவார். அதனால் உமாசங்கரின் வீட்டுக்குக் காசு கொடுத்தாலும் யாரும் போக மாட்டார்கள்.

மற்ற நண்பர்கள் வீட்டில் பெரியவர்கள் யாரும் படித்தவர்கள் கிடையாது. அதோடு எல்லோரும் மூத்த பிள்ளைகள் என்பதால் பள்ளியில் படிக்கிற முதல் தலைமுறையாக இருந்தோம். அதிலும் குறிப்பாக என்னுடைய வீட்டில் அப்பா ரைஸ் மில்லில் வேலை பார்த்தார். அம்மா வீட்டில் தீப்பெட்டி கட்டையோ தீப்பெட்டியின் மேல் பெட்டியோ, அடிப்பெட்டியோ ஒட்டிக் கொண்டிருந்தாள். நானும் அந்த வேலைகளில் பங்கெடுக்கும் படியான நிர்ப்பந்தம் இருந்தது. அதோடு எனக்குப் பின்னால் பிறந்த தம்பிகளையும், தங்கைகளையும் நானே மேய்க்க வேண்டியிருந்தது. எப்போதும் வீடு வசவு, அடி, உதை, தண்டனைகளின் வதைக்கூடமாக இருந்தது. கூடாததுக்கு எல்லா நாட்களிலும் பசி வீட்டின் மூலைகளில் குறுக்கியோ, நீட்டியோ, சம்மணம் போட்டோ, நன்றாக நிமிர்ந்து படுத்தோ கிடந்தது. அதன் ராட்சதக்கால்களுக்கடியில் விழுந்து கிடந்தோம். அதிலிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பசியின் நிழல் கூட படாத இடத்துக்கு போய் விட வேண்டும். அப்படிப் போவதற்கு படிப்பு ஒன்று தான் வழி என்று புரிந்து கொண்டேன். கதிரும் என்னைப்போலவே படிப்பதில் வெறி கொண்டவன். நாங்கள் நால்வரும் போட்டி போட்டு படித்தோம். எனக்கு எதிரே ஒரு பொன்னான எதிர்காலம் இருக்கிறதென கனவு கண்டேன். வண்ண வண்ணக் கனவுகளுக்காகக் காத்திருந்த என்னுடைய கனவு கருப்பு வெள்ளையாய் முடிந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. நேரம் காலம் நாள் கிழமை என்று பார்க்காமல் வேலை வாங்கும் அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகமும் ஒன்று.அதில் தான் நான் குப்பை கொட்டிக் கொண்டிருந்தேன். குப்பையென்றால் உண்மையிலேயே குப்பை தான் கொட்டிக் கொண்டிருந்தேன். அரசாங்கத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிற மகத்தான பணியை அர்சியல்வாதிகளும், ஒப்பந்தத்தாரர்களும், பஞ்சாயத்து, மாவட்டம், என்று பதவியிலிருப்பவ்ர்களும் சேர்ந்து குட்டையைக் குழப்பி அவரவர்களுக்குத் தேவையான மீன்களைப் பிடிக்கிற துறையாக மாறி விட்டது. அரிச்சந்திரனுக்கு இந்தத் துறையில் போஸ்டிங் போட்டால் தினசரி ஒரு நூறுபொய்களையாவது சொல்ல வேண்டியதிருக்கும். பொய் சொல்ல மாட்டேனென்றால் ஒன்றும் பூகம்பம் நிகழாது. உங்கள் பெயரில் தேவையான ரிப்போர்ட் நீங்கள் சொல்ல மறுத்த பொய்களுடன் மேலிடத்துக்கு உங்களுக்குப் போய்க் கொண்டிருக்கும். சில சமயங்களில் அதற்கு ஷொட்டும் கிடைக்கும். குட்டும் கிடைக்கும். அப்போது தான் உங்களுக்கே தெரியும். அதனால் எல்லோரும் பொய்யான எல்லா அறிக்கைகள், சென்சஸ், அளிக்கப் பழகிக் கொள்வார்கள். அரசாங்கமும் இதையே விரும்புகிறது. ரெம்ப குற்றவுணர்ச்சி கொண்டால் வேலையை விட வேண்டியது தான். அப்புறம் பூவாக்கு..என்ன செய்ய?

வழக்கமான இந்தியவழக்கப்படி என்னுடைய படிப்புக்குச் சற்றும் சம்பந்தமில்லாத வேலையில் சேர வேண்டியதாயிற்று. அதற்கே ஐந்து வருடகாலம் போராட்டம். எத்தனை பரீட்சை! எத்தனை நேர்காணல்கள்! எத்தனை அறிவுரைகள்! எத்தனை யோசனைகள்! படித்து முடிக்கும்போது வாழ்க்கை சிவப்புக்கம்பளம் விரித்து இரண்டு பக்கமும் பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டம் வரவேற்க, வேலைவாய்ப்புகளை வைத்துக் கொண்டு அரசாங்கமும் மற்ற நிறுவனங்களும் காத்துக் கொண்டிருக்கிற மாதிரியான கனவுகளோடு வெளிவந்தேன். ஆனால் யதார்த்தம் ஒரு விசித்திரமான பயங்கரமான உலகத்துக்குள் என்னை மட்டுமில்லை என்னைப்போன்ற ஏராளமான நண்பர்களை தூக்கி எறிந்து விட்டது. அந்த உலகத்தின் இருளைத் தின்று கொண்டே ஒவ்வொரு நாளையும் கடத்தினேன். இருளின் விஷம் ஒவ்வொரு துளியாய் எனக்குள் இறங்க அதுவரை களங்கமற்று வெள்ளந்தியாக இருந்த என் அகம் மாறியது. நானே எனக்கு வேறு ஒரு ஆளாகத் தெரிந்தேன். கோபம் என்றால் என்னவென்று தெரியாத நான் முன்கோபத்தின் சொடுக்கினால் எல்லோரையும் மிரட்டினேன். என் மொழியில், வார்த்தைகளில் ஆயிரமாயிரம் தேள்களின் கொடுக்குகளை வளர்த்து வைத்தேன். அந்தக் கொடுக்குகளால் எல்லோரையும் கொட்டினேன். வலியினால் அவர்கள் துடிப்பதைப் பார்த்து வக்கிரமான திருப்தி எனக்குள் நிறைந்தது. இரவே எனக்கு உகந்த பொழுதாகியது. பகலின் ஒளியைக் கண்டு அஞ்சினேன். பகலில் வீட்டை விட்டு வெளியேறப் பயந்தேன். உலகமே எனக்கு விரோதியாக இருந்தது. வீட்டு வாசலைத் தாண்டிய முதல் அடியிலேயே எதிர் வீட்டிலிருந்த கோபாலசாமி கேட்டார்,

என்னப்பா இன்னம் வேலைக்குப் போகலியா..? “

உங்க வீட்டுக்கு வேணா வேலைக்கி வரவா…”

அவர் முகம் சுளிப்பார். பிறகென்ன? நேற்று இரவு தான் இதே கேள்வியைக் கேட்டார். என்னைப்பார்க்கும் போதெல்லாம் கேட்பதற்கென்றே அந்தக் கேள்வியை வைத்திருந்தார். கோபாலசாமி. அவருடைய பையன் படித்து முடித்து ஆறுமாதத்திலேயே வங்கியில் வேலைக்குப் போய் விட்டான். அந்தப் பெருமை. அதோடு என்னுடைய அப்பாவிடம்,

இதுக்குத்தான் மேத்ஸ் எடுத்துப் படிக்கணும்….சயின்ஸ்எல்லாம் வேஸ்ட்…”

என்று வேறு சொல்லி அவரைக் கடுப்பாக்கி அந்தக் கடுப்பை அவர் ஒரு வாரம் சுமந்து எல்லோர் மூஞ்சியிலும் வீசியடித்துக் கொண்டே அலைந்தார்.

எல்லாப்பரீட்சைகளையும் நன்றாக எழுதிய மாதிரி தான் இருந்தது. ஆனால் ரிசல்ட் மட்டும் வரவில்லை. ஏதோ ஒரு சூட்சுமம் எனக்குப் பிடிபடவில்லை. பயிற்சிப்புத்தகங்களில் இல்லாத ஏதோ ஒரு டெக்னிக் இருக்கிறது. பாஸ் பண்ணிப் போகிற பயல்கள் அந்த ரகசியத்தைச் சொல்ல மாட்டேனென்கிறார்கள். எல்லாம் துட்டு தானோ. இல்லை எல்லாம் சிபாரிசு தானோ. எந்த மூலையிலிருந்து ஆரம்பித்தாலும் சிடுக்காகத் தான் இருந்தது. எதிலும் அந்தப் புதிர்வழியிலிருந்து வெளியே வரும் சூத்திரம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பரீட்சைகளில் விரக்தியடைந்து வீட்டில் பரீட்சைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு ஊர் சுற்றித் திரிய ஆரம்பித்தேன். வெளியுலகமே தெரியாமலே அம்மா பிள்ளையாக வளர்ந்த நான் இப்போது வீட்டில் இருப்பதையே வெறுத்தேன். அப்போது பீடி பிடிக்கவும், சிகரெட் புகைக்கவும் கற்றுக் கொண்டேன். பாரதிராஜாவின் நிழல்கள் எனக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. அதில் ராஜசேகரைப் போல நான் இருப்பதாக கற்பித்துக் கொண்டேன். அதே சமயத்தில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு படம் எனக்குப் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் எனக்குப் பிடித்த நடிகரான கமலஹாசனும், ஸ்ரீதேவியும் நடித்திருந்தார்கள். ஆனாலும் பிடிக்கவில்லை. நிழல்களில் இருந்த உக்கிரம் எனக்குப் பிடித்திருந்தது. கிட்டத்தட்ட அந்த உக்கிரம் என்னுள் வளர்ந்து கொண்டிருந்தது.

அரசு வேலைக்கு இறுதிஎல்லைத்தகுதி வயதான இருப்பத்தியெட்டில் தான் நான் கொஞ்சமும் நன்றாக எழுதவில்லை என்று நினைத்த அரசுப்பணி தேர்வாணையத்தின் குரூப் நான்கில் தேர்வு பெற்றிருந்தேன். தாடி வளர்த்து மெலிந்து கருத்து ஏதோ வாழ்கிறோம் என்ற கணக்கில் அப்பா சொன்ன தீப்பெட்டியாபீசில் கணக்கப்பிள்ளையாக வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதலில் நம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனாலும் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அந்த அனுகணத்திலிருந்து என்னுடைய வாழ்க்கை சற்றும் நான் எதிர்பாராத வகையில் மாறி விட்டது. எதிர்வீட்டு கோபாலசாமி மாமா கூட அவனுக்குக் கை கொடுத்து வாழ்த்தினார். தான் பேசியதை மனசில் வைத்துக் கொள்ளக் கூடாது என்றார். எனக்கு அப்படியே இறுகிக் கிடந்த பெரிய மலை ஒன்று உருகி அப்படியே தண்ணீராக ஓடுவதைப் போன்ற கிளர்ச்சி உள்ளுக்குள் தோன்றியது. அந்தப் புளகாங்கிதத்தை என்னால் தாங்க முடியாமல் சிரித்தேன். அப்போது தான் முதன்முதலில் சிரிப்பதைப் போல.சிரித்தேன். சிரிக்கும்போது கிடைத்த ஆனந்தத்திற்காகச் சிரித்தேன். சிரித்துக் கொண்டே கண்ணாடியில் பார்க்கும்போது தெரிந்த வேறொரு சரவணனுக்காக சிரித்தேன். சிரித்த முகத்தில் சுருக்கங்கள் இல்லை. கவலையின் ரேகைகள் இல்லை. விரக்தியின் சுவடுகள் இல்லை. எதிர்காலம்! எதிர்காலம் என்ன எதிர்காலம், நிகழ்காலம், கடந்த காலம் ,எந்தக்காலத்தைப் பற்றியும் கவலை இல்லையென்பதால் சிரித்தேன். சிரித்ததை மறந்து விடக்கூடாது என்பதற்காகச் சிரித்தேன். இதுவரை நடந்த துரதிருஷ்டங்களை மறப்பதற்காகச் சிரித்தேன். இனி வரப்போகும் அதிர்ஷ்டங்களுக்காகச் சிரித்தேன். எதிர்பாராமல் கிடைத்த பொக்கிஷமான சிரிப்பு கைவிட்டுப் போய்விடக் கூடாதென்பதற்காகச் சிரித்தேன். ஒருவேளை நாளை அந்தச் சிரிப்பு மங்கி விடுமோ என்ற பயத்தில் மீண்டும் சிரித்தேன். யாரைப்பார்த்தாலும் சிரித்தேன். எதற்கெடுத்தாலும் சிரித்தேன். எதைப் பார்த்தாலும் சிரித்தேன். என் கண்முன்னே இந்த உலகம் புத்தம் புதிதாக எனக்கெனவே பிறந்த மாதிரி சிரித்தேன்.

 அந்த மனநிலையில் எந்த வேலையாக இருந்தாலும் சரி, பியூன், அட்டெண்டர், எந்த வேலையாக இருந்தாலும் சேர்ந்திருப்பேன். ஆனால் கருணைமிக்க அரசாங்கம் எனக்கு கிளார்க் உத்தியோகத்தை அளித்தது. அன்றிலிருந்து இந்தத் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.என்னுடைய வேலையில்லாக்காலத்தில் கதிரும் சேக்காளியாக இருந்தான். முருகன், நான், கதிர், அம்மையப்பன், நான்கு பேரும் ஒன்றாகவே பரிட்சை எழுதினோம். எழுதினோம். எழுதிக்கொண்டேயிருந்தோம்.. எங்களுக்கு முன்னால் சந்திரமௌலியும், உமாசங்கரும் மேலே படிக்கப் போய் விட்டார்கள். படித்து முடித்து  சீக்கிரமே வங்கியில் வேலை கிடைத்து போய் விட்டார்கள். முருகன் அம்பை மில்லில் வேலைக்குச் சேர்ந்தான். இன்னமும் நிரந்தர ஊழியனாகவில்லை. அம்மையப்பன் பெட்டிக்கடை ஆரம்பித்தான். அவன் பெட்டிக்கடை வருமானம் முழுவதும் புரோட்டா சால்னாவாக மாறிவிட்டது. நாங்களும் அந்த மாற்றத்தில் பங்குதாரர்கள் தான்.

 கொஞ்சநேரத்துக்கு முன்னால் தான் நான் அலுவலகத்தில் அவசர அவசரமாக கலெக்டர் கேட்ட வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கும்போது கதிரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் எந்த அவசரத்திலிருந்தாலும் கதிர் கூப்பிட்டால் உடனே பேசிவிடுவேன். அவன் சிறுநீரக சிறப்பு மருத்துவமனையிலிருந்து வந்த பிறகு இப்போது இரண்டாவது முறையாகக் கூப்பிடுகிறான்.

 இன்று அவனைப் பார்க்க வரமுடியுமா என்று கேட்டான்.

சரி. கொஞ்சம் தாமதமாகும் பரவாயில்லையா என்று கேட்டேன்.

எப்போது வேண்டுமானாலும் வா. ஆனால் கண்டிப்பாக இன்று வர வேண்டும்

என்றான். அவன் குரல் மிகவும் பதட்டத்திலிருந்த மாதிரி இருந்தது.

 

( தொடரும் )

No comments:

Post a Comment