Sunday, 5 July 2026

சதுரங்க வாழ்க்கை -2 வாழ்வின் வெளிச்சம்

 

  சதுரங்க வாழ்க்கை -2 வாழ்வின் வெளிச்சம்

உதயசங்கர்

 



 இந்த விளையாட்டின் விதிமுறைகள் விசித்திரமானவை. யாராலும் முன் கணிக்க முடியாத நகர்த்தல்களினால் பல பேரின் வாழ்க்கை தன் இறுதி நகர்வுக்கு வந்து சேர்கிறது. இப்போது தான் முதல் நகர்வைத் தொடங்கியது போலிருக்கும் சிலருக்கு ஐந்து நகர்வுக்குள் முடிந்துவிடும். சிலருக்கு பத்திருபது நகர்வுகளில், சிலருக்கு கூடுதலாக நகர்வுகள் தேவைப்படும். சிலர் அப்படியே ஒரே இடத்திலேயே நின்றுவிடும். அப்படியே கூட அந்தக் கதை முடிந்து விடும். சிலருடைய கதைகள் அகாலமாய் முடியும். சிலர் தாமாகவே கதையை முடித்துக் கொள்வார்கள். சிலர் கூட்டங்கூட்டமாய் பலியாவார்கள். இனப்படுகொலையாகவோ, மதப்படுகொலையாகவோ, சாதிப்படுகொலையாகவோ மரணபீடத்தின் முன்னால் பலியாவார்கள். சிலர் அவசர அவசரமாகப் பிறந்து அவசர அவசரமாக வளர்ந்து அவசர அவசரமாக வாழ்ந்து வாழ்வின் அர்த்தத்தைத் உணருமுன் மறைந்து போவார்கள். ஒரு புத்தகத்தின் முதல்பக்கம் திருப்பும் அவகாசத்துக்குள் இறந்து போய் விடுபவர்களும் இருக்கிறார்கள். சிலர் சாலை விபத்துகளால் சிலர் மருத்துவமனைகளால் சிலர் பசியினால் சிலர் வஞ்சகத்தால், சிலர் கொள்கையால், சிலர் அதிகாரத்தால் சிலர் எந்த விதிமுறைகளுக்கும் அடங்காத பைத்தியக்காரத்தனத்தினால், சிலர் அந்தக்கணத்தின் பின்னத்தில் உணர்ச்சிவயப்பட்டு  தங்கள் கதைகளை முடித்துக் கொள்வார்கள்.

ஒரு புதிர் வழி தன் பாதைகளை எப்படி மர்மமாய் ஒளித்து வைத்திருக்கிறதோ அப்படித்தான் மரணமும் தன் வழிகளை மறைத்து வைத்திருக்கிறது. வாழ்க்கை எந்த ஒரு மறைப்புமின்றி பரந்த வெளியாக பாதைகளின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் வெளிப்படையாக முன்வைக்கிறது. ஆனால் மரணம் எந்தக் கணத்தில் எந்த மூலையிலிருந்து வரும் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளும் என்றே யாருக்கும் புரிவதில்லை. அதனால் தான் மரணத்தைக் கண்டு மனிதர்கள் அஞ்சுகிறார்கள். ஏன் புதிரை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளும் தைரியம் இல்லை? அல்லது ஏன் மரணத்தை பாழ் என்றும் இருள் என்றும் கொடூரமானதென்றும் கற்பனை செய்ய வேண்டும்?. வாழ்க்கையைப் போல வேறொரு பரந்தவெளிக்குக் கூட்டிச் செல்லும் புஷ்பக விமானமாக இருக்கலாம். அந்த வெளியில் இருளே ஒளியென கண்கள் பழகலாம். சுற்றிச் சுற்றிக் கிடக்கும் பாம்புகளைப் போல பாதைகள் சுழன்று நடனமாடி நம் கால்களைக் களிப்பூட்டலாம். ஒரு மாபெரும் கதைசொல்லியின் தீராத கதையில் வருகிற ஒரு அத்தியாயம் வாழ்வெனவும் மற்றொரு அத்தியாயம் மரணமெனவும் இருக்கலாம். இரண்டாவது அத்தியாயத்துக்குள் நுழைவதற்கே இந்த ஆர்ப்பாட்டமா? இந்த மகாக் கதையை எழுதும் எழுத்தாளன் யார்? கடவுளா? ச்சே ச்சேஅவர் ஐயோ பாவம். அந்த அளவுக்கு கூறுபாடு அவருக்குக் கிடையாது. அதோட அவர் கதையைவே மனுஷன்தான் எழுதிக்கிட்டிருக்கான். அவரை வம்புக்கு இழுக்கக்கூடாது.

ஏன் இப்படியும் இருக்கக்கூடாது? ஒவ்வொருவரும் பிறப்பதற்கான சாத்தியங்களை உயிரணுக்குதிரைகளின் வேகம் தான் தீர்மானிக்கிறது.  மற்ற குதிரைகளை பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கான பரிசாகக் கிடைப்பது கர்ப்பப்பையில் உள்ள கருமுட்டை. அந்தக்குறிப்பிட்ட குதிரை வெற்றி பெற்றதனால் நானோ அல்லது நீங்களோ,  வேறு குதிரை வெற்றி பெற்றிருந்தால் அவனோ இல்லை அவரோ இந்த பூமியில் பிறந்திருப்பார்கள். இல்லையா? நம்முடன் பந்தயத்தில் ஓடிய பல குதிரைகளைப் பின்னுக்குத் தள்ளியே நாம் வென்றிருக்கிறோம். பின்னுக்குத் தள்ளப்பட்ட அந்த உயிரணுக்களுக்கு தோல்வியின் பரிசு மரணம் தான். ஆக நம் வாழ்வின் தொடக்கமே மற்றவர்களின் மரணத்தில் தான்.

இல்லையில்லை நம்முடைய மற்றொரு பகுதி தானே மற்ற பந்தயக்குதிரைகளும். நம்முடைய மரணத்திலிருந்து தான் நம்முடைய வாழ்வும் தொடங்குகிறது. நம்முடைய வாழ்விலிருந்து நம்முடைய மரணமும் தொடங்குகிறது. அதே நேரத்தில் எல்லாக்கருமுட்டைகளும் வெற்றி பெறும் உயிரணுக் குதிரையை ஏற்றுக் கொள்வதில்லை. அதை நிராகரிக்கவும் செய்யலாம். அப்போதும் நீங்களோ நானோ இல்லை. சில சமயம் கருமுட்டையும் பலகீனமாகவோ நோய்வாய்ப்பட்டோ இருக்கலாம். அப்போது வெற்றியும் தோல்வியடையலாம். அப்போதும் நானோ நீங்களோ இல்லை தானே. இப்படி ஒரு திட்டமிட்ட திட்டமிடப்படாத தற்செயலால் உயிர் பெற்று வாழ்வினுள் நுழைய அனுமதிச் சீட்டு பெறுகிற மனிதன் அந்த அனுமதிச்சீட்டு காலாவதியாகுமுன்பு ஆடுகிற ஆட்டம் என்ன?

ஒருவேளை இந்த வாழ்வு மரணம் எல்லாமே ஒரு ஏற்பாடு தானோ.  இயற்கையின் உன்மத்த விளையாட்டுகளில் இதுவும் ஒன்றோ. கூட்டம் கூட்டமாக உயிர்கள் பிறப்பதும் கூட்டம் கூட்டமாக உயிர்கள் அழிவதும் ஒரே சமயத்தில் இடையறாது நடந்து கொண்டேயிருக்கிறதே. மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில் எண்ட்ரி ஆவதைப் பற்றியோ எந்த நேரத்திலும் எக்ஸிட் ஆவதைப் பற்றியோ கவலை கொள்வதில்லை. வாழ்கிற வரை இந்த வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழ்கின்றன இல்லையா? ஆனால் மனிதன் மட்டும் உள்ளே நுழைந்த பிறகு அப்படியே நிரந்தரமாக இருந்து விட வேண்டும் என்று நினைக்கிறான். அதற்காக அறிவியலைப் பயன்படுத்த முடியுமா? தத்துவத்தைப் பயன்படுத்த முடியுமா? கதைகளில் புகுந்து நிரந்தரமாக இருந்து விடலாமா? அல்லது இல்லாத கடவுளின் பேரைச் சொல்லி ஒட்டிக் கொண்டு இருந்து விடலாமா? என்று மண்டையைப் போட்டுக் கீறிக் கொண்டிருக்கிறான். ஆனால் இதில் ஒன்றை அவன் மறந்து விடுகிறான். அவனுடைய சந்ததியினர் மூலம் அவன் இந்த பூமியில் தன்னுடைய இருப்பை நிரந்தரப்படுத்துகிறான். அந்த இருப்பே அவனுக்குக் கிடைத்த பாக்கியம். இயற்கை அவனுக்கு அளித்த வரம். இதோ நான் என்னுடைய அப்பாவின் சாயலுடன் அவருடைய உடல்மொழியையும் கொண்டிருக்கிறேன். என்னுடைய தம்பி அம்மாவின் முகமும் குணமும் கொண்டிருக்கிறான். இது தான் வாழ்க்கை தரும் மாபெரும் பரிசு. அவ்வளவு தான்.

ஆனாலும் மரணம் தன் இருள்போர்வையை போர்த்தி வாழ்வின் வெளிச்சத்தை மூடும்போது எல்லோரும் வருந்தவே செய்கிறார்கள். கதிர்வேலுவும் மெல்லக் கவியும் மரண இருளைக் கண்டு  முடிவிலாத வருத்தத்தில் இருந்தான். அந்த வருத்தத்தில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன். அது என்னுடைய மரணத்துக்கான ஒத்திகை போலவும் இருந்தது. அவன் விரக்தியில் சுய கழிவிரக்கம் கொண்டு நைந்து இற்று புலம்பிச் சாவதை நான் விரும்பவில்லை. மரணத்திடம் இறைஞ்சி உயிர்த்துடிப்பை நீட்டிப்பதை விட தைரியமாக மரணத்தோடு யுத்தம் செய்ய அவனைத் தூண்டினேன். மரணத்தை வெற்றி கொண்டு வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை சற்றே ஏற்படுத்த முயற்சி செய்தேன். அந்த வழியில் நாங்கள் இருவருமே எங்கள் வாழ்க்கையை சற்று திரும்பிப் பார்க்கவும் உற்று நோக்கவும் செய்தோம். எங்கள் உரையாடல் வழியே நாங்கள் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தோம்,.

கதிரோடு நான் கழித்த அந்த மூன்று மாதங்களும் கிட்டத்தட்ட தினசரி எழுதினேன். எழுத்துச்சோம்பேறியான என்னை எழுதத்தூண்டினான் கதிர். அவன் தத்துவத்தையோ, இலக்கியத்தையோ, அரசியலையோ விரும்பியதில்லை. அவன் தீவிர சினிமா ரசிகன். என்னுடைய கதைகளைப் படித்தது கூட இல்லை. என்னை ஒரு எழுத்தாளனாக அவன் நினைத்துக்கூடப், பார்த்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் நாலு புத்தகங்களைப் போட்டு உலக எழுத்தாளர் மாதிரி காட்டும் என் பாவனைகளைக் கண்டு சற்று வெறுப்பு கொண்டவன் கதிர். அந்த வெறுப்பை வெளிப்படையாகவும் காட்டியிருக்கிறான்.

நாலு கதை எழுதிட்டா எழுத்தாளராகி விட முடியுமா? எழுத்தாளன் என்பவன் வேறு ஒரு ஆளு..நீயெல்லாம் ரொம்பதூரம் போகணும்

உண்மை தான் எழுதுகிறவன் எல்லாம் எழுத்தாளராகி விட முடியுமா? நான் எத்தனையோ எழுத்தாளர்களின் கதைகளை படித்து விட்டு இந்தக் கதைகளுக்கு இவ்வளவு அலம்பல் ஆகாது என்று கேலி பேசியிருக்கிறேன். என்னுடைய கதைகளைப் படித்து விட்டு இன்னொருவர் கேலி பேசலாம். வாழ்க்கையே ஒருவரையொருவர் கேலி பேசிக் கொள்வது தானே. ஒவ்வொருவரும் தான் வாழும் வாழ்க்கையைத் தவிர மற்றவர்களின் வாழ்க்கையைக் கேலி பேசித்தானே வாழ்கிறோம். ஆனால் நம் எல்லோருடைய கேலிகளையும் மூழ்கடித்தபடி கேட்கிற கெக்கலிச் சத்தம் யாருடையது?

ஆனால் நான் இப்போது அவனுடைய கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படியே என்னுடைய கதையை, உமாசங்கர், சந்திரமௌலியின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதிக்கொண்டிருக்கிற போதுதான் தெரிந்தது வாழ்க்கையை எத்தகைய புனைவாலும் இட்டு நிரப்ப முடியாது. புனைவின் அத்தனை சாத்தியங்களையும் கடந்து  இந்தப்பால்வெளியைப்போல கோடானுகோடி நட்சத்திரங்களும் ஆயிரக்கணக்கான விண்கோள்களும், நூற்றுக்கணக்கான சூரியன்களும் சந்திரன்களும் முடிவிலியான வெளியிலிருப்பதைப் போல வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் புதிர்களுடன் மர்மங்களுடன் திடீர் திருப்பங்களுடன், ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை என்று தோன்றியது.

இதை எழுதி முடிக்க முடியாது என்றும் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருந்தது.

என் இணையர் அடிக்கடி

ஏந்தான் இந்தத் தொரட்ட இழுத்து வச்சிகிட்டு துன்பப்படுறீகளோ.. ஊர்ல உலகத்தில இருக்கிற மாதிரி.. ஜாலியா வாழ்க்கைய வாழ்றத விட்டுட்டு..”

என்று சடைத்துக்கொள்வாள். அதிலும் கோபம் வந்து விட்டால்

யாராச்சும் நீங்க எழுதறத படிக்காகளாநீங்களே எழுதி நீங்களே படிச்சி.. புஸ்தகங்களை வீடு பூரா குமிச்சது தான் மிச்சம்..நாளைக்கே பழைய பேப்பர்க்காரண்ட போட்டுருதேன்

என்று ஆவேசமாகக் கத்துவாள். எப்படியாவது எனக்குள் கழிவிரக்கத்தை ஏற்படுத்தி என்னை எழுதாமலிருக்கச்செய்ய அவள் செய்த அத்தனை விக்கிரமாதித்த முயற்சிகளுக்கும் அஞ்சாமல் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறித் தொங்கியது போல நானும் மறுபடியும் மறுபடியும் எழுதிக் கொண்டிருந்தேன். உங்களுக்கு கஷ்ட காலம் தான். ஒருவேளை உங்களைக் காப்பாற்றத்தான் என் இணையர் முயற்சிகளை மேற்கொண்டாரோ?

ஏன் எழுத வேண்டும்? இப்படி ஒரு கேள்வியை தமிழின் மூத்தகவியான விக்கிரமாதித்தியன் என்னிடம் கேட்டபோது ஙே ன்னு முழித்துக் கொண்டிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கேள்விக்கான பதில்களை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் எழுத வேண்டும்? எழுத்தின் மூலம் எதையோ கண்டுபிடிக்கவா..இல்லை..எதையோ நிலைநிறுத்தவாஇல்லை..எதையோ விளங்கிக்கொள்ளவாஇல்லை.. சமூகத்தை மாற்றும் நெம்புகோல்களை கொடுக்கவா? இல்லை என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவா .. இல்லை.. ஏன் எனக்கே இதுவரை ஏன் எழுத வேண்டும் என்பது புரியவில்லை. யார் யாரோ சொல்லியிருப்பதை திரும்பச் சொல்லிப் பார்க்கிறேன். மலையாளக்கவிஞர் கி.சச்சிதானந்தன் பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காக எழுதுகிறேன் என்கிறார். இன்னொருவர் பணயமாக வைத்த வாழ்வை மீட்பதற்காக எழுதுகிறேன் என்கிறார். மற்றொருவர் அர்த்தமில்லாத இந்த வாழ்வை அர்த்தப்படுத்துவதற்காக எழுதுகிறேன் என்கிறார். என்னை என் எழுத்தின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்த முடியும் எனவே எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். வாழ்வதற்காக எழுதுகிறேன் என்பவரும் எழுதுகிறேன் எனவே வாழ்கிறேன் என்பவரும். வாழ்வின் சூதில் எப்படியாவது வெற்றி பெற எழுதுகிறேன் என்பவரும் இருக்கிறார்கள். இப்படி எழுதுகிற ஒவ்வொருவரும் உண்மையாகவோ, பொய்யாகவோ, பாவனையாகவோ, புனைவாகவோ, தாங்கள் ஏன் எழுதுகிறோம் என்பதற்கானக் காரணங்களைத் தைரியமாகச் சொல்கிறார்கள். அப்படி ஒரு காரணத்தை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை இந்த சமூகத்தைத் திருத்தவோ, இல்லை இந்த மனித குலத்தை மேன்மைப்படுத்த.. இல்லை சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரஇல்லை..சமூகப்புரட்சியை ஏற்படுத்தஎப்படி சொன்னாலும் எதோ ஒன்று குறைகிறது அல்லது கூடுகிறது. அதாவது அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரிகிறது. ஏனெனில் என்னுடைய தெருவில் நான் ஏதோ எழுதி புத்தகம் போட்டிருக்கிறேன் என்று இரண்டு பேருக்குத் தெரிந்தால் பெரிய விஷயம். என்னுடைய ஊரில் என்னை எழுத்தாளன் என்று ஒரு ஐம்பது பேருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் ஒரு ஐந்து பேர் புத்தகங்களை வாசித்திருப்பார்களா என்றால் அதுவும் கிடையாது. அப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் ஒரு நூறு பேருக்கு என்னை எழுத்தாளன் என்று தெரிந்திருக்கலாம். ஒரு பத்து பேர் என்னுடைய புத்தகங்களை வாசித்திருக்கலாம். இந்த யதார்த்தம் தெரிந்திருந்தும் ஏன் எழுத வேண்டும்? மனித சமூக சாரம் புத்தகத்தில் ஜார்ஜ் தாம்சன் மந்திரங்களிலிருந்து தான் கவிதை தோன்றிருக்கிறது. அந்த மந்திரங்களை உருவாக்கிய மனிதர்கள் கொஞ்சம் மனநிலை பிறழ்ந்தவர்களைப் போல தனிக்குழுவாக இயங்கினார்கள் என்று எழுதியிருக்கிறார். பிறழ்மனநிலை தான் எழுத்தின் ஊற்றுக்கண்ணோ? என்னுடைய எழுத்தாளநண்பர் ஒருவருடைய பேச்சும் எழுத்தும் அப்படியே மந்திர உச்சாடனம் போல மயக்க நிலைக்குத் தள்ளி விடும். அவரை ஒரு முறை சந்தித்தவர்கள் மந்திரிச்சி விட்ட மாதிரியே அவர் பின்னாலேயே அலைவார்கள். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எழுத்தாளர்கள் மாந்திரீகர்களா? அப்படி ஒரு பிறழ்மனநிலை எனக்கும் இருக்கிறதோ?

ஒருவேளை எழுத்தின் மூலமாக நிரந்தரத்துவம் அடைந்து விடும் ஆசை? உயிரோடு இருக்கும்போதே இந்த லட்சணம் என்றால் மரணத்துக்கு அப்புறம் யார் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள்?  அப்படியென்றால் ஏன் எழுத வேண்டும்? நீ இப்ப என்ன தான் சொல்ல வாரே? என்று அன்போடு கேட்கிற உங்களிடம் உண்மையைச் சொல்வதென்றால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இத்தனை குழப்பத்தில் ஏன்யா எழுதி எங்க கழுத்த அறுக்கிறே என்று எரிச்சல் படுகிறீர்களா? ஒரு வேளை அதற்காகத்தான் எழுதுகிறேனோஎன்னவோ ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இப்போதே பாருங்கள். கதையைத் தவிர மற்றவற்றை உளறிக் கொண்டிருக்கிறேன். சரி சொல்லிவிடுகிறேன்.

கதிரின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். அப்படியே என்னுடைய கதையையும். ஏன் இந்தக் குறுகிய வாழ்வில் நான் சந்தித்த சில மனிதர்கள். சில மரணங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

( தொடர்வோம் )

 

 

1 comment:

  1. இந்த அத்தியாயம் முதலில் இருந்த சோக தத்துவ நிலையிலிருந்து ஒரு நையாண்டி நிலைக்கு நகர்த்துகிறது. சுய விமர்சனம் மேலோங்குகிறது. சில சமயங்களில் சுய பரிவு சில சமயத்தில் சுய பெருமை என்று நகர்கிறது. பல இடங்களில் புன்னகை பூக்கிறது.

    கடைசி வரி அடுத்த அத்தியத்திற்காக காத்திருக்க வைக்கிறது.

    அடுத்த வாரத்திற்காக ஆவலுடன்.

    ReplyDelete