Friday, 10 July 2026

ஒரு ஊரும் சில மனிதர்களும்

 

 

ஒரு ஊரும் சில மனிதர்களும்

 பூங்கொடி பாலமுருகன்




 

 

வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு.. அந்த நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வது எழுத்துக்களால் மட்டுமே சாத்தியம். அப்படி ஒவ்வொரு மனிதனின் நினைவுகளிலும் பதிந்து இருப்பது தான் வாழ்ந்த ஊரும் , அந்த ஊரின் சில மனிதர்களும்.

அப்படி தான் வாழ்ந்த கோவில்பட்டி என்ற ஊரை பற்றியும், அந்த ஊரின் நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட நண்பர்களைப் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ள நூல்தான் முன்னொரு காலத்தில்.

 

எழுத்தாளர் உதயசங்கரின் மற்ற படைப்புகளை காட்டிலும் இந்தப் படைப்பு கொஞ்சம் நம் நுண் உணர்வுகளை கிள்ளி பார்க்கும். ஏனென்றால் இது அவரோடு இரத்தமும் சதையுமாய் பயணித்த நண்பர்களைப் பற்றியது அல்லவா? தன் வாழ்வியல் பக்கங்களை புரட்டிப் பார்ப்பதோடு ,அப்போது வாழ்ந்த நண்பர்கள் அவர்களுடனான அனுபவங்கள் இந்த நூலில் ஏராளமாய் பதியப்பட்டிருக்கிறது.

எழுத்தாளன் என்ற ஒரு ஆளுமை தன்னில் உருவாகிய விதத்தைப் பற்றியும், அதை விதைத்த மனிதர்களைப் பற்றியும் விவரித்த நூல் என்றும் சொல்லலாம்.

 

ஏனென்றால் ஒரு கலைஞன் என்பவன் சுயம்புவாக உருவாகிடுபவன் அல்ல. அந்தக் கலைஞனின் வளர்ச்சியில் தனித்த உழைப்பிற்கு ஈடாக புத்தகங்களும், உரையாடல்களும், மனிதர்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை சொல்லும் புத்தகம் இது.

புத்தகங்களை மனதிற்குள் சுமந்த அலையும் மனிதர்களோடு, அவருடைய இளமைக்காலம் இருந்திருக்கிறது.. அவருக்கு மட்டுமல்ல கோவில்பட்டியை வாழ்விடமாகக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் அது சாத்தியமாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 20 எழுத்தாளர்களை பெற்ற பெருமை கரிசல் இலக்கியத்தின் தலைநகரமான கோவில்பட்டிக்கு இருக்கிறது..

 

அந்த வயதில் அவர்கள் வாசித்த நூல்களின் தாக்கம் கோவில்பட்டியை பாரிஸ் நகரத்து வீதியை போல கற்பனை செய்ய வைத்திருக்கிறது. அந்த நகரத்தில் இடதுசாரி சிந்தனைகளை ஊட்டி வளர்த்த ஞான குருவாக இருந்த தோழர் பாலுவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி , அவர் கை பிடித்து இவர்களுக்கு அறிமுகப்படுத்திய, இவான் துர்கனேவ்

அவரின் மூன்று காதல் கதைகள் பற்றி நினைவலைகளை பகிர்ந்திருப்பதை வாசிக்கும் போது காதல் உன்னதமானது காதல் மகத்துவமானது என்று நாமும் உணர்வோம்.

 

வாழ்க்கையில் சில சந்திப்புகள் நம் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவை. அப்படி எழுத்தாளரின் சிந்தனை போக்கை மாற்றியவர்... அவருடைய அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமான நண்பர் எழுத்தாளர் நாறும்பூநாதன்... குச்சு வீட்டில் ஒரு மில் தொழிலாளியின் மூத்த மகனாக பிறந்து உவப்பானதில்லாத இளம் பிராயத்தில் இருந்த அவருக்கு ஆத்மார்த்த தோழனாய் நாறும்பூநாதன் அவர்கள் கிடைத்ததை எண்ணி சிலாகிக்கிறார்.

இவருடைய வாசிப்பு ஆர்வத்திற்கு தீனி போட்டது நண்பர் கொடுத்த சோவியத் புத்தகங்கள். அதிலும் சிவப்பு நிறத்தில் சிலந்தியும் ஈயும் என்ற வில்ஹெமில் லீப்னெஹ்ட் என்ற எழுத்தாளர் எழுதிய நூல், இவருக்கு புதிய புதிய வெளிச்சங்களையும் பெரும் நம்பிக்கையை தருகின்ற புத்தகமாகவும் இன்றளவும் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள வர்க்க வேறுபாடை உணர வைத்தது இந்த நூல் தான்.

இவர்களுக்கு மார்க்சிய தத்துவத்திற்கு விவரங்கள் தந்த தோழர் பால் வண்ணம், சர்வதேச அரசியல் குறித்து தோழர் தேவப்பிரகாஷ், தேசிய அரசியல் குறித்து தோழர் பாலு, தொழிற்சங்க வரலாறு செயல்பாடுகள் குறித்து தோழர் மோகன்தாஸ், பள்ளித் தோழனாகவும் கல்லூரி தோழனாகவும் இலக்கியத் தோழனாகவும் பயணித்த தோழர் மாரீஸ், உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழ் இலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாய் பதிவு செய்த கிரா என்கின்ற இவர்களின் நயினா, மானுடத்தின் மேன்மைக்காக எழுத்தின் மூலமாக தன்னை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஆதர்ச நாயகனாயிருக்கும் கார்க்கியை கை குலுக்க வைத்த தோழர் சுவடி, போராட்டத்தின் மூலமே வாழ்வை அர்த்தமுள்ளதாக முடியும் என்று தன் கவிதைகளில் உணர்த்திய நெருதாவை எப்போதும் நினைவூட்டி கொண்டிருக்கும் வித்யா சங்கர் என்ற துரை, ஆந்தென் செகாவை நினைவூட்டும் அப்ப சாமி இப்படி பல தோழர்களின் நினைவுகள் அவர்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள் என்று பல்வேறு நினைவலைகளை இந்த நூலில் பகிர்ந்து உள்ளார்.

 

குழந்தையோ முதியவரோ அங்கீகாரமும் பாராட்டும் அவர்களுக்கு மிக முக்கியமானது. அப்படி தன் ஆரம்பகட்டத்தில் தான் எழுதிய பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது கதையைப் படித்து கட்டியணைத்து கதகதப்புடன் பாராட்டிய கவிஞர் கந்தர்வன் இன்னும் தான் எழுதிக் கொண்டிருப்பதற்கான ஒரு உந்துதல் என்று மனமுவந்து கூறுகிறார்..

 

தான் எப்போதும் வியந்து நோக்கும் ஆதர்ச நாயகனாக எழுத்தாளர் தோழர் தமிழ்ச்செல்வனை இந்த நூலில் சிறப்பு படுத்தியிருக்கிறார்..

இந்தப் புத்தகம் நெடுகிலும் இருக்கக்கூடிய நினைவலைகள் தான் சிலாகித்த புத்தகங்களின் மூலமாகவும் படைப்பாளிகளின் வழியாகவும் விரிந்து செல்கிறது..

 

எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் எப்பொழுதும் பங்கேற்பாளனாக இருக்கும் ஒரு நண்பரைப் பற்றி இவர் எழுதி இருக்கும் கட்டுரை என்னை கொஞ்சம் அசைத்துப் பார்த்து அழ வைத்தது.. முத்துசாமி என்ற ஒரு தோழரை பற்றிய நினைவலைகள்..  புற்றுநோயின் கொடுமைக்கு தன் ஆருயிர் நண்பரை இழந்தது போல என் ஆருயிர் தோழியையும் இழந்திருக்கிறேன் நான்...

 

முன்னொரு காலத்தில் என்ற இந்த நூல், உதயசங்கர் என்ற ஒரு எழுத்தாளுமை உருவாகக் காரணமாய் இருந்த நபர்களும் ,நூல்களும் படைப்புகளும் இந்த நூல் நெடுக வந்து போகிறார்கள்.

 

ஞாபகங்களை மீட்டெடுத்திடும் சாத்தியம் எல்லோருக்கும் வாய்ப்பு இல்லை. அப்படி உதயசங்கர் அவர்களுக்கு வாய்த்த இந்த நூலை வாசிக்கும் போது நம் கண்களும் பனித்திட தான் செய்யும்.

 

 

 

நூல் : முன்னொரு காலத்தில்

ஆசிரியர் : உதயசங்கர்

பதிப்பகம் : நூல் வனம்

விலை : ₹90.00

தொடர்புக்கு - 9751549992

 

 

No comments:

Post a Comment