Wednesday 9 January 2019

சுற்றுலா போன சுண்டைக்காய்


சுற்றுலா போன சுண்டைக்காய்

உதயசங்கர்
ஒருநாள் ஒரு ஊரில் ஒரு பாட்டி சமைப்பதற்காக கடையில் சுண்டைக்காய் வாங்கினாள். வீட்டில் சுண்டைக்காய் எடுக்கும்போது ஒரு சுண்டைக்காய் உருண்டு சோற்றுப்பானைக்குப் பின்னால் போய் ஒளிந்து கொண்டது. விறகு அடுப்பில் பொங்கிய அந்தச் சோற்றுப்பானையை அப்போது தான் அந்தப்பாட்டி கீழே இறக்கி வைத்திருந்தாள். பானை சூடாக இருந்தது. ஒளிந்திருந்த சுண்டைக்காய்
“ ஐய்யய்யோ சுடுதே..
அம்மம்மா சுடுதே..
அப்பப்பா சுடுதே..
அக்கக்கா சுடுதே..
அண்ணண்ணே சுடுதே.. “
என்று கத்தியபடி உருண்டு ஓடியது. கண்ணைத்திறந்து பார்த்தால் அரிவாள்மனை முன்னால் இருந்தது. அரிவாள்மனை சுண்டைக்காயைப் பார்த்ததும்
 “ வா ராஜா வா..
சீக்கிரமா வா..
கூராக இருக்கேன்
கூறு போட்டு தாரேன்.
வா ராஜா வா..
சீக்கிரமா வா .”
என்று தன்னுடைய பளபளப்பான பல்லைக்காட்டிச் சிரித்தது. சுண்டைக்காய் உடனே அங்கிருந்து உருண்டு தண்ணிர் வைத்திருந்த செப்புப்பானைக்குக் கீழே போய் நின்றது. செப்புப்பானை,
 “ குளிருது ஐயா
குளிருது..
பனிக்கட்டி போல குளிருது
காப்பாத்துங்க ஐயா
காய்ச்சல் வரும் ஐயா..”
 என்று நடுங்கிக்கொண்டிருந்தது. சுண்டைக்காய்க்கும் குளிர ஆரம்பித்தது. செப்புப்பானையிலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து அங்கே இருந்த வெண்கல உருளியின் அருகில் போய் நின்றது. உடனே வெண்கல உருளி உருண்டு தன் வாயைக் காட்டியது. ஐயோ… உள்ளே ஒரே இருட்டு. ஈயம் பூசின கருத்த வாயைப் பார்த்த சுண்டைக்காய் பயந்து விட்டது. எதுக்கு வம்பு? என்று தள்ளி இருந்த தம்ளருக்குப் பின்னால் போய் ஒளிந்தது. தம்ளர், முகத்தைச் சுளித்து
“ எங்கூடச் சேராதே..பொடியா..
எங்கிட்டே பேசாதே…பொடியா..
எம்பக்கம் நிக்காதே பொடியா..”
சுண்டைக்காய்க்குக் கோபம் வந்து விட்டது. அங்கிருந்து உருண்டு ஒருபடி உழக்குக்குள் போய் ஒளிந்து கொண்டது. ஒருபடி உழக்கு அப்போது தான் தூங்கி முழித்திருந்தது. அது
 “ இடமில்லை..
இடமில்லை
எனக்கே இடமில்லை
என் தம்பி வீட்டுக்குப் போ..”
என்று விரட்டியது. இரண்டு அடி எடுத்து வைத்தது சுண்டைக்காய். அரைப்படி உழக்கு நின்று கொண்டிருந்தது. அது சுண்டைக்காயைப் பார்க்காமலேயே
“ இடமில்லை.
இடமில்லை
எனக்கே இடமில்லை
என் தம்பி வீட்டுக்குப் போ.” என்று சொன்னது.
” அடக்கோட்டிக்காரா.. நிமிந்து கூட பார்க்கல..” என்று நினைத்துக் கொண்டே சுண்டைக்காய் கொஞ்சம் நடந்தது. கால்படி உழக்கு நிறைய கம்பு தானியம் இருந்தது. அது சுண்டைக்காயைப் பார்த்து,
  இடமிருக்கு..
இடமிருக்கு – மனசில
ஆனால் இடமில்லை.
இடமில்லை வீட்டிலே.”
என்று வருத்தத்துடன் சொன்னது. அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் அரைக்கால்படி உழக்கு,
“ ஐயா நீங்க யாரோ எவரோ தெரியாது.. தெரியாத ஆளுக்கு இடம் தரக்கூடாதுன்னு எங்க பெரியப்பா சொல்லியிருக்காரு..”
என்று சொல்லவும் சுண்டைக்காய்க்கு சலிப்பாகி விட்டது. அடச்சே! என்று முனகியபடி தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தது. நடந்து நடந்து அது மாண்பிடி உழக்குக்குள் போய் விட்டது. மாண்பிடி உழக்கு,
“ ஐயா உங்கள் வரவு நல்வரவாகுக! நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம்..” என்று வரவேற்றது. சுண்டைக்காய்க்கு ஆச்சரியம். மாண்பிடி வீட்டில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தது. உடம்பு கொஞ்சம் கச்சிதமான பிறகு எழுந்து,
“ உங்கள் விருந்தோம்பலுக்கு மிக்க நன்றி.” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்திருக்காது. கண் அகப்பை அதைத் தூக்கிக் கொண்டது. சுண்டைக்காயால் நிற்க முடியவில்லை. உருண்டு கொண்டே வந்தது.
“ யாரப்பா நீ..
கூறப்பா பேரு..  
ஏது…ஊரப்பா நீ.. “
என்று கண் அகப்பை கேட்டது. சுண்டைக்காய்க்குச் சிரிப்பாய் வந்தது. அப்போது பாட்டி கண் அகப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள்.  அதைப்பார்த்ததும் சுண்டைக்காய் விருட்டென்று பாய்ந்து குத்துப்போணிக்குள் நுழைந்து விட்டது. குகை மாதிரி இருட்டாய் இருந்த குத்துப்போணிக்குள் காற்று விர்ரென்று வீசியது. சுண்டைக்காய்க்குப் பயமாக இருந்தது. அங்கேயிருந்து பித்தளைக்கொப்பரைக்குள் பாய்ந்தது. பித்தளைக்கொப்பரையிலும் எதுவும் இல்லை. ஆனால் பெரிய விளையாட்டு மைதானம் மாதிரி இருந்தது. அதில் மேலும் கீழும் சறுக்கி விளையாடியது சுண்டைக்காய்.
“ ஓடி ஆட வாங்க
பாடி ஆட வாங்க..
கூடிச் சாட வாங்க
கூட்டாக வாங்க..”
என்று பாடியபடியே சறுக்கு விளையாடியது. அப்படி விளையாடியபடியே துள்ளி இட்லிக்கொப்பரையில் இருந்த இட்லித்தட்டில் விழுந்து விட்டது. நல்லவேளை பாட்டி காலையிலேயே இட்லி அவித்து முடித்து விட்டாள். மெல்ல இடலித்தட்டிலிருந்து ஏறி வெளியே வைத்திருந்த சட்டக அகப்பை வழியே சறுக்கி ஓடியது.
சுண்டைக்காய்க்கு ஜாலியாக இருந்தது.
எண்ணெய்ச்சட்டியில் விழுந்து எண்ணெயில் குளித்து எழுந்தது. அப்படியே குழம்புச்சட்டிக்குள் ஏறி இறங்கியது. பாட்டி சமையலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். காய்கறிகளை நறுக்கி ஒரு தட்டில் வைத்து அடுப்பை எரிக்கத்தொடங்கினாள். விறகுகளையும் சுள்ளிகளையும், மரச்சிராய்களையும் அடுப்பில் திணித்தாள். அடுப்பைப் பற்றவைத்தாள். எண்ணெய்ச்சட்டியை அடுப்பில் வைத்தாள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் நறுக்கி வைத்திருந்த சுண்டைக்காய்களைப் போட்டாள். அப்போது தான் கவனித்தாள். ஒரே ஒரு சுண்டைக்காயைக் காணவில்லை.
எங்கே போயிருக்கும்? 
பாட்டி அங்கும் இங்கும் தேடினாள். சுண்டைக்காயின் அடுக்களைச் சுற்றுலா இன்னும் முடியவில்லையே. அது இப்போது தான் பாட்டியின் அஞ்சறைப்பெட்டியைப் பார்க்கப்போயிருக்கிறது.
மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடிக் குதித்துக்கொண்டே போகிறது சுண்டைக்காய். அதன் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம். பாட்டியின் கண்ணில் சுண்டைக்காய் பட்டு விடாமல் இருக்கட்டும்.
என்ன சரிதானே!


.நன்றி - தமிழ் இந்து




No comments:

Post a Comment