தமிழிலக்கியத்தின்
தனிக்குரல்
உதயசங்கர்
1980 – களில் தான் பிரபஞ்சன் முதன்முதலாக
எனக்கு அறிமுகமானார். வானம்பாடி பத்திரிகைகளில் வாசித்த ஏராளமான கவிஞர்களில் அவரும்
ஒருவராக இருந்தார். அதில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தியவராக நினைவில்லை. ஆனால் அதன்பிறகு
வெளிவந்த அவருடைய ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் என்ற கதை என்னைப் புரட்டிப்போட்டது. அதுவரை
வாசித்த கதைகளிலிருந்து வேறொரு புதிய குரலாக ஒலித்தது. கிருஷ்ணமூர்த்தி, கோபாலு, ரெங்கசாமி,
மூன்றே கதாபாத்திரங்களை வைத்து அவர் தீட்டிய வாழ்க்கைச்சித்திரம் அழியாத இலக்கியப்படைப்பாக
நின்று நிலைத்து விட்டது. பிரபஞ்சன் என்ற பெயரோடு அந்தக்கதையும் ஒட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட
அந்தக்கதை தான் பிரபஞ்சனின் மையம் என்று சொல்லலாம். கிருஷ்ணமூர்த்தி அரிசிக்கடை நடத்தி
நஷ்டத்தினால் கடையை மூடியவன். கடை நடந்தபோது அவனிடம் அரிசி கடனாக வாங்கிய கோபாலு கடனைக்கொடுக்காமல்
ஏமாற்றிக்கொண்டே போகிறான். கிருஷ்ணமூர்த்தி அவன் கடையில் முன்னால் வேலைபார்த்த ரெங்கசாமியிடம்
சொல்லி அவனிடம் கேட்கச்சொல்கிறான். அவன் கோபாலுவிடம் சினிமா தியேட்டரில் வைத்து கடுமையான
வார்த்தைகளில் கேட்டு விடுகிறான். அதை ரெங்கசாமி சொல்லும்போதே கிருஷ்ணமூர்த்தியிடம்
சொல்லும்போதே கிருஷ்ணமூர்த்தி அவனிடம் அவ்வளவு கடுமையாகப்பேசியிருக்க வேண்டியதில்லை
என்று வருத்தப்படுகிறான். ஆனால் கோபால் அதன் பிறகும் அவனைப்பார்த்தால் கண்டுகொள்ளாமல்
போவது, முடிந்த போது தான் கொடுப்பேன் என்று அலட்சியமாகப்பேசுவது என்று நடந்து கொள்கிறான்.
கிருஷ்ணமூர்த்தி எவ்வளவோ சுமூகமாகக் கேட்டும் கோபாலு கிருஷ்ணமூர்த்தியைத் திட்டுகிறான்.
திடீரென ஒருநாள் கிருணமூர்த்தி கோபாலுவின் வீட்டுக்குப் போய் அடாவடியான வார்த்தைகளால்
திட்டி மிரட்டுகிறான். அப்போது கோபாலுவின் மனைவி நிறைசூலியாக இருப்பதையும் பார்க்கிறான்
கிருஷ்ணமூர்த்தி. அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின்னால் கோபாலு கொடுக்க வேண்டிய நூற்றெண்பது
ரூபாயில் நூறு ரூபாயைக் கிருஷ்ணமூர்த்த்தியின் வீடு தேடி வந்து கொடுக்கிறான். அப்போது
இதமாகப்பேசிய கிருஷ்ணமூர்த்தி அவன் இன்னும் கொடுக்கவேண்டிய எண்பது ரூபாயில் முப்பது
ரூபாயைக் கழித்து ஐம்பது ரூபாய் கொடுத்தால் போதும் என்கிறான். அதற்குப்பின் இன்னும்
சிலநாட்கள் கழித்து வந்து முப்பது ரூபாயைக் கொடுத்து அவ்வளவு தான் புரட்டமுடிந்தது
மனைவிக்குப் பிரசவச்செலவாகி விட்டது என்று கோபாலு கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்கிறான்.
கிருஷ்ணமூர்த்தி கனிவுடன் மீதிப்பணத்தைக் கொடுக்க வேண்டாம். அந்த ரூபாயில் அவன் பெயரைச்
சொல்லி ஒரு சட்டைத்துணி எடுத்துப்போடச் சொல்கிறான்.
மனிதர்களிடம் மீந்திருக்கும் அன்பின்
ஒளிச்சுடரைத் தன் இருகைகளாலும் பொத்திப்பாதுகாத்து நம்மிடம் அளித்திருப்பார் பிரபஞ்சன்.
வாழ்க்கை தன் கொடும்பற்களால் எத்தனை துன்பங்களைக் கொடுத்தாலும் மனிதன் அவற்றைப் புறம்தள்ளி
அன்பெனும் பேராற்றிலிருந்து ஒருகை நீரேனும் அள்ளிக்கொண்டிருக்கிறான் என்பதை தன்னுடைய
படைப்புகளில் உரத்துச் சொன்னவர் பிரபஞ்சன்.
மிக மிகத்தாமதமாகத்தான் அவருடனான
நேர் அறிமுகம் கிடைத்தது. அவருடைய ஆளுமையின் வசீகரம் எல்லோரையும் ஈர்க்கும். அவருடைய
குரல் கம்பீரமானது. ஆனால் அந்த கம்பீரம் ஈரப்பதத்துடன் நம்மை வருடிச் செல்லும். எப்போதாவது
விழாக்களில் மட்டுமே அவரைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது ”உதயசங்கர் எப்படி
இருக்கீங்க?..” என்ற அந்தக்குரலில் இருக்கும் நெருக்கமும் உரிமையும் எனக்கு அப்படிப்பிடித்திருந்தது.
அவருடன் எப்போதும் நண்பர்கள் கூடியிருப்பார்கள். அதுவே அவர் எப்பேர்ப்பட்ட உரையாடல்காரர்
என்பதை உணர்த்தி விடும். மேடைப்பேச்சிலும் அவர் கேட்பவர்களை வசியப்படுத்தி விடுவார்.
அவரிடம் நூல்வனம் பதிப்பகத்தில் வெளியான பிறிதொரு மரணம் என்ற சிறுகதை நூலை சென்னைப்புத்தகக்கண்காட்சியில்
வைத்துக் கொடுத்தேன். புத்தகத்தின் தயாரிப்பில் மிகவும் லயித்துப் போய் புத்தகத்தயரிப்பாளர்
மணிகண்டனைப் பாராட்டிக்கொண்டேயிருந்தார்.
எழுத்தை முழுநேரவாழ்க்கையாகக்
கொண்ட அநேக எழுத்தாளர்களைப்போல அன்றாடத்தின் துயரங்களில் சிக்குண்டவர் பிரபஞ்சன். அந்தத்துயரத்தின்
சிறு சாயல் கூட அவருடைய படைப்புகளில் தென்படாது.
பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளில்
மிகப்பெரிய சோதனை முயற்சிகளையோ, வடிவப்பரிசோதனைகளையோ, அதிகமாகச் செய்தவரில்லை. ஆனால்
அள்ள அள்ளக்குறையாத வாழ்க்கையிலிருந்து தன்னுடைய கதைகளைத் தேர்ந்து கொண்டவர். அவருடைய
கதையுலகம் கீழ் நடுத்தரவர்க்கமாக, நடுத்தர வர்க்கமாக இருந்தது என்று சொல்லாம். யாரையும்
முன்மாதிரியாகக் கொள்ளாத அவருடைய எழுத்து தனித்துவமிக்கது. எளிமையும், அடர்த்தியும்
கொண்ட நேரடியான நடையில் தன் படைப்புகளைக் கலையாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் பிரபஞ்சன்.
வாழ்வின் நெருக்கடிகளுக்கானக் காரணங்களைக் குறித்து அவர் தன்னுடைய படைப்புகளில் கவலை
கொள்வதில்லை. அதைப்பற்றிய குறிப்புகள் கூட அதிகம் இருக்காது. ஆனால் வாழ்வின் அத்தனை
வண்ணங்களையும் அப்படியே உள்ளது உள்ளபடியே தீட்டியவர். அதில் தான் அவருடைய படைப்புகளின்
வெற்றி நிலைகொண்டிருக்கிறது. அவருடைய கதைகளில் சிறந்த கதைகள் என்று தனித்துக்குறிப்பிட்டுச்
சொல்வதை விட அவருடைய அத்தனை சிறுகதைகளிலும் மானுடநேயம் மாபெரும் சமுத்திரமாக அலையடித்துக்
கொண்டேயிருப்பதை வாசிக்கும்போது உணரமுடியும். அந்த சமுத்திரத்தின் அலை ஒருநேரம் சுனாமியாக
நம்மை மூழ்கடிக்கும், ஒரு நேரம் மெல்லலையாக வந்து காலை வருடும். எந்த அலையாக இருந்தாலும்
அது மனிதநேயத்தை உரத்து முழங்கிக்கொண்டிருக்கும்.
பிரபஞ்சன் என்ற மகத்தான, தனித்துவமிக்க
படைப்பாளியின் குரல் அது. அவருடைய ஒவ்வொரு கதையிலும் அது ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
அந்தப்படைப்புகளில் அவர் என்றென்றும் உயிர்த்துடிப்புடன் அதே நெருக்கத்துடனும் கம்பீரத்துடனும்
உரையாடிக்கொண்டேயிருப்பார். ஒரு ஊரில் இரண்டு மனிதர்களில் வருகிற கிருஷ்ணமூர்த்தியின்
அந்தக்குரலில் நீங்கள் வாழ்கிறீர்கள் பிரபஞ்சன்!. நீங்கள் போற்றிப்பாதுகாத்த அன்பெனும்
ஒளிச்சுடர் இன்னும் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
போய் வாருங்கள் தோழர் பிரபஞ்சன்.
நன்றி - செம்மலர்
No comments:
Post a Comment