Sunday 4 August 2024

ஸ்டாலின் காலத்திலே...

 

ஸ்டாலின் காலத்திலே...

 

உதயசங்கர்

 


 

 

சோவியத் இலக்கியம் ஒரே நேரத்தில் புதிய மனிதனைப் படைக்கும் மருத்துவச்சியாகவும் பழைய சமுதாயத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் கல்லறை ஊழியனாகவும் செயல்படுகிறது --- மாக்சிம் கார்க்கி

 

பழுப்படைந்து ஒடிந்து விடுகிற காகிதங்களோடு எங்கோ மூலையில் எத்தனையோ காலமாகக் காத்துக் கொண்டிருந்தது. கைபட்டதும் அட்டை இரண்டாக மடிந்து விட்டது. புத்தகத்தினுள்ளே பல ஆச்சரியங்கள் ஒளிந்திருந்தன. முக்கியமாக ஸ்டாலின் பரிசு பெற்றநூல் என்ற துணைத்தலைப்பைப் பார்த்தவுடன் பல விடயங்கள் ஞாபகத்துக்கு வந்தன.

 

பாசிசத்துக்கெதிரான போரில் சோசலிசத்தையும் இந்த உலகையும் காப்பாற்றிய மகத்தான தலைவர் ஸ்டாலின் பரிசு பெற்ற நாவல் ஜார்ஜ் குலியா எழுதிய வஸந்த காலத்திலே..இந்த நாவலை எங்கள் அன்புக்குரிய தி..சி. அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்

ஆங்கிலத்தில் spring Time in saken என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.

 

ஸ்டாலின் உயிருடனிருந்த காலத்திலேயே வெளிவந்து விருது பெற்ற நூல். 1950- வரையிலான காலத்தைப் பேசுகிறது.

தமிழ்ப்புத்தகாலயம் முதல்பதிப்பை 1951-ல் வெளியிட்டிருக்கிறார்கள். சுடச்சுட தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் நன் முன்னோர்கள்.

 

ஸ்டாலின் என்ற பெயருடன் எனக்கு கூடவே ஷடோவின் என்ற பெயரும் ஞாபகத்துக்கு வரும். சோவியத் வரலாற்றில் மறக்க முடியாத பெயர். தோழர்.எஸ்.வி.ராஜதுரை அவர்களின் ருஷ்யப்புரட்சி ஒரு இலக்கிய சாட்சியம் என்ற நூலைப் படிக்கும்வரை யார் இந்த ஷடோவின் என்று தெரியாது

கல்ச்சுரல் கமிஷார் அதாவது பண்பாட்டுத்துறை அதிகாரி ஷடோவினின் அனுமதியின்றி எந்தவொரு படைப்போ, செய்தியோ, கருத்தோ வெளியிடப்படக்கூடாது. அப்படி ஏதாவது விமர்சனமாக வந்து விட்டால் அதையெழுதியவர் காணாமல் போய்விடுவார்

இப்படியொரு கட்டுப்பாடு இருந்த காலத்தில் வெளிவந்திருக்கிற நாவல் தான் வஸந்த காலத்திலே..வரலாற்றின் கட்டாயமும் சோசலிசத்தை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட முதலாாளித்துவம் செய்த  சூழ்ச்சிகளும் சோவியத்தை வேட்டையாடிக் கொண்டிருந்த காலத்தில் தான் ஷடோவின் போன்ற அதிகாரிகளும் உருவாகியிருக்கிறாரென்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

 

ஸாகேன் ஒரு சின்னஞ்சிறிய மலைக்கிராமம். பட்டணத்திலிருந்து நான்கு நாட்கள் பயணத்தில் காடு, மேடு, ஓடைகளைத்தாண்டி நடந்து தவழ்ந்து உருண்டு தான் அங்கே போய்ச்சேர முடியும். ஸாகேனியர்கள் என்று சொல்லப்படும் பழங்குடி மக்களின் வாழ்வில் கம்யூனிசம் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வருகிறதென்பது தான் கதை

 

கூட்டுப்பண்ணையின் கவலையற்ற தலைவன் நிக்காலோ, புதிய முறையில்  விவசாயம் செய்யப் போராடும் கெஸ்ஸோ, பழமையை உதிர்த்து புதுமைப்பெண்ணாய் உருவாயிருக்கிற காமா, நீனா, எலெக்டிரிக் ஸ்டேஷனை உருவாக்கி நவீனத்தை அந்தக் கிராமத்துக்குக் கொண்டுவரும் இளைஞன், எல்லாமுயற்சிகளையும் குறைசொல்லும் அண்டன், ஆதாமூர் பெண்களைத் தாழ்வாக எண்ணும் ரஷீத் என்று ஒரு கிராத்தில் வாழ்ந்த உணர்வைத்தருகிற நாவல் வஸந்த காலத்திலே..

 

பெரிய திருப்பங்களோ, உணர்ச்சிக்கொந்தளிப்பான தருணங்களோ கிடையாது. ஆனால் எங்கோ கண்காணாத ஒரு மலைக்கிராமமும் சோவியத்தின் முன்னேற்றத்தில் எத்தகைய பங்கு வகித்திருக்கிறதென்பதையும் அந்தக் காலத்தில் எத்தகைய இலக்கியப்போக்குகள் முன்னெடுக்கப் பட்டன என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த நாவல் பங்களிப்பு செய்யும்

 

கெஸ்ஸோ போன்ற தோழர்களின் விடாமுயற்சியும், புதிய சிந்தனைகளும் தான்  விளைச்சலை அதிகமாக்கி முன்னுதாரணமாக மாற்றிருக்கிறது.

 

ஸாகேன் தோழர்களுக்கு ரெட் சல்யூட்!

 

1951, 1956, 1963, என்று தமிழில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது இந்த நூல்

 

 ஸாகேனில் வஸந்த காலமென்றால்..


 

No comments:

Post a Comment