Friday 2 August 2024

சோவியத் இலக்கியத்தின் ஒளிவீசும் எரிநட்சத்திரம் வசீலி ஷூக்‌ஷீன்

சோவியத் இலக்கியத்தின்

ஒளிவீசும் எரிநட்சத்திரம் வசீலி ஷூக்ஷீன்

 

உதயசங்கர்




 

" மக்களுக்கு அந்தரங்கமானது வேண்டியிருந்த போது அவர் தருணத்தை நழுவவிடவில்லை. எளிய, வீரப்பண்பில்லாத, ஒவ்வொருவருக்கும் உவப்பான கதைகளை, அவ்வாறே எளிமையாகக் குரலை உயர்த்தாமல் மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் சொன்னார். ஷூக்ஷினின் படைப்பு சிவ்வென்று உயரே பறந்து பல மனிதர்களின் இதயங்களில் விரிவான எதிரொலி எழுப்பியதன் காரணம் இதுவே.."

 

-- மிகயீல் ஷோலகவ்

 

1980 - களில் சோவியத்துக்குச் சென்று வந்த சி.பி.எம். தலைவர்களில் தோழர். நன்மாறனும் இருந்தார். பொதுக்கூட்டத்தில் அவர் பேச்சைக் கேட்பதற்கென்றே ஒரு பெரும் ரசிகர் கூட்டமே தமிழ்நாடெங்கும் உண்டு. எவ்வளவு சிக்கலான அரசியல் விஷயத்தையும் மிக எளிமையாகச்சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்கள் மொழியில் பேசக்கூடிய எளிய தலைவர்

 

சிரிக்காமல் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை சிரித்து உருள வைக்கும். விரால்மீன் குழம்பு வைப்பதைப் பற்றி அவர் சித்தரிக்கும்போது நாக்கில் எச்சில் ஊறாதவர்களே இருக்கமுடியாது. சோவியத் போய்விட்டு வந்து தமிழ்நாடெங்கும் ஒரு ரவுண்டு போய் சோவியத் ருஷ்யாவின் புகழைப் பரப்பினார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பொது மேடையில் யாரும் சொல்லத்தயங்குகிற விஷயத்தை மதுரை ஸ்லாங்கில் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற நண்பரிடம் உரையாடுவதைப் போலச் சொன்னார்,

 

தோழர்களே நான் என்ன சொல்ல வரேன்னா.. நாங்க மாஸ்கோ போய் ரெண்டு நாளாச்சு.. எங்க துணிமணியெல்லாம் துவைக்கப் போட்டோம்... அது ஏதோ வாசிங்மெஷினாமே அதுல போட்டு எடுத்துக் கொண்டு வந்தார்கள். இங்க மாதிரி பொம்பிளைக தேவை தொவைன்னு தொவைச்சு  கஷ்டப்பட வேண்டாம்..ஆனா பாருங்க தோழர்களே துவைத்து வந்த துணிமணியைப் பார்த்தா நம்ம துணிமணி மாதிரி தெரியல.. ஒவ்வொருத்தரும் இது எஞ்சட்டையில்ல.. இது எஞ்ஜட்டியில்ல. இந்தக் கலர்ல ஜட்டியே கிடையாதுன்னு ஒரே சண்டைக்காடு.. எல்லார் துணியும் அப்பத்தான் ஒரிஜினல் நிறத்தையே பார்த்திருக்கு.. அப்படியொரு வெளுப்பு.. "

 

 அப்படின்னு சொல்லிமுடிக்கும்போது எங்களுக்கு ஒரே புல்லரிப்பு. சோவியத்துன்னா சோவியத்து தான் என்று கெந்தலிப்புடன் திரிவோம்

 

அப்போது தான் கோவில்பட்டிக்கு வந்தார் வசீலி ஷூக்ஷீன் . சோவியத் புரட்சிக்குப் பின்னால் 1929- ல் பிறந்து 1974 -ல் தமிழின் அமரத்துவம் வாய்ந்த புதுமைப்பித்தன், கு..ரா, கு.அழகிரிசாமி, ஆதவன், போன்ற  எழுத்தாளர்களைப் போல நாற்பது வயதுகளில் மறைந்தவர் வசீலி. நாற்பத்தியைந்து வயதுக்குள்ளாக தன்னுடைய மேதைமையை ஆழமாகவும் அழுத்தமாகவும் சோவியத் இலக்கியத்திலும் திரைத்துறையிலும் பதித்தவர்அவருடைய வாழவிருப்பம் என்ற சிறுகதை நூல் சோவியத் ருஷ்யாவை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் யதார்த்தமாகக் காட்டுகிறது.

 

நான் முதன்மையாக எழுத்தாளன் என்று வசீலி சொன்னார். மக்களுக்குச் சொல்வதற்கு அவரிடம் விடயங்கள் இருந்தன. அவற்றை எப்படிச் சொல்வது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் மீது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுபோன ஆழ்ந்த கவனத்தால் அவருக்குக் கைம்மாறு செய்தார்கள். தங்கள் இதயங்களில் அவருக்கு இடமளித்தார்கள். இலக்கியக்கலைத்துறையில் ஆக உயர்ந்த பரிசான லெனின் பரிசு வசீலி ஷூக்ஷீனுக்கு அவரது மரணத்துக்குப் பின் 1976 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.

 

என்று பின்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் வசீலி ஷூக்ஷீனை வாசித்தபோது இதுவரை வாசித்திராத அனுபவத்தை அடைந்தோம். எப்போதும் லட்சியவேகம், உயிர்த்தியாகம், வீரம் செறிந்த மாண்பு என்று நரம்புகளை முறுக்கேற்றும் படைப்புகளை வாசித்து விரைப்பாகத் திரிந்த எங்களுக்கு வசீலி இன்னொரு புதிய சோவியத்தைக் காட்டினார்

 

யதார்த்தத்தமான சோவியத்தைக் காட்டிய கதைகளாக வாழவிருப்பம் போன்ற கதைகள் இருந்தன. காலத்தைக் கலைஞனே பிரதிபலிக்கிறான். அவன் காட்டும் சமூகத்தின் கண்ணாடியாக நேரடியாகவோ மறைமுகமாகவோ அவன் விமரிசனங்களை முன் வைக்கிறான். அதை நுண்ணுணர்வுள்ள வாசகர்கள் அறிந்து கொள்வார்கள். வசீலியின் கதைகளில் அத்தகைய விமரிசனங்கள் இருந்தன

ஆனால் இதெல்லாம் அப்போது எனக்குத் தெரியவில்லை. அப்போது தெரிந்ததெல்லாம் எண்ணங்கள் என்ற கதையில் வரக்கூடிய முதல்பாரா தான்

 

" ஒவ்வோர் இரவிலும் இப்படியே! ஊர் கொஞ்சம் அடங்கி ஆட்கள் உறங்க வேண்டியதுதான் தாமதம், அவன் தொடங்கினான்புல்லுருவிப்பயல் ஊர்க்கோடியிலிருந்து ஆரம்பித்து நடந்தான். நடந்து கொண்டே அக்கார்டியன் வாசித்தான். அவனுடைய அக்கார்டியன் வாத்தியமும் தனி வகையானது, அது இசைக்கவில்லை, வீரிட்டு அலறியது.

ஊர்க்காரர்கள் நீனா கிரேத்செத்தவாவிடம் சொன்னார்கள்,

அட நீ சீக்கிரமாக இவனுக்கு வாழ்க்கைப்படேன்.. இந்தப்பேய்மகன் எங்களை வாழ விடாமல் அடிக்கிறானே..

 

இதை மறக்கவேயில்லை. ஒவ்வொரு நண்பரைப் பார்க்கும்போதும் அவருடைய காதலியின் பெயரைச் சொல்லி, அட நீ இவனைச் சீக்கிரம் காதலித்துத்தொலையேன்.. இவன் தினம் எங்கள் கழுத்தை அறுக்கிறானே என்று சிரிப்போம். அவ்வளவுதான் ஞாபகத்திலிருந்தது

ஆனால் இன்று மீண்டும் வாசிக்கும்போது பெரும் ஏக்கம் வந்து விட்டது. இடையில் வாசித்திருந்தால் இப்போது எழுதியிருப்பதைக் காட்டிலும் சிறந்த கதைகளை எழுதியிருக்கலாமே என்று தோன்றாமலில்லை.

 

வாழ்க்கை புனைவை விட விசித்திரமாதில்லையா? ஒரு கணநேரச்சந்திப்பில் மின்னலிடும் காதல் எப்படி முடியும்அதுவும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன். அப்படியொரு இக்கட்டான சந்தர்ப்பத்த்தில் பாஷ்கா என்ன செய்கிறான் என்கை தேர்ந்த காரோட்டியில் எழுதியிருப்பார் வசீலி. வாசிக்கும் நமக்கே பதட்டம் பற்றிக்கொள்ளும். வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வதெப்படி? பாஷ்காவிடம் கேளுங்கள் இல்லையில்லை வசீலியிடம் கேளுங்கள்.

 

ஸ்தெபானின் காதல் கதையில் இரண்டு முறை மட்டுமே பார்த்த ஏல்லாவைப் பெண் கேட்க தன்னுடைய தந்தையையும் தாத்தாவையும் அழைத்துச் செல்லும் ஸ்தெபானுக்கு ஏற்கனவே ஏல்லாவுக்கு நிச்சயம் செய்யப்போகும் மாப்பிள்ளையும் இருந்தால் எப்படியிருக்கும்? ஒரு கலைஞனால் மட்டுமே இப்படியான சந்தர்ப்பங்களைக் கலையாக மாற்ற முடியும். அதிலும் அந்தக் கடைசிப்பாரா சான்ஸே இல்லை.

 

அசலான சோவியத் கிராமவாசிகளைப் பற்றி அவர்களுடைய ஆசைகள், சிந்தனைகளைப் பற்றிக் கிராம வாசிகளில் ஒரு பாட்டியின்  பேரனின் கதையாக விரிந்திருக்கும்கலை அமைதியுடன்.

 

,யுத்தத்தில் இறந்து விட்டதாக நினைத்த சகோதரன் கிராமத்துக்கு வந்து தம்பியைச் சந்தித்து தங்கள் பாலிய காலத்தைப் பகிர்ந்து விட்டு வந்த சுவடு தெரியாமலேயே செல்லும் கதை இரண்டு கிழவர்கள்.

 

இந்தத் தொகுப்பின் தலை சிறந்த கதையென்றால் அது வாழவிருப்பம் தான். வாழ்க்கையில், தயை, கருணை, இரக்கம், இவற்றுக்கெல்லாம் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று மனிதனின் மனசாட்சியை உலுக்கும் கதை. நிக்கீதீச் என்ற வேட்டைக்காரனுக்கும் சிறையிலிருந்து தப்பித்து ஓடியொளியும் ஒரு கொலைக்குற்றவாளிக்குமிடையில் நடக்கும் அறப்போராட்டம். என்ன அற்புதமான கதை

 

விரட்டும் ஓநாய்களிடமிருந்து சுயநலத்துடன் தப்பித்துக் கொள்ளும் சக கிராமத்தானைத் தொலித்தெடுக்க வந்த இவான் மிலீஷியாக்காரனின் சமரசத்தால் அடங்கிப் போகிறான். ஆனால் கதையின் விசேஷமே அந்த மிலிஷியாக்காரன்

" அங்கே உன்னால் அடிக்க முடியவில்லையோ? " என்று கேட்கும் இடம் தான். ஆகா

 

பழமையையும் புதுமையையும் மோதவிட்டுப் பார்க்கிறார் வசீலி. நவூமும் யூராவும் உரையாடுகிறார்கள் இயல்பாக நாமெல்லாரும் அந்தக் காலத்தில் என்று தொடங்குவோமே அப்படி. மாற்றம் என்பது மாறாதது அது சோவியத்தில் எப்படி மாறியிருக்கிறது என்று அழகாகச் சொல்லும் கதை. அறிவியலறிஞர் பாவ்லவ் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். எப்படி இப்படியான விஷயங்களை எழுதுவது என்பதற்கான அடிப்படைப் பாடம் பழமையும் புதுமையும்

 

மனைவியை இழந்து தனியே வாழும் குளூகவ் அவரைப் போலவே தனியே வாழும் அதாவிதானாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். அதைப் பற்றிப் பேச தான் முன்னொரு காலத்தில் காதலித்த ஓல்கா என்ற கிழவியிடம் ஆலோசனை கேட்கிறார். அதாவிதானாவிடம் ரகசியமாகப் பேசிச் சம்மதம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறார் குளூகவ். ஆனால் என்ன நடந்தது ? ஓல்கா என்ன செய்தாள்?

 

மனித மனதின் விசித்திரங்களை எந்த ..யாலும் புரிந்து கொள்ளவே முடியாது. இந்த விசித்திரங்கள் இருக்கும்வரை எந்தத் தொழிநுட்பத்தாலும் மனிதனை அடிமைப்படுத்தவே  முடியாது

 

வேடிக்கையான ஆள் நகைச்சுவைக்கதை. சுதீக் என்ற கதாபாத்திரம் தன்னுடைய பையிலிருந்து விழுந்த ரூபாயையே யாரோ தவறவிட்டதாகக் கொடுத்து விடு வருகிற வெகுளியான கதாபாத்திரத்தின் கதை.

கதையை இப்படி முடித்திருப்பார்

அவனுடைய முழுப்பெயர் வசீலி யெகோரிச் கினியாஸெவ். அவனுக்கு முப்பத்தொன்பது வயது. அவன் கிராமத்தில் திரைப்படத்தொழில் வினைஞனாக வேலை செய்து வந்தான். துப்பறிபவர்கள் மேலும் நாய்கள் மேலும் அவனுக்கு ஒரே மோகம். சிறுவனாய் இருக்கையில் ஒற்றன் ஆக வேண்டும் என்று கனவு கண்டான்

 

தாய் உள்ளம் விபத்தாக விபச்சாரிகளிடம் சிக்கி பணத்தை இழந்து மிலீஷியாக்காரனின் மண்டையை உடைத்து சிறையில் விசாரணைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மகனைக் காப்பாற்றப் போராடும் தாயின் பரிதவிப்பு தான் கதையென்றாலும் இதற்குள் ஏராளமான சமூக விமரிசனங்களும் இருப்பதைப் பார்க்கலாம். விபச்சாரம், ரவுடித்தனம், லஞ்சம் போன்றவை தலைதூக்கியிருப்பதை வெளிப்படையாகவே காட்டிருப்பார் வசீலி.

 

வழிப்போக்கனின் மகன் கட்டற்றுத் திரியும் சிறை சென்று வந்த எதற்கும் தயாராக இருக்கும் ஒரு இளைஞனான ஸ்பிரிதோன். அங்கு புதிதாக வரும் இரீனாவின்  மீது ஒருதலைக் காதல் கொள்கிறான்.அது எத்தகைய முடிவுக்கு ஸ்பிரிதோனைக் கொண்டு செல்கிறது தெரியுமா? வசீலி கிராம வாசிகள், இரண்டு கிழவர்கள் கதைகளைத்  தவிர அனைத்துக் கதைகளிலும் பொதுவாக எழுத்தாளர்கள் எழுதத்தயங்குகிற உச்சக்கட்ட நெருக்கடிகளை எழுதுகிறார். அந்தத் தருணங்களில் மனித மனங்கள் எப்படி வினையாற்றுகின்றன? என்று அற்புதமாக விவரிக்கிறார்.

 

அதிகாரவர்க்கத்தின் அலட்சியப்போக்கினைச் சிற்பி கதையில் சித்தரித்திருப்பார்தன்னுடைய முன்னாள் காதலியான மாரியாவின் மரணம் பிலிப்பை நிலைகுலையச் செய்கிறரு. இளங்கம்யூனிஸ்டுகளின் புதிய பண்பாட்டுக்கொள்கைகளுக்கும் பழமையான மதரீதியான பண்பாட்டுக்கொள்கைகளுக்குமான போராட்டத்தில் அவர்கள் காதல் பலியாகிறது. சவப்பெட்டியில் கிடக்கும் மாரியாவின் முகத்தைப் பார்க்க முயற்சிக்கும் பிலிப் அவளும் அவனும் வாழ்ந்த வாழ்க்கையைப் பரிசீலனை செய்கிறான். காதலின் தூய மணம் அவனை ஆட்கொள்கிறது

 

வசீலி ஷூக்ஷீனின் கதைகளில் அச்சு அசலான சோவியத் கிராம மக்களின் மனம் ஒவ்வொரு வரிகளிலும் நிரம்பி வழிகிறது. சோவியத் கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையிலான பாரதூரமான வேறுபாடுகள்முரண்பாடுகள், அதிகாரவர்க்கத்தின் அலட்சியம், லஞ்சம், விபச்சாரம், போன்றவையும் பூடகமாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. தொகுப்பை வாசித்து முடித்ததும் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தேன். அருகில் யாரோ ஒருவர் வருவதைப் போல அரவம் கேட்டது. ஸ்தெபான் ராஸின் வேடத்தில் தாடியுடன் வந்த 

வசீலீஷூக்ஷீன் ஆழ்ந்த சிந்தனையுடன் அருகில் வந்து கிசுகிசுத்தார். , 

 

" கலைஞன் யதார்த்தத்தை அச்சு அசலாகச் சித்தரிக்கும்போது அவனால் உண்மையை எழுதாமலிருக்கமுடியாது. நாம் விரும்பும் வகையில் உண்மையை வளைக்க முடியாது. உண்மையை நேர்மையாக எதிர்கொள்ளும் திறன் நமக்கு வேண்டும் 

 

என்று புன்னகையுடன் சொன்னார்

 

எனக்கு அன்புத்தோழர். என்.நன்மாறன் ஞாபகத்துக்கு வந்தார்

 

வசீலி ஷூக்ஷீன் சோவியத் இலக்கியத்தின் எரிநட்சத்திரமே

 

உங்கள் எழுத்தின் பாதையில் எங்களுக்கும் ஒளி காட்டுக!

  

No comments:

Post a Comment