Thursday 28 September 2017

பேசும் தாடி

பேசும் தாடி

முதலில் இந்த அருமையான படைப்பை கொண்டுவந்தஎழுத்தாளர் உதயசங்கர் ,பதிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஓவியர் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது சூர்யாவும் சுகானாவும் பத்து சித்திர குள்ளன்களும் பத்து சித்திர குள்ளிகளும் நம்மையும் அவர்களுடன் சேர்த்து பறக்க வைக்கின்றனர். தேனீக் கூட்டுக்குள்ளையும் , எறும்பின் வீட்டிற்கும் பட்டாம்பூச்சி முதுகில் உப்பு மூட்டையும் ஏற்றி சுற்றி காட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். எனது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் காட்டினேன். தினமும் சின்ன இடைவேளை அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற ஆர்வத்துடன் அவள் காத்திருப்பதை அழகாக ரசித்தேன். கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்கு கதை சொல்வதை விட புத்தகத்தை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்திற்கு அவளுக்கு அதிகாமக விளக்கம் சொல்லவில்லை. அவளே வாசிக்கையில் புரிந்துக்கொண்டிருந்தாள். உதயசங்கர் அவர்களின் எளிமையான மொழி அதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அத்துடன் இந்தக் கதைகளம் வீட்டில் நடப்பதால் கதையை தனதாக்கிக் கொண்டாள். கதையின் முடிவில் தாத்தா-பாட்டி ஊருக்கும் செல்லும் போது இவள் இங்கு சோகமாகிவிட்டாள். "எனக்கு இந்தக் கதையே பிடிக்கல" என்ற அழவும் செய்துவிட்டாள். ஆனால் கதையுடன் முழுவதும் மூழ்கிவிட்டாள் என்பதே நிதர்சனம்.
கதையில் தாத்தா தாடியிலிருந்த அந்த பத்து சித்திர குள்ளனும் ஆச்சியின் சுருக்கு பையிலிருந்த சித்திர குள்ளியும் தற்பொழுது எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். நீங்கள் யாராவது எங்க வீட்டிற்கு வந்தால் உங்கள் மீதும் வண்ண வண்ணப் பொடிகளை தூவி உங்களையும் எங்களுடன் சேர்த்து குட்டியாக மாற்றி வண்ணத்திப் பூச்சி முதுகில் ஏற்றிவிடுவார்கள்.

பிரபு ராஜேந்திரன்



1 comment: