.
கண்ணனின் சிட்டுக்குருவி
உதயசங்கர்
அழகான சிட்டுக்குருவி பொம்மை. போன வாரம்
முடிந்த தேரோட்டத்தில் வாங்கினான்.
கண்ணன். வாங்கியதில் இருந்து
அதைக் கையிலோ பள்ளிக்கூடப்
பையிலோ வைத்துக் கொண்டே
திரிந்தான்.
திருவிழாவில் ஏகப்பட்ட
கூட்டம். பலூன் வியாபாரிகள், பொம்மை
வியாபாரிகள், விதவிதமான தின்பண்டங்கள்
விற்பவர்கள், ராட்டினங்கள், என்று
பார்ப்பதற்கு அவ்வளவு ஆச்சரியமாய்
இருந்தன. கண்ணன் வாயையும்
கண்ணையும் விரியத் திறந்தபடியே
எல்லாவற்றையும் பார்த்தான்.
ஒரு மரத்தடியில்
நீண்ட தாடி வைத்த தாத்தா
பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்தார். வண்ண வண்ணத்துணிகளினால் தைக்கப்பட்ட
பொம்மைகள்.
கருநீல நிறத்தில்
தலையில் கொண்டையுடன் பச்சையும்
நீலமும் கலந்த தோகையுடனும் இருந்த
மயில் பொம்மை அம்மாவுக்குப்
பிடித்திருந்தது. வெள்ளையில் கருப்புப்
புள்ளிகள் போட்ட நாய்க்குட்டி வாலைத்
தூக்கிக் கொண்டிருந்தது. புள்ளிமான்
இதோ நடந்து போய்
விடுவே என்பதைப் போல
இருந்தது. வாயைத் திறந்து
கர்ச்சித்தபடியே வரிப்புலி உட்கார்ந்திருந்தது. சிறகுகளை விரித்து
பறந்தபடியே கழுகு இருந்தது.
எல்லாம் விலங்குகள்
பறவைகள் பொம்மைகள் தான்.
கண்ணனுக்கு அந்தத் தாத்தாவைப்
பார்த்ததும் பிடித்து விட்டது.
அவர் பாடிக்கொண்டே நின்ற
இடத்திலேயே காலை மாற்றி மாற்றி
வைத்து ஆடவும் செய்தார்.
அழகான பொம்மைகளைப்
பாருங்க
வண்ண வண்ணப்
பொம்மைகளைப் பாருங்க
ஆடும் மயில்
பாருங்க
பாடும் குயில்
பாருங்க
கர்ஜனை செய்யும்
சிங்கம் புலி பாருங்க
கண்ணைப் பறிக்கும்
மான்குட்டியைப் பாருங்க
மனதைக் கொள்ளை
கொள்ளும் குட்டி நாயைப்
பாருங்க
வேண்டியதைக் கேட்டு
நீங்க வாங்குங்க..
கண்ணனின் அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் கூட அந்தத் தாத்தாவைப்
பிடித்து விட்டது. கண்ணன்
ஒவ்வொரு பொம்மையாகப் பார்த்துக்
கொண்டு வந்தான். மயிலுக்கும்
சிங்கத்துக்கும் நடுவில் ஒளிந்திருந்த
சின்னஞ்சிறிய சிட்டுக்குருவிப்பொம்மை அவனைப்
பார்த்து கண்ணைச் சிமிட்டியது. வாயைத் திறந்து
” கீச் கீச்
கீச் கீச் கீச் “
என்று கத்தியது.
அவனுக்கு மட்டுமே அந்தச்
சத்தம் கேட்டது. வேறு
யாரும் கவனிக்கவில்லை. அவனுக்கு
அந்தச் சிட்டுக்குருவியிடம் ஏதோ
சிறப்பு இருப்பதாக நினைத்தான்.
அம்மா அப்பாவிடம் சொல்லி
அந்த பொம்மையை வாங்கினான்.
லேசாக இறக்கையின் பக்கம்
ஒரு சிறு கிழிசல் இருந்ததால்
தாத்தா விலையைக் குறைத்துக்
கொடுத்தார்.
அப்போதிருந்து சின்னஞ்சிறிய
சிட்டுக்குருவிப்பொம்மையை அவன் கீழே
வைப்பதேயில்லை. பளபளக்கும் பாசிமணி
போன்ற கண்களும், நல்ல
பிரவுன் நிறத்தில் கருப்பு
நிறக்கோடுகளுடன் கூடிய இறக்கைகளுமாய்
அச்சு அசல் உயிருள்ள சிட்டுக்குருவி மாதிரியே இருந்தது.
இரவில்
தன்னுடைய தலையணைக்கு அருகில்
வைத்து விட்டுப் படுத்தான்
கண்ணன். ஆனால் காலையில் எழுந்ததும்
பார்த்தால் பொம்மையைக் காணவில்லை.
அறை முழுவதும் தேடினான்.
வீடு முழுவதும் தேடினான்.
காணவில்லை.
எங்கே போச்சு?
வீட்டு முற்றத்தின்
கம்பி வளையத்தில் உட்கார்ந்திருந்தது சிட்டுக்குருவிப்பொம்மை. கண்ணனுக்கு
ஆச்சரியமாக இருந்தது. இங்கே
எப்படி வந்தது?
ஒருவேளை எலி
தூக்கிக் கொண்டு வந்திருக்குமோ? என்று நினைத்தான். அப்பா
அம்மாவிடம் சொன்னான். அவர்களும்
அதையே சொன்னார்கள். அப்பா
எடுத்துக் கொடுத்த சிட்டுக்குருவிப் பொம்மையைப் பத்திரமாக டிராயர்
பைக்குள் வைத்தான். இரவிலும்
பையிலிருந்து எடுக்கவில்லை. தூக்கத்திலேயே
அடிக்கடித் தொட்டுப் பார்த்துக்
கொண்டான்.
ஆனால் மறுநாளும்
காலையில் சிட்டுக்குருவிப்பொம்மையைக் காணவில்லை.
நேரே முற்றத்துக்குப் போனான்.
அங்கேயும் இல்லை. கண்ண்னுக்கு
அதிசயமாக இருந்தது.
பொம்மைக்கு உயிர்
இருக்குமா? அன்று முழுவதும் சிட்டுக்குருவிப்பொம்மையைக் காணவில்லை. இரவில்
அவன் தூங்கிய பிறகு
சன்னலிலிருந்து சத்தம் கேட்டது.
கீச் கீச்
கீச் கீச் கீச் கீச்
அவன் கண்விழித்துப்
பார்த்தான். சன்னலில் சிட்டுக்குருவிப் பொம்மை நின்று கொண்டிருந்தது. அவன் எழுந்து அந்தப்
பொம்மையைக் கையில் பிடித்தான்.
“ நீ திடீர்னு
திடீர்னு காணாமல் போயிடறே?
“
திடீரென்று சிட்டுக்குருப்பொம்மையின் அலகு அசைந்தது.
“ தம்பி.. சிட்டுக்குருவிகள் தங்கி வாழ இடம்
இருக்கிறதா என்று தேடிப் போனேன்..”
என்றது சிட்டுக்குருவிப் பொம்மை.
“ செல்போன் டவர்,
மைக்ரோ வேவ் டவர் போன்றவை
வந்ததினால் தான் உங்கள் இனம்
அழிந்து கொண்டு வருவதாகப்
படித்தேன்..”
“ தம்பி அதெல்லாம்
காரணமேயில்லை.. மனிதர்களை அண்டி
வாழும் பறவைகள் நாங்கள்..
முன்பெல்லாம் நாங்கள் கூடு
கட்டுவதற்கு ஏற்ற வகையில் வீடுகள்
இருந்தன. இப்போது காங்கிரீட்
வீடுகளில் கூடு கட்டும் வசதியே
கிடையாது.. முன்பெல்லாம் மண்சாலைகளாக
இருந்ததால் விதைகள், தானியங்கள்,
சிறிய
புழு, பூச்சிகள் உணவாக
கிடைக்கும்.. இப்போது தார்ச்சாலை,
சிமெண்ட சாலை, அதனால்
உணவும் கிடைப்பதில்லை.. ஒரு
விசயம் தெரியுமா?”
என்ன என்பதைப்
போல கண்ணன் சிட்டுக்குருவிப்பொம்மையைப் பார்த்தான்.
“ மனிதர்கள் தங்களைத்
தவிர யாரைப் பற்றியும்
கவலைப்படுவதில்லை.. எந்த உயிரையும்
காரணமின்றி இயற்கை உருவாக்கவில்லை..”
சிட்டுக்குருவிப்பொம்மை சொன்னது.
அதைக்கேட்டுக் கண்ணனுக்கு வருத்தமாக
இருந்தது.
“ இனி நாங்கள்
மனிதர்கள் வாழும் பகுதிக்குள்
வரமாட்டோம்.. மீண்டும் காட்டுக்குப்
போகிறோம்.. நீங்கள் வளர்ந்து
பெரியவர்களாகும்போது இதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.. இயற்கையும்
பூமியும் எல்லோருக்குமானது..”
என்று சொல்லிவிட்டு
கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டுக்குருவிப் பொம்மை பறந்து போய்
விட்டது. திகைத்துப் போய்
நின்று கொண்டிருந்த கண்ணனின்
வாய் முணுமுணுத்தது. .
“ இயற்கையும் பூமியும்
எல்லோருக்குமானது..”
நன்றி - வண்ணக்கதிர்

No comments:
Post a Comment