Sunday 9 November 2014

குழந்தைகளின் உலகைப் புரிந்து கொள்ள ஒரு கவிஞன்

உதயசங்கர்

MukundhN

நமது சமூகத்தில் சரியாகப் புரிந்து கொள்ளப் படாதவர்கள் குழந்தைகள். பெரும்பாலும் நாம் குழந்தைகளை பயிற்சி கொடுத்து பழக்குகிறோம். சர்க்கசில் பழக்கப்படுத்துகிற விலங்குகளைப் போல. குழந்தைகள் இந்த பூமியின் புத்தம் புது மலர்கள் என்பதையோ அவர்கள் பூமியின் வண்ணக்கனவுகள் என்பதையோ எதிர்காலத்தின் சொந்தக்காரர்கள் என்பதையோ மறந்து போகிறோம். குழந்தைகள் குட்டி மனிதர்களே. குழந்தைகளின் மனவுலகம் ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்தது. தரையில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வரிசையைக் கண்டு குதூகலிக்கிற மனம். தீப்பெட்டிகளைக் கோர்த்து ரயிலாக்கி அந்த ரயிலில் சென்னை, மும்பை, டெல்லி, என்று பயணம் போகிற மனம். கைகளினால் ஸ்டியரிங் செய்து பஸ் ஓட்டும் சந்தோசம். மற்றவர்களுக்கு சாதாரணமாய் தெரிகிற ஒன்று குழந்தைகளுக்கு அசாதாரணமாய் தெரியும் நாமும் அந்த அற்புதங்களைக் கடந்து வந்தவர்கள் தான். ஆனால் வாழ்க்கை நெருக்கடியில் நம்முடைய குழந்தைத்தனத்தை இழந்து விட்டோம். குழந்தைகள் ஒரு போதும் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. அவர்களுடைய டூ வும் சேக்கா வும் நிரந்தரமானதில்லை. குழந்தைகள் அன்பும் கருணையும் மிக்கவர்கள். இயல்பிலேயே மிக நல்லவர்கள். இந்தக் குழந்தைகளின் அதிசய உலகத்துக்குள் பெரியவர்களான பிறகு நுழைவதென்பது அவ்வளவு எளிதானதில்லை. ஏனெனில் பெரியவர்களின் உலகம் பெரிதும் பொருளியல் சார்ந்தது. அந்த உலகத்தில் எல்லாம் அவசரம். ஆனால் கவிஞர். முகுந்த் நாகராஜன் மிக எளிதாக குழந்தைகளின் உலகத்துக்குள் சென்று அங்கிருந்து முத்துகளையும், வைர, வைடூரியங்களையும் எடுத்து வருகிறார்.

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போது தான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கே தான் இருக்கிறதாம்

இதெல்லாம் ஒரு காரணமா…?

சரிதானே. ஓடும் பஸ்ஸில் ஜன்னல் சீட் வழியே பின்னால் ஓடிக் கொண்டேயிருக்கும் மரங்களையும், கட்டிடங்களையும் இப்போது தான் பார்க்க வாய்ப்பு வந்தது. அதற்குள் இறங்கு என்றால் வீடு அதற்குள் வர வேண்டுமா? என்று குழந்தை ஆதங்கப்படத்தானே செய்யும். குட்டி மனிதர்களான அவர்களைப் பற்றிய முகுந்த் நாகராஜனின் ஒரு குட்டிக் கவிதையைக் கேளுங்களேன்.

குட்டி

குட்டித் தலையணை, குட்டிப்போர்வை

குட்டி டம்ளர் மற்றும்

குட்டிக் கொட்டாவியுடன்

குழந்தைகள் உருவாக்குகிறார்கள்

ஒரு குட்டி உலகத்தை

அதில் பெற்றோர்களின் பெரிய விரல்களுக்கு

குட்டிக் கவளங்களைச் செய்யும்

பயிற்சியைத் தருகிறார்கள்

இந்த குட்டி உலகத்தைப் புரிந்து கொள்ள வேண்டாமா? அதில் வளர்ந்து வரும் குழந்தைகளின் உளவியல் எப்படி இருக்கும்? குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கும் போது எல்லா வீடுகளிலும் அதை எடுக்காதே… அங்கே வைக்காதே.. உடைச்சிராதே கிழிச்சிராதே கீழே போட்டுராதே என்று குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதமாகவே பெரியவர்கள் பேசுகிறார்கள். இது குழந்தைகளைப் பாதிக்கவும் செய்கிறது. இந்தப் பழியிலிருந்து தப்பிப்பதற்காக குழந்தைகள் ஏதேதோ சொல்கிறார்கள். இதோ கோப்பையை உடைத்த ஒரு குழந்தை என்ன சொல்கிறதென்று கேளுங்கள்.

சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பை

விளையாட்டில் வீட்டுப்பொருட்களை

காலம் காலமாக

உடைத்து வருகின்றனர் குழந்தைகள்

உடைந்த சத்தத்துக்கும்

ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்

நடுவில் இருக்கும் மௌனத்தில்

சிதறிய துண்டுகளில் இருந்து

தப்பிக்கும் வாக்கியங்களை இயற்றுகிறார்கள்

போனவாரம் கண்ணாடிக்கோப்பை ஒன்றை

கை தவறி உடைத்த அதிமதுரா

அவள் அம்மாவுக்கு

சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சி

என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்

உடைந்த கோப்பை இருந்த இடத்தில்

அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து

வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்

காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.

கவிஞர் முகுந்த் நாகராஜனின் நுட்பமான கவித்துவமான பார்வைக்கு இதை விட என்ன வேண்டும்? பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகளை இந்தச் சமூகத்தில் வாழ்வதற்குத் தகுதியானவர்களாக்குவதற்காகவே சிரமப் படுகிறார்கள். குழந்தைகள் இதைப் புரிந்து கொள்ள மாட்டேனென்கிறார்களே என்பது தான் அவர்களுடைய ஆதங்கம். ஆனால் கவிஞர். முகுந்த் நாகராஜன் பெரியவர்களைக் கவலைப்பட வேண்டாம் என்கிறார். அவர்கள் தாங்களாகவே கற்றுக் கொள்வார்கள் என்கிறார். எப்படி என்று கேட்க நினைக்கிறீர்களா?

விளையாட்டாய்

ஓடுவது, துரத்துவது

வீசி எறிவது

குறி பார்த்து அடிப்பது

பிடிப்பது, தப்பிப்பது

மறைந்து கொள்வது

சுற்றுவது, சறுக்குவது

மூச்சு வாங்குவது என

விளையாடி வாழ்க்கைக்குத்

தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்

சிறுவர், சிறுமியர்.

உண்மை தானே. யாரும் துணியாத ஒரு புதிய உலகைப் பற்றி எழுதிய கவிஞர். முகுந்த் நாகராஜனை வாழ்த்துவோம்!

நன்றி- அகில இந்திய வானொலி நிலையம்

1 comment:

  1. கவிஞ்ர் முகுந்த நாகராஜன் பாராட்டிற்கு உரியவர்

    ReplyDelete