Sunday 16 November 2014

தனித்துவமிக்க பெண்குரல்

உதயசங்கர்

vennila

இன்றிலிருந்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப்பாடல்களை எழுதிய புலவர்களுள் பெண்பால் புலவர்கள் ஏராளம். அப்போதே பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்து கவிதை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்திற்குப் பின்னர் காரைக்காலம்மையார், ஆண்டாள் குறிப்பிடத்தக்க கவிஞர்களாக தமிழிலக்கிய வரலாற்றில் பதிவானார்கள். அதன் பிறகு நீண்ட இடைவெளி. 90 களுக்குப் பின்னால் உலகளாவிய அளவில் உருவான இலக்கியப் போக்குகளின் தாக்கத்தில் இப்போது நவீன கால தமிழிலக்கியத்தில் பெண் கவிஞர்களின் குரல் பதிவாகத் தொடங்கியுள்ளது.

இப்புவியில் சரி பாதியாகத் திகழும் பெண்கள் அந்தச் சமத்துவத்தைப் பெற்றிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. தாங்கள் யார்? இந்தப் பூமியில் தங்களுக்கான இடம் என்ன? தங்களின் பங்களிப்புகள் என்று எதுவும் இல்லையா? மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு தங்களுடைய பரிணாம வளர்ச்சி என்ன? சமூகத்தில் இனவிருத்தியைத் தவிர வேறு முக்கியத்துவம் தனக்கில்லையா? சம மதிப்புடன் நடத்தப்படுகிறோமா? சமமான வாய்ப்புகள் கிடைத்திருக்கிறதா? இப்படி ஏராளமான கேள்விகள் பெண்களுக்குத் தோன்றின. அதன் விளைவாக அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தற்காலத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தங்களுக்கான அடையாளத்தைத் தேடும்போதே பெண்கவிதை உருவாகிறது. இந்த உலகத்தைப் பற்றி, தங்களைப் பற்றி, தங்களுடைய தேடல் பற்றி தங்களுடைய விடுதலை பற்றி, பாலினச்சமத்துவம் பற்றியெல்லாம் பெண்களுக்கென்று பிரத்யேகமான பார்வை இருக்கிறது. அவர்கள் தங்களுடைய மொழியில் தங்களுடைய உலகத்தை வெளிப்படுத்தத் துவங்கினார்கள். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் அ.வெண்ணிலா முக்கியமானவர்.

தேவதையைப் போல் வேடமணிந்த

சிறு வயது புகைப்படமொன்று

உங்கள் சேமிப்பில் இருந்தால்

நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்

பத்து வயதில்

முறிந்து விழும் சிறகுகள்

பனிரெண்டு வயதில்

பால்பற்கள் விழுந்து

விஷப்பற்கள் முளைக்கும்

குழந்தை முகம் மாறும்

பதினைந்து வயதில்

விருப்பத்தைப் பொருட்படுத்தாது

சாத்தான் உங்களைத் தேடும்

இருபது வயதில்

குழப்ப ரேகைகள்

முகத்தில் வளரும்

பிறகு

புன்னகைக்க மறப்பீர்கள்

முகம் இறுகிப் பாறையாகும்

தலையில் இரண்டு கொம்புகள் முளைத்து

முட்டிக் கொண்டிருப்பீர்கள்

எதிர்ப்படுபவர்களை

ரத்தம் குடித்து

ரத்தம் கொடுத்து

விகாரமாகிப் போன

உங்கள் முகத்தின் கோரம்

அருவெறுப்பூட்டும்

நிச்சயம் உங்களுக்கு உதவக்கூடும்

உங்களின் சிறுவயது புகைப்படமொன்று.

காலம் குழந்தைமையின் முகத்தைக் கோரமாக்கி விடும் கொடூரத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.வெண்ணிலா. அன்றாட வாழ்வின் நெருக்கடிகளில் சிக்கிய பெண்மொழி தனக்கான தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கிறது.

கை நிறைய மௌனத்தை அள்ளி

இரவின் முகத்தில் வீசினேன்

இருளை ஒரு கோப்பைத் தேநீராக்கி

பருகச்சொல்லித் தந்தது இரவு.

கவிதை மட்டுமே என்னிடம் நிரந்தரக் கையிருப்பாக உள்ளது. வாழ்க்கை உருட்டித்தள்ளி விடும் மேடு, பள்ளங்களில் விழுந்து எழும் நேரங்களில் ஒவ்வொரு முறையும் இழப்பவை ஏராளம். என்னைத் தொலைக்கும் உறவுகள், நான் தொலைக்கும் நண்பர்கள், சில பிறப்பு, சில இறப்பு, துக்கம், அமைதி, மௌனம், என என்னைக்கடக்கும் ஒவ்வொரு கணத்திலும் கவிதை என்னுடனே பயணிக்கிறது. என்று சொல்லும் வெண்ணிலா குழந்தைகளின் உலகம் பற்றி எழுதியுள்ள கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை.

கால் தவறி

லேசாக மிதித்து விட்டேன்

பொம்மையை

அடித்ததை விட

அதிகமாக அழுகிறாள்

குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்ட கவிஞரான வெண்ணிலா. குழந்தைகளின் உலகத்தை நுட்பமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்.

அழும் பொம்மைகளை

குழந்தைகளுக்குப் பிடிக்காது

அழும் குழந்தைகளுக்கு

பிடித்து விடுகின்றன

பொம்மைகளை.

தாயும் குழந்தையுமாக உரையாடல் வடிவாக வெண்ணிலா எழுதியுள்ள கவிதைகளில் பெண்ணுலகம் பற்றிய அவரது சிந்தனைகள், கேள்விகளாக, தெறிப்புகளாக வெளிப்படுகின்றன. இந்தப் பன்முகக்குரலே வெண்ணிலாவின் தனித்துவம். அதுவே அவரை தமிழின் முக்கியமான கவிஞராக அடையாளப்படுத்துகிறது.

புறா ஏம்மா உயரமா

பறக்க மாட்டேங்குது

ஏன் கண்ணு

பாரு பயந்து பயந்து

மாடி மேல் உட்கார்ந்துக்கிது

இது வீட்டுப்புறாப்பா

இவ்வளவு தான் பறக்கும்

வீட்டுப்புறான்னா

உயரப்பறக்காதா

ஆமாம் கண்ணு

பறக்க முடியும்னு வீட்டுப்புறாக்கு

மறந்திடுச்சி

உன்னையும் என்னையும் போல.

நன்றி-அகில இந்திய வானொலி நிலையம்

3 comments:

  1. ///பறக்க முடியும்னு வீட்டுப்புறாக்கு

    மறந்திடுச்சி//
    வெண்ணிலா பாராட்டிற்குரியவர்

    ReplyDelete
  2. //குழந்தை ஒரு துண்டை மேலே போட்டு
    அம்மாவாகிவிடுகிறாள்
    நம்மால்தான் குழந்தையாக முடியவில்லை//

    இன்னும் அந்த கவிதை கண்ணிலேயே நிற்கிறது.

    ReplyDelete