Thursday 14 February 2013

குழந்தைகளின் அற்புத உலகில்-23

கனவாய் ஒரு பள்ளி டோமாயி

உதயசங்கர்dotochan

பெரும்பாலும் நமது சமூகத்தில் நாம் குழந்தைகள் எல்லோரையும் ஒன்று போலவே தான் கருதுகிறோம். ஒவ்வொரு குழந்தையும்

ஒவ்வொரு தனித்தன்மையுடன் வளர்கிறார்கள். அவர்களுடைய தனித்தன்மைகளை கண்டறிவதற்கான பொறுமை நமக்கில்லை.

அப்படியே கண்டறிந்தாலும் அதை வளர்ப்பதற்கான முயற்சிகளும் நம்மிடம் இல்லை. ஏனெனில் நாம் குழந்தைகளின் எதிர்காலம்

குறித்து அச்சப்படுகிறோம். அவர்களுடைய வாழ்க்கையை வடிவமைத்து சீராக்கிக் கொடுக்க வேண்டியது நமது பொறுப்பு என்று

பெற்றோர்கள் கருதுகிறார்கள். ஆகவே சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள வேலை, சம்பளம், பாதுகாப்பு, என்பதைக் குறித்த

அளவுகடந்த எச்சரிக்கையினால் குழந்தைகளின் தனித்தன்மைகளை அலட்சியப்படுத்துகிறோம். அல்லது அடக்கி ஒடுக்குகிறோம்.

குழந்தைகளை வசக்கி வழிக்குக் கொண்டுவரவே குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். பள்ளிக்கூடமும்

குழந்தைகளின் தனித்தன்மையை எப்பாடுபட்டாவது அழிக்க நினைக்கிறது. பெரும்பாலும் பள்ளிகள் அந்த முயற்சியில் வெற்றி பெற்று

விடுகின்றன. ஏனெனில் பள்ளிக்கூடங்களின் கையில் உடல்ரீதியான, மனரீதியான துன்பங்களைத் தருவதற்கான அதிகாரம்

இருக்கிறது. பள்ளிக்கூடத்தால் அப்படி வசக்க முடியாதபோது அது அந்தக்குழந்தையை அவமானப்படுத்தி பள்ளியை விட்டு

நிறுத்துவதற்கான எல்லாவேலைகளையும் செய்கிறது. குழந்தைகளும் பயந்து தாழ்வுமனப்பான்மையினால் ஒடுங்கி பள்ளியை விட்டு

நின்று விடுகின்றன. இப்படி இடைநிற்றலாய் பள்ளிப்படிப்பை விட்ட குழந்தைகள், பள்ளிக்கூடமே வீட்டுக்கு அனுப்பிய குழந்தைகள்,

மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோருக்குமான ஒரு ஜப்பான் பள்ளி தான் டோமாயி. அந்தப் பள்ளியைப் பற்றி அந்தப்பள்ளியில்

படித்த டெட்சுகோ குரோயாநாகி எழுதிய புத்தகம் டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி. சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன் இருவரின்

மொழிபெயர்ப்பில் தமிழில் நேஷனல் புக் டிரஸ்டின் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் குழந்தைக்கல்வியில், நாம் எவ்வளவோ

தூரம் போக வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது. இது கல்வித்துறை சார்ந்த புத்தகம் அல்ல. இது ஒரு அற்புதமான

கதைப்புத்தகம். வாசிக்க வாசிக்க குழந்தைகளுக்கு ஆனந்தத்தையும், பெரியவர்களுக்கு ஏக்கத்தையும் தருகிற புத்தகம்.

ஜப்பானியக்கல்வியியலாளர், சோசாகு கோபயாஷி 1937 ஆம் ஆண்டு துவங்கிய பள்ளி தான் டோமாயி. குழந்தைகளின் சுயமரியாதையையும்,

தனித்தன்மையையும் வளர்க்கச் சுதந்திரமான பாடத்திட்டத்தை அவர் தேர்ந்தெடுத்தார். குழந்தைகள் அனைவருமே பிறக்கும்போது உள்ளார்ந்த

நல்லியல்புகளுடனும், திறமையுடனும் தான் பிறக்கிறார்கள். அவர்கள் வளரும் சூழலும் பெரியவர்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின்

பொய்மையும், பாசாங்கும் தான் அவர்களுடைய இயல்பான நல்லுணர்வுகளையும், திறமையையும் அழித்து விடுகிறது. இந்த நல்லுணர்வுகளை

பாதுகாத்து வளர்க்கவும், அவர்களுடைய தனித்தன்மையை வளர்க்க உதவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் டோமாயி என்ற பள்ளி

உருவானது. பழைய ரயில்பெட்டிகள் தான் வகுப்பறைகள். இயற்கையான சூழல். குழந்தைகளின் உள்ளார்ந்த விருப்பங்களை, அவர்களின்

தனித்தன்மைகளை, கண்டறியும் விதமான பாடத்திட்டங்களை, குழந்தைகள் தாங்கள் விரும்பியபடியே நடந்து கொள்ள வாய்ப்பு, என்று

அந்தப்பள்ளியைப் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது பிரமிப்பாய் இருக்கிறது.

இந்தக்கதையை எழுதிய டெட்சுகோ குரோயாநாகி என்ற டோட்டோ சான் கோபயாஷி நடத்திய தான் கல்வி பயின்ற கதையைத் தான்

எழுதியிருக்கிறார். அவரும் பள்ளியில் முதலாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய சேட்டையைத் தாங்கமுடியாமல் பள்ளியிலிருந்து

நீக்கப்பட்டார். ஆனால் டோமாயியில் அவர் கல்வி பயின்று பின்னாளில் ஜப்பான் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி நடத்துநராக

மாறினார். வாழ்வில் அவர் அடைந்த அத்தனை புகழுக்கும் முன்னேற்றத்துக்கும் டோமாயியில் கோபயாஷியிடம் கல்வி கற்றது தான் காரணம்

என்று சொன்னார். அந்தக் கல்விமுறை தான் அவரை மிகுந்த தன்னம்பிக்கையுள்ளவராக மாற்றியது. காரணம் கோபயாஷியின் பள்ளியில்

குழந்தைகள் தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கும் செய்ல்படுத்துவதற்கும் முழுச்சுதந்திரம் இருந்தது. இந்தப் புத்தகம் ஜப்பானில் வெளியான

ஆண்டே நாற்பந்தைந்து லட்சம் பிரதிகள் விற்றது. அதன் பிறகு உலகின் பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகம். டோட்டா சான்

ஜன்னலில் ஒரு சிறுமி.

அந்தப்பள்ளியில் கற்பது காலை வேளையில் அதுவும் குழந்தைகளின் விருப்பப்படியே நடக்கும். மாலையில் இயற்கையை உற்று நோக்கல்,

உலாவச்செல்லுதல், தாவரங்களைச் சேகரித்தல், படம் வரைதல், பாடுதல், தலைமையாசிரியரின் உரை கேட்டல், என்று திட்டமிடப்பட்டு

நடத்தப்பட்டது. அந்தப்பள்ளியின் தலைமையாசிரியரான கோபயாஷி இந்த நூலை எழுதிய டோட்டோ சானைப் பார்க்கும் போதெல்லாம் நீ

உண்மையிலேயே நல்லபெண் தான். உனக்குத் தெரியுமா? என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது டோட்டோ சானுக்கு அவ்வளவு

தன்னம்பிக்கையை ஊட்டியது. எல்லாக்குழந்தைகளிடமும் அவ்வாறே அவர் சொல்லியிருந்தார். அதன் மூலம் நேர்மறைச்சிந்தனைகளை மனதில்

விதைக்கும் அவருடைய நல்லெண்ணம் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியில் படித்த எல்லோருமே ஏதாவதொரு துறையில் சிறந்து

விளங்கினார்கள்.

டோமோயிப் பள்ளியில் பள்ளிநேரம் முடிந்த பின்னும் யாரும் வீட்டுக்குப் போக விரும்புவதில்லை. அதே போல காலையில் பள்ளிக்கு

வருவதற்கும் கொஞ்சமும் தாமதிப்பதில்லை. டோமாயி பள்ளி அப்படிப்பட்டதாக இருந்தது என்று டெட்சுகோ கூறுகிறார். அதைக் கேட்கும்போது

நமது பள்ளிகளையும் நினைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. காலையில் எழுந்தவுடனேயே பள்ளிக்கூடத்துக்குப் போகவேண்டுமே என்ற

கவலையுடனும், மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் சிறையிலிருந்து விடுதலையான உணர்வுடனும் வருகிற நமது குழந்தைகளையும்

நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆரம்பக்கல்வியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. 1930-களிலேயே உலகம் முழுவதும்

இப்படியான சிந்தனைகள் எப்படி பரவியிருந்தன என்பதைத் தான் டோட்டோ சானும் சொல்கிறார்.

நம்முடைய குழந்தைகள் சுயமரியாதையுள்ளவர்களாக, சுயசிந்தனையுள்ளவர்களாக, தன்னம்பிக்கை மிக்கவர்களாக, நல்லுணர்வு மிக்கவர்களாக,

திறமையானவர்களாக வளர்வதற்கும், வாழ்வை எதிர்கொள்வதற்கும் அவர்களுடைய ஆரம்பக்கல்வியில் பெரும்புரட்சியே செய்ய

வேண்டியுள்ளது. அதன் முதல்படி குழந்தைகளும், பெற்றோரும், ஆசிரியர்களும், மற்றவர்களும் டோட்டா சான் சன்னலில் ஒரு சிறுமியை

வாசிக்க வேண்டும். வாசித்து யோசிக்க வேண்டும்.

நன்றி- இளைஞர் முழக்கம்  

1 comment:

  1. அருமையான பதிவு. நன்றி.
    இப்போது படிக்க எளிதாக இருக்கிறது. தங்கள் முயற்சிக்கு நன்றி.

    ReplyDelete