Wednesday 5 December 2012

தாகமிக்க குழந்தைகள்

 

உதயசங்கர்ayeesha

 

எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் தீராத தாகம் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளிடம் இருந்து கொண்டேயிருக்கும். கடலைக் குடித்தாலும் தீராத அந்த ஆர்வத்தை, குறுகுறுப்பை, அர்ப்பணிப்பை, பள்ளிக்கூடங்கள் தான் முதலில் வளரும் செடியின் வேரில் வெந்நீர் ஊற்றுவது போல முரட்டுத்தனமான கல்விமுறையினால் அழிக்கின்றனர். கேள்விகளே இல்லாமல் பதில்களை மட்டும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்து மதிப்பெண் பெற வைக்கின்றனர். கேட்பதற்கு ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தாலும் ஒரு வழிப்பாதையாகக் கல்விமுறையும் அதை யந்திரமயமாய் கையாள்கிற ஆசிரியர்களும் குழந்தைளிடம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும்? ஒரே குரல் அதிகாரமாய் ஓங்கி ஒலிக்கும் பள்ளிக்கூடங்கள் சிறு முணுமுணுப்புகளைக் கூடச் சகித்துக் கொள்வதில்லை. வதைகளின் மூலம் பிஞ்சுக் குழந்தைகளின் மேதைமைத் திறனை உருத்தெரியாமல் நசுக்குகின்றனர். எதிர்கால சமூகத்தை உருவாக்கும் உன்னதமான பணியில் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன என்பதை பள்ளிக்கூடங்களும் உணர்வதில்லை, பெற்றோர்களும் உணர்வதில்லை.

எந்த சமூக அமைப்பும் தனக்குச் சாதகமான மக்கள் திரளை உருவாக்குவதற்கு தான் அரசு யந்திரத்தைப் பயன்படுத்தும். அதற்கு இசைவான கல்விமுறை, சட்டம், நீதி, அறிவியல் என்று எல்லாத்துறைகளையும் உருவாக்கி மக்களைத் தன் வசப்படுத்திக்கொள்ளும். அப்படித்தான் இன்றையக் கல்வி முறையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றையப் பள்ளிக்கூடங்கள் பற்றியும், கல்விமுறை பற்றியும், நம் மனதை உலுக்கும் கேள்விகளை நமக்கு முன்னால் வைக்கிறது, இரா.நடராசன் எழுதிய ஆயிஷா என்ற சிறு நூல். அது ஒரு கதை தான். ஆனால் கதையல்ல. பள்ளி செல்லும் எல்லாக்குழந்தைகளின் பள்ளிவாழ்க்கையில் ஒரு முறையேனும் சந்திக்கிற அநுபவம். மரத்துப்போன, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, தன்னை விட வலிவில் குறைந்த எளிய குழந்தைகளின் மீது தன் அதிகாரத்தைத் தண்டனைகள் மூலமாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு இது அன்றாட நிகழ்வு.

குழந்தைகளைக் கொண்டாடுவதாய் பம்மாத்து பண்னிக் கொண்டிருக்கும் நம் சமூகத்தின் முகத்தில் ஆயிஷா ஓங்கி அறைகிறாள். இதோ இப்போது கூட பாகிஸ்தானில் மதவெறியர்களின் மதவெறிக்கு மாலாலா இலக்காகியிருக்கிறாள். இத்தனைக்கும் அவள் விரும்பியது வேறொன்றுமல்ல. கல்வி. அவளும் அவளொத்த மற்ற பெண்களும் கல்வி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டாள். மதத்தின் பெயரால் சமூகத்தின் நாகரீக வரலாற்றைப் பின்னுக்குத் தள்ள நினைக்கும் காட்டுமிராண்டிகளுக்கு அது பொறுக்கவில்லை. அவளைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். மாலாலா உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். இந்த மாதிரியான மதவெறிக் காட்டுமிராண்டிகள் எல்லாமதங்களிலும் இருக்கிறார்கள். எந்த மதமும் பெண்களை உயர்வாகப் பேசவில்லை. எல்லாமதங்களின் வேதங்களிலும் பெண்களை இரண்டாம்தர பிரஜைகளாக, இழிவானவர்களாக, எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியர்களாகவே சுட்டப்படுகிறார்கள். இந்தக் கதையில் வருகிற ஆயிஷாவுக்குக் கேள்விகள் பிறந்து கொண்டேயிருக்கின்றன. மற்றவர்களைப்போல இல்லாமல் அவள் அந்தக் கேள்விகளைத் தொடர்ந்து போகிறாள். அந்தக் கேள்வி அவளைப் புத்தகங்களை வாசிக்கும்படி தூண்டுகிறது. ஆசிரியர்கள் திருப்பிக் கூடப் பார்த்திராத புத்தகங்களை வாசித்து அடிக்கோடிட்டு வைக்கிறாள். அதன் பிறகும் அவளுக்குப் புரியாத விஷயங்களை ஆசிரியர்களிடம் கேட்கிறாள். அங்கே தான் ஆயிஷா ‘ கவனிக்கப்’ படுகிறாள். இப்படிப்பட்ட ஒரு குழந்தையைக் கொண்டாடுவதற்குப் பதில் தண்டிக்கிறார்கள். அவளுடைய வகுப்பிற்கு வரும் எல்லாஆசிரியர்களும் அவளைத் தலைவலியாக நினைக்கிறார்கள்.

எதையெதையோ தின்று செரிமானம் ஆகாமல் மயங்கிக் கிடக்கிற நம்மை உலுப்பி யதார்த்தத்தைப் பார்க்கச் சொல்கிறாள். நம்முடைய பள்ளிக்கல்வி குறித்த தீவிரமான விவாதத்தைத் தொடங்குகிற துவக்கப்புள்ளியாக ஆயிஷா இருக்கிறாள். காலங்காலமாக பள்ளிகளில் குழந்தைகள் அதிலும் பெண்குழந்தைகள் அநுபவித்து வரும் கொடுமைகளை அதற்காக அவர்கள் தங்கள் உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியிருப்பதை வாசிக்கும் போது இந்தச் சமூகத்தின் மீது கோபமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆத்தாமையும் ஆயிஷாவை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வரும். இந்த ஒரு புத்தகத்திற்காகவே தமிழ்ச்சமூகத்தால் இரா.நடராசன் என்றென்றும் நினைக்கப்படுவார்.

ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறது. ஆனால் இந்தக் கதையைச் சொல்கிறவரும் ஆசிரியர் தான். மரத்துப்போன செக்குமாட்டு நடைமுறையிலேயே பழக்கப்பட்ட ஆசிரியர் தான். அவருக்கு ஆயிஷா தான் போதிமரமாக இருக்கிறாள். ஞானம் கிடைத்த அவர் ஆயிஷாவுக்கு ஆறுதலாக இருக்கிறார். அவரே இந்தக்கதையில் ஒரு இடத்தில்

“ பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்கள் ஆகி விட்டன. நானும் அவர்களது கூட்டத்தில் ஒருத்தியா? எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் ( அதுவும் முக்கியக் கேள்விகளுக்கு விடைகளை மட்டும் ) மாணவர்கள் உருமாற்றம் அடைந்து விட்டனர். எல்லாமாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை எண், தேர்வு எண், பெற்றெடுக்கும் மதிப்பெண்கள், எங்கும் எண்கள், எண்களே பள்ளிகளை ஆள்கின்றன. எல்லா ஆசிரியர்களுமே ஏதாவது ஒருவகையில் மாணவரின் அறிவை அவமானப்படுத்துகிறார்கள்…”

பள்ளியைப் பற்றிய விமரிசனத்தை முன்வைக்கிறார். ஆம் உண்மையில் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை அவமானப்படுத்துகின்றன. எல்லாவற்றைப்பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் குழந்தைகளிடமே முழுவீச்சுடன் இருக்கிறது. பள்ளிக்கூடங்கள் ஏற்கனவே முன் தயாரிக்கப்பட்ட கேள்விகள், அதற்கான பதில்கள், மதிப்பெண்கள், ரேங்க், என்று மாணவர்களையும் ஒரு செக்குமாட்டு நடைமுறைக்குள் கொண்டு வந்து விடுகின்றன. பள்ளியை விட்டுப்போனதுமே படித்ததெல்லாம் மறந்து மரத்துப்போன இன்னொரு செக்குமாட்டு வாழ்க்கைக்குள் சிக்கி விடுகிறார்கள். நம்முடைய கல்விமுறை குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறாள் ஆயிஷா. ஒவ்வொரு முறை ஆயிஷாவை வாசிக்கும் போதும் நம் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் படும் சித்திரவைதைகளை நினைத்து கண்கலங்கும்.

பாரதி புத்தகாலாயம் வெளியீடாக வெளிவந்து லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஆயிஷா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி, பள்ளிக்கூடங்களைப் பற்றி, கல்விமுறை பற்றித் தெரிந்து கொள்ள, ஒவ்வொரு வீட்டிலும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். ஆசிரியர்கள் தங்களை உரசிப்பார்த்துக் கொள்ள, தங்கள் கற்பிக்கும்முறை குறித்து மறுபரிசீலனை செய்ய, தங்களை சுயவிமரிசனம் செய்து கொள்ள, தினமும் ஒரு முறையேனும் ஆயிஷாவை வாசிக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய குழந்தைகளின் கேள்விகளை அலட்சியப்படுத்தாமல், அவமானப்படுத்தாமல், இருக்க நம்முடைய சமூகம் கற்றுக் கொள்ளும். இந்தச் சிறுகதை மூலம் தமிழிலக்கியத்தில் நீங்காத இடம் பிடித்த இரா.நடராசனை என்றென்றும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தோன்றும் 

நன்றி-இளைஞர் முழக்கம்

2 comments:

  1. ஆயிஷா கதை மிகவும் அருமை.இக்காலத்தில் கல்வி ஒரு விலைபேசும் வியாபாரமாக ஆகிவிட்டது

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete