Thursday 22 November 2012

வர்ணாசிரமத்தின் உடலரசியல்

 

உதயசங்கர்Mohan Das (52)

 

வேட்டைச்சமூகம் மறைந்து வேளாண்சமூகம் உருவாகத்துவங்கும் போது குடிமைச்சமூகத்தில் வேலைப்பிரிவினைகள் தோன்றின. இந்த வேலைப்பிரிவினைகள் தான் முதன்முதலில் மனிதர்களை மேல் கீழ் அடுக்குகளில் பிரித்து வைத்த ஆதிப்பிரிவினை எனலாம். ஆனால் இந்த அடுக்குகளில் இருந்த மனிதர்களுக்கு அந்த அடுக்கில் தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. ஒரு அடுக்கிலிருந்து இன்னொரு அடுக்கிற்கு மாறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை. வேலைப்பிரிவினையின் அடிப்படையில் நீர்மையாக அமைந்த ஒரு பிரிவினை மட்டுமே அப்போதைய குடிமைச்சமூகத்தில் இருந்தது. உதாரணத்துக்கு வேளாண்மை செய்தவர் மருத்துவராகவும், மருத்துவராக இருந்தவர் தச்சுவேலை செய்யவும் அதனடிப்படையில் அந்தந்தத் தலைமுறை மனிதர்கள் வேலைப்பிரிவினையின் அடுக்குகளில் பிரித்து வைக்கப்பட்டனர். இதே மாதிரி பிளட்டோவின் உலோகத்தத்துவமாகவும் கிரேக்கத்தில் பிறந்தது. மனிதர்களை தங்கமாகவும், வெள்ளியாகவும், தாமிரமாகவும், இரும்பாகவும் பிரித்திருந்தது அந்தத் தத்துவம். ஆனால் எந்த உலோகமும் எந்த உலோகமாகவும் உருமாற்றம் அடையும்படியான நீர்மையான விதிமுறைகள் அதில் இருந்தன. அதனால் ஸ்பார்ட்டகஸ் என்ற அடிமை அரசனாகவும் முடிந்தது. இந்த நீர்மையான அமைப்பில் ஒரு ஜனநாயக உணர்வு இருந்தது. குடிமைச்சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எந்த அடுக்கிலிருந்தும் எந்த அடுக்கிலும் மாறுவதற்கான வாய்ப்புகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. பிராமணீயம் முதலில் இதைத் தகர்த்தது. நீர்மையான இந்த வேலைப்பிரிவினைகளை தாங்கள் கைப்பற்றிய ஆன்மிக அதிகாரத்தின் துணையோடு இறுகச் செய்தது. வேலைப்பிரிவினைகளை பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் கொண்டு வந்தது. அதன் மூலம் ஒரு புதிய உடல் எந்த சாதியில் பிறக்கிறதோ அந்த உடல் அந்தச் சாதியினரின் தொழிலைச் செய்யவேண்டும். அந்த உடல் கருப்போ, சிவப்போ, முட்டாளோ, புத்திசாலியோ, பலவானோ, பலகீனனோ, எப்படியிருந்தாலும் அந்த உடல் அது பிறந்த சாதிக்குரிய தொழிலைச் செய்யவேண்டும். வர்ணாசிரமக்கோட்பாட்டின்படி அந்தச் சாதிக்குரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

குடிமைச்சமூகத்தில் உடலுழைப்பு, மூளையுழைப்பு என்று வேலைப்பிரிவினைகளைச் செய்து கொண்டிருந்த உடல்களை சுத்தம்/அசுத்தம் என்ற அடிப்படையிலேயே மனுஸ்மிருதி பிரித்தது. உடலுழைப்பை அசுத்தமானதாகவும் மூளையுழைப்பு சுத்தமானதாகவும் நிலை நிறுத்தியது. சாதியப்படிநிலைகளில் பிராமணரைத் தவிர சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், எல்லோரையும் சுத்த/அசுத்தத்தின் படிநிலையில் வரிசைப்படுத்தியது. அந்த வரிசையின் உயர்ந்த அல்லது மேல் படியில் பிராமணர்கள் தங்களை இருத்திக் கொண்டனர். அதற்கு அவர்கள் கைப்பற்றிய ஆன்மீக அதிகாரம் பயன்பட்டது. வர்ணாசிரமத்தின் அடுத்தடுத்த படிநிலைகளில் அடுத்தடுத்த சாதிகளை இருத்தி வைத்தனர். எந்தப்படிநிலைகளிலும் இல்லாமல் கீழே சேற்றில் பஞ்சமர்களை வீழ்த்தினர். ஒப்பீட்டளவில் சுத்தமும் அசுத்தமும் தீண்டாமைத் தத்துவத்தின் அளவுகோலாகப் பயன்பட்டது. அதாவது தற்காலிகத் தீண்டாமை தீட்டு என வரையறுக்கப்பட்டு அதனைக் கழிப்பதற்கென ( சுத்தப்படுத்துவதற்கென ) சடங்குகள் உருவாக்கப்பட்டு அதைப் பிராமணர்கள் செய்வதன் மூலம் தீட்டான மனிதர்கள், இடம், பொருள், மீண்டும் தங்கள் பழைய நிலைமையை அடைவார்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை (பிள்ளை பிறந்த வீடு, பூப்படைந்த வீடு, இறந்தவீடு, )தற்காலிகத் தீண்டாமை என்கிற தீட்டுகளை ஒவ்வொரு சாதியினரும் சடங்குகள் மூலமாக கழிக்கின்றனர். அதனால் அவர்களை தீண்டாமை என்ற தத்துவத்தை அவர்களுடைய முழுவாழ்வில் கடைப்பிடிக்கச் செய்திருக்கிறது அதனால் தான் எல்லாச்சாதியினர் மனதிலும் தீட்டு, தீண்டாமை ஒரு தவறாகவோ, அபத்தமாகவோ, அருவெறுப்பாகவோ தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தீண்டாமையின் உச்சத்தில் பிராமணர்கள் தங்களை இருத்திக் கொண்டார்கள். அதன் அதலபாதாளத்தில் தலித்துகளை வைத்தது. அதாவது இன்னொரு வகையில் வியாக்கியானம் செய்தோமானால் தீண்டாமையின் உச்சத்தில் இருக்கிற பிராமணர்கள் யாரையும் தீண்டக்கூடாது, அதே போல அவர்களையும் யாரும் தீண்டக்கூடாது. பிராமணர்களைத் தீண்டியவர்கள் தீட்டாவதில்லை. அவர்கள் பிராமணரைத் தொட்டதினால் ஏற்பட்ட தீட்டைப் போக்கக் குளித்துச் சுத்தம் செய்து கொள்வதில்லை. ஆனால் மற்றவர்களைத் தீண்டிய அல்லது மற்றவர்களால் தீண்டப்பட்ட பிராமணர் தீட்டாகி விடுகிறார். அவர் மற்றவர்கள்தீண்டியதால் அல்லது தீண்டப்பட்டதால் ஏற்பட்ட தீட்டை சடங்குகள் மூலமோ குளித்துச் சுத்தம் செய்தோ தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறார். இப்படியே தீண்டாமையின் கீழ்நிலையில் இருக்கும் தலித்துகளின் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அவர்கள் மற்றவர்களைத் தீண்டியதால் அல்லது தீண்டப்படுவதால் அவர்கள் தீட்டாவதில்லை. அதற்காக அவர்கள் தீட்டுக் கழிப்பதில்லை. ஆனால் அவர்களைத் தீண்டியவர்கள் அல்லது அவர்களால் தீண்டப்பட்டவர்கள் தீட்டாகி விடுகிறார்கள். அவர்கள் தீட்டுக் கழிக்கிறார்கள். ஆக ஒரே செயல் வர்ணாசிரமக்கோட்பாட்டின் உச்சத்தில் இருக்கிற பிராமணர்களுக்கு மேன்மையாகவும் அதன் அடிமட்டத்தில் இருக்கிற தலித்துகளுக்கு கீழ்மையாகவும் மாறியது. ஆன்மீக அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த தன் இருத்தலுக்கான அத்தியாவசியத் தேவையாக தீண்டாமையை உருவாக்கி அதை நிலைநிறுத்தியது. அது மட்டுமல்ல மற்ற சாதியினருக்கும் அதை மடைமாற்றம் செய்தது. தீண்டாமை என்பது பிராமணியம் உடலுழைப்பின் மீது கொண்ட வெறுப்புணர்வு. அந்த வெறுப்புணர்வை உடல்களின் மீது விதித்தது. இந்த சாதியில் பிறந்த உடல் தூய்மையானது என்றோ தூய்மையற்றது என்றோ பிறப்பின் அடிப்படையில் உறுதிப்படுத்தியது. அதற்கு தூய்மை/ தூய்மையின்மை என்ற தத்துவார்த்த விளக்கத்தைக் கொடுத்தது. அதற்கு பஞ்சபூதத்தத்துவத்தைப் பயன்படுத்தியது தான் விநோதம்.

இந்த உலகம் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. பஞ்சபூதங்கள் இல்லையெனில் உலகம் இல்லை. இவை அனைத்தும் சமமானவை. தூய்மையானவை. பரிசுத்தமானவை. தூய்மை செய்பவை. தன்னைத்தானே தூய்மை செய்து கொள்பவை. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லையெனினும் உலகம் இல்லை. இந்த உலகம் நிலைத்திருக்க பஞ்சபூதங்கள் அவசியமானவை. இயற்கையின் அங்கமான மனித உடல்களிலும் இந்த பஞ்சபூதங்கள் இருப்பது இயற்கையே. வியர்வை, மலம், மூத்திரம், சளி, வாயுக்கள், என்ற ஐந்து தூய்மையின்மைகள் உடலின் இயங்கியலில் வெளிப்படுவது இயல்பு. இந்தத் தூய்மையின்மைகளை வைத்து உடலுழைப்பு செய்யும் உடல்களை தூய்மையற்ற உடல்கள் என்றும் எனவே தீண்டத்தகாத உடல்கள் என்றும் வரையறுத்தது பிராமணியம். தீண்டத்தகுந்தவர்கள் தங்கள் அசுத்தங்களைக் கொட்டும் கிட்டங்கியாக தீண்டத்தகாதவர்களை வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

பஞ்சபூதங்களின் நேர்மறையான அர்த்தத்தை மாற்றி அதற்கு எதிர்மறையான அர்த்தத்தைக் கொடுத்து தங்களுடைய அதிகாரப்படிநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது பிராமணியம். தீண்டத்தகாதவர்களை அந்த நிலையிலேயே வைத்திருப்பதற்கு இந்த பஞ்சபூதங்களையே பயன்படுத்தவும் செய்கிறது. நிலமே தீட்டானதாக மனுஸ்மிருதி சொல்கிறது. நிலத்தில் உழைப்பைச் செலுத்துவதைத் தவிர அவர்களை நிலத்தை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. நீர் அவர்களுக்கு விலக்கப் பட்டிருக்கிறது. காற்று வீசும் திசையிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பையும் அவர்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தமுடியாது. ஆனால் நெருப்பினால் அவர்களை புடம் போடுவார்கள் ( நந்தன் ) வெளியிலிருந்தும் அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி அவர்களுக்கு பஞ்சபூதங்களையும் விலக்கிவைத்து அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக, அசுத்தமானவர்களாக காட்டுவதில் தந்திரமாக செயல்பட்டிருகிறது பிராமணியம்.

இயற்கையின் அங்கம் தான் உடல் என்பதால் பஞ்சபூதங்கள் எல்லாஉடல்களிலும் இருக்கின்றன. அப்படியென்றால் எல்லாஉடல்களும் அது மூளையுழைப்பு உடலாக இருந்தாலும் சரி, உடலுழைப்பு உடல்களாக இருந்தாலும் சரி, சமமான மதிப்புடையவையே. சமமான மதிப்புடைய உடல்களுக்கிடையில் சமத்துவம் வேண்டும். இதற்கு பஞ்சபூதங்களின் நேர்மறையான அர்த்தத்தை மீட்டெடுக்க வேண்டும். எல்லாமூலகங்களும் முக்கியமானவை. எந்த ஒரு மூலகமும் எந்த ஒரு மூலகத்தை விட குறைந்ததில்லை. அதே போல யாரும் யாருக்கும் குறைந்தவரில்லை. இந்த சமத்துவம் வருவதற்குத் தீண்டாமை ஒழிப்பு என்ற மேலோட்டமான கருத்து போதாது. ஏனெனில் ஏற்கனவே சொன்ன மாதிரி எல்லாசாதியினரும் இந்தத் தீண்டாமையை தீட்டு என்ற தற்காலிக வடிவத்திலேனும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டு வருகிறார்கள். அதற்கு அவர்களுடைய மனம் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய மனதை வசப்படுத்துவதற்காகவே சடங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே சடங்குகள் இருக்கும் வரை தீட்டு, தீண்டாமை இருக்கும். சாதிகள் இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். எனவே அம்பேத்கார் சொன்ன மாதிரி சாதிகள் ஒழிந்தால் தான் பிராமணியம் ஒழியும். பிராமணியம் ஒழிந்தால் தான் மானுட சமத்துவம் மலரும்.

நன்றி- மலைகள் இணைய இதழ்

புகைப்படம்- மோகன்தாஸ்வடகரா

1 comment:

  1. தோழர் வணக்கம். எளிய நடையில் வலிய கருத்துகள்.

    ReplyDelete