Showing posts with label Chromosome mutation.. Show all posts
Showing posts with label Chromosome mutation.. Show all posts

Wednesday, 17 September 2025

குழந்தைகளுக்குத் தத்துவமா? -3

 குழந்தைகளுக்குத் தத்துவமா? -3

மனிதன் மாறி விட்டான்.

உதயசங்கர்





விலங்குகள் பறவைகள் பூச்சிகளின் சுய செயல்பாடு


தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவை தானாகவே செயல்படுகின்றன. அவை மனிதர்களைப் போல சுதந்திரமாக, படைப்பூக்கமிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட செயலுக்கு எதிர்வினை புரிகின்றன. அந்த எதிர்வினை தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான செயல்பாடே. உயிர்வாழ்தலும் இனப்பெருக்கமும்தான் அவற்றின் அடிப்படை நோக்கம். அதேமாதிரித்தான் விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் செயல்படுகின்றன.


உயிர் வாழ்தலும் இனப்பெருக்கமும்


உயிர் வாழ்தலுக்கு இரையை அடையாளம் காணுதல், அதாவது எதைச் சாப்பிடலாம். எதைச் சாப்பிடக்கூடாது என்று தேர்ந்தெடுத்தல். இரையைத் தேடுவது, அதாவது சாப்பிடும் இரை அதிகமாக இருக்கும் இடங்களில் தன்னுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளுதல். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதல். எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு, இயற்கைப் பேரிடரிலிருந்து பாதுகாப்பு, இதற்கான தகவமைப்புடன் கூடிய உடலமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல்.


அடுத்தது இனப்பெருக்கம்.


இயற்கையில் தங்களுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் தக்கவைத்துக் கொள்ளவும் உணவுச்சங்கிலியில் தன்னுடைய இருத்தலின் மூலம் தன்னைச் சார்ந்தோ அல்லது தான் சார்ந்தோ இருக்கக்கூடிய விலங்குகளுக்கு உதவிசெய்வது போன்றவற்றிற்கு இனப்பெருக்கம் அவசியம்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும். புற்கள் இல்லையென்றால் அவற்றை மேயும் தாவரஉண்ணிகள் மறைந்துவிடும். தாவரஉண்ணிகள் இல்லையென்றால் அவற்றை இரையாகச் சாப்பிடும் ஊனுண்ணிகள் மறைந்துவிடும்.


ஒரு மானைப் புலி வேட்டையாடுவதைப் பார்க்கும் நாம் பரிதாபப்படுகிறோம். ஆனால், மானைச் சாப்பிடும் விலங்குகள் இல்லையென்றால் என்ன ஆகும்?

மான்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகிவிடும். அவை பூமியில் பச்சையாக வளரும் பெரும்பாலான தாவரங்களைச் சாப்பிட்டுவிடும். அந்தத் தாவரங்களைச் சார்ந்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள பூச்சிகள், புழுக்கள் மறைந்துவிடும். அந்தப் பூச்சிகள், புழுக்களைச் சாப்பிட்டு வாழும் பறவைகளும் சிறுவிலங்குகளும் மறைந்துவிடும்.


இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கை ஒரு வலைப்பின்னல் மாதிரி அனைத்து உயிர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. நுணுக்கமான வைரஸாக இருந்தாலும் சரி, உருவத்தில் பெரிய யானையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி குணம், உடல், பழக்கவழக்கங்கள், உணவுமுறை, இனப்பெருக்கம் ஆகியவற்றை இயற்கை உருவாக்கியிக்கிறது. அல்லது ஒவ்வொரு உயிரும் இயற்கையில் தாங்கள் வாழ்வதற்கு ஏற்ப சிறப்பு குணங்களை, தகவமைப்புகளைப் பரிணாமவளர்ச்சியில் பெற்றிருக்கின்றன.


இலைவெட்டி எறும்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செய்திருக்கிறது. கரப்பான்பூச்சிகள் இரண்டரை கோடி வருடங்களாக அழியாமல் அணுகுண்டு தாக்குதலில்கூட அழியாமல் இன்றுவரை இருக்கிறது. இப்படிச் சிறப்பான குணாதிசயங்கள் ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது. அதைப் பற்றிக் கூடுதலாக நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளலாம்.


ஆனால், நாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டியது: அந்த உயிரினங்கள் அதற்கு முன்னால் எத்தனை லட்சம் ஆண்டுகளாக மாற்றங்களை எதிர்கொண்டிருக்கும் என்பதே.


இந்த மாற்றங்கள் தானாக உருவானவையா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டவையா? உண்மை என்ன?

புலனுணர்விலும் அறிவிலும் கீழ்ப்படியில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தாங்கள் இப்படி மாறவேண்டும், இப்படி மாறக்கூடாது என்றெல்லாம் முடிவுசெய்யும் அளவுக்கு சிந்திக்கத் தெரியாது.


அந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த உயிரின் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (Survival Instict), அதன் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவு. அதேபோல புதிய உயிர்கள் தோன்றுவதற்கு மரபணுக்களில் நிகழும் மாற்றம் அல்லது திடீர்மாற்றமே காரணம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?


ஹோமோ சேப்பியன்ஸ் என்கிற அறிவியல் பெயர் சூட்டப்பட்ட நாம் தோன்றியதுகூட, மரபணுக்களில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்தான் (Chromosome Mutations) என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.


ஆக விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளுமேகூட தங்களுடைய வாழ்க்கையை இயற்கையைச் சார்ந்து தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் இயற்கையைப் பாதிப்பதில்லை. இயற்கையை ஒட்டிய சிந்தனையையும் தத்துவத்தையும் அவை கொண்டிருக்கின்றன என்று சொல்லலாமா?

இவற்றிலிருந்து மனிதன் மட்டும் மாறுபடுகிறான். எப்படி?


( தத்துவம் அறிவோம் )நன்றி - www.iyal.net