“இயற்கையின் அற்புத உலகில்” –
பேரா.சிவதாஸ்
தமிழில் - உதயசங்கர்
நூல் அறிமுகம்
வி.லெட்சுமி
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
செட்டிகுளம்.
இயற்கையின் அற்புத உலகில் ஒரு குட்டிப் பாப்பாவின் கதை. குட்டிப் பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள்.
தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயமாகவும் ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள். அந்த அதிசயத்தை ஆராய்ந்து பார்க்கிறாள். அதற்கான காரணத்தைப் பொறுமையாக கண்டுபிடிக்கிறாள். தான் கண்டுபிடித்த விஷயங்களைப் பற்றி யோசிக்கிறாள். அப்படி கண்டுபிடித்த தன்னைப் பாராட்டிக் கொள்கிறாள். தன்னை ஒரு துப்பறியும் நிபுணராக, கண்டுபிடிப்பாளராக நினைக்கிறாள்.
எதிர்காலத்தில் இயற்கை அறிவியலாளராக உருவாக வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உருவாகிறது.
வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன?
பார்க்க அருவருப்பாக தெரிகின்ற புழுக்களின் கதை என்ன?
அந்த புழுவே தன்னுடைய வரலாற்றைச் சொன்னால் எப்படி இருக்கும்?
கட்டெறும்புகள் தங்கள் வாயில் முட்டைகளோடு ஏன் வெயிலில் காய்கின்றன?
கடி எறும்புகள் ஏன் படையெடுத்து மரத்தின் வேரை நோக்கி ஓடுகின்றன?
குழி பறித்து தவறி விழும் எறும்புகளைத் தின்னும் குழியானை வளர்ந்து கொம்பன் யானையாகுமா?
குயில்கள் ஏன் கூடு கட்டுவது கிடையாது?
காக்கைக் கூட்டில் மட்டும் குயில்கள் முட்டையிடுவதன் ரகசியம் என்ன?
காக்கைகளும் கழுகுகளும் மைனாக்களும் கழிவுகளைத் தின்று சுத்தப்படுத்த யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
இவை அத்தனைக்கும் விடை இந்நூலில் கிடைக்கிறது.
எத்தனை விதவிதமான உயிர்கள், எத்தனை விதவிதமான செடிகள், எத்தனை விதமான கொடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மனிதர்கள். எல்லோருக்கும் தனித்தனி என குணங்கள், தனித்தனியான நிறங்கள், வடிவங்கள். குட்டி பாப்பா எல்லாவற்றையும் பார்க்கிறாள். உற்று நோக்குகிறாள்.
ஆராய்கிறாள் உண்மையை தெரிந்து கொள்கின்றாள். மகிழ்ச்சி அடைகின்றாள். இதுவே இந்நூலின் கதையாக அமைகின்றது. வாசித்து முடிக்கும் பொழுது பெரியவர்கள் ஆனாலும் சரி குழந்தைகள் ஆனாலும் சரி தன் சுற்றுப்புறத்தை உற்று நோக்கும் மனநிலையைப் பெறுவார்கள் என்பது உறுதி.
மலையாள சிறுவர் இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்பாளியான பேராசிரியர் எஸ் சிவதாஸின் உன்னதமான படைப்பு இந்நூல். இந்த புத்தகத்தை வாசிக்கும் போது குழந்தைகள் மனதில் ஒரு மாற்றம் உருவாகும் என்பது உறுதி.
வெளியீடு - வானம் பதிப்பகம்
தொடர்புக்கு - 97515 49992
நன்றி - புக் டே

No comments:
Post a Comment