ஆச்சி வீட்டு அடுக்களையில் உருட்டுவது யார்?
உதயசங்கர்
” கட முட கட முட “ என்று அடுக்களையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது.
குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த ஆச்சி திடுக்கிட்டு எழுந்தார்.
“ ச்சே.. இந்த எலித்தொல்லை.. தாங்க முடியல.. ”
என்று சொல்லிக் கொண்டே அடுக்களையை நோக்கிப் போனார். கதவைத் திறந்ததும் சத்தமில்லை. அமைதியாக இருந்தது. விளக்கைப் போட்டார் ஆச்சி.
உருட்டிய எலியைத் தேடினார். காணவில்லை.
“ எலியே எலியே வெளியே வா..
எனக்குத் தெரியும் வெளியே வா
அதோ உன் வால்.. வெளியே வா..
அடித்துக் கொல்வேன் வெளியே வா..”
என்று பாடினார். அடுக்களைப்பொந்தில் நுழைந்த எலி தன் வாலைச் சுருட்டியது. வாயில் இருந்த நெத்திலி கருவாடை கீழே வைத்துவிட்டு,
“ ஆச்சி ஆச்சி அடிக்காதே..
உன் பேரன் நான் அடிக்காதே..
எனக்கும் வேணும் சாப்பாடு
எதுக்கு நீ பொடுறே கூப்பாடு..”
என்று பாடியது. அதைக் கேட்ட ஆச்சிக்குக் கோபம். உள்ளே போய் பாத்திரங்களை உருட்டி எடுத்து எலியைத் தேடினார். ஆச்சி பாத்திரங்களை உருட்டிய சத்தம் கேட்டு தாத்தா எழுந்து கம்புடன் வந்தார்.
” எலியே எலியே வெளியே வா
எனக்குத் தெரியும் வெளியே வா
காலும் தெரியுது வெளியே வா
கருவாடு திருடா வெளியே வா..”
என்று பாடினார். அதைக் கேட்ட எலி வெளியில் நீட்டிக் கொண்டிருந்த தன் காலை பொந்துக்குள் இழுத்துக் கொண்டது.
“ தாத்தா தாத்தா அடிக்காதே
தங்கப்பேரனை அடிக்காதே
தடியால் என்னை அடிக்காதே
பசிக்குச் சாப்பிடுதேன் அடிக்காதே..”
என்று பாடியது. தாத்தாவும் கம்பை வைத்து பொந்துக்கு அருகில் அடித்துப் பார்த்தார். பொந்துக்குள் கம்பை நுழைத்து ஆட்டிப் பார்த்தார். மூலையில் எலி பதுங்கிக் கொண்டது. முன்பற்களினால் கம்பைக் கரும்பித் தின்றது.
சத்தம் கேட்டு அண்ணன் வந்தான். அவன் கையில் ஒரு பூனை இருந்தது. அது ’மியாவ் மியாவ்’ என்று கத்தியது.
“ எலியே எலியே வெளியே வா
எனக்குத் தெரியும் வெளியே வா
மூக்கு தெரியுது வெளியே வா
முழுங்கி விடுவேன் வெளியே வா “
என்று பாடியது பூனை.
அதைக் கேட்ட எலி தன் மூக்கை உள்ளே இழுத்துக் கொண்டது.
“ பூனையாரே பூனையாரே
பொன்னானப் பூனையாரே
உன்னைப் போல நானும் வாழவேண்டாமா?
உயிர் பிழைத்து என் குடும்பம் சேர வேண்டாமா?”
என்று பாடியது. பூனை பொந்துக்கு அருகில் போய் கால் நகங்களால் பிறாண்டியது. பச்சைக்கண்களை உருட்டி விழித்தது. பூனை போட்ட சத்தம் கேட்டு குட்டிப்பாப்பா எழுந்து வந்தாள்.
“ எலியே எலியே வெளியே வா
எனக்குத் தெரியும் வெளியே வா
உனக்குக் கதை சொல்வேன் வெளியே வா
என்னை நம்பி வெளியே வா..”
என்று குட்டிப்பாப்பா பாடினாள். எலி யோசித்தது. குட்டிப்பாப்பா ரொம்ப நல்லபாப்பா. அவளுடைய தின்பண்டங்களைப் பொந்துக்கு அருகில் சிந்துவாள்.
பார்த்தால் சிரித்துக் கொஞ்சுவாள்.
எலி பொந்தை விட்டு மெல்ல வெளியே வந்தது. குட்டிப்பாப்பா அதைப் பார்த்துச் சிரித்தாள். எலி இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி வணங்கியது.
” ஒரு ஊரில் ஒரு எலியாம்
அதன் பேரு புலியாம்
பார்த்த எல்லாருக்கும் கிலியாம்
புலியும் வாயைத் திறந்துச்சாம்
கீச் கீச் னு கத்திச்சாம்..
புலியும் எலியா மாறுச்சாம் “
இந்தக் கதையைக் கேட்ட எலி விழுந்து விழுந்து சிரித்தது. பூனை உருண்டு புரண்டு சிரித்தது. அண்ணன் ஓடி ஓடிச் சிரித்தான். தாத்தா கம்பைத் தரையில் தட்டித் தட்டிச் சிரித்தார். ஆச்சியும் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டே சிரித்தார்.
குட்டிப்பாப்பாவும் குப்புறப்படுத்துக் கொண்டு சிரித்தாள்.
எப்படிச் சிரித்தாள் தெரியுமா?
“ ஹ்ஹ்ஹ்ஹ்ஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹா..”
நன்றி - விஞ்ஞானத்துளிர்

No comments:
Post a Comment