Sunday, 16 August 2026

காமம் செப்பாத காதல்

 

சதுரங்கவாழ்க்கை 8

காமம் செப்பாத காதல்



குமரேசனின் அலட்சியமான குரலும் அதனுள்ளிலிருந்து ஏறிவந்த அகங்காரமும் எங்களுக்கு எரிச்சலூட்டியது. நான்,

காதல் ஒரு நுண்ணுணர்வுடா.. பருண்மையாகத் தேடினால் அது காமத்தை மட்டும் தான் காட்டும். காதல் என்றால் நிபந்தனையின்றி அன்பை வழங்குவதுஎதையும் எதிர்பாராமல் கொடுப்பது, உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பது, ஆணோ பெண்ணோ அந்த நிலை தான் அவர்களுடைய வாழ்க்கை தரிசனம், அவர்களுடைய வாழ்க்கையின் அர்த்தம் அதற்காகவே உயிரை விடுகிறார்கள், அதற்காகவே வாழ்க்கை முழுவதும் சிலுவை சுமக்கிறார்கள். தியாகம் செய்கிறார்கள். காதல் என்பது உடலல்ல. உணர்வு. ஒரு உயிர் இன்னொரு உயிரைப் போற்றும் உணர்வு, ஒரு உயிர் மற்றொரு உயிரை அப்படியே ஏற்றுக் கொள்ளும் உணர்வு, ஒரு உயிர் மற்றொரு உயிருக்கு எந்தத் தீங்கும் நேராமல் பாதுகாக்கும் உணர்வு, ஒரு உயிர் மற்றொரு உயிருக்காகவே வாழும் உணர்வுஎல்லோருக்கும் வருவதில்லைநமக்கெல்லாம் அந்த வாய்ப்பில்லை..”

என்று சொன்னேன். குமரேசன் இப்போதும் அதே அலட்சியபாவனையுடன் பாயிலிருந்து எழுந்து நின்றான். அவிழ்ந்த சாரத்தைக் கையில் பிடித்துக் கட்டிக் கொண்டே லேசாய் தள்ளாடினான்.

நீங்கல்லாம் இலக்கியம் படித்து காதலை ரொமாண்டிசைஸ் பண்றீங்க.. அப்படியெல்லாம் எந்த ரொமான்ஸும் இல்லை.. எந்த உணர்வாக இருந்தாலும் எல்லாம் தானாக உருவாவதில்லை.. நாம் வாழும் இந்த உலகம்.. தான் எது புனிதம்? எது இழிவானது? எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? என்று சொல்லிக் கொடுக்கிறது.. நீ சொல்ற ஒரு உயிருக்காக மற்றொரு உயிர் மாய்வதென்பதெல்லாம் ஒரு வகையில் தன்னுடைய ஈகோவைச் சேட்டிஸ்பை பண்றது அவ்வளவு தான்.. நாம எப்படி ஒரு பிச்சைக்காரனுக்குப் பிச்சை போட்டு சமூகத்தின் ஏற்றதாழ்வினை திரை போட்டு மறைத்து நம்மால் ஏண்ட உதவியைச் செய்ததாகத் திருப்தியடைகிறோமோ.. அப்படித்தான்.. இல்லைன்னா தன்னுடைய ஆன்மாவில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்பச் செய்கிற முயற்சி என்று கூடச் சொல்லலாம்.. என்னைப் பொறுத்த வரை காதல் என்பது காமம் தான்.. பசி தாகம் பாலுணர்வு மூன்றுமே உயிர்களின் சாராம்சம்மனிதர்கள் விலங்குகளாக இருக்கும்வரை இந்த உணர்வுகள் மட்டுமே அவர்களுடைய இருத்தலைத் தீர்மானித்தனபகுத்தறிவு வளர வளர இந்த உணர்வுகள் பல அடுக்குகளாக, பல படிமங்களாக, பல அரூபமான கிளைகளாக மாறிவிட்டனஇப்போதும் மனிதன் தனிமையிலிருக்கும்போது அவனுடைய விலங்குணர்வு மேலோங்கி வருவதைப் பார்க்கிறோமா இல்லையா?

தந்தையின் மீது மகளின் காதல், தாயின் மீது மகனின் காதல், சகோதர சகோதரிகளின் காதல், எத்தனை விதமான காதல்களைப் பார்க்கிறோம்.. என்னுடன் பணியாற்றும் ஒருவன் அவனுடைய பெரியம்மா மகளைக் காதலித்துத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான்..ஓரினச்சேர்க்கை, இருபால்ச்சேர்க்கை, எத்தனை எத்தனை விதமான பால்புதுமை நடத்தைகள், அதனால் தான் சொல்கிறேன்.. காதலை மனிதன் தன் அறிவின் லட்சியமாக வரித்திருக்கிறான்.. அடையமுடியாத லட்சியமாக… “

என்று சொல்லிவிட்டு மாரியப்பனிடமிருந்து சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்தான். புகையைக் கற்றையாக மூக்கு வழியே விட்டு கண்களை மூடினான். மணிக்குப் பொறுக்கமுடியவில்லை. அவனும் எழுந்தான்.

அப்படின்னா காவியக்காதலெல்லாம் பொய்யா? ரோமியோ ஜூலியட்டை, லைலாமஜ்னு, அம்பிகாபதி அமராவதி, ஆண்டாள், மீரா, பிலோமி, அன்னாகரினீனா, ஜமீலா, எல்லாம் புனைவுன்னு சொல்வியா? “

குமரேசன்,

ஆமான்னு சொன்னாலோ இல்லைன்னு சொன்னாலோ என்ன நடந்துரப்போகுது.. ஒரு வகையில் எல்லாமே நம்பிக்கை தான்.. நான் இந்த உலகத்தை என்னுடைய அனுபவத்தின் வழியாப்பாக்கிறேன்.. நீ உன்னுடைய அனுபவத்தின் வழியாப்பாக்கிறே.. உலகம் தன்போக்கில் இயங்குகிறது.. உனக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கணும்னோ, எனக்கு வேறு அனுபவத்தைக் கொடுக்கணும்னோ முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவதில்லையே.. இன்னும் சொல்லப்போனால் இயங்கிக் கொண்டேயிருக்கும் உலகத்தை நாம் புரிந்து கொள்கிற விதத்தில் இருக்கிறது வேறுபாடு.. மணி.. நாம் இந்த உலகத்தை அப்படியே புரிந்து கொள்கிறோமோ அல்லது இப்படி இருக்கவேண்டுமென்றோ, இப்படி இருந்தால் நல்லாருக்குமே என்று நாம் விரும்புகிறவிதத்தில் புரிந்து கொள்கிறோமா? யோசித்துப்பார்.. நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோமென்பதைப் பற்றி உலகம் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.. “

எனக்கு அவன் சொல்வதில் ஏதோ வேலிட் பாயிண்ட் இருப்பதாகத் தோன்றினாலும் மனம் ஒப்பவில்லை.

இல்ல குமரேசா.. நீ எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்துக்கோ.. இந்த உலகம் அன்பெனும் அச்சில் தான் இயங்குகிறதென்று நான் எப்போதும் நம்புகிறேன்..”

அந்த அன்பை ஆராய்ந்து பார் என்று சொல்கிறேன்.. அந்த உணர்வுகளின் செயல்பாட்டுச் சூத்திரத்தை விரித்துப்பார் என்று சொல்கிறேன்.. நான் நேற்று இரவு பணி செய்த கன்னியாகுமரி எகஸ்பிரஸ் வண்டியில் பயணியாக வந்த ஒரு பெண்ணுடன் உறவு கொண்டேன்.. அந்தப் பெண்ணை எனக்கு முன்பின் தெரியாது.. ஒரு சிறிய முயற்சி தான் செய்தேன்.. சலுகை கொடுத்தோ, வற்புறுத்தலோ, மிரட்டலோ, ஏமாற்றியோ உறவுகொள்ளவில்லை. தினம் தினம் ஏராளமான மனிதர்களைச் சந்திக்கிறேன். விதவிதமான மனிதர்கள். வித விதமான குணங்கள். ஒருமுறைக்கு இரண்டு முறை பார்த்தாலே அவர்களைக் கிட்டத்தட்டப் புரிந்து கொள்ள முடியும்.. அதிலும் உனக்குக் குண்டூசி அளவு அதிகாரம் இருந்தால் போதும். நீ தெய்வமாகி விடுவாய். குறைந்தது அவர்கள் காரியம் முடியும் வரையாவது..உன்னை அவர்கள் வழிபடுவார்கள்.. யோசித்துப் பாரேன். ரயிலில் சந்தித்த சிறிய காலத்தில் நாங்கள் உறவு கொள்ள முடிகிறதென்றால்.? வெறும் விலங்குணர்ச்சி மட்டும் தானே..

எந்த அன்பு எங்களுக்கிடையில் இருந்தது? அந்தப் பெண்ணையும் நான் குறை சொல்லமாட்டேன்ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இயல்பான விலங்குணர்ச்சி இருக்கத் தானே செய்யும்.. பெண் என்ற உயிரியின் மீதான சமூகத்தின் கற்பிதங்களையே நாம் பெண் என்று நினைத்துக் கொள்கிறோம்..கெடுபேறு என்னவென்றால் பெண்களுமே அப்படி நினைத்துக் கொள்வது தான்.. அந்தப் பெண்ணுக்கு அங்கே யாரையும் தெரியாதென்பதே தனிமையில் இருக்கும் தைரியத்தைக் கொடுத்தது.. என்னைப் பொறுத்தவரை பயன்படுத்து.. தூக்கி எறி.. எந்த ஒரு விஷயத்துக்குள்ளும் ஆழமாக இறங்காதே.. அது தான் என் பாலிசி.. இப்படித் தற்செயல் உறவுகளாக மாதத்துக்கு இரண்டு மூன்றுமுறையாவது நிகழ்ந்து விடும்..  அந்த நேரத்தைத் தாண்டி அந்த உறவுகளை நான் நீட்டிப்பதில்லை.. என்னுடைய போன் நம்பரையோ, ஊரையோ, முகவரியையோ கொடுக்க மாட்டேன்.. அதேபோல கேட்கவும் மாட்டேன்.. எவ்வளவு அழகியாக இருந்தாலும் அதற்குமேல் அந்த உணர்ச்சிச்சுழலில் சிக்கமாட்டேன்.. அதைத் தான் நீங்கள் காதல் என்கிறீர்கள்.. மனிதர்கள் பழக்கத்துக்கு அடிமையானவர்கள்.. சில வருடங்கள் பிரிந்திருந்தால் போதும் எவ்வளவு உயிருக்குயிரானவர்களும் அந்நியர்களாகி விடுவார்கள்அண்மையும் பழக்கமும் தான் அன்பென்று நீங்கள் சொல்கிற அற்புதத்தின் எண்ணெயும் திரியும். விலங்குணர்ச்சி அதன் சுடர். மற்றபடி காவியக்காதல், என்பதெல்லாம் உயிரைக்குடிக்கும் பெரும்பள்ளத்தாக்கு. அங்கே தலைகுப்புற விழுந்து மண்டை சிதற உயிரை விடுவது தான் நடக்கும்உங்களை விழுங்கக் காத்திருக்கும் இருளைத் தவிர வேறொன்றும் மீட்சியில்லை

நீங்கள் கனவுலகவாசிகள். தாஸ்தயேவ்ஸ்கியின் நாஸ்தென்காவுக்காகக் காத்திருக்கும் கனவுலகவாசிகள்.. அல்லது அப்படி உங்களைக் கற்பனை செய்து கொள்வதன் வழியே உங்களுடைய இயலாமையை சமன்படுத்திக் கொள்பவர்கள்ஆனால் நாஸ்தென்காக்கள் எப்போதும் அப்படித்தான்.. பழைய காதலனிடமிருந்து புதிய காதலனை நோக்கிப் பாய்ந்து வருவாள். பழைய காதலனைப் பார்த்ததும் புதிய காதலனைக் கைவிட்டு விட்டு பழைய காதலனுடன் ஓடி விடுவாள்பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களும் அப்படித்தான்

யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களே உன்னதமான காதலை யாசித்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் அலைந்து கொண்டிருப்பார்கள்அப்படி ஏதும் கிடையாதென்பது ஆண்களை விட பெண்களுக்கு நன்றாகத் தெரியும்.. பெண்கள் மோகமுள் ஜமுனாவைப் போன்றவர்கள்.. ஒரு பார்வையிலேயே புரிந்து கொள்ளும் உள்ளுணர்வு கொண்டவர்கள்.. அதனால் தான் அவள் பாபுவிடம் இதற்காகத்தானா? என்று கேட்கிறாள்தி.ஜா. அந்தக் காரியத்துக்காக அத்தனை பக்கங்களில் ஆலாபனை செய்கிறார்.. வேறு என்ன செய்யமுடியும்? அவரும் ஒரு ஆண் தானே பிளாட்டானிக் லவ்வென்று எதுவும் கிடையாதுநீ தானே சொல்வே எதையும் அறிவியல்பூர்வமாகப் பாக்கணும் இல்லையா மணி

என்று கிண்டலாய் மணியைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். அவன் சொன்னதைக் கேட்டதும் மணிக்குக் கோபம் வந்தது. ஏனெனில் எந்த விஷயத்தைப் பேசினாலும் அறிவியல்பூர்வமாகப் பேச வேண்டும் என்று மணி சொல்லிக் கொண்டிருப்பான். யாருக்கும் எதுவும் பேச வேண்டுமென்று தோன்றவில்லை. குமரேசனின் வார்த்தைகள் அந்த அறையைச் சுற்றிக் கொண்டேயிருந்தன. யாருக்கும் அவன் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமலிருக்கவும் முடியவில்லை.

டேய்.. குமரேசா.. காமத்தை மேலோட்டமாகப் புரிந்து கொண்டால் அது வெறும் செயலோடு முடிந்து விடும்.. உளவியலாளர் ஃப்ராய்டு முதல் சமகால உளவியலாளர்களின் ஆய்வுப்படி,காமம் என்ற உணர்வு தான் படைப்பூக்கத்தைக் கட்டமைக்கிறது. அனைத்துத் துறைகளின் கண்டுபிடிப்புகளுக்குப் படைப்பூக்கம் தானே அடிப்படை. அப்படியென்றால் அந்தப் படைப்பூக்கத்தை உருவாக்கும் காமம் என்ற அந்த உணர்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்று யோசி.. இன்னும் சொல்லப்போனால் காமம் ஒரு உயிரைப் படைப்பதற்காகச் செயல்முறை. உணர்வுத்துடிப்பு, படைப்புத்தொழில் தான் காமம். எனவே தான் மனிதர்கள் புதிது புதிதாகப் படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்காமம் படைப்பூக்கமிக்கதாக இருக்கிறதுஅல்லது படைப்பூக்கம் காமத்தின் செயல்பாடாக இருக்கிறது. காமத்தின் வழி கிடைக்கும் இன்பத்தைத் தங்களுடைய புதிய புதிய படைப்புகளின் மூலமாகவும் பெறுகிறார்கள் மனிதர்கள். முடிவற்ற பிரபஞ்சத்தின் முடிவற்ற சக்தி காமம் என்று நினைக்கிறேன்..நீ அதை ஆண்பெண் உறவுடன் சுருக்குகிறாய்

என்று மணி சொல்லிமுடிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அட டா  சூப்பர்டா மணி..”

என்று சிலாகித்தேன். இன்னொரு பெக் ஊற்றிக் கொண்டு கையில் முறுக்கையும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஏறினேன். லேசான புன்னகையுடன் இருந்த நிலா மெல்லிய வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது. மொட்டை மாடியை ஒட்டி இருந்த வேப்பமரம் காற்றில் கிளைகளை ஆட்டி ஆட்டிப் பாடிக் கொண்டிருந்தது. அப்படி ஆடும்போதெல்லாம் அந்தக் கிளைகளிலிருந்து நட்சத்திரங்களைப் போல வேப்பம்பூக்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன. ஒவ்வொரு பூவும் மணந்தது. நான் கீழே கிடந்த பூக்களை எடுத்து முகர்ந்தேன். நான் முகர்வதற்காகவே காத்திருந்தது போல பூக்கள் வெட்கத்தில் இன்னும் வெள்ளையாய் சிரித்தன. பூக்கும் பூக்களெல்லாம் காயாவதில்லை. காய்களெல்லாம் கனியாவதுமில்லை. கனிகளெல்லாம் விதையாவதுமில்லை. விதைகளெல்லாம் மரமாவதுமில்லை. ஆனால் மரம் பூப்பதை நிறுத்துவதேயில்லை.

இனிப்பும் கசப்பும் கலந்த மணம் இரவின் வெறுமையை நிறைத்தது. அப்படியே வாழ்வின் வெறுமையையும்.  இல்லாத ஒன்றை வேறொன்று நிறைப்பதான பாவனையில் தானே மனம் உயிர்த்திருக்கிறது. நிமிர்ந்து பார்த்தேன். தெருவிளக்கின் வெளிச்சம் பட்டு இலைகள் மின்னும் உடைகளுடன் நடனமிட்டன. காற்றில் நடனமிடும். இலைகள் ஏதோ இந்தப் பிரபஞ்சத்துடன் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். இலைகள் என்ன பேசிக் கொள்ளும்? இந்தப் பூமியைப் பற்றி வியக்குமா? இயற்கையின் அற்புதத்தைப் போற்றிப் பாடல்களைப் பாடுமா? ஒரு மரமாய் பிறந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? ஏன் மரத்தில் ஒரு சிறு பூவாய் சிற்றிலையாய் பிறந்திருந்தால் கூட ஒரே நேரத்தில் தனித்தும் சேர்ந்தும் வாழ்ந்து பழுக்கும்போது எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் மெல்ல உதிர்ந்து மண்ணில் விழுந்து மக்கி உரமாகி மீண்டும் மரமாகி, இலையாகி பூவாகி, காயாகி, கனியாகி, வாழ்தலின் இலட்சியம் வாழ்தல் தான் நாங்கள் அப்படியே மொட்டைமாடியில் படுத்தோம்.

அகாதவெளியில் நட்சத்திரங்களின் மினுக்கட்டம். அது மினுக்கும் இடைவெளி தான் மனித வாழ்க்கை. ஆனால் அதற்குள் எத்தனையெத்தனை உணர்ச்சிபாவங்கள்! எல்லாரும் உறங்கி விட்டதைப் போல அமைதியாக இருந்தனர். எங்கிருந்தோ அசரீரிபோல மாரியப்பனின் குரல் கேட்டது.

குமரேசா! அனைத்துயிர்களிடமும் காமத்தை அடிப்படை உணர்வாக வைத்த இயற்கையின் நோக்கத்தை மனிதன் மட்டுமே வெற்றி கொண்டிருக்கிறான் அல்லது அதன் பரிமாணங்களை இயற்கையே கற்பனை செய்யமுடியாத அளவுக்கு விஸ்தரித்திருக்கிறான்யோசித்துப் பார்த்தால் மனிதன் மகத்தானவன். இயற்கையின் நோக்கம் உயிர்களின் இருப்பின் தொடர்ச்சியை நிலைநிறுத்துவது, பாதுகாப்பது, அதன் மூலம் தன்னுடைய இருப்பையும் தொடர்ச்சியையும் அர்த்தத்தையும் உருவாக்கிக் கொள்வது தான்.  ஆனால் மனிதன் மற்ற உயிர்களிடமிருந்து வேறுபடுவது எங்கே தெரியுமா? இயற்கையின் காமத்தை உயர்ந்த நிலைகளாக மாற்றியதில் தான். தன்னுணர்வில்லாத செயல்பாடாக மற்ற உயிர்களிடமிருக்கும் காமம் மனிதனிடம் மட்டும் தன்னுணர்வு மிக்க சிந்தனைகளாக மாறிவிட்டது. நீ சொன்னது போல அனைத்து வகை காதல்களிலும் காமத்தின் சாயல்கள் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டுமே. நிழல்களை நாம் உண்மையென்று நம்புவதில்லையல்லவா? ஆனால் யோசித்துப்பார். மனிதகுலவரலாறு முழுவதும் மனித வாழ்க்கையில் காமத்தின் வகிபாகத்தையும் வண்ணங்களையும் அதன் அழகையும் அர்த்தத்தையும் யோசித்துப் பார்.

மனிதன் காமத்தை உடலிலிருந்து உயர்ந்த ஆன்மநிலைக்குக் கொண்டு போய்விட்டான். அதற்காக உடல்காமத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உடலின் காமம் ஒரு வகையில் சுயநலமிக்கது. ஆனால் ஆன்மாவின் காதல் சகமனிதர்களுக்கானது. மற்றமை என்ற உணர்வை அருவருப்பாகப் பார்க்கும் இந்தக் காலகட்டத்தில், தனக்காக இல்லாமல் தான் வாழும் சமூகத்துக்கான காதலாக மாறுவது எத்தனை உயர்ந்தது? அதற்காக எத்தனை பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள்? எத்தனையெத்தனை தியாகிகள்! எத்தனையெத்தனை மாவீரர்கள்! சிவில் சொசைட்டியின் ஒவ்வொரு மாற்றமும் அந்தக் காதலால் ஏற்பட்டது. அந்தக் காதல் தான் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தது. புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது. .உலகமுழுவதுமிருக்கும் மனிதர்களைச் சகோதரர்களாக எண்ண வைத்தது. இன்றுவரை சமூகத்தில் மனிதர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அந்தக் காதலால் விளைந்தது தான். சக மனிதனுக்காக ரோட்டில் கிடக்கும் முள்ளையோ கல்லையோ எடுத்துப் போடுவதில் கூட அந்தக் காதல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்…”

அமைதியான அந்த இரவின் குளிர்ச்சியில் மாரியப்பனின் வார்த்தைகள் மனதில் வேப்பம்பூக்களாய் மலர்ந்தன. இந்த உரையாடலில் நானும் பங்குபெறவேண்டுமென்று நினைத்தேன். இப்போது போதை படிக்கட்டுகளில் இறங்கத் தொடங்கியிருந்தது.

இந்தக் காதலில் பொதுநலம் மட்டுமல்ல.. சுயநலமும் இருக்கிறதென்று நினைக்கிறேன்.. மற்றவர்கள் நன்றாக இருந்தால் தான் நானும் நன்றாக இருக்க முடியும்மற்றவர்களின் துயரம் மிக விரைவில் என்னுடைய துயரமாக மாறும்.. அதனால் தான் அத்தனை மதங்களும் தத்துவங்களும் அன்பையே போதிக்கின்றன.. அன்பின் வழியது உயிர்நிலை என்ற புரிதல் நமக்கு தோன்றிய காலம் தான் மனித சிந்தனையின் உச்சக்கட்ட காலமென்று நினைக்கிறேன்.. “

எல்லாரும் பேசினோம். எல்லாரும் தர்க்கம் செய்தோம். ஆனால் யாரும் சண்டை போடவில்லை. விரோதம் பாராட்டவில்லை. பகை மூட்டவில்லை. எனக்கு இந்த உரையாடல் ஏதோ ஒரு தெளிவைக் கொடுத்த மாதிரி இருந்தது. ஏனோ கதிர் ஞாபகத்துக்கு வந்தான்.

டேய் எல்லாரும் ஒரு நாள் கதிரைப் பார்க்கப் போணும்.. என்னைக்குச் சொல்லுங்கள்..? “

என்று கேட்டேன். அடுத்த சனிக்கிழமை போகலாம் என்று முடிவானது. அப்போது என்னுடைய செல்போன் ஒளிர்ந்தடங்கியது.

நாளை கட்டாயம் வீட்டுக்கு வாபேச வேண்டும்..”

அந்த வார்த்தைகளில் ஒரு உயிரின் கெஞ்சல் திரையில் கேட்டது.

 

( தொடரும் )  .  

 

 

 

No comments:

Post a Comment