Sunday, 9 August 2026

முதல்காதல்கள்

 

சதுரங்கவாழ்க்கை 7

முதல்காதல்கள்




முதல்க்குடி அனுபவம் உண்மையில் பயங்கரமானதாக இருந்தது. அதன்பிறகு நீண்ட காலத்துக்கு அந்த த் திசையைப் பார்க்கவில்லை. முதன்முதலில் வங்கி வேலைக்குப் போன மணி தான் மீண்டும் பார்ட்டியைத் தொடங்கினான். ஆனால் அப்போது நாங்கள் எல்லாரும் சற்றே முதிர்ச்சியடைந்திருந்தோம். மதுவை எங்கள் மனக்கதவுகளைத் திறக்கும் திறவுகோலாக மட்டுமே பயன்படுத்தினோம். மிக அமைதியாக க் கூடிப் பேசிக் கலைந்து செல்லும் பழக்கம் உருவாகிவிட்டது. இந்த இரவில் நான் கதிரைப் பற்றிச் சொன்னபோது ஒரு அஞ்சலியைப் போல ஆழ்ந்த அமைதி அங்கே நிலவியது. அந்த அமைதி எனக்கு விசித்திரமான உணர்வுகளைத் தந்தது. டம்ளர்களின் சத்தமும், சேவு கடிக்கிற சத்தமும், அறையில் குழல்விளக்கினடியில் இணையைத் தேடும் கௌளிச் சத்தமும் கேட்டது. கீழே தெருவில் பருத்திப்பால் அண்ணாச்சி கந்தனின் குரல் மீண்டும் மீண்டும் அழைத்தது. மற்ற நாட்களாக இருந்தால் குமரேசனும் அப்போது கூட இருப்பவர்களும் பருத்திப்பால் சாப்பிடுவது வழக்கமென்பதால் கந்தன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

டேய் யாராச்சும் சொல்லுங்கடா.. வேண்டாம்னு..பாவம் கத்திக்கிட்டிருக்காரில்ல.. “

என்றான் குமரேசன். மாரியப்பன் எழுந்து மாடிக்கைப்பிடிச் சுவரில் கையை ஊன்றியபடி,

இன்னிக்கு வேண்டாம் அண்ணாச்சி..” என்று சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்தபடி வந்து உட்கார்ந்தான். எனக்கு அந்தச் சூழல் மூச்சுமுட்டியது.

டேய், கதிர் காதலிச்சிருக்கான் தெரியுமா? “

யார் தான் காதலிக்கலை…? “

ஆனால் கதிரை மாதிரி ஒரு ஒழுக்கவாதி காதலிக்கிறதுங்கிறது சாதாரண விஷயமா ? “

உண்மை தான்.. கதிர் காதலிச்சாங்கிறது உலக அதிசயம் தான்..”

என்று சொன்ன மணியைப் பார்த்துச் சிரித்தேன்.

அதுல ஒரு விஷேசம் என்னன்னா அவன் காதலிச்ச பொண்ணை நானும் காதலிச்சேன்..”

அட்ட்ரா சக்கை.. கதையில ட்விஸ்ட் இது தான்.. சரி அந்தப் பொண்ணு யாரைக் காதலிச்சா..? “

நான் கொஞ்ச நேரம் பேசவில்லை. நினைவுகளை அகழாய்வு செய்து கொண்டிருந்தேன்.

காமாட்சியின் கண்கள் ஊத்துமலை குளம்மாதிரி விரிந்து நீண்ட கண்கள். அந்தக் கண்களில் கருவிழிகள் மட்டும் மேல் கீழ் சுவரைத் தொடாமல் தனியே கோலிக்குண்டுகள் மாதிரி உருண்டு கொண்டிருக்கும். அவள் ஒருமுறை பார்த்துவிட்டால் அந்தக் கண்களைத் திரும்பப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டாவதைத் தடுக்கமுடியாது. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த சாதாரணமான பெண் தான். பள்ளிப்படிப்பு முடித்ததும் ஒரு மெடிகல் ஸ்டோரில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அப்போது தான் பெண்கள் கடைகளில் வேலைபார்ப்பது தொடங்கியிருந்தது. அவள் அந்த த் தெருவில் தான் இருக்கிறாளென்பது எனக்குத் தெரியாது. என்னுடைய வேறு கவலைகளின் புதிர்வழிகளில் சுற்றித் திரிந்த நாட்கள். அம்மாவுக்கு அடிக்கடி வரும் தலைவலி சாரிடோன் மாத்திரையில் மட்டும் தான் கட்டுப்பட்ட து. அதற்காக பர்மா பஜாரிலிருந்து மெடிகல் ஸ்டோரில் மாத்திரை  வாங்குவதற்காக போனகாலை காமாட்சியைப் பார்த்தேன். எப்போதும் பெண்களிடம் பேசுவதில் எனக்குச் சங்கோஜமுண்டு. அதனால் காமாட்சியைச் சரியாக க் கூடப் பார்க்கவில்லை.

சாரிடோன் இரண்டு..”

இதைக் கேட்டு அவள் குறுஞ்சத்தத்துடன் சிரித்தாள். இதிலென்ன சிரிப்பதற்கு இருக்கிறதென்று நினைத்தேன். உடனே,

சாரி.. ஜவுளிக்கடையில தான் இருக்கும்..” என்று சொன்னதும் தான் எனக்குப் புரிந்தது. நான் சாரியைச் சத்தமாகச் சொல்லி டோனை முழுங்கிவிட்டேன். அப்போது தான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். என்னை முன்பே தெரிந்தவள் மாதிரியான முகபாவனையுடன் சகஜமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். குறும்பை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். என் கண்ணில் முதலில் தெரிந்தது அங்குமிங்கும் அலை பாயும் கண்மணிகள் தான். நான் வாயடைத்துப் போயிருந்தேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக இருந்தேன்.

அவளே இரண்டு சாரிடோன் மாத்திரைகளை எடுத்துக் கவரில் போட்டுக் கொடுத்தாள். காசை வாங்கிக் கல்லாப்பெட்டியில் போட்டாள். நான் கவரை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் வந்து விட்டேன். ஆனால் மீண்டும் அந்தக் கண்களைப் பார்க்கவேண்டுமென்று உள்ளிருந்து ஏதோ தூண்டியது. என்னையறியாமலே திரும்பிக் கடைக்குப் போனேன். மீண்டும் என்னைப் பார்த்த தும் அவள் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. கண்களால் என்ன என்று கேட்டாள்.

எப்படிச் சாப்பிடணும்? “ என்று அப்பாவியாய் கேட்டேன். அதைக் கேட்டதும் அவளுடைய முகத்தில் கோபத்தின் அறிகுறிகள் தெரிந்தன. அப்போது தான் அவளை நன்றாகப் பார்த்தேன். லேசாகத் தெத்திக் கொண்டிருக்கும் பற்களை மூட முயற்சித்துக் கொண்டேயிருக்கும் சிறிய உதடுகளும் நீளமான ஒடுங்கிய மூக்கும், ஒட்டியும் ஒட்டாமலுமிருக்கும் கன்னச்சதைகளும் கீழுதடுக்குக் கீழே தூரத்திலிருந்த முகவாயும் மெலிந்த உடலும், நீண்ட கைவிரல்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமலிருந்தன. ஆனால் அந்தக் கண்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து மிகச் சிறந்த அழகியைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. அவள் என்னுடைய பாரவையை உணர்ந்தவள்போல,

வாயிலபோட்டு தண்ணீர் குடிச்சா உள்ளே போயிரும்.. எல்லாம் உங்கம்மாவுக்குத் தெரியும்.. “ என்று சிரிக்காமல் சொன்னாள். கடைசி வார்த்தைகள் என்னை தன்தரைக்குக் கொண்டுவந்தது. நான் சட்டெனத் திரும்பி கடையிலிருந்து இறங்கிவிடுவிடுவென நடந்தேன். பின்னாலிருந்து அவள் என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறாளென்பதை நான் உணர்ந்தேயிருந்தேன். பதட்டம் கூடி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தேன். இவளுக்கு அம்மாவைத் தெரிந்திருக்கிறது. அம்மாவுக்கும் இவளைத் தெரிந்திருக்கிறது. இந்த நினைப்பே ஒருவிதப் பயத்தைக் கொடுத்தது.  நல்லபையனென்று பேரெடுத்தவனில்லையா?

அதன்பிறகு நான் அந்தக் கடைக்குப் போகவில்லை. காமாட்சி காலையில் கடைக்குப் போகும்போதும் மத்தியானம் சாப்பிட வரும்போதும் இரவு கடை முடிந்து வரும்போது என்னுடைய தெருவில் கதிர் தென்பட்டான். முதலில் சரியாக அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து

வா சரவணா! ஒரு டீ குடிப்போம்என்று வெளியே கூட்டிப் போய் தெருமுக்கில் நின்று பேசிக் கொண்டிருப்பான். எனக்கு முதலில் கதிரின் சூட்சமம் தெரியவில்லை. ஆனால் இரண்டே நாட்களில் தெரிந்து விட்டது. அத்துடன் காமாட்சி வரும் நேரங்களில் கதிர் மட்டுமில்லை. மேட்டுத்தெரு, காளியம்மன் கோவில் தெரு, மாதாங்கோவில் தெருப் பையன்கள் எல்லாரும் ஆங்காங்கே காத்திருப்பதையும் பார்த்தேன். கதிருடன் நிற்கும்போது அவள் யாரையும் பார்க்காத மாதிரி போனாலும் அருகில் வரும்போது அந்தக் கண்மணிகளை ஒரு சுழற்று சுழற்றுவாள். அது எனக்காகத்தான் என்று நினைத்தேன். கதிர் அவனுக்காக என்று நினைத்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் கதிரைத் தவிர்த்தேன்.

என் வீட்டு வாசலிலேயே புத்தகமும் கையுமாக உட்கார்ந்தேன். அவளுடைய உள்ளடங்கிய ஒரு வளவில் இருந்தது.  அப்பா கோவிந்தன் லாரி கிளீனர், அம்மா மங்கையர்க்கரசி வீட்டில் தீப்பெட்டிக்கட்டு ஒட்டிக் கொண்டிருப்பார். மணி எட்டரையாகி விட்டால் போதும் பரபரப்பாகி விடுவேன். குளித்து பவுடரைத் தீட்டி சட்டையைப் போட்டுக் கொண்டு வாசலில் காமாட்சிக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். வளவுக்குள்ளிருந்து திரும்பும் போது அசால்ட்டாக தன்னுடைய தாவணி முந்தானையைக் காற்றில் தூவி விடுவாள். வழக்கமாகப் பெண்கள் விடும் அளவைவிட கூடுதல் நீளத்தில் தாவணியின் முந்தானை இருக்கும். அவள் நடக்க நடக்க முந்தானை காற்றில் நடனமிடும். நடையில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு ஒயில் கொடி கட்டிப் பறக்கும். எப்போதும் சிரிப்பதைப் போன்ற உதடுகளும் விரிந்த கண்களும் எல்லாம் எனக்குப் புதிதாகத் தெரிந்தன.  முதன்முதலாகக் கடையில் பார்க்கும்போது சாதாரணமாகத் தெரிந்த பெண்ணா இவள்? என்று தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் மீதான ஈர்ப்பு கூடியது. நான் அவளைக் காதலிப்பதாக நானே முடிவு செய்து கொண்டேன். இனம் புரியாத மகிழ்ச்சி என் உடலில் பரவியது. நாடி நரம்புகளில் சூடு ஏறியது.

காமாட்சி என் வீட்டைத் தாண்டும்போது இயல்பாகப் பார்ப்பது போல என் வீட்டுக்குள் பார்ப்பாள். அந்தக் கண்களின் உருட்டலில் நானும் உருண்டு விழுவேன். அப்போது அவள் சிரிப்பதாக நினைத்துக் கொள்வேன். அதன்பிறகு அவள் வேலை பார்த்த மெடிகல் ஸ்டோர் இருந்த தெருவுக்கு அடிக்கடி சைக்கிளில் போவேன். சும்மா அங்குமிங்கும் சுற்றுவது, இல்லையென்றால் எதிரில் இருக்கும் கடையில் ஏதாவது வாங்குவது, பக்கத்துக்கடையில் நின்று சத்தமாய்ப் பேசுவது என்று திரிந்து கொண்டிருந்தேன். கதிரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்.

ஆனால் ஒவ்வொரு நாள் காலையிலும் கதிர் தெரு மூலையில் காத்துக் கொண்டிருப்பான். அவனுக்கும் என் மீது சந்தேகம் வந்திருக்க வேண்டும். ஒருமுறை இராத்திரி செகண்ட் ஷோ பார்க்க க் கூட்டிக் கொண்டுபோனான். அங்கே சினிமா பார்க்க விடாமல் அவன் அவளைக் காதலிப்பதாகவும், அவளும் அவனைக் காதலிப்பதாகவும் உறுதியாகச் சொன்னான். அதற்கான பல சமிக்ஞைகளைச் சொன்னான். நான் அவனுக்கு உதவ வேண்டுமென்றும் சொன்னான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான்,

அந்தப் பிள்ளை அப்படி ஒண்ணும் நல்ல பிள்ளையாத் தெரியலயே.. நிறையப்பேர்.. சுத்துறாங்க.. “

என்றேன். திரை ஒளிர்ந்த வெளிச்ச த்தில் அவன் முகம் சுருங்கிவிட்டது.

அப்படிச் சொல்லாதடாஅவ தங்கமான பிள்ள.. “ என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டான். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஆரம்பித்து விட்டான். திடீரென்று எப்போதும் தேடி வராத மேட்டுத்தெரு ரமேஷ் என்னைத் தேடி வந்தான் தனியே கூட்டிக் கொண்டு போய் காமாட்சி மீதான காதலைச் சொன்னான். எப்படியாவது உதவி செய்ய வேண்டுமென்றான். காளியம்மன் கோவில் சுப்பையாவும் சொன்னான். அதுவரை என்னைப் பார்த்தால் பேசாமல் போனவன்களெல்லாம் வலுக்கட்டாயமாகப் பேசினார்கள். எல்லாரும் காமாட்சி அவன்களைத் தான் காதலிக்கிறாளென்று உறுதியாகச் சொன்னார்கள். எல்லாரையும் அப்படி எது நம்ப வைத்திருக்கும்? காமாட்சியின் விரிந்த கண்களில் உருண்ட கண்மணிகள் தானென்று உறுதியாக நம்பினேன்.

எனக்குக் காமாட்சி மேலிருந்த ஈர்ப்பு குறைந்து விட்டது. நான் மெல்ல இந்தப் போட்டியிலிருந்து விலகி விட்டேன். ஆனால் அந்தச் சில நாட்கள் காமாட்சியை நான் காதலிப்பதாக, அவளும் என்னைக் காதலிப்பதாக நம்பிய நாட்களில் வேறு ஒரு ஆளாக இருந்தேன். அதன்பிறகு கதிர் என்னுடைய தெருவுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டான். சோகமாகத் திரிந்தான். தாடி வளர்த்துப் பார்த்தான். அவனுடைய முகத்தில் வெட்டை வெட்டையாக முடி ஆங்காங்கே வளர்ந்தது. அவனைக் கோமாளி மாதிரி காட்டியது. அதனால் அந்த முயற்சியைக் கைவிட்டான். அவ்வளவு தான் கதை.

கதையிலெ ஒண்ணும் சுவாரசியமில்லையே.. “ என்றான் குமரேசன்.

காமாட்சி என்ன ஆனாள்னு சொல்லவே இல்லையே! “ என்றான் மணி.

என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப் பாரேன்.. திடீர்னு ஒரு நாள் காமாட்சிக்குக் கலியாணம் முடிஞ்சது.. அவள் ஊரை விட்டுப் போயிட்டா..”

சரி மணி உன்னுடைய முதல் காதலைச் சொல்லேன்… “

அதெல்லாம் காதல்னு சொல்லமுடியுமான்னு தெரில.. ஆனால் காதல் என்பதை அன்பென்று நினைத்தால் என்னுடைய முதல் காதல் என்னுடைய சித்தி வடிவு தான். நான் பிறக்கும்போது அவளுக்கு வயது ஏழு. அதனால் என்னைத் தூக்கி வளர்த்த தெல்லாம் அவள் தான். அந்த வயதிலேயே எனக்குக் குண்டி கழுவி விடுவது, சோறூட்டுவது, தூங்க வைப்பது, அழுதால் ஆடிப்பாடிச் சமாதானப்படுத்துவதெல்லாம் வடிவுச் சித்தி தான். என்னுடைய அம்மாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அவளுடைய சிவந்த நிறத்துக்கு, மூக்குமுழியுமாக இருக்கும் லட்சணத்துக்கும் நான் கருப்பாய் எலிக்குஞ்சு மாதிரி எந்த முகலட்சணமுமில்லாமல் பிறந்த தில் மிகப் பெரிய ஆதங்கம்.. பால் கொடுப்பதைக் கூடக் கடமைக்காகச் செய்தாளென்று ஆச்சி சொல்வாள். தூக்கிக் கொஞ்சியதாகவோ, தூங்க வைத்த தாகவோ, அழுகையைச் சமாதானப்படுத்தியதாகவோ ஞாபகத்திலில்லை. எனக்கு அம்மாவின் கதகதப்பைவிட சித்தியின் அரவணைப்பு தான் இப்போதும் ஞாபகத்திலிருக்கிறதுஅவளுடைய உடல்வாசனை, மூச்சுக்காற்று, கைவிரல்களின் மென்மை எல்லாம் ஞாபகத்திலிருக்கிறது.

காதல் என்பது என்ன? உடல்களின் மீதான ஈர்ப்பா? மனங்களின் ஒத்திசைவா? பரஸ்பர பயன்பாட்டினால் விளைந்த நேசமா? யோசித்துப் பாருங்களேன். ஆதியில் மனிதர்களிடம் காம ம் மட்டும் தானே இருந்திருக்கும்.. உடலின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான காம ம் உயிர்களின் பரம்பரையைத் தக்கவைத்துக் கொள்ளச் இயற்கை செய்த தந்திரம்  ஒற்றைத்தேவையின் அடிப்படையின் அடிப்படையில் உருவான காம ம் எப்படிப் பல கோடிப்பரிமாணங்களை அடைந்த து? பாசம், நேசம், கருணை, இரக்கம், அன்பு, என்று எத்தனையோ பெயர்களில் சொல்லப்பட்டாலும் ஒரு வகையில் எல்லாம் காதல் தானே. தாயின் காதல், தந்தையின் காதல், சகோதரக் காதல், நட்பின் காதல், மனைவியின் காதல், குழந்தைகளின் காதல், சமூகத்தின் மீதான காதல், இப்படி எத்தனை எத்தனை விதமான காதல்கள்? எல்லாவற்றையும் காம மாகப் பார்க்க முடியுமா? எல்லாவற்றையும் பயன்பாட்டின் வழி பார்க்க முடியுமா? அப்படித்தான் என்னுடைய வடிவுச்சித்தியின் அன்பையும் பார்க்கிறேன்.. அவளுக்கு என் மீது கருணை ஏற்பட்டிருக்கலாம், என் அம்மாவின் நிராகரிப்பைப் பார்த்து இரக்கமேற்பட்டிருக்கலாம். அம்மாவின் வெறுப்பு எனக்குள் ஏற்படுத்திய வெற்றிட த்தை தன்னுடைய அன்பினால் நிரப்ப நினைத்திருக்கலாம். தன்னையே என் அம்மாவாக நினைத்திருக்கலாம். மனித மனதின் விசித்திரங்களை அதன் புதிர்வழிகளை யாராலும் கணிக்கவோ, விடைகாணவோ முடியாது.

சின்ன ஞ்சிறியவளான என் வடிவுச்சித்தியின் வயிற்றில் தான் நான் தலைவைத்துப் படுத்திருப்பேன். என் கண்களில் கண்ணீர் தும்பினால்கூட தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்வாள். வடிவுச்சித்தி மட்டும் தான் நான் செய்த சேட்டைகளைப் பொறுத்துக் கொண்டாள். நான் செய்யும் சின்னச்சின்ன காரியங்களைப் பாராட்டினாள். அவள் வளர வளர எனக்கு அவள் மீதான காதலும் வளர்ந்தது. அவள் எனக்குச் சொந்தமானவளென்று நினைத்தேன். வாழ்க்கை குரூரமானது. நம் வாழ்க்கையில் பலரை நம் வாழ்க்கைமுழுவதும் சகபயணியாக வருவார்களென்று நினைத்திருப்போம். அந்தளவுக்கு நெருக்கமாக இருக்குமவர்கள் எந்தத் தருணத்தில் நம்மைவிட்டுப் பிரிந்தார்களென்று நமக்கே தெரியாது. அந்தத் தருணத்தைத் தேடிக் கொண்டேயிருப்போம். ஆனால் அந்தத் தருணத்தின் ரகசியம் ஒருபோதும் தன்னை வெளிப்படுத்தாது. வாழ்நாள் முழுவதும் அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளாமலேயே செத்துக் கூடப் போய்விடுவோம்.

அப்படித்தான் என் உயிராயிருந்த வடிவுச்சித்தி எனக்காகத் தன் உள்ளத்து அனபையெல்லாம் கொட்டிக் கொடுத்த வடிவுச்சித்தி ஒரு நாள் காணாமல் போனாள். கலியாணம் முடிந்து போன வடிவுச்சித்தித் திரும்பி வரும்போது சாதாரணச்சித்தியாக வந்தாள். நானும் வளர்ந்திருந்தேன். எங்கள் அன்பின் ஊற்று அடைபட்டுவிட்ட து. அங்கே அன்றாடத்தின் குப்பைகள் மூடிய பழைய வடு மட்டுமேயிருந்தது. அதன்பிறகு அப்படியொரு காதலை நான் வாழ்க்கையில் எதிர்கொள்ளவில்லை..”

மணி பெருமூச்சுவிட்டான். அந்தப் பெருமூச்சு எங்களை ஆழ்ந்த அமைதிப்பள்ளத்தாக்கில் வீழ்த்தியது. பேரமைதி. நாங்களனைவரும் அந்த அன்பில் ஒரு துளியைச் சுவைத்ததைப் போல ஒரு பரவசம் ததும்பும் முகங்களுடன் இருந்தோம். டம்ளர்களின் சத்தமும் மதுவை உறிஞ்சும் சத்தமும், தவிர வேறு சத்தங்களேதும் எழவில்லை. இப்படியே நீடித்திருக்காதா என்று நினைத்தோம். இல்லை இப்படியே பிரிந்து விடலாம் என்று கூட நினைத்தோம்.

ஹ்ஹ்ஹ்ம்ம்ம்என்ற பெரிய செருமலுடன் குமரேசன்,

என்னுடைய முதல்காதலைச் சொல்லவா? ஹ்ஹ்ஹ்ஹ்ஹா… “ என்று சிரித்தான்.

அந்தச் சிரிப்பை அப்போது நாங்கள் விரும்பினோமா என்று சொல்லமுடியவில்லை. ஆனால் அமைதியில் மிதந்து கொண்டிருந்த அந்த அன்பைத் தாங்கமுடியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். உன்னதங்கள் காலம் நொடிப்பொழுது தான் போலும். அதற்குமேல் நீடித்தால் மனிதர்களால் தாங்க முடியாது. குமரேசனுக்கும் அப்படியொரு அழுத்தமிருந்திருக்கலாம். அதனால் தானோ என்னவோ வழக்கத்துக்கு மாறாகச் சிரித்தான். இப்போது கொஞ்சம் அந்தச் சூழல் இலகுவானது. எல்லாரும் அவனையே பார்த்தோம்..

காதல்னு ஒரு மயிரும் கிடையாது..”

 

( தொடரும் )

 

 

 

 

No comments:

Post a Comment