கரிசல் இலக்கியத்தின் கதாநாயகன் பூமணி
உதயசங்கர்
இதோ! அந்தி சாயத் தொடங்குகிறது. பகல் முழுவதும் கரிசல்க்காட்டைச் சுட்டெரித்த சூரியன் களைத்துப்போய் மெதுவாக மறையத் தொடங்குகிறான். தேர்ந்த ஓவியரின் வண்ணத்தீற்றல்கள் போல மஞ்சளும் சிவப்புமாய் மேகங்களூடே ஒளிக்கதிர்கள் பாய்ந்து இவ்வளவு வெக்கையையும் வெப்ப்பெருமூச்சுகளையும் தாங்கிக் கொண்டு வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் கரிசல் மக்களை வாழ்த்துகிறது. அந்த வாழ்த்துகளைக் காற்றாக அனுப்புகிறது. மழை பொய்த்தாலும் மண்ணோடு மல்லுக்கட்டி வலுக்கட்டாயமாக உழைத்த உழைப்புக்கு கொஞ்சமேனும் வெள்ளாமையை எடுத்துவிடும் உறுதி கொண்ட மக்களை குளிர்விக்கிறது குறுமலைக்காற்று.
குஞ்சும் குறுமானுமாக தீப்பெட்டியாபீசுகளில் பட்டாசு ஆலைகளில் கந்தகமும் கரிமருந்தும் படிந்த உடம்புகளில் இந்தக் காற்று மெல்ல கிச்சு கிச்சு மூட்டுகிறது. மறுநாள் இந்த வாழ்க்கையோடு போராடுவதற்கு தெம்பூட்டுகிறது. பகலில் அசட்டையாக இருக்கும் கோவில்பட்டி நகரம் இந்த எளிய மனிதர்களின் வரவால் இப்போது சுறுசுறுப்படைகிறது
கதிரேசன் கோவில் மலைக்குப் பின்னால் மெல்ல மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் கடைசிக்கதிர்கள் சட்டென மறைந்து இருள் கவிகிறது. கோவில்பட்டி ஊருக்கு மையமாக இருக்கும் காந்திமைதானத்து புளியமரத்திலும். வேப்பமரத்திலும் பறவைகள் கூடடையுமுன்னால் கும்மரிச்சம் போடுகின்றன. அன்றைய பாடுகளைப் பேசுகின்றன. புதிய செய்திகளைப் பேசுகின்றன. செய்தது சரியா என்று விவாதிக்கின்றன. காரசாரமான அந்தப் பேச்சுக்கால் முடியும்போது கோவில்பட்டி எழுத்தாளர்கள் அந்த உரையாடலைத் தொடர காந்திமைதானத்துக்கு ஓவ்வொருவராக வந்து சேர்கிறோம். தேவதச்சன், மாரீஸ், கௌரிஷங்கர், அப்பாஸ், கோணங்கி, சமயவேல், தமிழ்ச்செல்வன், நாறும்பூநாதன், அப்பணசாமி, முருகன், என்று ஒரு பெருங்கூட்டமாய் வந்து வட்டம் போடுகிறோம். சிறிது நேரத்தில் பறவைகளின் கெச்சட்டத்தை விட அதிகமான சத்தத்தில் எழுத்தாளர்களின் கூட்டம் அவயம் போடுகிறது.
1980-களில்
கோவில்பட்டி வட்டாரத்தில் கிட்ட த்தட்ட முப்பதுக்கும்மேற்பட்ட எழுத்தாளர்கள் இருந்ததற்கான
காரணமாக இங்கே எழுச்சி பெற்றிருந்த இடதுசாரிகள் தான் காரணம். எழுத்தாளர் நகரம் என்று வட்டார வழக்குச் சொல்லாக மாறிவிட்ட
கோவில்பட்டியின் அடையாளத்துக்கு மற்றுமொரு காரணமாக எட்டு சாகித்ய அகாதமி
விருதாளர்கள் உருவாகிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோவில்பட்டியின் எந்தத்
தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக்
கொண்டிருப்பார்கள். முக்குக்கு முக்கு இருக்கும் டீக்கடைகளில் வெயிலோடு
சண்டை போட டீயும் சிகரெட்டுகள், பீடிகளைப் புகைத்துக் கொண்டு டால்ஸ்டாயின்
அன்னாகரீனினாவைப் பற்றியோ, தாமஸ்மன்னின் மந்திரமலை
பற்றியோ அனடோல் பிரான்ஸின் தாசியும் தவசியும் பற்றியோ, தாஸ்தயேவ்ஸ்கியின்
வெண்ணிற இரவுகளைப் பற்றியோ விதந்தோதிக் கொண்டிருக்கும்வேளையிலேயே, இடதுசாரிக்
கட்சி அலுவலகங்களின் படிக்கட்டுகளில் இரண்டு இளைஞர்கள் உலகைக் குலுக்கிய
பத்துநாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். புதிதாக அன்று
வந்த இளைஞரிடம் கார்க்கியின் தாய் நாவலைக்
கொடுத்து வாசிக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். வேறு சில எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனின்
துன்பக்கேணி பற்றியோ, கு.அழகிரிசாமியின்
ராஜா வந்திருக்கிறார் கதையைப் பற்றியோ தி.ஜானகிராமனின் மோகமுள்ளைப்
பற்றியோ, கிராஜநாராயணனின் கன்னிமை பற்றியோ, சுந்தரராமசாமியின் பிரசாதம் பற்றியோ, பேசிக்
கொண்டிருப்பார்கள். அப்போது
புதிதாக எழுதவந்து மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்த பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், கந்தர்வன், போன்ற
எழுத்தாளர்களின் படைப்புகள் கோவில்பட்டியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.
1971 இல் தாமரை இதழில் வெளியான
‘அறுப்பு’ என்கிற சிறுகதை மூலம் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய பூமணி தொடர்ந்து
சிறுகதைகள் எழுதி 53 சிறுகதைகளுடன் தன்னைத் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டவர். வயிறுகள், ரீதி,
நொறுங்கல்கள், நல்லநாள் ஆகிய நான்கு சிறுகதைத்
தொகுப்புகள் வந்துள்ளன ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள்
விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி
ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து
பிரமிப்பூட்டியது. வயிறுகள், ரீதி, என்ற
சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆகிருதி என் மனதில் பிரமாண்டமாக
எழுந்து நின்றார். கரிசல் மண்ணின் ஒடுக்கப்பட்ட மக்களை ரத்தமும் சதையுமாக
தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார். கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும்
சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை,
ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே
நிறுத்தினார்.
அதன்பிறகு வெளியான
“ எலேய்.. சக்கிலியத்
தாயோளி…”
என்ற முதல்வரியுடன் இலக்கிய உலகைக் குலுக்கிய நாவலான ’ பிறகு ‘ ஒரு அதிர்வை
ஏற்படுத்தியிருந்தது. பூமணியின்
வருகைக்கு முன்பே யதார்த்தவாதப்படைப்புகள் உருவாகியிருந்தன. எனறாலும் கு.அழகிரிசாமியும், கி.ரா.வும் காட்டிய
உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகத்தைப் பூமணி தன்னுடைய படைப்புகளில்
காட்டியிருந்தார். அவருடைய
படைப்புகளில் எளிய மக்களின் வாழ்க்கைப்பாடுகளை கச்சிதமான வடிவ நேர்த்தியுடன், செதுக்கிய
மொழிப்பிரயோகத்துடனும் ஆழ்ந்த இலக்கியக் கூருணர்வுடனும்
நவீனத் தனமையுடனும் வெளிப்படுத்தினாரெனலாம்.
அவருடைய சிறுகதைகள் வாசிப்பவர்களை
ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் தள்ளிவிடும். கலை அமைதியிலும் நேர்த்தியிலும் எப்போதும்
கவனம் செலுத்துபவராக பூமணி இருந்தார்.
நவீனத்துவத்தின் அத்தனை சிந்தனைப்போக்குகளையும்
மண்ணின் தனித்துவமான பண்பாட்டையும் உள்வாங்கி அவற்றிலிருந்து புதிய படைப்புகளை
கோவில்பட்டி எழுத்தாளர்கள் உருவாக்கினார்கள். அதன் வழியே தமிழிலக்கியத்தில் புதிய போக்குகளை
உருவாக்கினார்கள். தலித்
இலக்கியம் என்ற இலக்கியக்கோட்பாடாக உருவாகுமுன்பே தெற்கில் டி.செல்வராஜ்
மலரும் சருகும் எழுதியிருந்தார். பூமணி பிறகு நாவலை எழுதியிருந்தார். ஆனால்
பூமணியின் நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி சாதியக்கொடுமைகளை
அப்பட்டமாகப் பார்க்க முடியாது. அதற்கு மிக முக்கியமான காரணம், அவர் பிறந்து
வளர்ந்த ஊர் முழுவதும் ஒரே சமூகம் இருந்த ஊரென்பதால் மற்ற சாதிகளிடமிருந்து
எந்தவித நெருக்கடிகளையும் சந்திக்கவில்லை. எனவே தான் பூமணி தன்னுடைய கடைசிக்காலம் வரை
தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று சொல்லக்கூடாது என்பதில் கறாராக இருந்தார்.
ஆரம்பம் முதலே இடது சாரிக்கொள்கைகளின்பால்
ஈடுபாடு கொண்ட பூமணியின் படைப்புகளில் அதன் அடிநாதம் இழையோடிக் கொண்டேயிருக்கும். 1970-களில்
மேற்குவங்காளத்தைச் சேர்ந்த பாதல்சர்க்கார் சென்னையில் கொடுத்த மூன்றாவது நாடக
அரங்கு பயிற்சி பெற்றார். அந்தப்
பயிற்சிகளின் வழியாக நவீன நிகழ்கலை குறித்த ஞானத்தையும் பெற்றவர் பூமணி. கோவில்பட்டிக்கு
வரும்போதெல்லாம் படைப்பின் நுட்பங்கள் குறித்த அவருடைய உரையாடலும், மார்க்சீய
வெளிச்சத்தில் படைப்புகளை எப்படிப் பார்க்க வேண்டுமென்ற அவருடைய விவாதங்களும்
எங்களுக்கெல்லாம் பெரிய வெளிச்சத்தை கொடுத்தவை.
மென்மையான பேச்சு, அணுக்கமான
உடல்மொழியைக் கொண்டிருந்த, பூமணி
எல்லோருக்கும் நெருக்கமானவராகக் கணத்தில் மாறிவிடுவார். புதிய
எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அவர்களுக்கு மிகுந்த அக்கறையுடன் ஆலோசனைகள்
சொல்கிற பண்பு மிக்க பூமணி அவருடைய படைப்புகளைக் குறித்துச் சொல்லப்படும் எந்தக்
கருத்தையும் மனமுவந்து வரவேற்பார்.
கிட்ட த்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு
செய்து உருவாக்கிய சமூக அரசியல் வரலாற்றுப்புதினமான அஞ்ஞாடி எழுதும்போதெல்லாம்
அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டேயிருந்தார். நரம்புத்தளர்ச்சி நோயினால் கைகள் நடுங்க
கழுத்தும் முதுகும் வலிக்க வலிக்க எழுதி முடித்தார். அவர் எழுதுவதற்காக ஒரு விஷேசமான மேசையையும்
பள்ளிக்கூடக்கரும்பலகை போல நட்டமாய் நிற்க வைத்த மரப்பலகையின் கிளிப்பில்
மாட்டப்பட்ட தாள்களில் எழுதினார்.
பூமணியை ஒரு செம்மைவாதி என்று சொல்லலாம். எந்த ஒரு
வேலையாக இருந்தாலும் அதைச் செம்மையாகச் செய்யும்வரை ஓயமாட்டார். அதேபோல
தொழில்முறை எழுத்தாளரைப் போன்று எழுதும் வேலைகளை நேரக்கணக்கில் செய்பவர். காலை 4 மணிக்கு எழுந்து
எழுத த் தொடங்குவார். நேரம் தவறாமை, செம்மையாகச்
செய்தல், கறாரான நேர்மை, புதிய நோக்கு
இவையெல்லாவற்றையும் அவருடைய படைப்புகளிலும் பார்க்கலாம்.
அஞ்ஞாடி என்ற பிரம்மாண்டமான நாவல் வாழ்வையும்
வரலாற்றையும் ஊடறுத்துச் சென்று துடிதுடிக்கும் மானுடவாழ்வின் அவலங்களையும், உன்னதங்களையும், காட்சிப்படிமங்களாக
முன் வைக்கிறது.
கலிங்கல் கிராமத்தின் ஆண்டி என்கிற
ஒரு மானுடப்புள்ளியிலிருந்து துவங்குகிறது நாவல். ஆண்டிக்கும் மாரிக்குமான நட்பில்
ஒரு காவியநேசம் வெளிப்படுகிறது. அவர்கள் இருவரின் பார்வை வழியே கிராமம் நம் கண்கொள்ளாக்காட்சிகளாக
விரிந்து மலர்கிறது. இளம்பருவத்தின் துள்ளல், விளையாட்டு,
கேலி, கிண்டல், ஏகடியம்,
என்று படிக்கப் படிக்கத் தெவிட்டாத பக்கங்களாக நம்மை ஈர்க்கிறது.
தமிழிலக்கியத்தில் இத்தகைய ஒரு காவிய நட்பு இதற்கு முன்
சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அதே போல ஆண்டி என்ற கதாபாத்திரம்
நாவலின் 1066 பக்கங்களிலும் ஊடும் பாவுமாக விசுவரூபமாக
நிறைந்து நிற்கிறார். ஆதரவற்றவர்களை ஆதரிப்பதிலாகட்டும், மாரியின்
குடும்பத்தின் மீதான கவனிப்பாகட்டும், அனாதைகளுக்கு உதவி
செய்வதிலாகட்டும், அகதிகளுக்கு வாழ்வளிப்பதிலாகட்டும்,
ஆண்டி, கருப்பி, என்ற
அபூர்வமனிதர்கள் இந்த வாழ்வை அர்த்தப்படுத்துகிறார்கள். வாழ்வை நிறைவாக வாழ்வதற்கு
அவர்களுக்கு அரசியல், தத்துவ கோட்பாடுகள் தேவையாக இல்லை.
எளிமையான அன்பு, சகமனிதர்களின் மீதானநேசம் போதும்.
இந்த வாழ்வினூடாகத் தான் பூமணி என்ற
மகத்தான கலைஞன் வரலாற்றின் பேராற்றில் மூழ்கி எழுகிறான். எட்டையபுரம் சமஸ்தான
வரலாறும், மதுரையை ஆண்ட நாயக்கர்களின் வரலாறும்
இதுவரை சொல்லப்படாத கோணங்களில் சொல்லப்படுகிறது. பஞ்சகாலத்தைப் பற்றி ஒரு
உணர்ச்சிகரமான சித்திரம் நம் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு
இனம் வணிகத்தைக் கைப்பற்றி வாழ்வில் முன்னேறுகிறது. முன்னேற்றத்துக்கு சாதி ஒரு
தடைக்கல்லாய் இருக்கும்போது மதம் மாறுகிறார்கள். வணிகத்தின் மூலம் தங்கள் நிலையை
மாற்றப் போராடிக் கொண்டிருக்கும் அந்த இனத்தின் மீது ஆதிக்கசாதியினரின் பொறாமைத்தீ
பற்றியெறிகிறது. கழுகுமலையில் கலவரம். சிவகாசிக் கொள்ளை, என்று
அர்த்தமற்ற வன்முறை அர்த்தமுள்ள வாழ்வினை அழிக்கிறது. இந்த வன்முறைக்காட்சிகள்
அப்படியே கண்முன்னே நடப்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பூமணி என்ற
எழுத்துக்கலைஞனை இந்தப்பக்கங்களில் நாம் தரிசிக்க முடிகிறது. இதற்கெல்லாம் ஆதாரமான
ஆவணங்களும், வழக்கு விபரங்களும், விசாரணைக்
குறிப்புகளும், தீர்ப்புகளும் நாவலிலே சொல்லப்பட்டு நாவலின்
நம்பகத்தன்மையைஉறுதிப்படுத்தியிருக்கிறது.
இந்து முஸ்லீம் கலவரங்களும், சுதந்திரப்போரின் இறுதி நாட்களும் காட்சிகளாய்
விரிகிறது. ஒரு நூற்றாண்டு கால வரலாறு மிகத் துல்லியமாக புனைவின் விசித்திரமான
பெருவெளியில் நம்மை நிறுத்தி சுற்றிலும் நடந்து கொண்டேயிருக்கிறது. காலத்தின் ஊடாக
பயணம் செய்து அன்றைய மக்களின் பண்பாடு, கலாச்சாரம், உணவுப்பழக்கவழக்கங்கள், மரபுகளை, மொழியை, சொல்கதைகளை, நாட்டார்
வழக்காற்றை கரிசல் பூமியின் வெப்பமிக்க வாழ்வை, உறவுகளை
எல்லாம் நாவலின் வழியே வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை பூமணி வழங்கியிருக்கிறார். தமிழின்
தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக அஞ்ஞாடி ஒளிவீசுகிறது..
இதோ இப்போதும் கோவில்பட்டி நகரத்தில் அந்தி சாய்கிறது. வெப்பம்
மிகுந்து வீசிய காற்று குளிர்ந்து வீசுகிறது. ந்கரத்தின்
மையத்திலிருக்கும் காந்திமைதானத்து மரத்தில் பறவைகள் கூடடைகின்றன. ஆனால்
முன்புபோல கெச்சட்டம் இல்லை. உரையாடல்களில்லை. மெல்ல
இருளுக்குள் இருளாக எழுத்தாளர்கள் வந்து சேர்கிறார்கள். எல்லாரும்
வட்டமிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள். வட்டத்தில் ஒரு இடம்
காலியாக இருக்கிறது. அந்த இடம் பூமணியின் இடம். நாங்கள் பேசிக்
கொண்டிருக்கிறோம். பூமணி இருளில் கேட்டுக் கொண்டிருக்கிறார். நாங்கள்
இடைவெளிவிடும் நேரத்தில் அவர் பேசுவதைக் கேட்கிறோம். அந்த மென்மையான குரலைக்
கேட்கிறோம்.
எங்கள் மண்ணின் மகத்தான படைப்பாளி பூமணியை வணங்குகிறோம்..
எங்கள் பூமணி!.
நன்றி - அந்திமழை

No comments:
Post a Comment