இர்பானின் வண்ணப்பென்சில்
உதயசங்கர்
ஒரே இருட்டு. முதலில்
இர்பானுக்கு எதுவும் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இருட்டு பழகியது.
இர்பான் தேடினான். ஏதாவது தின்பதற்குக் கிடைக்குமா?
என்று இடிபாடுகளில் தேடினான். மண்ணும் புழுதியும்,
கற்களும் கால்களில் இடறின. இர்பான் கைகளால் தரையைத்
துழாவினான். கையில் எது கிடைத்தாலும் கண்களுக்கு அருகில் கொண்டு
வந்து பார்த்தான். இருபத்திநான்கு மணி நேரமாக எதுவும் சாப்பிடவில்லை.
வயிறு சுண்டிச் சுண்டி வலித்தது.
இப்போது மட்டுமல்ல எப்போது யுத்தம் தொடங்கியதோ
அப்போது இருந்தே ஒரு வேளை உணவு அல்லது அதுவும் கிடையாது. எப்போது
குண்டு விழும்? எங்கே குண்டு விழும்? என்று
தெரியாது. மருத்துவமனை, பள்ளிக்கூடம்,
மசூதி, எங்கேயும் ஒளிய முடியாது. எல்லா இடங்களிலும் குண்டு விழுந்தது. கொஞ்ச நேரத்துக்கு
முன்னால் இர்பானும் அப்சலும் பள்ளிக்கூடத்தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு ஒரு பொம்மை கிடைத்திருந்தது. அதை வைத்து
விளையாடிக் கொண்டிருந்தோம்.
” அலாவுதீன் கதையில் வருகிற ஜீனியைப் போல அந்தப்
பொம்மை கேட்டதை எல்லாம் கொடுத்தால் எப்படி இருக்கும்? ”
என்று சொல்லிச் சிரித்தான் அப்சல்.
” எனக்கு உடனே ரொட்டியும் சப்ஜியும் வேணும்னு
கேப்பேன்” என்று தீவிரமான முகத்துடன் கேட்டான் இர்பான்.
“ இல்லையில்ல.. சிக்கன்
சாப்ஸும் பரோட்டாவும் கேப்பேன்..”
என்று அப்சல் சொன்னான்.
அப்போது அவன் தன்னுடைய உலர்ந்த உதடுகளை
உலர்ந்த நாவினால் தடவிக் கொண்டான். அவனுடைய கண்களில் ஒளி தெரிந்தது.
அந்த ஒளியில் அவன் கேட்ட உணவு மிதந்து கொண்டிருந்தது. நாவில் பசை போல எச்சில் ஊறியது.
. ஆனால் இர்பான் பேசாமல் அந்தப் பொம்மையைப்
பார்த்துக் கொண்டிருந்தான்.
“ உனக்கு என்ன வேணும்னு கேளுடா.. நாம் ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்.. “
இர்பான் உண்மையிலேயே அந்தப் பொம்மை ஜீனி
தான் என்று நம்பியவனைப் போலச் சொன்னான். தூரத்தில் விமானங்கள் உறுமும் சத்தம் கேட்டது.
உடனே அருகில் கட்டிட இடிபாடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். எங்கோ குண்டுகள் விழும் சத்தமும் கேட்டது.
அந்தச் சத்தம் மெல்ல குறைந்ததும் வெளியில்
வந்தார்கள். வெகுதூரத்தில் வானில் புகை மண்டலம் தெரிந்தது. இருவரிடமிருந்தும் ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது. இந்தச்
சத்தங்கள் அவர்களுக்குப் பழகி விட்டது.
அப்சல் சொன்னான்.
“ இது பட்டங்களின் திருவிழா காலம் இல்லையா
இர்பான்..” என்று வானத்தைப் பார்த்தான். ஒரே புகை மண்டலமாக இருந்தது. திடீரென ஒரு கேவலுடன் கையிலிருந்த
பொம்மையைப் பார்த்தபடி,
“ எனக்கு என் தங்கச்சிப்பாப்பா வேணும்னு கேப்பேன்..”
என்றான். அதைக் கேட்ட இர்பானுக்கு அழுகை வந்தது.
அவனுடைய அம்மா அப்பா தம்பியின் ஞாபகங்கள் வந்து விட்டது. அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“ நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இந்தச் சண்டையே
வேண்டாம்னு கேப்போமா? “ என்றான் இர்பான்.
எதுவும் பேசாமல் அப்சல் எழுந்து போய்
விட்டான். அவன் போனதும் அதுவரை ஒளிந்திருந்த பசி மறுபடியும் பூதம் போல
எழுந்து வந்தது. இர்பான் உணவு தேடி இடிந்த கட்டிடங்களுக்குள்
போனான்.
திடீரெனக் காதைப்பிளக்கும் குண்டு சத்தம்
மிக அருகில் கேட்டது.
சற்றுதூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த
அப்சலைக் காணவில்லை. இர்பானுக்குத் தலை சுற்றியது. அப்படியே கீழே விழுந்து விட்டான். இப்போது தான் விழிப்பு
வந்தது. பசித்தது. வயிறு என்று ஒன்று இல்லாமல்
இருந்தால்….
இர்பான் மெல்லத் தவழ்ந்து போனான்.
தரையில் ஒரு பென்சில் கையில் தட்டுப்பட்டது. இர்பான்
கண்களுக்கு அருகில் கொண்டு வந்து பார்த்தான். அது சிவப்பு வண்ணப்
பென்சில். அவனுக்கு சிவப்பு நிறம் மிகவும் பிடிக்கும்.
எப்போதும் சிவப்பு நிற உடைகளைத் தேர்ந்தெடுப்பான். அவனுடைய பொருட்கள் எல்லாவற்றிலும் சிவப்பு நிறம் ஏதாவது ஒருவகையில் இருக்கும்.
அவன் முகத்தில் லேசான சிரிப்பு வந்தது.
இர்பான் அந்தப் பென்சிலால் கீழே இடிந்து
விழுந்து கிடந்த சிமெண்ட் சுவரின் மீது கிறுக்கினான். இந்தப்
பென்சில் ஒரு மாயப்பென்சிலாக இருக்ககூடாதா என்று நினைத்தான். எத்தனை கதைகளில் மாயாஜாலம் நடக்கிறது.!
இருட்டுக்குள் அந்தச் சுவரில் எதை எதையோ
கிறுக்கினான். மனதில் தோன்றியதை எல்லாம் வரைந்தான் இர்பான். அவன் ஓவியன் அல்ல. அழகாக வரையத் தெரியாது. ஆனால் கிறுக்குவதற்கு பயிற்சி தேவையா என்ன?
அப்படியே கையில் பென்சிலைப் பிடித்தபடி
மயங்கி விட்டான்.
காலையில் அவனுடைய வீட்டில் சிவப்புநிற
மெத்தையில் கண்விழித்தான். தெருவில் குழந்தைகள் விளையாடும் கூக்குரல்
கேட்ட து. சன்னல் வழியே பார்த்தான்.
பட்டங்களின் திருவிழா.
வானத்தில் ஏராளமான வண்ண வண்ணப்பட்டங்கள், வால்
முளைத்த பட்டங்கள் போட்டி போட்டுக் கொண்டு பறந்து கொண்டிருந்தன. அவனுக்கு மிகவும் பிடித்த சிவப்பு நிறப்பட்டமும் பறந்து கொண்டிருந்தது.
அம்மா காலை உணவு சாப்பிட அழைக்கும் குரல்
கேட்டது. இர்பான் கண்களைத் திறக்க முயற்சித்தான்.
நன்றி - தடாரி இணைய இதழ்