Sunday, 3 August 2025

சாதியின் தத்துவம் - 1

 சாதியின் தத்துவம்



1. சாதிப்பாகுபாடுகளின் அடிப்படையே பருப்பொருளான உடல்கள் தான். அந்த உடல்கள் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய, சூத்திர, பஞ்சம உடல்கள் தான்.
2. ஒவ்வொரு உடலும் புழங்குவதற்கான நிலம், நீர், காற்று, தீ, வெளி, வரையறுக்கப்படுகிறது.
3. வரையறுக்கப்பட்ட எல்லைகளிலிருந்து அந்த உடல்கள் தவறினால் தண்டனை அளிக்கப்படுகிறது.
4. சட்டம் இயற்றுகிறவர் எப்போதுமே அந்தச் சட்டத்தின் அனைத்துச் சலுகைகளையும் மீறல்களையும் அனுபவிப்பார் என்பது எழுதப்படாத விதியல்லவா? அதனால் இந்தச் சட்டங்களை வகுத்த பார்ப்பனருக்கு இந்தச் சட்டங்களிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது சலுகை அளிக்கப்படுகிறது.
5. மற்ற உடல்களில் ஷத்திரிய உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. வைசிய உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. சூத்திர உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. ஆனால் பஞ்சம உடல் முழுமைக்கும் கட்டுப்பாடுகள் உண்டு.
6. பஞ்சம உடல் இயற்கை மூலங்களான நீரிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. காற்றிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. பூகோளரீதியாக ஊரைவிட்டு நகரை விட்டு விலக்கி வைக்கப்படுகிறது. நிலத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. நெருப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறது. ( அவர்களைக் கொளுத்துவதற்கு மட்டுமே தீயை அனுமதிப்பதிப்பார்கள்.
7. குறிப்பிட்ட உடல்களைக் குறிப்பிட்ட எல்லைகளில் கட்டுப்படுத்தித் தனிமைப்படுத்துவதின் வழியே அந்த உடல்களை தங்களுடைய முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டு வருகிறது வர்ணாசிரமத்தருமம்.
8. அதற்கு அவர்கள் சடங்குகளின் வழியே ஒவ்வொரு சாதியையும் வர்ணத்தையும் பிரிக்கிறார்கள். இன்னின்ன சடங்குகளை இன்னின்ன முறையில் இன்னின்னார் தான் செய்ய வேண்டும் என்று சட்டங்களை வர்ணாசிரமக்கோட்பாட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
9. கல்வி உரிமை மறுக்கப்பட்ட மற்ற சாதிகளுக்கு எப்படி இந்தச் சட்டங்கள் தெரியும்? என்ற கேள்விக்கு புராண, இதிகாச, புளுகு மூட்டைகளின் மூலம் அவர்கள் மனதை வசப்படுத்துகிறார்கள்.
10. பரம்பரை பரம்பரையாக இந்தக் கதைகள் ஊதிப்பெருகி அனைத்து சாமானியர்களின் மனதிலும் ஊடுருவி சமூகத்தில் தன்னுடைய இடம் என்ன என்பதை ஆழமாகப் பதிய வைத்து விடுகிறது.
11. மனிதர்களின் ஆன்மீக, அப்பாலை உலக நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்களிலும் இந்த எல்லைகளை இன்னமும் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ( இளையராஜா சர்ச்சை, அர்ச்சகர் சர்ச்சை )
12. ஆக சாதியப்பாகுபாடு அறிவுத்திறனைக் கொண்டு பிரிப்பதில்லை. அவரவர் வைத்திருக்கும் செல்வத்தைக் கொண்டு பிரிப்பதில்லை. புகழைக் கொண்டு பிரிப்பதில்லை. உடலைக் கொண்டே பிரிக்கிறார்கள்.
13. எந்த உடலின் வழியே பிறக்கிறோமோ அந்த உடல் தான் நம்முடைய சாதியை, வர்ணத்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் நமது இடத்தையும் தீர்மானிக்கிறது.
14. அதனால் தான் அம்பேத்கர் சமமான உடல்களுக்கிடையில் சமமான மதிப்பு வேண்டும். சாதி என்ற கற்பிதமான புனைவு ஒழிய வேண்டும்.
15. அனைத்து உடல்களும் ஒன்றிணையும் போது சமத்துவமான உடல்கள் தோன்றும். அப்போது சாதி என்ற கற்பிதம் ஒழியுமென்று அம்பேத்கர் சொன்னார்.
வெறுப்பின் கொற்றம் வீழ்க!
அன்பே அறம் என எழுக!

1 comment: