Sunday, 3 August 2025

சாதியின் தத்துவம் - 1

 சாதியின் தத்துவம்



1. சாதிப்பாகுபாடுகளின் அடிப்படையே பருப்பொருளான உடல்கள் தான். அந்த உடல்கள் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய, சூத்திர, பஞ்சம உடல்கள் தான்.
2. ஒவ்வொரு உடலும் புழங்குவதற்கான நிலம், நீர், காற்று, தீ, வெளி, வரையறுக்கப்படுகிறது.
3. வரையறுக்கப்பட்ட எல்லைகளிலிருந்து அந்த உடல்கள் தவறினால் தண்டனை அளிக்கப்படுகிறது.
4. சட்டம் இயற்றுகிறவர் எப்போதுமே அந்தச் சட்டத்தின் அனைத்துச் சலுகைகளையும் மீறல்களையும் அனுபவிப்பார் என்பது எழுதப்படாத விதியல்லவா? அதனால் இந்தச் சட்டங்களை வகுத்த பார்ப்பனருக்கு இந்தச் சட்டங்களிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படுகிறது. அல்லது சலுகை அளிக்கப்படுகிறது.
5. மற்ற உடல்களில் ஷத்திரிய உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. வைசிய உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. சூத்திர உடலுக்கும் சில கட்டுப்பாடுகளுண்டு. ஆனால் பஞ்சம உடல் முழுமைக்கும் கட்டுப்பாடுகள் உண்டு.
6. பஞ்சம உடல் இயற்கை மூலங்களான நீரிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. காற்றிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. பூகோளரீதியாக ஊரைவிட்டு நகரை விட்டு விலக்கி வைக்கப்படுகிறது. நிலத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறது. நெருப்பிலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறது. ( அவர்களைக் கொளுத்துவதற்கு மட்டுமே தீயை அனுமதிப்பதிப்பார்கள்.
7. குறிப்பிட்ட உடல்களைக் குறிப்பிட்ட எல்லைகளில் கட்டுப்படுத்தித் தனிமைப்படுத்துவதின் வழியே அந்த உடல்களை தங்களுடைய முழுமையான ஆதிக்கத்துக்குள் கொண்டு வருகிறது வர்ணாசிரமத்தருமம்.
8. அதற்கு அவர்கள் சடங்குகளின் வழியே ஒவ்வொரு சாதியையும் வர்ணத்தையும் பிரிக்கிறார்கள். இன்னின்ன சடங்குகளை இன்னின்ன முறையில் இன்னின்னார் தான் செய்ய வேண்டும் என்று சட்டங்களை வர்ணாசிரமக்கோட்பாட்டில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
9. கல்வி உரிமை மறுக்கப்பட்ட மற்ற சாதிகளுக்கு எப்படி இந்தச் சட்டங்கள் தெரியும்? என்ற கேள்விக்கு புராண, இதிகாச, புளுகு மூட்டைகளின் மூலம் அவர்கள் மனதை வசப்படுத்துகிறார்கள்.
10. பரம்பரை பரம்பரையாக இந்தக் கதைகள் ஊதிப்பெருகி அனைத்து சாமானியர்களின் மனதிலும் ஊடுருவி சமூகத்தில் தன்னுடைய இடம் என்ன என்பதை ஆழமாகப் பதிய வைத்து விடுகிறது.
11. மனிதர்களின் ஆன்மீக, அப்பாலை உலக நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோவில்களிலும் இந்த எல்லைகளை இன்னமும் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ( இளையராஜா சர்ச்சை, அர்ச்சகர் சர்ச்சை )
12. ஆக சாதியப்பாகுபாடு அறிவுத்திறனைக் கொண்டு பிரிப்பதில்லை. அவரவர் வைத்திருக்கும் செல்வத்தைக் கொண்டு பிரிப்பதில்லை. புகழைக் கொண்டு பிரிப்பதில்லை. உடலைக் கொண்டே பிரிக்கிறார்கள்.
13. எந்த உடலின் வழியே பிறக்கிறோமோ அந்த உடல் தான் நம்முடைய சாதியை, வர்ணத்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் நமது இடத்தையும் தீர்மானிக்கிறது.
14. அதனால் தான் அம்பேத்கர் சமமான உடல்களுக்கிடையில் சமமான மதிப்பு வேண்டும். சாதி என்ற கற்பிதமான புனைவு ஒழிய வேண்டும்.
15. அனைத்து உடல்களும் ஒன்றிணையும் போது சமத்துவமான உடல்கள் தோன்றும். அப்போது சாதி என்ற கற்பிதம் ஒழியுமென்று அம்பேத்கர் சொன்னார்.
வெறுப்பின் கொற்றம் வீழ்க!
அன்பே அறம் என எழுக!

Saturday, 2 August 2025

இந்திய நாடோடிக்கதை 4

 

இந்திய நாடோடிக்கதை 4

பேராசைக்காரத் தவளை

ஆங்கிலம் வழி தமிழில் -- உதயசங்கர்




ஒரு ஊரில் ஒரு தவளையும் எலியும் நண்பர்களாக இருந்தன.

தவளையிடம் எலி சொன்னது,

போய் கொஞ்சம் குச்சிகள் கொண்டு வா.. நான் போய் கொஞ்சம் மாவும் பாலும் கொண்டு வருகிறேன்.. இரவு உணவு சமைப்போம்என்றது.

தவளை காட்டுக்குள் வெகுதூரம் சென்று நிறைய குச்சிகளைக் கொண்டு வந்த்து. எலியும் மாவும் பாலும் கொண்டு வந்து சேர்த்தது.

பிறகு எலி இரவு உணவைச் சமைத்தது. சமைத்து முடித்ததும்,

நான் குளித்து விட்டு வருகிறேன்.. நீ இங்கேயே இருந்து உணவை யாரும் திருடித் தின்று விடாமல் பார்த்துக் கொள்..”

என்று தவளையிடம் சொல்லிவிட்டு குளிக்கப்போய் விட்டது. எலி அந்தப்பக்கமும் போனதும் தவளை அவசர அவசரமாக உணவைச் சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டது.

எலி திரும்பி வந்து பார்த்தால் சமைத்து வைத்த உணவு இல்லை. தவளையும் அங்கு இல்லை. தவளையைத் தேடி வெளியே போனது. சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டே தேடியது. தூரத்தில் தவளை போய்க் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் ஓடிச் சென்று மறித்தது.

நீ ஏன் உணவைச் சாப்பிட்டாய்? ஏன் ஓடிப் போகிறாய்? “

என்று கேட்டது. உடனே தவளை,

ஓ அருமை நண்பா.. உன் உணவை நான் சாப்பிடவில்லை..ஒரு பெரிய நாய் வந்தது. நானோ மிகவும் சிறியவன் நாயோ மிகப்பெரியது.. அது என்னைப் பயமுறுத்தியது.. நான் ஓடி வந்து விட்டேன்..”

என்று சொன்னது. அதைக் கேட்ட எலி,

அப்படியா சரி.. நீ போய் இன்னும் குச்சிகளைக் கொண்டு வா.. நான் மாவும் பாலும் கொண்டு வருகிறேன்..”

என்று சொன்னது. தவளை காட்டுக்குள் தூரமாகச் சென்று நிறையக் குச்சிகளைக் கொண்டு வந்தது. எலியும் மாவையும் பாலையும் கொண்டு வந்தது. எலி நெருப்பை மூட்டி உணவைச் சமைத்தது. பிறகு தவளையிடம், உணவைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றது. எலி அந்த இடத்தை விட்டுப் போன உடனேயே தவளை உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டது.

எலி திரும்பி வரும்போது தவளையைக் காணவில்லை. உணவும் இல்லை. காட்டுக்குள் சென்று கூவி அழைத்தது. ஒரு மரத்திற்குப் பின்னால் இருந்து,


இதோ இங்கிருக்கிறேன்.. இங்கிருக்கிறேன்..” என்று பதில் சொன்னது. எலி தவளையிடம் சென்று,

நீ ஏன் என் உணவைச் சாப்பிட்டாய்? “ என்று கேட்டது.

நான் சாப்பிடவில்லை.. அது அந்தப் பெரிய நாய் தான்.. உணவைச் சாப்பிட்ட்து.. அது என்னையும் சாப்பிட விரும்பியது.. நான் ஓடி வந்து விட்டேன்..”

என்று தவளை பதில் சொன்னது.

அப்படியா.. சரி.. நீ போய் இன்னும் கொஞ்சம் குச்சிகளைக் கொண்டு வா..” நான் போய் பாலும் மாவும் கொண்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எலி சென்றது.  மறுபடியும் எலி உணவு சமைத்து வைத்து விட்டுக் குளிக்கக் கிளம்பியது.

மறுபடியும் தவளை உணவைச் சாப்பிட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டது. எலி திரும்பி வரும்போது உணவும் இல்லை. தவளையும் இல்லை. எலி காட்டுக்குள் சென்று தவளையைக் கண்டுபிடித்து அது தான் உணவைச் சாப்பிட்டது என்று குற்றம் சாட்டியது.

அதைக் கேட்ட தவளை, “ இல்லை..” என்றது. எலி, “ நீ தான்..” என்றது.

இன்னொரு முறை குச்சி எடுத்துட்டு வரச் சொன்னால் நான் உன்னைச் முழுங்கிருவேன்....” என்றது தவளை.

சரி முழுங்கிரு..” என்றது எலி. தவளையும் எலியை முழுங்கிவிட்டு ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தது. அப்போது ஒரு ரொட்டிக்கடைக்காரன் வந்தான்.

ரொட்டிக்காரா ரொட்டிக்காரா.. இங்கே வா.. எனக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு..” என்றது தவளை. ரொட்டிக்காரன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். யாரையும் காணவில்லை. யார் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. கடைசியில் மரத்துக்குப் பின்னால் தவளை உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டான்.

எனக்குக் கொஞ்சம் ரொட்டி கொடு..” என்றது தவளை. ரொட்டிக்காரன்,

முடியாது.. நான் உனக்கு ரொட்டி தரமாட்டேன்.. நான் மிகப்பெரிய மனிதன்.. நீயோ மிகச்சிறிய தவளை.. உன்னிடம் பணமும் கிடையாது..”

என்று சொன்னான்.

என்னிடம் பணம் இருக்கிறது.. நான் கொஞ்சம் பணம் தருகிறேன்.. நீ கொஞ்சம் ரொட்டி கொடு..” என்று சொன்னது தவளை.

இல்லை நான் தரமாட்டேன்..” என்றான் ரொட்டிக்காரன்.

நீ ரொட்டி தரவில்லை என்றால் நான் முதலில் உன்னைச் சாப்பிடுவேன்.. பிறகு உன்னுடைய ரொட்டியைச் சாப்பிடுவேன்..” என்றது தவளை. சொன்னது போலவே தவளை முதலில் அந்த மனிதனைச் சாப்பிட்டது. பிறகு ரொட்டியையும் சாப்பிட்டது.

அந்த நேரத்தில், ஒரு மனிதன் ஆரஞ்சுப்பழங்களும் எலுமிச்சைப்பழங்களும் சுமந்து கொண்டு வந்தான். தவளை அவனைப் பார்த்து,

இங்கே வா.. இங்கே வா..” என்று கூப்பிட்டது. அந்தக் குரலைக் கேட்டு முதலில் அந்த மனிதன் பயந்து போனான். பிறகு தவளையைப் பார்த்தான். தவளை சொன்னது,

எனக்குக் கொஞ்சம் எலுமிச்சம்பழங்கள் கொடு..” என்றது. அந்த மனிதன்,

முடியாதுஎன்றான்.

சரி.. நீ கொடுக்கவில்லை என்றால் நான் உன்னை முழுங்கிருவேன்..” என்றது தவளை. பிறகு தவளை ஆரஞ்சுப்பழங்களும் எலுமிச்சம்பழங்களும் சுமந்து வந்த மனிதனை விழுங்கிவிட்டது. அந்த நேரத்தில் ஒரு குதிரையும் அதன் இணையும் வந்தன. அவற்றைப் பார்த்த தவளை,

என்ன்னை உன் முதுகில் தூக்கிச் செல்.. நான் உனக்கு பணம் தருகிறேன்..” என்றது.

முடியாது.. நீ குரங்கு மாதிரி இருக்கிறாய்.. உன்னை என் முதுகில் சுமக்க மாட்டேன்..” என்றது குதிரை.

நீ முடியாது என்றால் உன்னை விழுங்கி விடுவேன்..” என்று சொல்லி அந்தக் குதிரையையும், அதன் இணையையும் விழுங்கி விட்டது.

பிறகு அந்த வழியே ஒரு முடிதிருத்துநர் சென்றார். அவரைப் பார்த்த தவளை,

வா.. எனக்கு முடி மழித்து விடு..” என்றது.

முடிதிருத்துநரும்,

சரி இதோ.. செய்கிறேன்..” என்றார். அவர் தவளைக்கு முடி மழித்தார். அவர் தவளையின் வயிறு மிகவும் பெரியதாக இருப்பதாக நினைத்தார். வயிற்றில் மழிக்கும் போது கத்தியால் ஒரு வெட்டி விட்டார்.

என்ன ஆச்சரியம்!

வயிற்றுக்கு உள்ளே இருந்து ஒரு எலியும், மாவும் பாலும், வந்தன. ரொட்டிக்காரரும் ரொட்டிகளும் வந்தன. எலுமிச்சை வியாபாரியும் அவனுடைய எலுமிச்சைகளும் ஆரஞ்சுப்பழங்களும் வந்தன. கடைசியாக குதிரையும் அதன் இணையும் வந்தன.

அதைப் பார்த்த முடிதிருத்துநர் ஓடியே போய் விட்டார்.

பேராசை கொண்ட தவளை வயிறு கிழிந்து இறந்து விட்டது. 

நன்றி - புக் டே