கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் ஏன் முதுகெலும்பு
இல்லை?
உதயசங்கர்
மத்தியான
நேரம். வெயில் சுள்ளென்று அடித்தது. வீட்டுக்கு வெளியே சாக்கடை நீர் ஓடாமல் கெட்டிக்
கிடந்தது. அதில் அப்போது தான் முட்டையிலிருந்து பொரித்த கொசுக்குஞ்சு தன் சிறகுகளை
விரித்துப் பறக்கத் தயாரானது. தலையை அங்கும் இங்கும் திருப்பிப் பார்த்தது. தன்னுடைய ஊசியான வாயை முன் கால்களால் துடைத்தது. பிறகு ஜெட்
மாதிரி அங்ஙொய்ங்… அங்ஙொய்ங்… என்று சிறகுகளை அடித்துக் கொண்டு வீட்டுக்குள் பறந்தது.
வீட்டுக்குள்
நுழைந்ததும் அதன் மூக்கு மனிதவாடையை முகர்ந்து விட்டது. உடனே அந்த இடத்தை நோக்கிப்
பறந்தது. ஒரு மனித உருவம் இந்த வெயிலிலும்
போர்வையால் மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது. எங்காவது இடம் கிடைக்குமா என்றுச்
சுற்றிச் சுற்றி வந்தது. காலுக்கு அருகில் இத்தினியூண்டு இடம் கிடைத்தது. உடனே அந்தச்
சந்து வழியே போய் கணுக்காலில் உட்கார்ந்தது. வாயில் எச்சிலைச் சுரந்தது. ஊசியை இறக்கியதும்
வலி தெரியாமல் இருக்க வேண்டும் அல்லவா. ஊசி வாயினால் குத்துவதற்குத் தலையைக் குனிந்தது
கொசுக்குஞ்சு.
அப்போது,
“ இது
என் ஏரியா.. நீ எப்படி உள்ளே வந்தே? ” என்று
ஒரு குரல் கேட்டது. யார்ரா அது? என்று திரும்பிப் பார்த்தது. அங்கே கணுக்கால் தோலில்
ஒட்டிக் கொண்டு ஒரு சிறிய மூட்டைப் பூச்சி கண்களை உருட்டிக் கொண்டு நின்றது. நல்ல சிவப்பு
அரக்கு நிறத்தில் மொத்தையாக இருந்தது அந்த மூட்டைப் பூச்சி.
“ ஏய்
என்ன அதட்டுறே.. இடமா இல்லை.. நீஒரு பக்கமாச் சாப்பிடு.. நான் ஒரு பக்கமாக் குடிக்கிறேன்..”
“ நாங்க
பத்துக்கோடி வருசத்துக்கு முன்னாடியே பூமிக்கு வந்துட்டோம் தெரியுமா? “
என்று
தலையைத் தூக்கிக் கொண்டு பேசியது மூட்டைப் பூச்சி.
“ ஹலோ..
நாங்களும் சும்மாயில்ல.. பனிரெண்டு கோடி வருசத்துக்கு முன்னாடியே வந்துட்டோம்.. “
என்று
ஒரு காலைத்தூக்கி எச்சரித்தபடியே சொன்னது கொசுக்குஞ்சு.
“ அதுவும்
அப்படியா.. நான் வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சா.. ஒரு வாரத்துக்குச் சாப்பிடாம இருப்பேன்
தெரியுமா? “
“ நானும்
தான் ஊசியை நுழைத்து ரத்தத்தை உறிஞ்சினால் பல நாள் எனக்குச் சாப்பாடு வேண்டாம்..”
“ நான்
பொந்து பொடவுக்குள்ள ஒளிஞ்சிக்குவேன்..”
“ நானும்
மூலை முடுக்கு சாக்கடை, ஓடாத தண்ணீர் எங்கே இருந்தாலும் அங்கே போயிருவேன்..”
“ உனக்கு
இறக்கை இருக்குன்னு பறக்கறியா.. நான் தோல்ல அலர்ஜி, அரிப்பு, சில நேரம் தடிப்பு, காய்ச்சல்
எல்லாத்தையும் உண்டுபண்ணிருவேன்..”
“ அடப்போடா
சின்னப்பயலே என்னால நூற்றுக்கணக்கான நோய்களை உருவாக்கமுடியும்.. அத்தனை வைரஸ்களை என்
எச்சிலில் சுமந்து கொண்டு ஒவ்வொருத்தருக்கும் பரப்பி விடுவேன்..”
“ அடப்பாவி..
நீ தான் டெங்கு, சிக்கன் குனியா, நிபா, இப்படி வைரஸுகளைப் பரப்பி விடுதியா? “
அதைப்
பாராட்டு என்று நினைத்துக் கொண்டே,
“ ஆமா
நம்மை இயற்கை ஏன் படைக்கணும் இப்படி இரத்தக்காட்டேரியாக அலைய விடணும்..”
என்று
கேட்டது.
“ போடா
முட்டாள்.. செடி கொடி தாவரங்கள், மிருகங்கள், இவற்றில் தான் நாம் வாழ்ந்து வந்தோம்..
ஆனால் மனிதன் தான் நமக்கு வசதியாக இருந்தான்.. நாம் இங்கே தங்கிட்டோம்..”
என்று அறிவாளி போல பேசியது மூட்டைப்பூச்சி.
“ நமக்கு
மட்டும் மனிதனை மாதிரி முதுகெலும்பு இருந்தா எப்படியிருக்கும்.. கம்பீரமா அலையலாம்ல..”
என்று
சொல்லி முடிக்கும் முன்னால் ஓங்கி ஒரு அடி கொசுவின் மீதும் மூட்டைப் பூச்சி மீதும்
விழுந்தது. உடனே அதுவரை குடித்திருந்த ரத்தம் சிதறியது.
சாகும்போதும்
மூட்டைப்பூச்சி கேலி செய்தது,
“ போடா
முட்டாளே எலும்பு இருந்தா ரொம்ப வலிக்கும்.. இப்படிப் பொசுக்குன்னு சாக முடியாது..”
கொசுக்குஞ்சுக்கு
அது கேட்டதா என்று தெரியவில்லை.
நன்றி - மந்திரத்தொப்பி
வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்