Monday 13 May 2019

புலியும் எலியும்


புலியும் எலியும்

உதயசங்கர்

புல்லூர் காட்டில் உலகத்திலுள்ள எல்லாவித விலங்குகளும், எல்லாவித பறவைகளும், எல்லாவித புழுபூச்சிகளும் வாழ்ந்து வந்தனர். அதாவது,, சிங்கம், புலி, காண்டாமிருகம், கழுதைப்புலி, சிறுத்தை, சிவிங்கிப்புலி, ஓநாய், செந்நாய், நரி, குள்ளநரி, காட்டெருமை, ஒட்டகச்சிவிங்கி, புள்ளிமான், கடமான், வரையாடு, கேழை மான், வரிக்குதிரை, மிளா, கீரி, காட்டு அணில், காட்டு எலி, வெள்ளெலி, முள்ளெலி, மூஞ்சுறு, முள்ளம்பன்றி, சுண்டெலி, பெருச்சாளி, மலைப்பாம்பு, ராஜநாகம், நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, கொம்பேறிமூக்கன், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மஞ்சள் விரியன், காட்டுக்கோழி, மயில், புள்ளிக்குயில், கருங்குயில், மைனா, அண்டங்காக்கா, சாம்பல் காக்கா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கரிச்சான்குருவி, தூக்கணாங்குருவி, ஆந்தை, கூகை, பனங்காடை, மரங்கொத்தி, சிவப்புக்கொண்டைக்குருவி, காடை, கௌதாரி, அன்றில், தேன்சிட்டு, தையல்சிட்டு, ஊதாச்சிட்டு, பூரான், சேடான், செந்தேள், கருந்தேள், நட்டுவாக்காலி, மண்புழு, மரவட்டை, நத்தை, அட்டைப்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, பட்டாம்பூச்சி, தட்டான், தங்கத்தட்டான், பச்சைத்தட்டான், மரப்பல்லி, ஓணான், சில்லான், பச்சோந்தி, பொரிவண்டு, பீஉருட்டிவண்டு, சில்வண்டு, பொன்வண்டு, பழந்தின்னிவௌவால், என்று எல்லா உயிரினங்களும் வாழ்ந்தனர்.
அங்கே ஒரே ஒரு வயதான சிங்கம் இருந்தது. அதுதான் புல்லூர் காட்டுக்கு ராஜா. ஏதோ கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டு சிங்கம் நோயில் விழுந்தது. சில நாட்களில் அது இறந்து விட்டது. உடனே அந்தக் காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் சேர்ந்து தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கக் காட்டில் இருந்த பெரிய ஆலமரத்தடியில் கூடினர். புல்லூர் காட்டு மந்திரிசபையின் மூத்த அமைச்சர் கொம்பன் ஆந்தையார் தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவர் தான் பகல் தூக்கக்காரர் ஆயிற்றே. உடனே அண்டங்காகம் ஆந்தையாரின் இடுப்பில் ஒரு கொத்து கொத்தினார். உடனே திடுக்கிட்டு விழித்த ஆந்தையார்,
“ அதாவது நமது காட்டில் இப்போது சிங்கம் இல்லாதாதால் யாரை வேண்டுமானாலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை போட்டி நடக்கும். யார் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகிறீர்களோ அவர்கள் எழுந்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்…”
என்று கரகரத்த குரலில் கத்தியது. அவ்வளவு தான் எல்லோரும் ஒரே நேரத்தில் நான் தலைவருக்குப் போட்டியிடுகிறேன். நான் தலைவருக்குப் போட்டியிடுகிறேன்.. நான் தலைவருக்குப் போட்டியிடுகிறேன் என்று முண்டியடித்தன. பறவைகளில் வல்லூறு முதல் சிட்டுக்குருவி வரை பூச்சிகளில் சேடான் முதல் பீயுருட்டி வண்டு வரை, ஊர்வனவற்றில் ராஜநாகம் முதல் மண்ணுளிப்பாம்பு வரை, விலங்குகளில் மான் முதல் சுண்டெலி வரை போட்டிக்குத் தயார் என்று பெயர் கொடுத்தார்கள். அப்போது புலி எழுந்து தன்னுடைய உரத்த குரலில்
“ நான் போட்டியிடப் போகிறேன்…” என்று உறுமியது. அவ்வளவு தான். எல்லோரும் கப்சிப்பென்று ஆகிவிட்டார்கள். அப்படியே பத்தடி தூரம் பின்னால்போய் நின்று விட்டார்கள். புலிக்கு வழி எளிதாகக் கிடைத்துவிட்டது. அது ஆந்தையாருக்கு முன்னால் போய் நின்றது. என்ன இது? எல்லோரும் பின்னால் போய்விட்டாலும் ஒரு சுண்டெலி மட்டும் ஆந்தையாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தது. புலிக்குக்கோபம். என்ன தைரியம்! ஆந்தையாருக்கு சுண்டெலி அதன் அருகில் நின்று கொண்டிருந்தது தெரியவில்லை. ஆந்தையாரே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.
“ புலியாருடன் போட்டி போட யாரும் இல்லையா? “ என்று கேட்டது. அருகில் இருந்த சுண்டெலி,
” நான் நிக்கறது உன் முட்டைக்கண்ணுக்குத் தெரியலையா ஆந்தைத்தடியா? “
என்று கீச்சிட்டது. ஆந்தையாருக்குக் கோபம் பொங்கி வந்தது. மற்ற நேரமாக இருந்தால் ஒரே விழுங்கில் சுண்டெலி போன இடம் தெரியாது. இப்போது தேர்தல் நேரம். எதுவும் செய்ய முடியாது. உடனே,
“ நல்லா யோசிச்சிச் சொல்லு.. நீயா போட்டி போடப்போறே..”
என்று சிரித்தது. ஆந்தையார் சிரித்ததும் அங்கே கூடியிருந்த அத்தனை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எல்லாம் கெக்க்கேக்க்கே என்று சிரித்தன. புலியும் சிரித்தது. சுண்டெலிக்குக் கோபம் வந்தது. உடனே ஆந்தையாரின் தலைமீது ஏறி நின்று கொண்டு,
“ நண்பர்களே! புலியோ, நரியோ, பூங்குருவியோ, கழுகோ, பாம்போ, பல்லியோ, போட்டி என்றால் போட்டி தான். எளியோரை ஏளனம் செய்யாதீர்கள்..” என்று முழங்கியது. எல்லோரும் அமைதியானார்கள். புலி அலட்சியமாகப் பார்த்தது.
“ சரி சரி நமது முன்னோர்கள் சொன்ன போட்டி இது. இதோ இந்த அல்லிக்குளத்திலிருந்து புறப்பட்டு நமது புல்லூர் காட்டு எல்லையிலுள்ள அல்லிக்குளத்தை யார் முதலில் சென்று தொட்டு விட்டு வருகிறார்களோ அவர்களே நமது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்…”
உடனே போட்டியின் நடுவர் ஒரு சீம்புல் கற்றையை எடுத்து தரையில் கோடு போட்டார். அந்தக் கோட்டில் புலியும் சுண்டெலியும் நின்றன. குயில் புங்கைமரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு,
“ குக்க்கூகுக்க்க்கூகூ.. “ என்று விசில் ஊதியது. உடனே புலியும் சுண்டெலியும் பாய்ந்து ஓடின. நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்றது புலி. கொஞ்சதூரம் போனதும் ஓடிக்கொண்டே திரும்பிப்பார்த்தது. சுண்டெலியைக் காணவில்லை. இத்துணூண்டு சுண்டெலி எப்படி ஓட முடியும்? வெற்றி எனக்கே. என்று நினைத்தபடி வேகமாக ஓடியது.
புல்லூர் காட்டின் எல்லையில் இருந்த அல்லிக்குளத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பிய புலி அதிர்ச்சி அடைந்தது. பார்த்தால் ஆந்தையார் சுண்டெலிக்கு வெற்றிமாலையைச் சூடிக்கொண்டிருந்தது. ஓடிப்போய் தலைகுப்புற விழுந்த புலி “ எப்படி? இது எப்படி ? எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாற்றுகிறீர்களா? “
ஆந்தையார், “ புலியாரே அமைதி! அமைதி! நீங்கள் தரைக்கு மேல் ஓடினீர்கள். சுண்டெலியார்  தரைக்குக்கீழ் ஓடிச் சென்று வெற்றி பெற்று விட்டார்… இனி அவர் தான் இந்தப்புல்லூர் காட்டின் தலைவர்…இது நம்முடைய குலதெய்வமான இயற்கையன்னையின் ஆணை..”
விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எல்லோரும் சுண்டெலியின் வெற்றியைக் கொண்டாடினார்கள். சுண்டெலியை ஆளாளுக்குத் தலையில் வைத்துக்கொண்டு ஆடினார்கள்.
மறுநாள் சுண்டெலி காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழைத்தது.
“ நண்பர்களே! எனக்கு அலுவல்கள் அதிகமாக இருப்பதால் உணவு தேடிச் செல்ல முடியவில்லை. எனவே தினம் மூன்று வேளையும் உணவை நீங்கள் வரிசையாகக் கொண்டுவந்து தரவேண்டும்…”
அப்புறம் என்ன? எல்லா விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் சுண்டெலியின் வளைக்கு முன்னால் வரிசையில் நின்று புல், பூண்டு, அரிசி, கம்பு, கேப்பை, குதிரைவாலி, சோளம், பழங்கள், காய்கறிகள், என்று ஏராளமாய் கொண்டு வந்து கொடுத்தன. உழைக்காமல் ஓசியில் கிடைத்த சாப்பாட்டை வயிறு முட்டத்தின்ற சுண்டெலி என்ன ஆனது தெரியுமா?
பெருச்சாளி ஆகிவிட்டது. அதனால் அசையக்கூட முடியவில்லை. காட்டில் உள்ள எல்லோருக்கும் அலுத்து விட்டது. அவர்களுக்கு உணவு தேடுவதே பெரும்பாடு. இதில் சுண்டெலிக்கும் சேர்த்து உணவு தேடவேண்டும் என்றால் எரிச்சல் வரத்தானே செய்யும்! எப்போது ஐந்து வருடம் முடியும் என்று காத்திருந்தார்கள்.
அந்த நாளும் வந்தது. போட்டி நடக்கும் நாளில் மறுபடியும் புலி போட்டி போட்டது. சுண்டெலியால் நடக்கக்கூட முடியவில்லை. ஆனாலும் கவுரவத்துக்காகப் போட்டியில் நின்றது. குயில் கூவியதும் புலி பாய்ந்து சென்றது. ஆனால் சுண்டெலியால் பத்தடி தூரம் கூட நடக்கமுடியவில்லை. அந்தப் போட்டியில் புலி தான் வெற்றி பெற்றது என்று சொல்லணுமா என்ன?
மறுநாள் புல்லூர் காட்டின் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எல்லோரையும் தன்னுடைய குகைக்கு முன்னால் வரும்படி ஆணை இட்டது.
“ எனக்கு அரசு அலுவல்கள் அதிகம் இருப்பதால் இன்று முதல் மூன்று வேளையும் உங்களில் யாராவது ஒருவர் எனக்கு உணவாக வந்து சேர வேண்டும். இல்லை என்றால் அவர்களுடைய குடும்பத்தையே அழித்து விடுவேன்….”
என்று உறுமியது. அத்தனை விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் நடுங்கி விட்டன. புலிக்கு எலியே பரவாயில்லை என்று நினைத்தன. தினம் ஒவ்வொரு இனத்திலிருந்தும் ஒரு விலங்கு, ஒரு பறவை, ஒரு பூச்சி, என்று புலியின் குகைக்குள் போயின. யாரும் திரும்பி வரவில்லை. எல்லாவிலங்குகளின் எண்ணிக்கையும் காட்டில் குறைந்து கொண்டே வந்தது.
ஒரு நாள் ஒரு புள்ளிமானின் முறை. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஒரு குட்டி பிறந்திருந்தது. அது புலிக்கு இரையாகி விட்டால் குட்டிக்கு யார் பால் கொடுப்பது? அது பசியில் அழுதே இறந்து விடுமே என்று நினைத்தது. அதனால் குட்டியையும் சேர்த்தே கூட்டிக்கொண்டு போய் விடலாம் என்று முடிவு செய்தது. அதனுடைய நிலைமையைக் கண்டு மற்ற மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், எல்லோரும் பரிதாபப்பட்டனர். உச்சுக் கொட்டினர். எதுவும் அறியாத மான்குட்டி விளையாடிக்கொண்டிருந்தது.
செவலைக்கருப்பு நிறமுள்ள ஒரு முயல் யோசித்தது. அது செங்கரடியின் காதில் ரகசியம் பேசியது. செங்கரடி ஓநாயிடம் சொன்னது. ஓநாய் வல்லூறுவிடம் சொன்னது. வல்லூறு பொரிவண்டிடம் சொன்னது. பொரிவண்டு சில்வண்டிடம் சொன்னது. சில்வண்டு காட்டிலுள்ள அத்தனை மிருகங்கள், பறவைகள், பூச்சிகளிடம் சொன்னது. உடனே எல்லோரும் புள்ளிமானை முன்னால் விட்டு, பின் தொடர்ந்து போனார்கள்.
புலிக்குகை வாசலில் நின்று மான்,
“ நான் வந்திருக்கேன்..தலைவரே.” என்று கத்தியது. உறங்கிக் கொண்டிருந்த புலி மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தது. பார்த்தால் வாசலில் சிங்கம் நின்று கொண்டிருந்தது.
“ இயற்கையன்னையின் சட்டத்தை மதிக்காமல் எல்லோரையும் அநியாயமாய் தின்று தீர்க்கும் உன்னை இதோ இப்போதே விழுங்கப்போகிறேன்… ” என்று கர்ச்சித்தது. பின்னாலிருந்து அனைத்து விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் ஓ வென கத்தின.
“ கொல்லுங்க..புலியைக் கொல்லுங்க..”
அந்தக் குரலைக் கேட்டதும் புலி குகையை விட்டு தலைதெறிக்க ஓடியது. புலி ஓடியதும் சிங்கம் அந்தக் காடே அதிரும்படி கர்ச்சித்தது. ஆனால் அது செங்கரடியின் குரலாக இருந்தது. முயலும், புள்ளிமானும், புள்ளிமான்குட்டியும் கூட்டத்திலிருந்து வந்தன. அப்போது குயில்,
“ செங்கரடியாரே நீங்களே தலைவராக இருந்துருங்க..” என்று கூவியது. அதைக்கேட்ட செங்கரடி,
“ இல்லை..இல்லை.. நாம் யாருமே தலைவர்கள் இல்லை. இயற்கையன்னை தான் நமக்கு எல்லாம் தலைவி.. அவளுடைய சட்டங்களின்படி வாழ்ந்தால் போதும்.. யாருக்கும் எந்தத் துன்பமும் வராது..”
என்றது. உடனே எல்லோரும்,
“ இயற்கையன்னை வாழ்க! இயற்கையன்னை வாழ்க! ” என்று முழங்கினர்.
நன்றி - வண்ணக்கதிர்
10 +




No comments:

Post a Comment