Wednesday 18 May 2016

மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்

மானுடத்தைப் பாடிய நவீன கவிஞன் சமயவேல்

உதயசங்கர்

80-களில் கோவில்பட்டி நகரம் அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளாலும், சந்திப்புகளாலும், அரட்டைகளாலும், விவாதங்களாலும் அன்றாடம் நிரம்பி வழிந்தது. திடீரென ஒரு பத்து பதினைந்து இளைஞர்கள், எழுத்தாளர்களாக, சி.பி.எம்.மின் ஆதரவாளர்களாக உருவானார்கள். எங்களுக்கு முன்பே பாலு, சுவடி என்ற சுந்தரவடிவேலு, சி.எஸ்., என்ற சி.சுப்ரமணியன், ரவி, என்று ஒரு இளைஞர் குழாம் 70 –களில் இந்திய மாணவர் சங்கம் தொடங்கி கோவில்பட்டியில் இருந்த கோ.வெ.நா. கல்லூரியில் ஸ்டிரைக் அடித்து டிஸ்மிஸ்ஸாகி, பல்கலைக்கழகத்தின் சிறப்பு அநுமதியுடன் பரீட்சை எழுதினார்கள். அவர்களில் சுவடியைத் தவிர மற்றவர்கள் அனைவருமே அரசியலில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள். சுவடி மட்டுமே கதை கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராமல் நாறும்பூநாதன் தலைமையில் நாங்கள் மொட்டுக்கள் கையெழுத்துப்பத்திரிகை வழியாக இடது சாரி ஆதரவாளர்களாக அறிமுகமானோம். எங்களுக்குப் பின்னால் கிட்டத்தட்ட பத்து பதினைந்துபேர் திமுதிமுவென வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பும் ஏன் அதற்குப் பின்பும் கூட அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை.
நாறும்பூ நாதன், உதயசங்கர், சாரதி, முத்துச்சாமி, சிவசு, ராஜூ, அப்பணசாமி, திடவைபொன்னுச்சாமி, கோணங்கி, கணேசன், மீனாட்சி சுந்தரம், நாகராஜன், ஞாபகமறதியின் அடுக்குகளில் சிக்கிய இன்னும் சிலபேர் என்று ஒரு பெரிய கூட்டமே சேர்ந்தது. போதாது என்று தமிழ்ச்செல்வனும் கோவில்பட்டி வந்து சேர்ந்தார்.
 அங்கிங்கெனாதபடி நேரங்காலம் தெரியாமல் நாள் முழுவதும் புதிய புதிய அநுபவங்கள், புதிய புதிய உரையாடல்கள், திடீரென தமிழிலக்கியத்தின் கேந்திரமான இடத்தை கோவில்பட்டி பிடித்தது. கோவில்பட்டியை நோக்கி எழுத்தாளர்கள் படைகுருவிகளைப் போல கூட்டம் கூட்டமாக வந்து போயினர். கோவில்பட்டியில் முதல் நாள் பேசுகின்ற பாடுபொருள் மிக விரைவிலேயே தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியது என்று சொல்வது மிகையாக இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் கோவில்பட்டி வந்து செல்கிற எழுத்தாளர்கள் அப்படியான செய்திகளை பரப்பி விடுவார்கள். ஏற்கனவே இடைசெவலில் கி.ரா, இருந்தார். கோவில்பட்டியில் தேவதச்சன், கௌரிஷங்கர், கிருஷி, சுவடி, ஆகியோர் இருந்தார்கள் என்றாலும் பெரிய அளவுக்கு ஒருவருக்கொருவர் ஊடாட்டமோ, சந்திப்புகளோ நிகழவில்லை. நெருக்கடி நிலைக்காலத்தில் தர்ஷனா திரைப்படக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் 79-80 வாக்கில் தான் ஒரே ஊரில் பத்து சிறுகதையாளர்கள், ஒரு பத்து கவிஞர்கள், இரண்டு நாடகக்குழுக்கள், கண்காட்சிகள், என்று பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தோம். ஒரு தடவை புதுமைப்பித்தன் நினைவு தினத்தன்று ஊரெங்கும் அவருடைய கட்டுரைகளிலிருந்தும், கவிதைகளிலிருந்தும் கலை, இலக்கியம், சிறுகதை, கவிதை, பற்றிய அவருடைய கருத்துக்களை அட்டைகளில் எழுதி மின்கம்பங்களில் தொங்கவிட்டிருந்தோம். எல்லாவேலைகளையும் நாங்களே செய்வோம். தட்டி போர்டு எழுதுவது, அதைத் தூக்கிக் கொண்டு போய் ரோட்டு முக்கில் கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, துண்டுப்பிரசுரம் விநியோகிப்பது என்று அனைத்து வேலைகளையும் போட்டி போட்டுக் செய்தோம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய திட்டங்களுடன், கனவுகளுடன், சந்திப்போம். .எப்போதும் தெருக்களின் முக்கிலிருந்த டீக்கடைகளில், சந்து பொந்துகளில், சாலைகளில், மாலையில் காந்திமைதானத்தில் குறைந்தது நான்கு பேராவது கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருப்போம்.
அரசியல், தத்துவ விவாதங்களும் அனல் பறக்கும். சி.பி.எம். எதிர்ப்பாளர்களாக இருந்த நண்பர்களுக்கும், சி.பி.எம். ஆதரவாளர்களாக இருந்த எங்களுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும். எங்கள் தரப்பில் நான் கொஞ்சம் பிடிவாதமாகவும், வறட்டுத்தனமாகவும் இருந்தேன். அதனால் மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் பல எழுத்தாளர்கள், நண்பர்கள், என்னிடம் கொஞ்சம் தூரம் காட்டினர். அப்போது 1982-83 ஆண்டாக இருக்கலாம். ஆசிரமம் தெருவிலிருந்த தந்தி அலுவலகத்துக்கு கவிஞர் சமயவேல் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஒவ்வொருவராகச் சென்று பார்த்து வந்தோம். அலட்சியமான ஒரு முகபாவத்துடனும், கண்ணாடிக்குப் பின்னால் அலைபாயும் கண்களுடனும், லேசான திக்கலும் நக்கலும் கலந்த கூர்மையான வார்த்தைகளை பேசும் மெல்லிய குரலும் சமயவேலின் மீது ஒரு பயத்தை உருவாக்கியது. அவர் கோவில்பட்டியில் ஏற்கனவே இருந்த நண்பர்களைப் போல இல்லை. இலக்கியத்தில் விரிந்து பரந்த வாசிப்பும், அரசியலில் கூரான இடது சாரிப்பார்வையும் இருந்தது. ஆனால் சி.பி.எம்மை அப்படி கேலி செய்வார். அதிதீவிர இடது சாரி இயக்கத்தோடு அப்போது தொடர்பு இருந்தது என்று நினைக்கிறென்.கலை குறித்த அவருடைய பார்வைகள் உலகளாவிய அன்றையப் போக்குடன் உடன் செல்பவை. மெல்ல, மெல்ல அவருடைய பேச்சுக்கு நாங்கள் வசமானோம்.
சமயவேல் கோவில்பட்டி எழுத்தாளர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் கிண்டலடிப்பார். அவர்களுடைய படைப்புகளைக் கேலி செய்வார். கடுமையாக விமர்சனம் செய்வார். ஆனால் எல்லோருடனும் உரையாடலை நடத்திக் கொண்டிருப்பார். அவருடைய அலுவலகம் இருந்த ஆசிரமம் தெருவிலேயே ஒரு அறையைப் பிடித்திருந்தார். கொஞ்ச நாட்கள் இரவென்றும் இல்லாமல் பகல் என்றும் இல்லாமல் அதிலேயே கிடந்தோம். அந்தச் சிறிய அறையில் சிலசமயம் பதினைந்துபேர் வரை படுத்துக் கிடந்திருக்கிறோம். இரவைச் சூடாக்கிய விவாதங்கள் நடுநிசியில் முடியும்போது குடிதண்ணீர் இருக்காது. ஒரு சிகரெட்டோ, பீடியோ, கூட இருக்காது. ஏற்கனவே குடித்து வீசிய கட்டை பீடிகளை எடுத்து குடிப்போம். சில சமயம் மறுபடியும் விவாதம் கிளம்பி விடும். இந்த ஆசிரமம் தெரு அறை பற்றிய அவருடைய கவிதை அற்புதமானது. சமயவேல் அந்தச் சமயத்தில் அவருடைய சம்பளத்தில் பெரும்பகுதியை நண்பர்களுக்காகச் செலவு செய்தார்.
அரசியல் விவாதங்களை ஒட்டி ஒரு நாள் எங்களை ஒரு வகுப்புக்குக் கூட்டிப் போவதாகச் சொன்னார் சமயவேல். ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே இருந்த வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடியில் உட்காரவைத்து கண்ணன் என்ற பெயருடைய தோழர் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டம், நடைமுறை, அதன் தோல்விகள், பாராளுமன்றப்பாதையின் அபத்தம் புரட்சிகர இடதுசாரி அமைப்புகளின் திட்டம், என்று சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேசினார். முடிவில் கேள்விநேரம். யாரும் வாயைத் திறக்கவில்லை. வகுப்பு எடுத்தவருக்குத் திருப்தியில்லை. திரும்பி ஊருக்குள் வருகிறவரை எல்லோரும் ஏதோ இழவு வீட்டுக்குப் போய் வந்த மாதிரி துக்கம் அனுசரித்தோம். அப்படி ஒரு நிகழ்வு நடந்ததைப் பற்றி அதற்கப்புறம் கூட பேசியதாக நினைவிலில்லை. ஆனால் பிரயாசைப்பட்டு எங்களையெல்லாம் திரட்டிய சமயவேல் விரக்தியடைந்து விட்டார். எங்களிடம், சி.பி.எம். உங்களை நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிட்டாங்க என்று சொன்னார். அதன்பிறகு எங்களிடம் அரசியல் பேசுவது குறைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
கோவில்பட்டியில் அப்போது ஒரு வழக்கம் இருந்தது. கதையோ, கவிதையோ, கையெழுத்துப் பிரதியாக எழுதி எல்லோரிடமும் படிக்கக் கொடுக்கிற வழக்கம் இருந்தது. கோவில்பட்டி எழுத்தாளர்களே விமரிசனம் செய்வதில் கில்லாடிகள். ஆனால் சமயவேல் அனைவரிலும் கடுமையான விமரிசகராக இருந்தார். நான் கொடுத்த பல கதைகளை அப்படியே நிராகரித்தார். அவர் பரவாயில்லை என்று சொன்ன ஒரே கதை பாலிய சிநேகிதி. அது ஒரு செகாவ் கதையைப் போலிருக்கிறது என்றார். அவ்வளவு போதாதா? நான் தலைகால் புரியாமல் திரிந்தேன். அவருக்கு கோவில்பட்டியில் மிகவும் பிடித்த எழுத்தாளர் கோணங்கி மட்டும் தான். அவரும் கோணங்கியும் டேய் மாப்பிள்ள…டேய் மாப்பிள்ள என்று மூச்சுக்கு ஒரு தடவை கூப்பிட்டுக் கொள்வார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். சமயவேலுடனான உரையாடல்கள் எங்களுடைய இலக்கிய அறிவை விசாலமாக்கியது. படைப்பு நுட்பங்களைப் பற்றி அவருடன் பேசிய இரவுகள், உலக இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வையை எல்லாம் கோவில்பட்டி சுவீகரித்துக் கொண்டது.
1985-ஆம் ஆண்டு வேலை கிடைத்து நான் திருவண்ணாமலை சென்று விட்டேன். 1987-ஆம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத்தொகுப்பு காற்றின் பாடல் வெளியானது. தமிழ்க்கவிதையுலகில் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கிய மிகச் சிறிய தொகுப்பு. அந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையுமே கவித்துவத்தின் உச்சத்தைத் தொட்டவை என்று கூறலாம். கவிதைகளில் ஈரம் ததும்பும் மானுடம் வானம்பாடி கவிதைகளுக்குப் ப்ன்பு புதிய பரிமாணத்தில் புதிய வீச்சில் வெளியாகியிருந்தது. பல கவிதைகள் முற்போக்காளர்களின் நிரந்தர கல்வெட்டு வாசகங்களாயிற்று.
கூரை முகட்டுப்பட்சிகளின் கரைதல்களுடன்
இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும்
இளங்காலை
ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லமே பிரியும்
நேற்றின் அயர்வுகள்
வாசலைத்தாண்டி
உப்புக்காரனின் குரலோடு
ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது
குளிக்க சாப்பிட வேலைக்கென
கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை
இன்றும் நேசிப்பேன்.
இந்தக் கவிதைத் தொகுப்பில் பின்னிணைப்பாக அமைந்த கேள்வி-பதில் கலை இலக்கியம், கவிதை குறித்த அவருடைய பார்வையை வெளிப்படுத்திய விதம் முன்னெப்போதும் இல்லாதது. அதன் பிறகு 1995-ஆம் ஆண்டு அவருடைய அடுத்த கவிதைத்தொகுப்பு அகாலம் வெளிவந்தது. அரசியல், தத்துவம், விஞ்ஞானம் அனைத்தும் மனிதனைக் கைவிட்ட  நிலையில் அவர் தன்னுடைய கவிதைகளின் மீண்டும் அடிப்படையான அறவிழுமியங்களை நோக்கிப் பயணப்பட விரும்புகிறார். மனிதர்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதின் மூலம் மானுடத்தை உரப்படுத்துகிறார். அவரே சொல்கிறார்.
 “ வாழ்வின் இத்தனை சிக்கல்கள், குழப்பங்களுக்கு மத்தியில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்கிறபடி உண்மை நமது இருதயத்துக்குள்ளேயே இருப்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுபவன் நான். சாய்வுகளில் தான் உண்மை திரிந்து விடுகிறது. பன்முகத்தோற்றம் தருகிறது. நமது சொந்தச்சாய்வை சுத்தமாய் விலக்கி வைத்துவிட்டு, ஒரேயொரு நிமிஷம் யோசித்தால் போதும்; எதைப்பற்றிய உண்மையும் நம்மில் ஊற்றெடுத்துப் பெருகுவதை உணர முடியும். இதற்கு ஞானியாக வேண்டிய அவசியமில்லை. தானற்ற, தன்னலமற்ற எளிய மனமே போதும். இத்தகைய எளிய மனத்தை அதன் பரிசுத்த வடிவில் அறிமுகப்படுத்தும் எனது கவிதைகளும் எளிமையானவை தாம். மிகுந்த எளிமை, மிகுந்த உண்மையை வேண்டி நிற்பதை எவரும் அறிவர் “
அகாலத்தில் உள்ள பிரகடனங்கள் வீழ்ந்த காட்டில் என்ற கவிதையை உச்சரிக்காத வாசகர்களோ, கவிஞர்களோ கூட இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.
சலிப்படையவே மாட்டேன்
மீண்டும் மீண்டும்
நான் நானாவே இருப்பேன்
வாழ்வின் ஒவ்வொரு கிளையிலும்
உன்னதம் தேடுவதை
ஒருபோதும் நிறுத்தேன்
உண்மையை மேலும் மேலும்
காதலிப்பேன்
எல்லாமதிப்புகளும் பூமியில்
இறந்து விட்டன என்னும்
நவீனவாதம் பொய்யாக்குவேன்
நேசம் விதைத்த காட்டில்
நெருப்பு முளைத்தாலும்
பிடுங்கி எறிந்துவிட்டு
உழுது விதைவிதைப்பேன்
தத்துவங்கள் வீழட்டும்
தேசங்கள் சிதறட்டும்
உலகம் எதையும் பிதற்றட்டும்
பசித்தவர்கள் பக்கமே என்றும்
நான் இருப்பேன்.
தமிழ்க்கவிதையின் நவீனப்பிதாமகன் பிரமீள் காற்றின் பாடல் தொகுப்பைப் படித்து விட்டு எழுதிய வரிகள் மிக முக்கியமானவை.
“ பிதற்றவோ, போதிக்கவோ, மனித விரோதங்களைப் பிறர் மீது பீய்ச்சியடிக்கவோ செய்யாத கவிதைகள் “ என்று சொல்லியிருக்கிறார்.
சமயவேலின் கவிதையியல் நேரடியானது. எளிமையானது. அரசியல் பிரக்ஞையுடையது. ஆனால் அதன் கவித்துவம் மானுடம் போற்றும் மகத்தான தருணங்களைக் கொண்டது. நேரடிக்கவிதைகள் எல்லாம் பருண்மையான புறவயச் செயல்பாடுகளையே பிரகடனங்களாக வெளிப்படுத்த சமயவேலின் கவிதைகள் மனதின் நுண் தளத்தில் ஊடாடுகிறது. முற்போக்குக்கவிஞர்கள் சமயவேலின் கவிதைகளிலிருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவருடைய மூன்றாவது தொகுப்பான மின்னிப்புற்களும் மிதுக்கம்பழங்களும் 2010-ல் வெளிவந்தது. அவருடைய கவிதைகளின் வெளியும் பாடுபொருளும் மேலும் விரிவடைந்து தமிழ்க்கவிதையுலகில் தனக்கென்று தனித்துவமான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் சமயவேல். நேரடியான கவிதைகள் எழுதுகிற யாரும் சமயவேலைத் தவிர்க்க முடியாது.
நீண்டகாலமாக அவரைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. என்னுடைய புத்தகங்களை அவர் வாசித்திருப்பாரா என்பது கூட சந்தேகம். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தனின் திருமணநிகழ்விலும், மதுரையில் நடந்த கடவு இலக்கிய அமைப்பின் கூட்டத்திலும் சந்தித்தேன். நான் மொழிபெயர்த்து வெளியான மண்டோ கதையைப் படித்து விட்டு அவர் கையில் இருந்த மண்டோ தொகுப்பிலிருந்து ஒரு கதையை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவருடைய சிறுகதை நூல் நான் டைகர் இல்லை என்ற புத்தகத்தையும் அனுப்பியிருந்தார். அந்தப்புத்தகத்தை நான் உடனே வாசித்தேன். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவ்வளவாக உவக்கவில்லை. கவிஞர் சமயவேல் தான் என மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும், உத்வேகமளிப்பவராகவும் இருக்கிறார்.

கோவில்பட்டி ஆசிரமம் தெருவில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த அறை இப்போது இல்லை. அன்று அந்த அறையில் டீயும் பீடியும் குடித்துக் கொண்டு விவாதங்கள் செய்த  இலக்கிய நண்பர்களில் பலர் மறைந்து விட்டனர். பலர் இலக்கிய உலகில் இல்லை. காலம் இரக்கமில்லாதது. எல்லாவற்றையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இரவுகளில் லேசான சிரிப்புடன் அவருடைய நக்கல் குரலில் சமயவேல் பேசிய வார்த்தைகளில் இருந்த உண்மை இப்போதும் சுடுகிறது. அந்தத்தெரு இப்போது மிகவும் உண்மையாக இருக்கிறது.
நன்றி-மலைகள் இணைய இதழ்

No comments:

Post a Comment