Tuesday 26 April 2016

சுற்றுலா போன சுட்டிக்கட்டெறும்பு

சுற்றுலா போன சுட்டிக்கட்டெறும்பு

உதயசங்கர்

சுட்டிக்கருப்பன் என்று அந்தக்கட்டெறும்புக்கு எப்படி பெயர் வந்தது தெரியுமா? அவன் எப்போதும் கூட்டத்தோடு இருக்க மாட்டான். எல்லோரும் ஒரு வழி போனால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு மட்டும் தனிவழி போவான். அதனால் எல்லோரும் சுட்டிக்கருப்பன் என்று அவனைத் திட்டுவார்கள். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அவன் சுற்றித்திரிந்து பார்த்த இடங்களைப் பற்றி புற்றுக்குள் வந்து கதை கதையாகச் சொல்வான். அவன் காணாமல் போகும்போது திட்டுகிற எல்லோரும் அவன் கதை சொல்லும்போது அவனைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு கண்ணிமைக்காமல் அவனுடைய பாவனை நடிப்பையும் அவனுடைய பேச்சையும் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் மட்டும் சிரிக்க மாட்டான். அவன் கடுமையாக சுட்டிக்கருப்பனைத் திட்டுவான். ஆனால் சுட்டிக்கருப்பன் அதைப் பற்றி கவலைப்படமாட்டான். காலில் பட்ட தூசியைத் தட்டிவிடுவது மாதிரி தட்டி விடுவான்.
அன்றும் அப்படித்தான். உணவு சேகரிக்கும் கூட்டத்தின் தலைவன் அதிகாலையிலேயே சுட்டிக்கருப்பனின் உணர்கொம்புகளைத் தட்டி,
“ டேய் ஒழுங்கா கூட்டத்தோட வரணும்… அங்க இங்க போனே தோலை உரிச்சிருவேன்… எம்பின்னாடியே தான் வரணும்.. இன்னிக்கு மக்காச்சோளம் விளைஞ்சிருக்கிற மேகாட்டுக்குப் போறோம்… இன்ன.. தெரிஞ்சிதா?..”
என்று சொல்லியது. சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு குதியாட்டம் போட்டுகிட்டு ஆளுக்கு முன்னாடி மேகாட்டுக்குக் கிளம்பியது. தலைவன் முன்னால் போனான். அவனுக்குப் பின்னால் அணிவகுத்து அனைவரும் வரிசை மாறாமல் காடுமேடு வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அடிக்கடி தனக்குப் பின்னால் சுட்டிக்கருப்பன் கட்டெறும்பு வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு தலைவன் போனான்.
. கொஞ்ச தூரத்தில் இருந்த மக்காச்சோளக் காட்டில் ஒரு இயந்திரம் விளைந்த மக்காச்சோளக்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தது.. அறுவடை நடக்கிறது என்றால் நிறைய மக்காச்சோளம் சிந்தும். அவற்றை சேகரித்துக் கொண்டு வந்து விடலாம். வேலை எளிதாக முடிந்து விடும். ஆனால் மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இயந்திரமும் மேலும் கீழும் வரும். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
சுட்டிக்கருப்பன் அறுவடை நடந்து கொண்டிருந்த  மக்காச்சோளக்காட்டின் குறுக்கே மறுக்கே நடந்தான். ஓடினான். அலைந்து திரிந்தான். ஒரு முறை ஒரு மனிதனின் காலில் மிதிபடத் தெரிந்தான். ஒரு முறை ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தின் அருகிலேயே போய் விட்டான். நல்லவேளை… தப்பித்து விட்டான். ஆடி ஓடிக் களைத்த சுட்டிக்கருப்பன் அருகிலிருந்த ஒரு புளிய மரத்தின் நிழலுக்குப் போனான். புளிய மரத்தின் அடியில் புளியம்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. ஒவ்வொரு புளியம்பூவின் இதழ்களையும் துழாவினான். அதில் ஒட்டியிருந்து இத்துணூண்டு தேனை உறிஞ்சினான். அப்படியே குடித்துக் குடித்து கொட்டாம்பெட்டி மாதிரி வயிறு நிறைந்து விட்டது. தேன் குடித்த மயக்கத்தில் அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் வயர்க்கூடைக்குள் புகுந்தான். அவ்வளவு தான் தெரியும் சுட்டிக்கருப்பனுக்கு.
சிலுசிலுவென காற்று முகத்தில் அடித்தது. அதுவரை கிறங்கிப் போயிருந்த சுட்டிக்கருப்பன் கண்விழித்தான். அவன் இருந்த வயர்க்கூடை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. மெல்ல காற்றை எதிர்த்து வந்து கூடையின் மேல் நின்று பார்த்தான். ஆகா அவன் இருந்த கூடை ஒரு சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் காற்றில் பறந்து விடுவான் போல சைக்கிள் பறந்தது. சுட்டிக்கருப்பன் பயந்து போய் விட்டான். ஐய்யய்யோ.. நம்ம கூட்டத்தை விட்டு வந்து விட்டோமே… கூட்டத்தலைவனும் ராணியும் சிக்கினால் தோலை உரித்து விடுவார்களே! என்ற பயமும் வந்தது. அப்போது சைக்கிள் ஒரு இடத்தில் நின்றது. கூடையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு சிறிய ஓட்டு வீட்டுக்குள் கீழே வைத்தான் சைக்கிளை ஓட்டியவன். உடனே ஒரு குழந்தை “ப்பா…ப்பா..ப்பா…” என்று மழலையில் பேசிக் கொண்டே கூடைக்கருகில் தவழ்ந்து வந்தது. கூடையை அப்படியே கவிழ்த்தது குழந்தை. கூடையிலிருந்த தூக்குவாளி, துண்டு அழுக்குச்சட்டை எல்லாவற்றையும் இழுத்துப் போட்டது. கூடை கவிழ்ந்ததுமே ஆகா..செத்தோம்… என்று பயந்த சுட்டிக்கருப்பன் உள்ளேயே பதுங்கியது. கூடையில் தின்பண்டத்தை எதிர்பார்த்த குழந்தை தின்பண்டம் இல்லை என்றதும் அழத்தொடங்கியது. அப்போது கூடையின் அடியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சுட்டிக்கருப்பனைப் பார்த்து விட்டது. உடனே சுட்டிக்கருப்பனைப் பிடிக்க உள்ளே கையை விட்டது. ஐயோ  சுட்டிக்கருப்பனைத் தொட்டே விட்டது…..
நல்லவேளை அந்தக்குழந்தையின் அம்மா குழந்தையைத் தூக்கி விட்டாள். உடனே குழந்தை பெரிதாக அழத்தொடங்கியது.
 “ பிள்ளைக்கு திம்பண்டம் வாங்கிட்டு வரணும்னு தெரிய வேண்டாமா.. அப்படியே வீசுன கையும் வெறுங்கையுமாவா வர்ரது… பாருங்க எப்படி அழுதான்னு..போங்க போய் உடனே பிஸ்கட் வாங்கிட்டு வாங்க…..”
என்று குழந்தையின் அம்மா சத்தம் போட்டதும் சைக்கிளில் வந்தவர் மறுபடியும் வயர்க்கூடையை எடுத்து சைக்கிளில் வைத்துக் கொண்டு கிளம்பினார். ஒரு ரெண்டு தெரு தாண்டியிருக்கும் சைக்கிள். அங்கே ஒரு பலசரக்குக் கடைக்கு முன்னால் போய் நின்றது. கூடையைக் கீழே வைத்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுட்டிக்கருப்பன் பாய்ந்து பலசரக்குக் கடைக்குள் நுழைந்து விட்டான்.
அடடா.. என்ன வாசனை! புளி, சீரகம், மிளகு, வெல்லம், சீனி, அரிசி, கோதுமை, பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள மணமூட்டிகளின் வாசனை. சேவு, மிக்சர், சீவல், இவற்றின் எண்ணெய் வாசனை, என்று எல்லாம் காற்றில் கலந்து ஒரு கலவையான வாசனை வந்தது. உணர்கொம்புகளை நீட்டி வாசனைகளை முகர்ந்த படியே ஒவ்வொரு பொருளாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குஷியில் இரண்டு கால்களால் நின்று கொண்டு ஆடியது. நமது கூட்டத்தை இங்கே கூட்டிகிட்டு வந்து விட்டால் போதுமே… ஆகா..ஆனந்தமே…! அப்போது சுட்டிக்கருப்பன் மீது பெரிய போர்வையைப் போல இருட்டு மூடியது. சுட்டிக்கருப்பனுக்கு எதுவும் புரியவில்லை. ஆள் நடமாட்டமும் இல்லை. இருட்டில் விதவிதமான பூச்சிகளும், எறும்புகளும், கரப்பான்பூச்சிகளும், சுண்டெலிகளும், கடைக்குள் சர்வ சாதாரணமாக சுற்றிக் கொண்டிருந்தன. சுட்டிக்கருப்பன் வெளியே வரவில்லை. அப்படியே அது ஏறிய வெல்லம் இருந்த மூடையில் கிடந்தது. இப்போது தான் கூட்டத்தை விட்டு வெளியேறியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டது. இனி எக்காரணம் கொண்டும் நமது கூட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது. என்று நினைத்தது. பிழைச்சிருந்தா மறுபடியும் நம்ம கூட்டத்தைப் பார்ப்போம். என்று நினைத்த படியே உறங்கி விட்டது.
மறுநாள் சுட்டிக்கருப்பன் கண்விழிக்கும் போது சுட்டிக்கருப்பனைச் சுற்றி அவனுடைய தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
எப்படி தெரியுமா?
காலையில் பலசரக்குக்கடைக்கு வந்த சைக்கிள்காரர் கம்மங்கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள வெல்லம் வாங்கினார். வெல்லத்தில் சுட்டிக்கருப்பனும் இருந்தான். சைக்கிள்காரருக்கு இன்று சுட்டிக்கருப்பன் கூட்டத்தினர் இருந்த பகுதியில் தான் உழவு வேலை. அவர் கம்மங்கஞ்சியைச் சாப்பிட வெல்லம் எடுத்தபோது அதில் கிறங்கிக் கிடந்த சுட்டிக்கருப்பனை எடுத்து வெளியில் வீசினார். நேற்றிலிருந்து காணாமல் போன சுட்டிக்கருப்பனைத் தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்த வெல்லத்தின் வாசனையில் அருகில் வந்தால் அங்கே கிடக்கிறான் சுட்டிக்கருப்பன்!
அப்புறம் என்ன?
விடிய விடிய சுட்டிக்கருப்பன் அவன் சுற்றுலா  போன கதையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.

  

No comments:

Post a Comment