Saturday 27 September 2014

விளாடிமீர் நீ எங்கே இருக்கிறாய்?

உதயசங்கர்

DSC01926

இந்த ஆண்டும் சைபீரியாவில் குளிர் காலம் துவங்கும் அறிகுறிகள் தோன்றிவிட்டன. காத்யா என்ற செங்கால்நாரை அவளுடைய அம்மாவுக்காகக் காத்திருந்தாள். வெளியே இரை தேடப்போன அவளுடைய அம்மா இரண்டு நாட்களாகியும் இன்னும் திரும்பவில்லை. அவளுடைய பாய்ஃப்ரெண்டு விளாடிமீர் வேறு காத்யாவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவன் அவளிடம், “ வா.. நாம் போகலாம் உன் அம்மா பின்னால் வந்து விடுவாள்..” என்று சொல்லிச் சமாதானப்படுத்துகிறான். ஆனால் காத்யாவுக்கு அவளுடைய அம்மாவை விட்டு விட்டு வர மனமில்லை. அவள் விளாடிமீரிடம் “ ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நேரம்.. இன்னும் கொஞ்ச நேரம்.பார்க்கலாம்.” என்று கெஞ்சுகிறாள். பனியின் அடர்த்தி கூடி காற்று கனத்து வருகிறது. இன்னும் தாமதித்தால் பனி அடர்ந்த காற்றில் பறக்க முடியாது. விளாடிமீர் காத்யாவிடம் உறுதியாகச் சொல்கிறான்.

“ காத்யா..இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கும் ஆபத்து.. உன் அம்மா பின்னால் வந்து சேர்ந்து கொள்வாள்.. நம்பு..”

ஆனால் காத்யாவுக்குப் புரிந்து விட்டது. இனி ஒருபோதும் அம்மா திரும்பி வரமாட்டாள். துக்கத்துடன் விளாடிமீரைப் பார்த்தாள். அந்தப் பார்வையிலிருந்து என்ன புரிந்ததோ விளாடிமீர் தன் சிறகுகளை விரித்து ஒரு உலுப்பு உலுப்பிவிட்டு காற்றில் முன்னேறத் தொடங்கினான். நீண்ட பெருமூச்சுடன் காத்யாவும் விளாடிமீரைப் பின் தொடர்ந்தாள். இனி நீண்ட நெடிய பயணம் தான். சில நாட்களுக்குப் பின் காத்யாவும் தற்காலிகமாகத் தன் துக்கத்தை மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஆண்டுக்கு முன்னால் போன திசை எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது. ஏதோ நேற்று போய்வந்த மாதிரி இருக்கிறதே. எத்தனை விதமான நிலங்கள். எத்தனை விதமான பறவைகள். எத்தனை விதமான தப்பவெப்ப நிலைகள்..அடடா..

எத்தனை நாட்கள் கழிந்தன என்று தெரியவில்லை. கனவில் பறப்பது போலவே இருந்தது காத்யாவுக்கு. தன்னுடன் பறந்து வரும் தன் உறவினர்களான செங்கால்நாரை கூட்டத்தாரைப் பார்த்தாள். அவர்கள் அனைவரும் ஒரு தியானநிலையில் ஒரே குறிக்கோளுடன் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய இந்த பயணத்திட்டம் அவர்களுடைய இனத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடியது என்ற சிந்தனை எல்லோரிடமும் இருந்தது. ஒரே சீராக சிறகுகளைக் காற்றில் விரித்து மிதந்தபடி எப்போதாவது சிறகுகளை அசைத்து காற்றின் நுட்பத்தையும் வலிமையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பறத்தலின் வேகத்தையும், தன்மையையும் மாற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்தார்கள்.

லேசான வெப்பக்காற்று வீசத்தொடங்கியது. இந்தியாவுக்குள் நுழைந்து விட்டோமென்று புரிந்தது. இது வரை சற்றும் முன்னும் பின்னுமாக பறந்து கொண்டிருந்த விளாடிமீர் இப்போது காத்யாவுடன் இணைந்து பறந்தான். அவ்வப்போது காத்யாவைக் காதலுடன் பார்த்து ” க்ர்ர்ர்க்க் ” என்று சிரித்தான். அவனுடைய காதலைப் புரிந்து கொண்ட விதமாக காத்யாவும் “ க்ர்ர்ர்க்க்” என்று பதில் சொன்னாள். தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி தென்கோடியை நோக்கிப் பறந்தனர். பார்க்கப் பார்க்க பழைய ஞாபகங்கள் அப்படியே பொங்கி வந்தன.

அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடம் ஒரு பெரிய குளம். தண்ணீர் கெத்து கெத்தென்று அலையடித்துக் கொண்டிருக்கும். கரையோரம் எங்கும் முள்மரங்கள் அடர்ந்து செறிந்திருக்கும். இதமான தப்பவெப்பம். நல்ல உயரமான முள் மரத்தைப் போனவுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நடாஷா பொறாமை பிடித்தவள். பேராசை கொண்டவள். தனக்கு மட்டும் தான் எல்லாம் வேண்டும் என்று நினைப்பாள். அவள் கண்படாமல் ஒதுங்கி ஒரு மரத்தில் கூடு கட்ட வேண்டும். விளாடிமீர் நல்ல ஆண்மகன். சிறந்த கூடு கட்ட உதவுவான். அந்தக் கூட்டில் நான் முட்டையிட்டு அதை அடை காப்பேன். எனக்குப் பசிக்கும்போது நான் இரை தேடப்போவேன். அப்போது விளாடிமீர் அடைகாப்பான். அவன் நல்ல தகப்பனாகவும் இருப்பான். நாங்கள் இருவரும் சேர்ந்து குஞ்சுகளை நன்றாக வளர்ப்போம். ஆம் பலசாலியாக. மறுபடியும் ஐயாயிரம் மைல் தூரம் போக வேண்டுமே. அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு மீன்கள் இருக்குமே. அங்கே இந்தப்பருவத்தில் வந்து சேர்கிற நூற்றுக்கணக்கான பறவைகளுக்கான மீன்களைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கும் அந்தக் குளம். எத்தனை தலைமுறைகளைப் பார்த்திருக்கும் அந்தக் குளம். எத்தனை ஆயிரம் பறவைகள் தங்கள் இணையோடு வந்து குஞ்சுகளோடு குடும்பமாகத் திரும்பிப் போவதைப் பார்த்து ஆசீர்வதித்திருக்கும் அந்தக் குளம். இதையெல்லாம் நினைத்துப் பார்த்த காத்யாவுக்குக் கண்ணீர் பொங்கியது.

அப்போது திடீரென குழப்பமான குரல்கள் கேட்டன. ஒரே புலப்பமும், கோபமும், அழுகையுமாய் பறவைகளின் குரல்கள் ஒலித்தன. ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாதபடி குரல்கள் கலந்து ஒரே கூப்பாடாய்க் கேட்டது. அருகில் நெருங்கிப் பார்த்த காத்யாவுக்கும், விளாடிமீருக்கும், அவர்களுடைய கூட்டத்தாருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலைமுறை தலைமுறையாய் சைபீரியாவிலிருந்து வந்து இறங்குகிற அள்ளியள்ளி மீன்களைத் தின்னத் தருகிற அந்தக் குளம் அங்கே இல்லை. அந்தக் குளத்தைச் சுற்றி காடாய் வளர்ந்த முள் மரங்களும் அங்கே இல்லை. ஏன் அப்படியெல்லாம் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை.. அங்கே பதினைந்து தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு விரிந்து படர்ந்திருந்தது. அதன் நிழல் கூட கீழே விழவில்லை. காத்யாவுக்கு எதுவும் புரியவில்லை. அழுகை அழுகையாய் வந்தது. அவளுடைய கனவுகள் எல்லாம் சில கணங்களிலேயே மடிந்ததை நினைத்து கரைந்தாள்.

நூற்றுக்கணக்கான பறவைகள் அழுது கரைந்தபடி அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அந்தப் பறவைகளின் அழுகுரலைக் கேட்டுப் பயந்து போன குடியிருப்பு வாசிகள் வனத்துறைக்குத் தகவல் சொன்னார்கள். வனத்துறையும் பொறுப்பாக வந்து இந்த நூற்றுக்கணக்கான பறவைகளை விரட்ட வழி தெரியாமல் பட்டாசு வெடித்தார்கள். கொடூரமான அந்தச் சத்தத்தினால் பயந்து அலறிய பறவைகள் திக்குத் தெரியாமல் பறந்தலைந்தன. அந்தக் களேபரத்தில் காத்யா விளாடிமீரைத் தொலைத்து விட்டாள். அவள் மட்டுமல்ல. இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்தங்களைத் தவற விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாயாஜாலம் போல அந்தக் குளமும் முள்மரங்களும் மறுபடியும் தோன்றி விடாதா ?

இப்போது காத்யாவும் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். சைபீரியாவை அவள் மறந்து விட்டாள். அவளுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் என்றாவது விளாடிமீர் வருவான். வந்து அவளை சைபீரியாவுக்கு அழைத்துக் கொண்டு போவான் என்று காத்திருக்கிறாள் காத்யா.. இரவின் அமைதியில் அவள் அழைத்துக் கொண்டிருக்கிறாள். விளாடிமீர்..என் அன்பே…நீ எங்கே இருக்கிறாய்? விளாடிமீர்..!…. …நீ எங்கே இருக்கிறாய்? அவளுடைய ஈரமான குரல் ஈரமில்லாத அந்தக் காங்கிரீட் அடுக்குமாடிக்கட்டிடத்தில் மோதிக் கொண்டேயிருக்கிறது….இன்னமும்…

 

DSC00207

4 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    நல்ல கற்பனைத்திறனை முன்வைத்து அனைவரது மனதையும் கவரும் படி மிக அருமையாக உள்ளது பறவைகள் மட்டுமல்ல இப்படியான ஏமாற்றதை சந்திப்பது மனிதர்களின் வாழ்வில் கூட இப்படித்தான்... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. படிக்கப் படிக்க மனம் கனக்கிறது ஐயா
    இன்றைக்குப் பறவைகள், விலங்குகள்
    நாளைக்கு மனிதர்கள்

    ReplyDelete
  3. மனதை கனக்கச் செய்த கதை! சிறப்பான ஒன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete