Friday 20 September 2013

கவிதையின் அரசியல்

உதயசங்கர் images (5)

 

ஆதியில் மந்திரச்சடங்குகளில் ஒரேவிதமான ஏற்ற இறக்கங்களில் இயைபு கொண்ட ஒலிக்குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஒலிப்பதன் மூலம் இசையுடன் கூடிய மனதில் கிளர்ச்சியூட்டும் வார்த்தைகள் தான் இன்றைய கவிதையின் ஆதிமூலம் என்று சொல்லலாம். சடங்குகளில் இயற்கையைக் கட்டுப்படுத்த, ஆவிகளை அடக்கிவைக்க, உற்பத்திபெருக, நோய்கள் தீர, என்று சமூகத்தின் அத்தனை நடவடிக்கைகளிலும் கவிதை மந்திரச்சொல்லாகப் பயன்பட்டிருக்கிறது. வரிவடிவம் தோன்றிய பிறகு உழைப்பிலிருந்து கவிதை பிரிந்து கற்றோர் கலையாகவும், உழைப்பாளிகள் தங்கள் உழைப்பின் தேவைக்கேற்ப உருவாக்கிய உழைப்புப்பாடல்கள் எளியோர் கலையாகவும் பிரிந்து விட்டது. நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் கவிதை ஆள்பவர்களின் புகழ்பாடவும், பொழுதுபோக்காகவும், சமூகமதிப்பீடுகளை நிலைநிறுத்தும் காவியங்களைப் படைக்கவுமாகத் தொழிற்பட்டது. கவிதையும், கவிஞர்களும் போற்றப்பட்டகாலமும் இதுதான். முதலாளித்துவகாலகட்டத்தில் முதலாம் இரண்டாம் உலகயுத்தங்களினால் ஏற்பட்ட விரக்தியும், நிச்சயமின்மையும், முதலாளித்துவத்தின் பிரிக்கமுடியாத விதியான சந்தை, பொருள், விற்பனையும், கவிதையின் பாடுபொருளை முற்றிலும் வேறொன்றாக மாற்றிவிட்டது. வாழ்வின் நிச்சயமின்மை குறித்தும், உச்சகட்டத்திலிருந்த அந்நியமாதல் குறித்தும், இதுநாள்வரை நம்பியிருந்த கடவுள் கைவிட்டதனால் ஏற்பட்ட கையறுநிலை குறித்தும், கவிதைகள் படைக்கப்பட்டன. புதியபாடுபொருளைப்பற்றிப் பேசுவதால் புதிய வடிவங்களைக் கைக்கொண்டன.

முதலாளித்துவத்தின் கருவறையிலேயே பிறந்த புரட்சியும் தொழிலாளர்களின் குரலாக, ஈவு இரக்கமற்ற முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு எதிரான கலகக்குரலாக, இழப்பதற்கு எதுவுமில்லை எதிரே ஒரு பொன்னுலகம் என்று புரட்சியின் முழக்கமாக மாறியது கவிதை.

இலக்கியவடிவங்களில் மூத்தகுடி கவிதை தான். எனவே கவிதைக்குத் தான் இலக்கணம் முதலில் எழுதப்பட்டிருக்கிறது. தொல்காப்பியம் முழுவதுமே தமிழ்மொழி இலக்கணமாக விளைந்தது தான். அதுவும் கவிதைக்கான இலக்கணம். அந்த கவிதை இலக்கணத்தை வைத்தே நாம் உரைநடையை இன்று எழுதிக்கொண்டிருக்கிறோம். உரைநடைக்கென்று தனி இலக்கணநூல் கிடையாது. யாப்பு, சீர், தளை, எதுகை, மோனை, உருவகம், என்று பழங்கவிதை தனக்கென்று பிரத்யேகமாக தனிவழிமுறைகளை கொண்டு இயற்றப்பட்டது. தமிழ்க்கவிதையின் பொற்காலமாக இந்தக்காலம் இருந்திருக்கிறது. திருக்குறள், தொடங்கி ஐம்பெருங்காப்பியங்கள், பதினென்கீழ்க்கணக்கு, குறுந்தொகை, கம்பராமாயணம் என்று தமிழ்க்கவிதை தன் உச்சத்தைத் தொட்டகாலம். காலனிய ஆட்சியின் கீழ் ஆங்கிலத்தின் அறிமுகமும் ஆங்கில இலக்கியத்தின் பரிச்சயமும், புதிய சமூக யதார்த்தமும் இந்தியாவிலும் தமிழிலும் புதிய வடிவங்களைக் கோர காலத்தின் விளைபொருளான மகாகவியும் வசனகவிதை எழுதுகிறான். அதுவரை எதுகை,மோனை, யாப்பு தளை, சீர் என்று சிந்தனைகளும் அநுபவங்களும் இலக்கணத்தில் சிறைப்பட்டிருந்ததை விடுவித்து கருத்துகளையும், அநுபவங்களையும் பிரதானப்படுத்தி புதிய வாழ்வநுபவங்களை புதிய மொழியில் புதிய வடிவத்தில் சொல்லும் புதுக்கவிதை பிறக்கிறது.

புதுக்கவிதை பிறக்கும்போது இயற்கையியல்வாதமாகவும், முரண்நகைவாதமாகவும், அழகியல்வாதமாகவும், அவநம்பிக்கைவாதமாகவும், காதலின் ஏக்கவாதமாகவும், பெட்டிபூர்ஷ்வா என்று சொல்லப்பட்ட மத்தியதரவர்க்கத்தின் வாழ்வநுபவமுரண்வாதமாகவும், புலம்பல்வாதமாகவும் உள்முகவாதமாகவும், சூன்யவாதமாகவும் பிறந்து வளர்ந்தது. இந்தப்புதுக்கவிதைக்குள்ளிருந்து தான் சாமானிய, எளிய மக்களின் கோபாவேசமும், ரௌத்ரமும், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையும் பொங்கும் முற்போக்குக்கவிதைகள் பிறந்து வளர்ந்தன.

ஐம்பதுகளில் வேகமெடுத்த புதுக்கவிதையின் பிரவாகம் அறுபதுகள், எழுபதுகளில் உச்சத்தை தொட்டது எனலாம். அதிலும் குறிப்பாக எழுபதுகள் முற்போக்குக்கவிதைகளின் பொற்காலம். எண்பதுகளில் சற்று தேக்கமடைந்த கவிதை தொண்ணூறுகளுக்குப் பிறகு உலகமயமாக்கல் தீவிரமாக அமலாக்கப்பட்ட காலத்தில், பின்நவீனத்துவம் அறிமுகமான நேரத்தில் வேறு வடிவங்கள் பூண்டன. பூடகமும், விடுகதையும், புதிரும், நிறைந்த மயக்குமொழிப்பின்னல் கவிதையில் பிரயாகிக்கப்பட்டன. கவிதை மீண்டும் ஒரு சிறுகுழுவுக்கானதாக மாறியது. குழூஉக்குறியைப்போல கவிதை உருமாற்றம் அடைந்துவிட்டது. இத்தைகையச் சூழலில் நம்பிக்கையான காரியங்களாகத் தலித்தியமும் பெண்ணியமும் முன்னுக்கு வந்ததும், அதிலும் பெண்கவிஞர்கள் பெரும்பாய்ச்சலென தமிழ்க்கவிதையுலகில் பிரவேசித்ததும் என்று சொல்லலாம்.

ஆனால் இன்னமும் வானம்பாடிகளின் காலகட்டத்திற்கு அடுத்த நிலையில் உத்வேகமூட்டக்கூடிய, கலகக்குரலாக, புரட்சியின் கீதமாக, முற்போக்குக்கவிதைகள் மக்கள் மனதைக் கவ்விப்பிடிக்க வேண்டியதிருக்கிறது. ஏனெனில் மொழி தோன்றிய காலத்தில் மந்திரமாக உருவான கவிதை இன்னமும் மொழியின் உச்சபட்ச அர்த்தத்தை மனதில் செலுத்தி வாசகனை ஆட்கொண்டுவிடும் வல்லமை கொண்டது. ஒரு சொல் கவிதையில் சொல் அல்ல. அது பண்பாட்டின், வரலாற்றின், அரசியலின், பொருளாதாரத்தின், இயற்கையின், மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஆதிநனவிலிமனதில் மந்திரங்கள் ஏற்படுத்திய பாதிப்பை கவிதைகளும், பாடல்களும் ஏற்படுத்துகின்றன. எனவே தான் இன்னமும் கவிதையும் பாடலும் இசையும் வலிமையான கலைவடிவங்களாக இருக்கின்றன.

கவிதையை கலைகளின் அரசி என்றும் கவிதை ஒரு மோகனமான கனவு என்றும் புதுமைப்பித்தன் சொல்லுவார். உண்மைதான் மனிதமனதின் மாபெரும் கனவு கவிதை. மனிதகுலத்தின் மாபெரும் சிந்தனைப்பாய்ச்சல்களில் கவிதை மானசீகமாகத் தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. முன்னுணர்வின் தடங்களில் மனிதகுலத்தை வழிநடத்தியிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் அறிந்தும் அறியாமலும் கிடக்கும் அத்தனையும் கவிதையின் பாடுபொருள்தான். கவிதை மொழியின் சாரத்தின் வழியே அநுபவத்தைக் கடத்துவதாலேயே கவிதையில் மொழி முக்கியத்துவமாகிறது. பழகிப்புழங்கிய சொல்லும்கூட கவிதையில் வேறொன்றாக மாறி நிற்கிறது. விவரிப்பதில்லை கவிதை. உணர்த்துவது கவிதை. எனவே இன்றைய புதுக்கவிதை செறிவும் சிக்கனமும் கொண்டதொரு வடிவம் கொள்கிறது. கவிதை உணர்த்தும் சாரத்தின் பின்னால் அதன் நோக்கமாகிய கருத்துருவமும் தொக்கிநிற்கும்.

கவிதைக்கு பலமுகங்கள் அல்லது பலகுரல்கள் உண்டு. ஒரு கவிஞனிடமே கூட பலமுகங்களோ, பலகுரல்களோ வெளிப்படலாம். கவிஞனின் தத்துவப்பார்வை, அழகியல்கோட்பாடு, கவிஞனின் ஆளுமை,அவன் உணர்த்தவிழையும் அநுபவத்தின்சாரத்தை அவன் உள்வாங்கியிருக்கும் பாங்கு, உள்வாங்கியிருக்கும் அநுபவத்தின்மீது அவனுக்கேயுரித்தான பார்வை, அவனுடைய மொழியாளுமை, தொழில்நேர்த்தி, கற்பனையாற்றல், எல்லாம் சேர்ந்து ஒரு கவிதையைச் சிறந்த கவிதையாக்குகிறது. இவையாவும் கருவில் உருவாவதில்லை. எழுத்துழைப்பு, அர்ப்பணிப்பு, கவிதையின் வரலாற்றுணர்வு, வாசிப்பு, இவற்றின் மூலம் உருவாகி வருவது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில் புதுக்கவிதை 1934-ல் வெளியான ந.பிச்சமூர்த்தியின் காதல் எனும் கவிதையிலிருந்தே தொடங்கியது எனலாம். நாற்பதுகளும், ஐம்பதுகளும் அவ்வளவு ஒளிமிக்கதாக இல்லை. எழுத்து என்ற இலக்கியப்பத்திரிகையின் தோற்றத்தோடு புதுக்கவிதையும் மறுமலர்ச்சியடைந்தது. எழுபதுகளில் ஏற்பட்ட ஜனநாயகஎழுச்சிக்குப் பிறகு முதலில் தயங்கியிருந்த முற்போக்கு இயக்கமும் புதுக்கவிதையை கையில் எடுத்தது. எழுபதுகளின் வானம்பாடி கவிதை இயக்கம் முற்போக்கு கவிதை இயக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். மக்கள் கவிதைகள் பெருக்கெடுத்த காலம் அது. எண்பதுகள், தொண்ணூறுகளில் புதுக்கவிதைத் தொகுதிகள் ஏராளமாக வெளிவந்தன. மற்ற எல்லாஇலக்கிய வகைமையைக் காட்டிலும் கவிதை நூல்களே ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நவீனதாராளமயமாக்கலுக்குப் பிறகு முன்னெப்போதையும் விட வாழ்க்கை கடுமையான நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. தகவல்தொழில்நுட்பபுரட்சியால் தேவையோ தேவையில்லையோ மனிதர்கள் தகவல்களால் குப்பைக்கிடங்காக மாறிக்கொண்டிருக்கின்றனர். உலகத்தை ஒற்றைக்கலாச்சாரம் விழுங்கத்தயாராக வாயைப்பிளந்து கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளின் வழியேயும் பழமை தன் மோகத்தூண்டிலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனையும் ஏகாதிபத்தியம் தன் கழுகுக்கண்களால் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது. தனிமனித உரிமைகள், எல்லாமுதலாளித்துவ அரசுகளாலும் மிதித்து நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலத்தில் பின்நவீனத்துவம் எல்லாத்தத்துவங்களும் காலாவதியாகி விட்டதாக அவநம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது. முன்னெப்போதையும் விட நுண்ணுணர்வுமிக்க கவிஞர்களுக்கு சமூகப்பொறுப்பு அதிகரித்துள்ளது. மனிதனையே பெரும்சந்தைவெளியாக மாற்றி அவன் ஆன்மாவை பொருளாக்கி அவனிடமே விற்றுக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் தந்திரங்களுக்கு எதிராக தங்கள் கவிதைகள் மூலம் பெரும்கருத்துப்போரை நடத்தவேண்டிய கவிஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? 

சமீபமாக எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர்களை அல்லது கவிதைகளை மூன்று பெரும்பிரிவாகப் பிரிக்கலாம். இன்று வெளிவந்து கொண்டிருக்கும் கவிதைகள் எல்லாம் இன்றைய வாழ்வின் நெருக்கடியை, கசப்பை, ஏமாற்றத்தை, விரக்தியை, எதிர்காலம் சூன்யமாகத் தெரிவதை, நம்பிக்கையின்மையைச் சொல்பவைதான். முதலில் வாழ்வின் நெருக்கடியை, அரசியலை, தன் கூர்மையான மொழியில் சூசகமாக, பூடகமாக, விடுகதையாக, புதிராகச் சொல்லி வாசகனுக்கு நுழைந்து செல்ல எந்த ஒரு இடமுமின்றி இருள்பூசிய கவிதைகளை மிகச்சிறிய குழு மட்டும் வாசித்துப்பாராட்ட, எழுதுபவர்கள். அடுத்தது எளிய யதார்த்தநிகழ்வுகளிலிருந்து வாழ்க்கையின் விகசிப்பை, விசாரத்தை, அழகை, அன்பின்ருசியை, நெறிபடும் அவஸ்தையை, வெளிப்படுத்தும் கவிதைகளைச் சொல்லலாம். இந்தக் கவிதைகள் பெரும்பாலும் மத்தியதரவர்க்க அறவிழுமியங்களைச் சார்ந்து எழுதப்படுபவை. ஏகாதிபத்தியம், உலகமயமாக்கல், பின்நவீனத்துவம், இவற்றுக்கெதிராக எழுதப்படுகிற முற்போக்குக் கவிதைகள். பெரும்பாலும் இந்தக் கவிதைகள் கோட்பாட்டினை முன்மொழிவதாக இருப்பதனாலும், அரசியலை வெளிப்படையான, நேரிடையான, தட்டையான மொழியில் வெளிப்படுத்துவதாக இருப்பதாலும் ஒரு குழுசார்ந்த கவிதைகளாக மாறிவிடுகின்றன. அநுபவத்தின்சாரம் ஊறித்திளைத்து மொழியின் உச்சபட்ச அர்த்தசிகரத்தில் நின்று கேட்கிற, வாசிக்கிற அனைவரையும் ஈர்க்க வேண்டிய கவிதைகள் முற்போக்குக் கவிதைகளே. வானம்பாடி காலத்துக்குப் ( விமர்சனங்கள் இருக்கலாம்) முற்போக்குக்கவிதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இன்னும் எழுதப்படாத ஓராயிரம் விடயங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன். முற்போக்குக்கவிஞர்களுக்காக.

இலக்கியத்தின் மற்ற துறைகளைப்போலவே கவிதையிலும் இத்தனை காலமும் அடக்கி, ஒடுக்கப்பட்டு சமூகவெளிக்கு புறந்தள்ளப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தலித்தியமும், இதுநாள்வரை வீட்டின் மூலையில் இருந்த சமையலறையில் மட்டுமே யாருக்கும் கேட்காமல், யாராலும் கேட்கப்படாத முணுமுணுப்பாக, வலியாக, வேதனையாக, ஒலித்துக்கொண்டிருந்த பெண்களின் குரலான பெண்ணியமும், இனவெறி அரசால் காலந்தோறும் வஞ்சிக்கப்பட்டு கையில் ஆயுதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு போர்ச்சூழலில் பலபத்தாண்டுகளை மரணத்தின் கொடும்சிறகினக்கடியில் வாழவிதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நரகவாழ்வனுபவங்களைச் சொல்லும் புலம்பெயர் இலக்கியம், இவையே கடந்த பத்தாண்டுகளில் எழுச்சியுடன் முன்வந்துள்ள கவிதைபோக்குகள்.

DSC00081

4 comments:

  1. கவிதையின் அரசியல் = திரு உதயசங்கர் அவர்களின் அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகல் சார் திரு உதயசங்கர்.

    ReplyDelete
  2. Replies
    1. ''தமிழில் புதுக்கவிதை 1934-ல் வெளியான ந.பிச்சமூர்த்தியின் காதல் எனும் கவிதையிலிருந்தே தொடங்கியது எனலாம். நாற்பதுகளும், ஐம்பதுகளும் அவ்வளவு ஒளிமிக்கதாக இல்லை. எழுத்து என்ற இலக்கியப்பத்திரிகையின் தோற்றத்தோடு புதுக்கவிதையும் மறுமலர்ச்சியடைந்தது. எழுபதுகளில் ஏற்பட்ட ஜனநாயகஎழுச்சிக்குப் பிறகு முதலில் தயங்கியிருந்த முற்போக்கு இயக்கமும் புதுக்கவிதையை கையில் எடுத்தது. எழுபதுகளின் வானம்பாடி கவிதை இயக்கம் முற்போக்கு கவிதை இயக்கத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். மக்கள் கவிதைகள் பெருக்கெடுத்த காலம் அது. எண்பதுகள், தொண்ணூறுகளில் புதுக்கவிதைத் தொகுதிகள் ஏராளமாக வெளிவந்தன. மற்ற எல்லாஇலக்கிய வகைமையைக் காட்டிலும் கவிதை நூல்களே ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன" -

      அருமை உதயசங்கர்.மிகவும் அருமை
      நீ சிறந்த எழுத்தாளன் என்பதைத் தாண்டி சிறந்த கட்டுரையாளன் என்பதையும் நிருபிக்கும் கட்டுரை இது என்று நினைக்கிறேன்.

      ஆனால் நான் மேற்கோளிட்டிருக்கும் இந்தப் பத்தி மட்டும் மிகச் சுருக்கமானது அவ்வளவு சரியாக இல்லை. ஏனெனில் ந.பி.க்குப் பிறகு புதுமைப்பித்தன் -கிண்டலாகவே- புதுக்கவிதை எழுதியது இந்தக்காலத்தில்தான். எழுத்து வந்த சிறிது காலத்திலேயே வானம்பாடிகள் குழு ஒருபக்கமும், கசடதபற குழு இன்னொரு பக்கமும் கிட்டத்தட்ட சமகாலத்தில் இயங்கின. இரண்டும் சமகாலத்தில் புதுக்கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டன. சி.சு.செல்லப்பா, தனது எழுத்து இதழில் வந்த கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட “புதுக்குரல்கள்” (1962) தான் தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு முதலான தகவல்களையும் சேர்த்துச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த என் நினைப்பையும் தாண்டி, கட்டுரை சுயசிந்தனைகளோடு, “எளிய பதங்“களோடு அருமையாக வந்துள்ளது. என் பாராட்டுகளை எனது வலையிலேயே தெரிவித்திருக்கிறேன்.
      நேரமிருக்கும்போது வந்து பார் உதய்!-
      http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post.html -
      அன்புடன் உன் தோழன்-நா.மு.
      01-10-2013.
      (முந்திய இதே கடிதத்தில் பத்திபிரிக்காமல் இருந்தது எனக்கே படிக்க சிரமமாக இருந்ததால் அதை நீக்கிவிட்டு, ப த்தி பிரித்து மீண்டும் இங்கேயே இட்டிருக்கிறேன். வேறொன்றுமில்லை)

      Delete
  3. வணக்கம் அய்யா, ஆழ்ந்த பார்வை கொண்ட கட்டுரைக்கு நன்றி. நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி பிறக்கிறது. தங்களைப் பற்றிய அய்யா. முத்துநிலவன் அவர்களின் பதிவைப் படித்த பின்பே வருகை தந்தேன். தங்களுக்கு பின்னூட்டம் இடுவதில் பெருமை கொள்கிறேன். நன்றீங்க அய்யா.

    ReplyDelete