Thursday 19 September 2013

படைப்பின் அரசியல்

 

உதயசங்கர்

images (9)  மனிதகுல வரலாற்றில் வேட்டைச் சமூகத்தின் வேட்டை வாழ்வனுபங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனவெழுச்சியே கலையின் ஆதி வித்தென கொள்ளலாம். குகைச்சுவர்களிலும் கற்பாறைகளிலும் விலங்குகளின் தோலிலும் துவங்கிய கலையின் பயணம் தன்னுணர்வுமிக்க உழைப்பினால் மொழியைத் தோற்றுவித்திருக்கிறது. இயற்கையின் உற்பாதங்களும் மரணமும் ஆவியுலக நம்பிக்கையை வளர்த்தெடுக்க தொன்மங்களும் மந்திரச்சடங்குகளும் தோன்றியிருக்கின்றன. தொன்மங்களைப்புனையும் சிந்தனை ஆதிமனிதர்களுக்கேயுரிய சிந்தனை முறையாகும்.அது புலனறிவு சார்ந்தும் அகவயமாகவும் நெகிழ்ச்சியானதுமாகும். இப்படி தொன்மம் கலைக்கான மூலப்பொருளாக மாறிவிட்டது. தொன்மங்கள் முழுவதும் இயற்கை சக்திகளை முழுக்க கற்பனையிலே கீழ்ப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் அவற்றை மாற்றியமைக்கின்றன. எனவே தொன்மங்களுக்கு மந்திர் ஆற்றல் இருப்பதாக நம்பப்பட்டது. தொன்மங்களிலிருந்து தோன்றிய மந்திரச்சடங்குகளிலிருந்தே ஆதியில் உழைப்பிலிருந்து பிரிந்து கலை தோன்றியிருக்கிறது. ஆவியுலகக்கோட்பாடே மந்திரச்சடங்குகளை உருவாக்கியிருக்கிறது. மந்திரச்சடங்குகளை நடத்தியவர்களே ஆதிக்கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். வர்க்கமற்ற சமுதாயத்திலும் வர்க்கசமுதாயத்தின் தொடக்க காலத்திலும் ஒரு தீர்க்கதரிசியைப் போல கலைஞனும் மக்களால் போற்றி வணங்கப்படுபவனாக இருந்தான். அவனுடைய வாழ்த்துக்களுக்கும் சாபங்களுக்கும் தனி ஆற்றல் இருப்பதாகவும் அது ஆவியுலகத்தோடு அவனுக்கிருந்த ஊடாடல் காரணமாக கிடைத்தது என்று நம்பினார்கள்.

மனிதசமுதாயம் பழங்குடிஅமைப்பிலிருந்து அரசு உள்ள சமுதாயமாக மாற்றமடைந்த போது ஆதி மனித உணர்வு சமூக அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உட்பட்டது. இந்த அழுத்தங்கள் மனநோய், காக்காய்வலிப்பு, பிளவுண்ட ஆளுமை, ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க பல்வேறு மனநோய்களாக வெளிப்பட்டன. உணர்வுபூர்வமான கட்டுப்பாட்டை இழக்கவைக்கும் இந்த மனநோய்கள் ஒரு கடவுளோ அல்லது ஆவியோ மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்கொண்டு விட்டது என்ற நம்பிக்கை தோன்ற வழிவகுத்தன. இப்படித்தான் மந்திரச்சடங்குகளை நடத்திய மனிதர்கள் தனித்துவமும், அசாதாரணமான வாழ்க்கைமுறையும் கொண்டவர்களாக மாறுகிறார்கள். ஆக கலையின் தோற்றுவாயில் உளவியல்நோய்களும் காரணமாக இருந்திருக்கின்றன. இந்த வித்தியாசமான மந்திரவாதிகள் தங்கள் வாழ்க்கையை ரகசியமாக, மறைஞானத்தன்மை கொண்டதாக, சடங்குகள்பூர்வமாக, வைத்துக் கொண்டனர்.

மந்திரச்சடங்குகளிலிருந்து கலை வளர்ந்தது. தன்னுணர்வுமிக்க கலைஞன் சடங்குவடிவத்தை கையிலெடுத்து அதில் புதியதொன்றை அறிமுகப்படுத்தி அதை மாற்றி உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையே ஒரு புதிய இணைவை, ஒற்றுமையை உருவாக்குகிறான். இதன் மூலம் கலை இயங்கியல்பூர்வமாக வளர்கிறது.

வேட்டைசமூகத்திலும், வர்க்கமற்ற சமூகத்திலும், வர்க்கசமூகத்தின் ஆரம்பகட்டத்திலும் கலை, தொடர்பு ஊடகமாகவும், இயற்கையைக்கீழ்ப்படுத்தும் தொன்மச்சடங்குகளாகவும், ஆவிகளைக் கட்டுப்படுத்தும் மருத்துவமாகவும் சமூகத்தோடு இரண்டறக்கலந்தே வளர்ந்து வந்திருக்கிறது. என்றால் ஆதியில் கலை மக்கள் கலையாகவே இருந்திருக்கிறது.

அரசு என்ற அமைப்பு உருவானபிறகு, கலை உழைப்பிலிருந்து முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டு, பொழுதுபோக்கு சாதனமாகவும், அரசின் பிரச்சார பீரங்கியாகவும், அந்தந்த காலகட்ட அரசின் சட்டங்கள், சநாதன மதங்களின் விதிகளை, சடங்குகளை, சாதிய அமைப்பை, வாழ்க்கை மதிப்பீடுகளை மக்கள் மனதில் நிலைநிறுத்தவும், மக்கள் மனங்களை வென்றெடுக்கவும், கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகள் அந்தந்தக் காலகட்டத்தினை தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கவே செய்திருக்கிறார்கள். எனவே என்றுமே படைப்புகள் அந்தந்த காலகட்ட அரசின், அரசியலை மக்கள் வாழ்வைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.

எந்தவொரு படைப்பின் அடிப்படைஆதாரசுருதி வெளிப்பாடு ( expression ) தான். இது தான் படைப்பரசியலின் அரிச்சுவடி. தன்னை, தன்வாழ்வனுபவங்களை, தான் வாழும் சமூகத்தை, மானுடவிழுமியங்களை, வெளிப்படுத்துகிறது படைப்பு.

அரசு என்ற அமைப்பு உருவானதிலிருந்து படைப்பு அரசதிகாரத்தினை முன்மொழிவதாக மாற்றமடைந்தது தான் படைப்பரசியலின் வளர்ச்சி. எனவே படைப்பின் அரசியல் என்பது அதிகாரத்தின் அரசியலை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ மக்கள் மனதில் ஏற்றி அவர்கள் ஒப்புதலைப் பெறுவது தான். அரசு என்ற அமைப்பு இருக்கும்வரை கலையின் தன்னிச்சையான வளர்ச்சியோ மலர்ச்சியோ சாத்தியமில்லை.

நிலப்பிரபுத்துவகாலத்தில் அரசவையில் அரசர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்ட கலை பூர்ஷ்வா சமூகம் உருவானபிறகு, முதலாளித்துவசந்தை உருவான பிறகு கலையையும் சந்தைவிதிகளுக்கு உட்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்தளைகளிலிருந்து கலையை விடுவிக்கவும் உருவாக்கிய கோட்பாடு தான் கலை கலைக்காக என்ற கோட்பாடு.

முதலாளித்துவம் தன் ஆயிரக்கணக்கான கரங்களால் கலையை துரியோதனாலிங்கனம் செய்து கொண்டேயிருக்கிறது. கலையின் அரசியலும் வேறு வேறு ரூபங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. சமத்துவமற்ற, வர்க்கபேத சமூகத்தில் கலையும் வர்க்கபேதமுடனே இருக்கும். அறவிழுமியங்கள் எல்லாம் அரசு தன் நலனுக்காக சமூகத்தின்மீது ஏற்றி வைத்துள்ள வாழ்க்கை மதிப்பீடுகள். எல்லாஅறவிழுமியங்களுக்கும் பின்னால் அரசியலதிகாரத்தின் முகம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் இருப்பதை அவதானிக்கமுடியும். அதே போல எல்லாபடைப்புகளிலும் இந்த அறவிழுமியங்களை ஏற்று முன்மொழிவதையும் நாம் கட்டுடைத்துப்பார்க்கலாம். இதில் முற்போக்கு படைப்புகளும் பலியாகும் அபாயத்தைக் காணலாம். ஏனெனில் எல்லோருக்கும் பொதுவான அறம் என்று வர்க்கபேத சமூகத்தில் இருக்கமுடியாது. இன்றைய படைப்புகளின் அரசியல் என்பதை வர்க்கசார்பான அறவிழுமியங்களை வர்க்கபேதமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளவைக்கிற ஆளும்வர்க்கத்தின் தந்திரங்கள் இருப்பதை நாம் உணரலாம்.

படைப்பு அரசியலின் இன்னொரு இரு பிளவாக படைப்பை ஜனநாயகப்படுத்துதலும் அதற்கெதிராக சர்வாதிகாரப்படுத்துதலும் என்று கூறலாம். படைப்பில் ஜனநாயகம் என்பது ஒரு படைப்பு யாருக்காக எழுதப்படுகிறது. யாரைப்பற்றி எழுதப்படுகிறது. எதற்காக எழுதப்படுகிறது எந்த மொழியில் எழுதப்படுகிறது, என்ற போதத்துடன் படைக்கப்படும் படைப்பில் கலை இன்பமும் நோக்கமும் ஜனநாயகப்படுத்தப்பட்டு எல்லோரையும் சென்றடையும் உத்வேகம் கொண்டிருக்கும். படைப்பு படைக்கப்படும்போதும், படைக்கப்பட்டபிறகும் வாசகனை சென்று சேர்வதில் ஆர்வமாயிருக்கும். இந்த வகையான படைப்புகளில் படைப்பாளியின் தான் என்னும் அகம் கரைந்து சமூக அகமாக மாறிவிடுகிறது. எனவே படைப்பு இயங்கியல்ரீதியாக வளர்ந்து கொண்டேயிருக்கும்.

இதற்கு மாறாக படைப்பில் தான் என்னும் அகங்காரம் சர்வாதிகாரத்துடன் இயங்கும்போது அது வாசகனை மறுதலிக்கிறது. தன்னைத் தவிர மற்றமை என்று ஒன்று இருப்பதை வெறுக்கிறது. தன்படைப்புமொழியை இறுக்குகிறது. குழூஉக்குறியைப் போல படைப்பதிலும் யாராலும் வாசிக்கப்படவோ, புரிந்துகொள்ளப்படவோ இயலவில்லையெனில் மகிழ்ச்சியடைவது, ஆதிகால மந்திரவாதிகள் போல வெகுமக்களிடமிருந்து தங்கள் படைப்புகளைத் தூரவிலக்கி வைப்பது என்று படைப்பின் இயங்கியலை மறுத்து படைப்பின் ஜனநாயகத்தை தன் சர்வாதிகாரத்தினால் நசுக்க நினைக்கிறது. அனுபூதி, தியானம், வேள்வி, என்றும், கலைக்கு நோக்கம் தேவையில்லை, கலைக்கு எந்த லட்சியமும் கிடையாதென்றோ தன்னைச் சிம்மாசனத்தில் நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பரசியல் தன் முகங்களை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது. தன் தேவைகளுக்கேற்ப படைப்புகளை உருவாக்க ஏராளமான தத்துவக் கோட்பாடுகளைப் படைக்கிறது. அது சர்ரியலிசமாக இருக்கலாம். இருத்தலியமாக இருக்கலாம். ஸ்டரட்சுரலிசமாக இருக்கலாம். நவீனத்துவமாக இருக்கலாம். பின்நவீனத்துவமாக இருக்கலாம். அடையாள அரசியலாக இருக்கலாம். எல்லாக்கோட்பாடுகளிலும் வரைமுறையற்ற முதலாளித்துவத்தின் கொள்ளையினாலும் சூதாட்டத்தினாலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருப்பவர்களை மடைமாற்றவும், தனிமைப்படுத்தவௌம், விரக்தியடையவைக்கவும், இறந்துபோன கடவுளுக்குப் பதிலாக புதிய கடவுள்களை உற்பத்திசெய்யவும், சநாதன, பழைய, இற்றுப்போன, காலாவதியான மரபுகளுக்குள் சரணடையவும் செய்கிற படைப்புகளைப் படைக்கச்செய்கிறது. ஏழுதலை நாகமாக மக்களைத் தழுவி பிளவுண்ட தன் நாவினால் படைப்பாளியையும், வாசகனையும் தீண்டித் தீண்டி மயக்குகிறது.

இன்றைய படைப்புகள் அனைத்தையும் இந்த அடிப்படைப்பார்வையுடன் அணுகிப்பார்க்க வேண்டும்.

DSC00105

1 comment:

  1. அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி சார் திரு Udhayasankar

    ReplyDelete